டாஸ்மாக் மாநிலம்! தமிழக பட்ஜெட் 2020



தமிழக அரசின் 2020 - 2021ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை கடந்த வாரம் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டில் சட்டமன்றத் தேர்தல் வரும் நிலையில் இந்த பட்ஜெட்டில் அதிரடியான சலுகைகள், மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கமான ஒரு பட்ஜெட்டாகவே, ஏமாற்றங்களும் சின்னச் சின்ன சலுகைகளும் நிறைந்த ஒன்றாக இந்த பட்ஜெட்டும் இருக்கிறது. விவசாயம், தொழில் என்ற இரு பொருளாதாரத் துறைகளுக்குமே இது சுமாரான பட்ஜெட்தான்.

2020 - 21ம் நிதியாண்டில் தமிழக அரசின் மொத்த வருவாய் இரண்டு லட்சத்து பத்தொன்பதாயிரத்து முந்நூற்று எழுபத்தைந்து கோடியே பதினாலு லட்சமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில் வரி வருவாய் ஒரு லட்சத்து முப்பத்தி மூன்றாயிரத்து ஐநூற்று முப்பது கோடியே முப்பது லட்சம் இருக்கும். வரி அல்லாத பிற இனங்களின் வருவாய் பதினைந்தாயிரத்து எண்ணூற்று தொண்ணூறு கோடியே எண்பத்தொரு லட்சமாக இருக்கும்.

மேலும், தமிழக அரசின் சொந்த வருவாய் ஒரு லட்சத்து நாற்பத்தொன்பதாயிரத்து நானூற்று இருபத்தொன்பது கோடியே பதினொரு லட்சமாக இருக்கும்.இந்த நிதியாண்டில் ஒட்டுமொத்த வருவாய் பற்றாக்குறை இருபத்தைந்தாயிரத்து எழுபத்தொரு கோடியே அறுபத்து மூன்று லட்சமாகவும், நிதிப் பற்றாக்குறை ஐம்பத்தைந்தாயிரத்து ஐம்பத்தெட்டு கோடியே முப்பத்தொன்பது லட்சமாகவும் இருக்கும்.

நிதிப் பற்றாக்குறை ஏற்படும்போது ஒவ்வொரு மாநிலமும் அதன் பொருளாதார வலுவுக்கு ஏற்ப கடன் வாங்கிக்கொள்ள அனுமதி உண்டு.
அந்தவகையில் இந்த ஆண்டுக்கான நமது கடன் பெறுவதற்கான உச்சவரம்பு அறுபத்திரண்டாயிரத்து எழுநூற்று ஐம்பத்தேழு கோடியே எண்பது லட்சமாகும். இதில், ஐம்பத்தொன்பதாயிரத்து இருநூற்று ஒன்பது கோடியே முப்பது லட்சத்துக்குக் கடன் பெற முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதனால், இந்த நிதியாண்டின் முடிவில் நமது நிகர கடன் நாலு லட்சத்து ஐம்பத்தாறாயிரத்து அறுநூற்று அறுபது கோடியே தொண்ணூற்று ஒன்பது லட்சமாக இருக்கும். இது மாநில உற்பத்தி மதிப்பில் சுமார் 21.83%. பொதுவாக, ஒரு மாநிலம் அல்லது தேசத்தின் கடன் என்பது அதன் ஓர் ஆண்டின் உற்பத்தி மதிப்பில் இருபத்தைந்து சதவீதம் இருக்கலாம். தவறில்லை. அந்தவகையில் இது அவ்வளவு பெரிய கடன் சுமை இல்லைதான். ஆனால், இந்த வரம்பை நாம் நெருங்கிவிட்டோம் என்பதையும், இனி வரும் ஆண்டுகளில் கடன் வாங்கினால், நாம் திவால் நிலைமைக்குச் சென்றுவிடுவோம் என்பதையும் கவனிக்க வேண்டும்.

ஏற்கெனவே, தொழில் வளர்ச்சி மந்தமாக இருக்கும் சூழலில் மேலும் மேலும் கடன் வாங்கிக் கொண்டிருப்பது ஓர் ஆரோக்கியமான மாநிலத்துக்கு அழகல்ல. மேலும், இந்த ஆண்டு இப்படி வாங்கப்படும் கடனுக்கு வட்டியாக முப்பத்தேழாயிரத்து நூற்று இருபது கோடியே முப்பத்து மூன்று லட்சம் கட்ட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வழக்கம்போல இந்த ஆண்டும் அரசு ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியத்துக்கு அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கென ரூ.96,218 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த நிலையில் பள்ளிக்கல்வித் துறைக்குத்தான் பெரிய நிதி ஒதுக்கீடு. இதற்கு ரூ.34,182 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சிக்கு, எரிசக்திக்கு முறையே ரூ.21,115 கோடியும், ரூ.23,161 கோடியும்; நகராட்சிக்கு ரூ.18,540 கோடியும்; நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.15,851 கோடியும்; சுகாதாரத்துறைக்கு ரூ.15,863 கோடியும்; உள்ளாட்சிக்கு ரூ.12,061 கோடியும்; வேளாண்மைக்கு ரூ.11,894 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும், வருவாய்த்துறை, காவல்துறை, உணவுத்துறை, பாசனம், உயர்கல்வி, சமூல நலன், ஆதிதிராவிடர் நலன் ஆகியவற்றுக்கு ஐந்தாயிரம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தீயணைப்புத்துறை, நீதிநிர்வாகம், மீன்வளம், வீட்டுவசதி, போக்கு வரத்து, மெட்ரோ, கதர், கைத்தறி, தொழில், பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலன் ஆகிய துறைகளுக்கு ஐந்தாயிரம் கோடிக்குக் கீழ் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் ஐந்து புதிய மாவட்டங்களில் பெருந்திட்ட வளாகங்கள் அமைக்க 550 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கங்கைகொண்டானில் மெகா உணவுப்பூங்கா அமைக்க 77.94 கோடியும், கல்லணை கால்வாய் அமைக்கும் பணிகளுக்கு இரண்டாயிரத்து 298 கோடியும், கட்டளை உயர்மட்ட கால்வாய் அமைக்கும் பணிகளுக்கு 335 கோடியே 50 லட்சமும், நொய்யல் துணைப்படுகைத் திட்டத்துக்கு 230 கோடியும், ராஜவாய்க்கால் திட்டத்துக்கு 184 கோடியும், சரபங்கா நீரேற்றுப் பாசனத் திட்டத்துக்கு 565 கோடியும், தமிழ்நாட்டு பாசன விவசாய நவீனமயமாக்கல் திட்டத்துக்கு இரண்டாயிரத்து 962 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதைத்தவிர திறன்மிகு நகரங்கள் திட்டம், அம்ருத் திட்டம், பிரதமரின் வீட்டு வசதித் திட்டம், முதல்வர் பசுமைவீட்டுத் திட்டம் உட்பட பல்வேறு உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.கீழடியில் கிடைத்த பொருட்களைக் காட்சிப்படுத்தும் அருங்காட்சியகம் அமைக்க 12.21 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பதினொரு மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க 1200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்கும் திட்டத்துக்கு 966 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

அம்மா உணவகத் திட்டத்துக்கு 100 கோடி ஒதுக்கப்படும். பள்ளிகளில் மதிய சத்துணவுத் திட்டத்திற்கு ரூ.1,863 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உணவு மானியத்துக்கு 6500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.பெண்கள் பாதுகாப்புக்கான நிர்பயா திட்டத்துக்கு 71 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசுப் பேருந்துகளில் சிசிடிவி அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 13 பணிபுரியும் பெண்கள் விடுதி அமைக்கப்படும்; முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்திற்கு 956.21 கோடி ரூபாய்
ஒதுக்கீடு.சிட்லபாக்கம் ஏரி மறுசீரமைப்பு பணிக்கு 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு.2020 - 21ம் நிதியாண்டில் தமிழகத்தின் கடன் 4,56,660 கோடி ரூபாயாக இருக்கும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.இது நடப்பு தமிழக சட்டப்பேரவையின் கடைசி முழுமையான நிதிநிலை அறிக்கை என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த மத்திய பட்ஜெட்டில் மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்டிருப்பதால் இதன் மூலமான வருமானம் சுமார் இரண்டாயிரம் கோடி அதிகரிக்கும் என்றும், பிற பொருட்களின் வரி உயர்வால் ஜிஎஸ்டி வரி வருமானம் முப்பதாயிரம் கோடி அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த நிதியாண்டில் மத்திய அரசிடமிருந்து தமிழகத்துக்கு வரவேண்டிய பங்கீடான ஏழாயிரத்து ஐநூற்று எண்பத்தாறு கோடி ரூபாய் குறைந்துவிட்டதால் இந்த ஆண்டின் வருவாய் பற்றாக்குறை பத்தாயிரம் கோடி அதிகரித்துள்ளது. இப்போதைய நிலவரப்படி உள்ளாட்சித்துறைக்கு ஏழாயிரம் கோடியும் பள்ளிக்கல்வித்துறைக்கு நாலாயிரம் கோடியும் மத்திய அரசு தர வேண்டியதாக உள்ளது.

இந்தத் தொகை உட்பட மத்திய அரசின் நிலுவைத் தொகை பனிரெண்டாயிரம் கோடியே இருநூற்று அறுபத்து மூன்று லட்சமாக உள்ளது.
ஆக, டாஸ்மாக் வருவாயை பெருமளவு நம்பித்தான் தமிழகம் இயங்குகிறது என்பதையே இந்த பட்ஜெட் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது!


இளங்கோ கிருஷ்ணன்