ரத்த மகுடம்-93



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

‘‘சிவகாமி...’’ அவளை லேசாக இடித்து நடப்புக்குக் கொண்டு வந்தார் ராமபுண்ய வல்லபர். ‘‘இவர்தான் பாண்டிய மண்டலத்தின் சக்கரவர்த்தியான அரிகேசரி மாறவர்மரின் அருந்தவப்புதல்வர் கோச்சடையன் இரணதீரன். தந்தையைப் போலவே மிகப்பெரிய வீரர். தீரர். சூரர். தன் காலத்தில் தமிழக வரலாற்றை இவர் திருத்தி எழுதுவார் என ஜோதிடர்கள் ஆருடம் கூறுகிறார்கள்...’’‘‘பெற்ற பொற்காசுகளுக்குத் தகுந்தபடி அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

பெரிதுபடுத்த வேண்டாம் அம்மணி...’’ சிவகாமியைப் பார்த்து நிதானமாகச் சொன்ன கோச்சடையன் இரணதீரன், சாளுக்கிய போர் அமைச்சர் பக்கம் திரும்பினான்: ‘‘இவர் யாரென்று அறிமுகப்படுத்தவில்லையே..?’’ ‘‘இவர்... இவள்... சிவகாமி...’’ என ராமபுண்ய வல்லபர் சொல்லும்போதே வெளியில் அரவம் கேட்டது.

திரும்பி வாசலைப் பார்த்தவருக்கு எதுவும் புரியவில்லை: ‘‘இளவரசே...’’‘‘சொல்லுங்கள்...’’ சாளுக்கிய இளவரசன் விநயாதித்தனும் பாண்டிய இளவரசன் கோச்சடையன் இரணதீரனும் ஒருசேர குரல் கொடுத்தார்கள்.பாண்டிய இளவரசன் அருகில் நின்றிருந்த கரிகாலன் வாய்விட்டுச் சிரித்தான்: ‘‘நியாயமாகப் பார்த்தால் நானும் உங்கள் இருவருடனும் சேர்ந்து ‘சொல்லுங்கள்’ என்று கேட்டிருக்க வேண்டும்! ஏனெனில் அடியேனும் சோழ மண்டலத்தின் இளவரசன்தான்!’’

அவனை எரித்து விடுவதுபோல் பார்த்தார் ராமபுண்ய வல்லபர்: ‘‘இரண்டு தெரு... மிஞ்சிப்போனால் ஒரு சிற்றூர்... அது மண்டலமாகுமா..?’’
‘‘ஜீவநதிகளின் பிறப்பிடங்கள் அனைத்தும் சிறிய ஊற்றுதானே..?’’ கேட்ட கரிகாலனின் புருவங்கள் உயர்ந்தன.‘‘உன்னிடம் பேசுவதற்காக நான் இங்கு வரவில்லை...’’‘‘உங்களிடம் பதில் சொல்வதற்காக நானும் இங்கு வரவில்லை...’’‘‘கரிகாலா... என்ன இது..? வயதில் பெரியவர்களுக்கு உரிய மரியாதையை அளிக்க வேண்டும் என நீதானே என்னிடம் சொன்னாய்... அப்படியிருக்க நீயே அதிலிருந்து பிறழலாமா... அமைதியாக இரு...’’ நண்பனை சாந்தப்படுத்திவிட்டு ராமபுண்ய வல்லபரை ஏறிட்டான் கோச்சடையன் இரணதீரன்: ‘‘என் நண்பன் பேசியதற்கு தங்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்...’’

‘‘என்ன இது... பெரிய பெரிய வார்த்தைகளைச் சொல்கிறீர்கள்...’’ என்றபடி பாண்டிய இளவரசனின் கரங்களைப் பற்றினார் சாளுக்கிய போர் அமைச்சர்: ‘‘தவறு என்னுடையதுதான்... சாளுக்கிய இளவரசரை அழைத்தேன்...’’‘‘பெயர் சொல்லியே அழைத்திருக்கலாமே? உங்கள் சீடன்தானே விநயாதித்தன்..?’’ கரிகாலன் இடைமறித்தான்: ‘‘என்ன விநயாதித்தா... உன்னைப் பெயர் சொல்லி அழைக்கக் கூடாது என இந்த முதியவருக்கு ஏதேனும் கட்டளையிட்டிருக்கிறாயா..?’’

‘‘அவர் என் குரு... நான் எப்படி அவருக்கு கட்டளை பிறப்பிப்பேன்...’’ பதறிய விநயாதித்தன், ‘‘நீங்கள் பேசிக் கொண்டிருங்கள்...’’ என பொதுவாகச் சொல்லிவிட்டு, ராமபுண்ய வல்லபரின் கரங்களைப் பற்றினான்: ‘‘என்ன விஷயம் குருதேவா... வாருங்கள்... அங்கு என்ன அரவம் என்று பார்ப்போம்...’’

இருவரும் நடந்தார்கள். சாளுக்கிய போர் அமைச்சர் தன் பற்களைக் கடித்தார்: ‘‘சின்னப் பயல்... என்ன பேச்சு பேசுகிறான்... அவனை...’’
‘‘ஷ்... குருதேவா... அமைதி... கரிகாலன் இப்போது பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு... உடன் பாண்டிய இளவரசன் இருப்பதை மறந்துவிட்டீர்களா..? அவனை அழைத்து வந்ததும் கோச்சடையன் இரணதீரன்தான்... இப்போது... இந்த இடத்தில்... நாம் அமைதி காப்பதே புத்திசாலித்தனம்... இது தங்களுக்கே தெரியும்...’’

‘‘ம்... தெரியும்...’’ சீறினார் ராமபுண்ய வல்லபர். ‘‘ஆடட்டும்... கரிகாலனால் எந்த அளவுக்குச் செல்ல முடியும்..? பாண்டிய இளவரசன் அருகில் இருக்கும்வரைதானே..? அதன் பிறகு அவனைக் கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிக்கிறேன்... சரி... விநயாதித்தா... நீ செல்...’’
‘‘சற்று நேரம் கழித்து செல்கிறேன் குருதேவா... இப்பொழுதே சென்றால் கேள்விகள் எழும்...’’‘‘எழட்டுமே..? சிவகாமி அங்கு தனியாக இருக்கிறாள் விநயாதித்தா...’’‘‘அதனால்தான் நிம்மதியாக தங்களுடன் வருகிறேன் குருதேவா... எல்லா சூழல்களையும் சந்திக்கும் திடம் சிவகாமிக்கு உண்டு என்பதுதான் தங்களுக்கே தெரியுமே...’’

‘‘தெரியும்தான்... ஆனால், கரிகாலன் அங்கிருக்கிறானே... அவளால் அவனை சமாளிக்க முடியுமா..?’’ முணுமுணுத்தார் ராமபுண்ய வல்லபர்.
சாளுக்கிய போர் அமைச்சர் சந்தேகப்பட்டதுபோலவேதான் அங்கு சூழல் நிலவியது. தன்னை தற்காத்துக்கொள்ள சிவகாமி போராடிக் கொண்டிருந்தாள். அவள் எந்தப் பக்கம் சென்றாலும் அந்தப் பக்கத்தில் அம்பு எய்ய கரிகாலன் தயாராக இருந்தான்.
அதன் ஒரு பகுதியாகவே முதல் அம்பை எய்தான்.

‘‘பாண்டிய இளவரசே... அம்மணி யாரென்று கேட்டீர்கள் அல்லவா..?’’
‘‘ஆமாம்... சிவகாமி என சாளுக்கிய போர் அமைச்சர் கூறினாரே..!’’ இரணதீரன் புன்னகைத்தான்.
‘‘பெயரைத்தானே அவர் சொன்னார்...’’‘‘அதைத்தாண்டியும் இருக்கிறதா..?’’‘‘விந்திய மலை உயரத்துக்கு இருக்கிறது பாண்டிய இளவரசே!’’ சிவகாமியைப் பார்த்தபடி கரிகாலன் சொன்னான்.

‘‘அதில் ஒரு பகுதியைச் சொல் கரிகாலா...’’ சுவாரஸ்யத்துக்குத் தயாரானான் கோச்சடையன் இரணதீரன்.
‘‘ஒரு பகுதியை விட உச்சி முனையை சொல்கிறேன் பாண்டிய இளவரசே... இந்த அம்மணி சிவகாமிதான் சாளுக்கியர்களின் ஒற்றர் படைத் தலைவி!’’
‘‘அப்பாடா... எங்கே உண்மையைச் சொல்லி, பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த கோமகனான உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்வீர்களோ என்று நினைத்தேன்...’’ சிவகாமி நகைத்தாள்.

‘‘அப்படியானால் கரிகாலன் பொய் சொல்கிறானா அம்மணி..?’’
‘‘பெயர் சொல்லியே என்னை தாங்கள் அழைக்கலாம் பாண்டிய
இளவரசே... வயதில் என்னை விட தாங்கள் பெரியவர்...’’

‘‘அதாவது நீங்கள் கிழவராம்... இந்த அம்மணி குமரியாம்!’’ கரிகாலன் உதட்டைப் பிதுக்கினான்.
‘‘பேசாமல் இரு கரிகாலா... அம்மணி... சரி... சிவகாமி... நீ சாளுக்கியர்
களின் ஒற்றர் படைத் தலைவி இல்லையென்றால்... யார் நீ..?’’ இரணதீரன் புருவத்தை உயர்த்தினான்.
‘‘பல்லவ இளவரசி!’’‘‘என்ன..?’’ பாண்டிய இளவரசன் அதிர்ந்தான்.

‘‘ஆமாம்... இரணதீரா...’’ நட்பின் அடிப்படையில் ஒருமையில் விளித்தான் கரிகாலன்: ‘‘இன்னும் சற்று நேரம் இவளிடம் சிரித்துப் பேசிவிட்டு நீ நகர்ந்ததும் ‘நான் பாண்டிய இளவரசி’ என யாரிடமாவது தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வாள். காரியத்தைச் சாதித்துக் கொள்வாள்.

அதற்காகத்தான் ‘வயதில் நான் இளையவள்... தங்கள் சகோதரி போன்றவள்...’ என்றெல்லாம் இவள் தூண்டிலை வீசுகிறாள்...’’
‘‘தங்கள் நண்பர் வழக்கம்போல் பொய் சொல்லி விளையாடுகிறார்...’’ கரிகாலன் பக்கம் திரும்பாமல் இரணதீரனைப் பார்த்தபடி சொன்னாள்.
‘‘விளையாடுவது நானா..? நல்லது... இரணதீரா... இந்த அம்மணிதான் பல்லவ இளவரசி என்றால் எதற்காக மாறுவேடத்தில் மதுரை மாநகருக்குள் நுழைய வேண்டும்..?’’ கண்களால் சிரித்தபடி கரிகாலன் கேட்டான்.

‘‘என்ன செய்ய... உடன் வந்தவர் மாறுவேடத்தில் நுழையும்படிதானே நிர்ப்பந்தப்படுத்தினார்...’’ சிவகாமி பளிச்சென்று பதில் அளித்தாள்.
‘‘அட... பரவாயில்லையே... நிர்ப்பந்தம் செய்தால் அடிபணிவாயா..?’’
‘‘அது நிர்ப்பந்தம் செய்பவரைப் பொறுத்தது! உதாரணமாக...’’
‘‘உதாரணமாக..?’’

‘‘நிர்ப்பந்தம் செய்யாமல் நீங்கள் சாதாரணமாக எது சொன்னாலும் அதை தலையால் நிறைவேற்றுவேன்! அந்த உரிமையை தங்களுக்கு மட்டுமே வழங்கியிருக்கிறேன்!’’‘‘பலே... இது அடுத்த கட்ட பொய்யா..?’’
‘‘இறுதிக்கட்ட உண்மை... அதற்கு இரண்டு அத்தாட்சிகள் இருக்கின்றன...’’
‘‘என்னவோ..?’’

‘‘முதலாவது, நீங்களும் நானும் இணைந்துதான் மதுரைக்கு வந்தோம். அதுவும் மாறுவேடத்தில்... நீங்கள் கேட்டுக் கொண்டதால் என் தோற்றத்தை நானும் மாற்றிக்கொண்டேன்...’’‘‘வேறு யாரிடமும் இப்படிச் சொல்ல வேண்டாம் அம்மணி... நவ துவாரங்களாலும் சிரிப்பார்கள்...’’ தன் குழலை ஒதுக்கியபடி சொன்னான் கரிகாலன்: ‘‘ஏனெனில் இரணதீரன் என் அத்தை மகன்..! அத்தை வீட்டுக்குள் எந்த தோற்றத்திலும் நான் நுழைவேன்... ஆனால், நீ...’’

‘‘உங்களை மணக்கவிருப்பவள்! தலைவன் எவ்வழியோ அவ்வழியே தலைவி!’’
மார்புக்கு நேராக தன் கைகளைக் கட்டியபடி கரிகாலனும் சிவகாமியும் உரையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்த கோச்சடையன் இரணதீரன் மெல்ல புன்னகைத்தான்: ‘‘மணம் வரை சென்றுவிட்டாயா கரிகாலா... என்னிடம் கூட மறைத்துவிட்டாயே...’’

‘‘எல்லோரிடமும் எல்லாவற்றையும் மறைப்பதுதானே உங்கள் மாமன் மகனின் இயல்பு..? அதனால்தான் அண்ணா இவரை பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த கோமகன் என்கிறேன்!’’ தன் பங்குக்கு சிவகாமியும் நகைத்தாள்.‘‘சரி சிவகாமி... இரண்டாவது: அத்தாட்சி என எதனைக் குறிப்பிடுகிறாய்..?’’ இரணதீரன் கேட்டான்.

கரிகாலன் இடைமறித்தான். ‘‘தங்கள் தந்தையார் இவளிடம் கொடுக்கச் சொல்லி ஓர் ஓலையை உங்களிடம் கொடுத்திருக்கிறார் அல்லவா..?’’
‘‘...’’‘‘அதை அப்படியே வாங்கி என்னிடம் தந்துவிடும்படி சில நாழிகைகளுக்கு முன் இவளிடம் சொன்னேன். அதைக் குறிப்பிடுகிறாளோ என்னவோ..! ’’
இரணதீரனும் சிவகாமியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். அப்போது எங்கிருந்தோ ஐந்து புறாக்கள் பறந்து வந்து இவர்கள் மூவருக்கும் மேல் வட்டமிட்டன!

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்