TNPSC முறைகேடு… பாழாகும் இளைஞர்கள் வாழ்க்கை!‘கால் காசுன்னாலும் கவர்மென்ட் காசா இருக்கணும்’ என ஊர் பக்கங்களில் சொல்வார்கள். அப்படிப்பட்ட அரசுப் பணிகளுக்கான தேர்வுகளுக்கு டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமே இன்றுவரை நம்பகத்தன்மையாக இருந்து வந்தது. பல ஏழை, எளிய மாணவர்கள் டிஎன்பிஎஸ்சியின் நேர்மையை நம்பியே நம்பிக்கையுடன் படித்தனர்.

ஆனால், சமீபத்திய குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளில் அரங்கேறிய முறைகேடுகள் அந்த நம்பிக்கையையும் மாணவர்களின் எதிர்காலக் கனவையும் தூள் தூளாக்கி இருக்கின்றன.கடந்த செப்டம்பர் மாதம் குரூப் 4 தேர்வு நடந்தது. இதைத் தமிழகம் முழுவதும் 16 லட்சத்து 29 ஆயிரத்து 865 பேர் எழுதினர். இதற்கான முடிவுகள் நவம்பரில் வெளியானது. அப்போது வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் முதல் நூறு இடங்களில் 39 பேர் ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் இருந்து தேர்வாகினர்.

இது மற்ற மாணவர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்த, புகார்கள் டிஎன்பிஎஸ்சிக்குப் பறந்தன. பின்னர் முறைகேடு உறுதியாக, இதில் ஈடுபட்ட 99 பேருக்கு வாழ்நாள் தடை விதித்தது டிஎன்பிஎஸ்சி.எதிர்க்கட்சிகளும், மாணவர்களும் விசாரணையை சிபிஐக்கு மாற்றச் சொல்லிக் கேட்க, மாநில சிபிசிஐடி போலீசார் விசாரணையைத் தொடங்கினர். இந்நிலையில் குரூப் 2ஏவிலும் முறைகேடு நடந்தது தெரிய தமிழகமே அதிர்ந்துபோனது. இப்போதுவரை இந்த முறைகேடுகளில் ஈடுபட்ட 45 பேர் கைதாகி உள்ளனர்.

இந்நிலையில் தமிழ்நாடு போட்டித் தேர்வர்கள் நலஅமைப்பின் தலைவர் கலீல் பாட்ஷா மற்றும் செயலாளர் திருக்குமரன் ஆகியோரிடம் பேசினோம்.   
‘‘இப்ப எனக்கு வயது நாற்பதை நெருங்குது. என்னால, குரூப் 1 தேர்வு எழுத முடியாது. அதுக்கான வயது வரம்பு 37. அதனால, குரூப் 2, குரூப் 4னு மற்ற தேர்வுகளை எழுதிட்டு இருக்கேன். ஏற்கனவே, குரூப் 4ல வேலை கிடைச்சும், என்னோட கனவு குரூப் 1ல் இருந்ததால அதை  நிராகரிச்சேன். அப்புறம், குரூப் 1லும் முறைகேடு நடந்துச்சு. இப்ப குரூப் 4, குரூப் 2னு முறைகேடுகள் நடக்கறதை பார்க்கறப்ப ரொம்ப வேதனையா இருக்கு.

தமிழகத்துல மட்டும் போட்டித் தேர்வு எழுதுறவங்க 30 லட்சம் பேர் இருக்காங்க. இதுல 90 சதவீதம் பேர் ஏழை, எளிய நடுத்தர மக்கள். டிஎன்பிஎஸ்சியை நம்பித்தான் படிக்கிறாங்க. எல்லோருமே வயசைவிட்டு, வாழ்க்கையைத் தொலைச்சு படிச்சிட்டு இருக்காங்க. இப்ப அதுலயே முறைகேடுன்னா நாங்க எப்படித்தான் அரசு வேலைக்குப் போறது?’’ என வருத்தம் பொங்கப் பேசினார் கலீல் பாட்ஷா.

‘‘முன்னாடி வேலைவாய்ப்பு அலுவலகங்கள் வழியா ஆட்களைத் தேர்வு ெசய்தாங்க. அப்ப சீனியாரிட்டில பல முறைகேடுகள் நடந்ததாலதான் அந்த சிஸ்டத்தை எடுத்தாங்க. இனி அரசுப் பணிகள் எல்லாமே போட்டித் தேர்வு மூலம் நடக்கணும்னு கொண்டு வந்தாங்க. ஆனா, இன்னைக்கு இதுல சொல்ல முடியாத அளவுக்கு ஊழல். இப்ப நடந்த முறைகேடுகூட எங்க மாணவர்கள் புகார் கொடுத்ததாலதான் வெளியே வந்திருக்கு...’’ என்கிற திருக்குமரன் குரூப் 1 தேர்வுக்குப் படித்து வருபவர்.

‘‘டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுல இன்டர்வியூ உள்ள தேர்வுகள், இன்டர்வியூ இல்லாத தேர்வுகள்னு இருக்கு. இப்ப குரூப் 1, குரூப் 2 உள்ளிட்ட அதிகாரமிக்க பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வுனு மூணு இருக்கும். குரூப் 2ஏ, குரூப் 4, விஏஓ, இதுக்கெல்லாம் நேர்முகத் தேர்வு இருக்காது.

அதனால, குரூப் 4 தேர்வு விடைத்தாள்ல அழியிற மையை வச்சு ஏஜென்ட்கள் மூலம் வந்த தேர்வர்கள் ஷேடு பண்ணியிருக்காங்க. அதை விக்கிரவாண்டி பக்கத்துல வச்சு மாத்தினதா செய்திகள்ல வருது. அதுதான் இப்ப விசாரணையில இருக்கு.

இது ஒருபுறம். அடுத்து, குரூப் 1லும் நிறைய முறைகேடு நடந்திட்டு இருக்கு. இது டிஎஸ்பி, துணை கலெக்டர், டிஆர்ஓனு பெரிய பதவிகளுக்கான தேர்வு. இந்தப் பதவிகளை இப்ப உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தங்கள் மகளுக்கோ, மகனுக்கோ, உறவினர்களுக்கோ வாங்கித் தர துடிக்கிறாங்க. இதுக்கு பின்புலமா சென்னையில் உள்ள தனியார் பயிற்சி மையம் இருந்ததா செய்திகள் முன்னாடியே வந்திருக்கு. அவர்மீது வழக்கும் போடப்பட்டது. அப்புறம், அது அமுங்கிடுச்சு.

குரூப் 1 முதல்நிலை தேர்வுல, ஏஜென்ட்கள் வழியா விடைத்தாளை வாங்கி முறைகேடு பண்ணி பிரதான தேர்வுக்கு போயிடறாங்க. அடுத்து, விடைத்தாள்ல சில குறியீடுகளை வச்சு திருத்துபவர் மூலம் மதிப்பெண்கள் அதிகமா வாங்கறாங்க. கடைசியா, நேர்முகத் தேர்வு பேனல்ல ஐந்து பேர் இருப்பாங்க. இதுல நான்கு பேர் துறை சார்ந்தவங்க. ஒருத்தர் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர். இதுல துறை சார்ந்த வல்லுநர்களுக்கு மதிப்பெண் போடுகிற அதிகாரம் கிடையாது. உறுப்பினர் மட்டும்தான் மதிப்பெண் போடுவார். இந்த உறுப்பினர் பெரும்பாலும் கட்சிக்காரங்களாதான் இருப்பாங்க. இவங்ககிட்ட தனியார் பயிற்சி மைய நபர்கள் முன்கூட்டியே சொல்லிடுவாங்க.

கடந்த 2019ம் ஆண்டு குரூப் 1ல் 181 பதவிகளுக்கு தேர்ந்தெடுத்தாங்க. இதுல குறிப்பிட்ட அந்த தனியார் பயிற்சி மையம் 150 பேர் எங்ககிட்ட படிச்சவங்கனு பெருமையா சொல்லுது. எப்படி ஒரே பயிற்சி மையத்துல இத்தனை பேர் பாஸ் பண்ண முடியும்?

இதுல முதல் மதிப்பெண் வாங்கின மாணவி டிவி பேட்டில 2010ல் டிகிரி முடிச்சிட்டு ஏழு வருஷங்களா தனியார் நிறுவனத்துல வேலை பார்த்ததா சொல்றாங்க. இடைப்பட்ட காலத்துல அவங்க எந்தத் தேர்வுக்கும் படிக்கல. அப்புறம், 2018ல் படிச்சு முதல் மதிப்பெண் எடுத்தாங்களாம். இந்தக் குறுகிய காலத்துல மாநில முதல் மதிப்பெண் சாத்தியமா? இவங்க குடும்பப் பின்புலத்தை ஆராய்ந்தால் நிச்சயம் உண்மை நிலவரம் தெரிய வரும்.

அடுத்து, தமிழ் வழியில் படிச்சவங்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு தரணும்னு அரசாணை இருக்கு. இதிலும் முறைகேடு நடக்குது. பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு, கல்லூரினு பதினைந்து வருடங்களும் ஒருத்தர் தமிழ் வழியில் படிச்சிருக்கணும். ஆனா, இந்த முறையை டிஎன்பிஎஸ்சி பின்பற்றாமல் பட்டப் படிப்பு மட்டும் தமிழ்ல படிச்சா போதும்னு சொல்லுது.

அதிகாரம் உள்ளவங்க, தொலைநிலை கல்வி நிறுவனத்துல பிஏ தமிழோ, வரலாறோ தமிழ்ல படிச்ச மாதிரி ஒரு சான்றிதழ் வாங்கி இந்த இடஒதுக்கீடு வாங்கிடறாங்க. இதுல சிவில் நீதிபதி தேர்வு மட்டும் விதிவிலக்கா இருக்கு. ஏன்னா, சட்டத்துறைகிட்ட டிஎன்பிஎஸ்சியால மோத முடியல.
இங்க பணம்தான் முக்கியமா இருக்கு. அதனால, குரூப் 1க்கு ரூ.75 லட்சம், குரூப் 2க்கு ரூ.50 லட்சம், குரூப் 4க்கு ரூ.10 லட்சம்னு ஒவ்வொரு பதவிக்கும் ஓப்பன் டெண்டர் விட்டுட்டா அரசுக்கும் நல்ல வருமானம் கிடைக்கும், எங்க வாழ்க்கையும் பாழாகாது...’’ என மிகுந்த வேதனையுடன் தெரிவித்தார் திருக்குமரன்.

டிஎன்பிஎஸ்சி தேர்வில் நடக்கும் முறைகேட்டை எதிர்த்து 2004ல் இருந்து வழக்குத் தொடுத்து வருபவர் வழக்கறிஞர் எஸ்.எஸ்.மாதவன். அவரைச் சந்தித்தோம். ‘‘நான், 2001ல் குரூப் 1ன் முதல்நிலைத் தேர்வும், 2002ல் பிரதான தேர்வும் எழுதினேன். இதுக்கான ரிசல்ட் 2004ல் வந்துச்சு. அதுல நிறைய முறைகேடு நடந்தது. 91 பேர்ல 83 பேர் முறைகேடு செய்துதான் பாஸானாங்க. தேர்வு எழுதிய மறுநாளே இந்த முறைகேட்டைப் பத்தி நூறு பேர்கிட்ட கையெழுத்து வாங்கி, மனுவா தேர்வாணையத்துக்கும், தலைமைச் செயலகத்துக்கும் அனுப்பினேன். பிறகு, ஐகோர்ட்ல வழக்குப் போட்டேன்.

சில தடங்கல்களுக்குப் பிறகு 2011ல் நீதிபதிகள் தர்மாராவ், அரிபரந்தாமன் பெஞ்ச் விசாரிச்சாங்க. ஒரு தேர்வரின் பேப்பரை நீதிபதிகள் பார்த்து ஆடிப்போயிட்டாங்க. அதுல நிறைய சங்கேதக் குறியீடுகள் இருந்துச்சு. ‘இந்தத் தேர்வரைத் தேர்ந்தெடுத்து இருக்கீங்களா’னு நீதிபதி தர்மாராவ் கேட்டார்.

அதுக்கு டிஎன்பிஎஸ்சி, ‘அவர்தான் முதல் மதிப்பெண்’னு சொன்னது. உடனே, நீதிபதி அந்தப் பேப்பரை வீசியெறிஞ்சார். அந்தத் தேர்வர் இன்னைக்கு ஐஏஎஸ்ஸா இருக்கார். அப்ப, அந்த 83 பேரையும் டிஸ்மிஸ் செய்யச் சொல்லி தீர்ப்பு வந்துச்சு. பிறகு, அவங்க சுப்ரீம் கோர்ட் போனாங்க. இதே தீர்ப்பை 2014ல் சுப்ரீம் கோர்ட்டும் உறுதிப்படுத்துச்சு.

அப்புறம், 2016ல் சுப்ரீம் கோர்ட்டின் அதே பெஞ்ச் இந்திய அரசியலமைப்பு சரத்து 142ன்படி தங்களுக்கு இருக்கும் அதிகாரத்தைக் கொண்டு கருணை அடிப்படையில் அவங்க எல்லோரையும் பணியமர்த்துச்சு. இதுக்கிடையில், இப்ப விக்கிரவாண்டில விடைத்தாளை சேஸ் பண்ணின மாதிரி 2007லிலும் நீலகிரி மாவட்டம் கூடலூர்ல விடைத்தாளை சேஸ் பண்ணினாங்க. விடைத்தாளைக் கொண்டு வந்த லாரி கூடலூருக்கும் ஊட்டிக்கும் இடையே நின்னுடுச்சு.

உடனே நாங்க தகவல் கொடுத்தோம். அதுக்கு, யானைகள் குறுக்க வந்ததால லாரி ரெண்டு மணிநேரம் நின்னதா சொன்னாங்க. அப்ப அந்த இடத்துல டிராபிக் ஜாம் ஏற்பட்டிருக்கும்னு போலீஸ், வனத்துறைகிட்ட கேட்டேன். எதுவுமில்லனு சொன்னாங்க. அப்பவும் அந்த விஷயம் அமுக்கப்பட்டுச்சு.
அடுத்து, ஓர் ஆண் தேர்வரை 33 சதவீத இடஒதுக்கீட்டுக்காக பெண் தேர்வரா மாத்தி தேர்வு எழுத வச்சாங்க. பிறகு, ரிசல்ட் வந்தப்ப ஆண் தேர்வரா மாத்தி னாங்க. இதையும் கோர்ட்ல தெரிவிச்சோம். எதுவும் நடக்கல.

அதனால, இப்ப கடந்த இருபது வருஷமா நடந்த முறைகேட்டை சிபிஐ மூலம் விசாரிக்கணும்னு கோர்ட்ல வழக்குத் தொடுக்க இருக்கேன். ஏன்னா, சிபிசிஐடி மூலம் விசாரணை முறையா நடக்காது. காரணம், முன்னாடி அந்த முறைகேட்டுல பணியமர்ந்த 83 பேர்ல சிலர்தான் இன்னைக்கு அரசுத் தேர்வாணையத்துலயும், சிபிசிஐடிலயும் அதிகாரிகளா இருக்காங்க. பிறகெப்படி நேர்மையான விசாரணை நடக்கும்? இந்த முறைகேடுகளுக்கெல்லாம் காரணம் அதிமுக அரசுதான்...’’ என்ற எஸ்.எஸ்.மாதவனிடம் இதனைத் தடுக்க வழிகள் இல்லையா என்றோம்.

‘‘டிஎன்பிஎஸ்சி என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட ஓர் அமைப்பு. அதுக்குள்ள உறுப்பினர்ங்கிற போர்வைல அரசியல்வாதிகளை அனுமதிக்கக் கூடாது. அடுத்து, நேர்முகத் தேர்வுல உறுப்பினர்களுடன் சேர்ந்து துறை சார்ந்த வல்லுனர்களும் மதிப்பெண் போட்டு அதன் சரா சரியை சேர்க்கணும். உறுப்பினருக்கு மட்டும் அந்த உரிமையை வழங்கக் கூடாது.

அடுத்து, தேர்வாணையத்துல இருக்குற பணியாளர்களை யுபிஎஸ்சி மாதிரி மூணு வருஷத்துல மாத்திடணும். அதாவது, தேர்வாணையத்துல ஒருத்தர் மூணு வருஷம்தான் வேலை பார்க்க முடியும்ங்கிற சிஸ்டம் வந்தா, அவரால் எந்த முறைகேடும் செய்ய முடியாது...’’ என்றார் அழுத்தமாக!  
இந்நிலையில் விடைத்தாளைப் பாதுகாப்பான முறையில் கொண்டு வர பழைய முறையை மாற்றி அதிநவீன தொழில்நுட்ப ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி வசதி உள்ளிட்ட சில அதிரடி சீர்திருத்தங்களை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

மாணவர்களின் கோரிக்கைகள்...

* இப்போது டிஎன்பிஎஸ்சி தேர்வில் மூன்று மாவட்டங்களைத் தேர்ந்தெடுக்க தேர்வர்களுக்கு அனுமதி இருக்கிறது. இதை இரண்டாகக் குறைத்து, தற்ேபாது வசிக்கிற அல்லது சொந்த மாவட்டம் என்கிற நிலை கொண்டு வரவேண்டும். அப்போதுதான் ஏரியாவுக்கு சம்பந்தமில்லாதவர்கள் வேறிடத்தில் தேர்வெழுத முடியாது.

* ஆசிரியர் வாரியத் தேர்வு போல டிஎன்பிஎஸ்சியும் OMR கார்பன் காப்பியை அந்தத் தேர்வரிடம் தரவேண்டும். அதில் தேர்வு அறை கண்காணிப்பாளர் கையொப்பமும் முத்திரையும் இடவேண்டும்.

கலந்தாய்வுக்குப் போகும்முன் சான்றிதழ் பதிவேற்றம் செய்யும்போது இந்த கார்பன் காப்பியையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஏனெனில், இதனை அசலுடன் ஒப்பிட்டுக் கொள்ளலாம். இதனால், விடைத்தாளை மாற்ற முடியாது.

* பிரதான எழுத்துத் தேர்வில் விடையில்லா இடத்தில் அறை கண்காணிப்பாளர் not written என ரப்பர் ஸ்டாம்ப் இட வேண்டும். இதனால், விடுபட்ட இடத்தில் வேறு எவரும் சரியான விடையை எழுதுவதைத் தவிர்க்கலாம்.

* ஒரே மையத்திலிருந்து அதிகப்படியாக தேர்வு பெறுபவர்கள் பற்றி விசாரிக்க வேண்டும்.

* கேள்வித்தாள் வைக்கப்படும் இடம் 24 மணிநேரமும் கேமிரா கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

* தமிழ் வழி ஒதுக்கீடுகளை சரியாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

பேராச்சி கண்ணன்