ஒரே இரவில் கவனம் ஈர்த்த கம்பாலா வீரர்...‘ஓவர் நைட்டுல ஓஹோனு வாழ்க்கை’ என ஒரு படத்தில் வரும் டயலாக்கைக் கேட்டிருப்போம். இது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ நிச்சயம் ஸ்ரீநிவாச கவுடாவுக்கு பொருந்தும். ஏனெனில், ஒரே இரவில் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தொடங்கி மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வரை அனைவரையும் கவனிக்க வைத்துவிட்டார்.

தக்‌ஷிண கர்நாடகத்தின் மூடுபிட்ரி பகுதியைச் சேர்ந்தவர் நிவாஸ் கவுடா. கட்டடத் தொழிலாளியான இவர், அந்தப் பகுதியின் புகழ்பெற்ற கம்பாலா எனும் எருது விளையாட்டில் 142 மீட்டர் தூரத்தை 13.62 விநாடிகளில் கடந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

இந்த எருது விளையாட்டு நம்மூர் ஜல்லிக்கட்டு போல அங்கே பாரம்பரியமாக விளையாடப்படுவது. எருதுகளை சகதிநிறைந்த நெல் வயலில் வேகமாக ஓடியபடி விரட்டிச் செல்ல வேண்டும். இதன் ‘ஜாக்கி’யாக மிளிர்பவர் ஸ்ரீநிவாச கவுடா.  

இதில் செய்தி என்னவென்றால் நூறு மீட்டரை 9.55 வினாடிகளில் அவர் கடந்தது தான். ஏனெனில், உசேன் போல்ட்டின் சாதனையான 9.58யைவிட .03 வினாடி குறைவாகவே இலக்கை அடைந்துள்ளார்!

இதனால், இவரை இந்தியத் தடகள கூட்டமைப்பு தேர்வு செய்து ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஆனால், ஸ்ரீநிவாச கவுடாவோ, ‘‘உசேன் போல்ட்டுடன் என்னை ஒப்பிடக் கூடாது. அவர் உலகச் சாம்பியன். நான் இந்தச் சேற்று வயலில் ஓடுபவன்...’’ என நெளிகிறார்.

இந்நிலையில் கிரண் ரிஜிஜு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் நிவாச கவுடாவுக்கு பெங்களூரிலுள்ள இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் பயிற்சிகள் அளிக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்.

ஆனால், தொடர்ந்து கம்பாலா போட்டிகளில் கலந்து கொள்வதால் ஆணையத்தின் தகுதிச் சுற்றுப் பயிற்சியில் தன்னால் கலந்து கொள்ள முடியாது என்றும், கவனம் முழுவதும் தற்போது கம்பாலா விளையாட்டில் மட்டுமே இருப்பதாகவும் கூறியுள்ளார் இந்த இருபத்தியெட்டு வயது இளைஞர்.

அவருக்கு அவகாசம் வழங்கப்படும் என்றும், தகுதிச் சுற்றுக்கான நாள் இன்னும் குறிக்கப்படவில்லை என்றும் தெரிவித்த பெங்களூர் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஸ்ரீநிவாச கவுடாவுக்காகக் காத்திருக்கிறது.

பி.கே.