தொல்(லைக்) காப்பியம்- ஃப்ரெண்டு... பெஸ்ட் ஃப்ரெண்டு!நம்மகிட்ட அவனோட காதல் விஷயங்களை ஷேர் பண்றவன் ஃப்ரெண்டு. அதுவே நம்மளோட காதல் விஷயங்களை எல்லார்கிட்டயும் ஷேர் பண்றவன் நம்ம பெஸ்ட் ஃப்ரெண்டு. நாம சாப்பிட வருவதற்காக வெயிட் பண்றவன் ஃப்ரெண்டு. அதுவே நமக்காக காத்திருக்காம சாப்பிட்ட கைய நம்ம மூக்குக்கு நேரா நீட்டி, ‘நல்ல பிரியாணி, நீ ஏன் மச்சான் வரல’னு வெறுப்பேத்துறவன் பெஸ்ட் ஃப்ரெண்டு.

நம்மளோட ஜீன்ஸ் பேன்ட்டை எடுத்து போட்டுட்டு போறவன் ஃப்ரெண்டு. அதுவே நம்ம ஜட்டியையும் எடுத்து போட்டுட்டு போறவன் நம்ம பெஸ்ட் ஃப்ரெண்டு. அவசரத்துக்கு பைக்கோ பொருளோ ஓசில நமக்கு கொடுக்கிறவன் ஃப்ரெண்டு. ஆனா, நம்ம பைக்கையோ பொருளையோ நம்மைக் கேட்காமயே எடுத்து யூஸ் பண்ணிக்கிட்டு இருக்கிறவன் பெஸ்ட் ஃபிரண்டு.

சரக்கடிச்சு போதையானா, நம்மளை ரூமுக்கு கொண்டு வந்து விடுறவன் ஃபிரெண்டு. ஆனா, நாமளே ரூம்ல கொண்டு வந்து விடுற மாதிரி நம்ம கூட வந்தவன் மட்டையாகி இருக்கான்னா, அவன்தான் நம்ம பெஸ்ட் ஃப்ரெண்டு. எவன் நம்ம லவ்வரை தங்கச்சியா நினைச்சு பழகுறானோ அவன் நம்ம ஃப்ரெண்டு. ஆனா, நம்ம லவ்வுர பொண்ணு, நம்ம செட்டுல எவனை மனுஷனாக்கூட மதிக்காம இருக்கோ அவன் நம்ம பெஸ்ட் ஃப்ரெண்டு.

நம்மளோட காசை ஷேர் பண்ணி சரக்கடிக்கிறவன் ஃப்ரெண்டு. அதுவே நம்மளோட சரக்கை ஷேர் பண்ணி அடிக்கிறவன் பெஸ்ட் ஃப்ரெண்டு.
தனது தங்கச்சிய நமக்கு காட்டாம நம்மளோட பழகுறவன் ஃப்ரெண்டு. ஆனா, எப்படியும் வீட்டுல போட்டுக் கொடுப்பான்னு தெரிஞ்சும், நம்ம தங்கச்சிய ‘ஏய் எருமை என்ன’ன்னு நமக்காக எதிர்த்து நிக்கிறவன் பெஸ்ட் ஃப்ரெண்டு.
 
பரீட்சை பக்கத்துல வந்துட்டா உடனே குரூப் ஸ்டடிக்கு ரெடி பண்றவன் ஃப்ரெண்டு. ‘எக்ஸாம் கிடக்கட்டும் மச்சான்’னு குரூப் குடிக்கு ரெடி பண்றவன் பெஸ்ட் ஃப்ரெண்டு. நம்ம கல்யாணத்துக்கு வித்தியாசமா கிஃப்ட் வாங்கிட்டு வர்றவன் ஃப்ரெண்டு. ஒரு கிஃப்ட்டும் வாங்காம, நம்ம கல்யாணத்தன்னைக்கு வர கிஃப்ட்டை எல்லாம் நம்ம கூட நின்னு வாங்கி அடுக்கி வைக்கிறவன் பெஸ்ட் ஃப்ரெண்டு.

நம்மளைப் பற்றி நம்மகிட்ட பெருமையா பேசுறவன் ஃப்ரெண்டு. நம்மளைப் பற்றி அடுத்தவங்ககிட்ட பெருமையா பேசுறவன் பெஸ்ட் ஃப்ரெண்டு.
எவன் நம்மளால அவன் வீட்டுல திட்டு வாங்குறானோ அவன் நம்ம ஃப்ரெண்டு. எவன் நம்ம கூட நம்ம வீட்டுல நமக்காக திட்டு வாங்குறானோ அவன்தான் நம்ம பெஸ்ட் ஃப்ரெண்டு.

முடிஞ்சுபோன முதலிரவுக்கு மாலை கட்டும் மோடி!விட்டுப்போன புரு ஷனைக் கூப்பிட்டு எந்த பொண்டாட்டியாவது விருந்து வைப்பார்களா? கெட்டுப் போன பாலை எடுத்து எவராவது காபி போடுவார்களா? பட்டுப் போன மரத்துக்கு எவனாவது தண்ணீர் விடுவானா? இத்துப் போன இரும்புக்கு எவனாவது பெயிண்ட் அடிப்பானா? அத்துப் போன கயிறை வச்சு யாராவது மலையேறுவாங்களா? செத்துப் போன மனுஷனுக்குத்தான் பட்டு வேட்டி கட்டுவாங்களா?

பல யுகங்களுக்கு முன்னால புதைச்ச பொணத்தை தோண்டி யெடுத்து, அதுக்கு ஃபேஷியல் பண்றதும், கலிகாலம் ஆரம்பிக்கிறப்ப எரிச்ச பொணத்தின் எலும்பை எடுத்து அதுக்கு ப்ளீச்சிங் பண்றதுமே மத்திய அரசின் பொழப்பா போயிடுச்சு. மாட்டை இளைக்க விட்டுட்டு, கொம்புக்கு வண்ணம் பூசுறதும், மாவை புளிக்க வச்சுட்டு அதுல வெட்டியா தோசை சுடுறதுமே இந்த அரசாங்கத்தின் செயல்பாடுகள்.

நொடிந்துபோன, முடிந்து போன, பொதுப் பேச்சு வழக்கில் இல்லாத, வர்ணாஸ்ரமத்தை முன்னிறுத்தும் வேதங்களைத் தந்த வடமொழியின் வளர்ச்சிக்காக கடந்த மூன்றாண்டுகளில் செலவிடப்பட்ட தொகை மட்டும் ரூ.644 கோடி.  இவர்களது குஜராத் மாடலில் உள்ள ராஜ்கோட் அரசு மருத்துவமனையில் சென்ற வருடம் சரியான மருத்துவ வசதியும் சரியான சிகிச்சையும் இல்லாம இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 1235.

ஒரு நாளைக்கு சராசரியாக 3 குழந்தைகள் இறப்பதை கண்ணுக்கு தெரிந்தும் காப்பாற்ற முடியாத அரசு, இந்திய மக்கள் தொகையில் 0.1% கூட தெரிந்து வைத்திருக்காத, புரிந்துகொள்ள முடியாத ஒரு மொழிக்காக இவ்வளவு கோடிகளைக் கொட்டியிருக்கிறது. முடிஞ்சுபோன முகூர்த்தத்துக்கு மேளம் கொட்டுறதும், முடிஞ்சுபோன முதலிரவுக்கு மாலை கட்டுறதுமே மோடி அரசின் முக்கிய வேலைகளா போயிடுச்சு.
பேச்சைக் குறை!

கோயிலுக்கு வெளியே ‘அம்மா தாயே தர்மம் பண்ணுங்க, அய்யா தர்ம பிரபு பிச்சை போடுங்க’ன்னு ஹை டெசிபல்ல கூவி யாசகம் கேட்கும் பிச்சைக்காரரை விட, வாய்க்குள்ளேயே முணுமுணுத்து தனது கடமையை செய்யும் கோயில் அர்ச்சகர் அதிகம் சம்பாதிக்கிறார்.

‘சில்லறையா கொடுங்கய்யா, யாருப்பா அது படில நிற்கிறது? ஏறி வாய்யா... மிச்ச சில்லறையை இறங்குறப்ப வாங்கிக்க’னு இடைவிடாம பேசிக்கிட்டே பயணம் போற பஸ்ஸின் கண்டக்டர் கொடுக்கும் டிக்கெட்களை விட, எதுவுமே பேசாம எமதர்மராஜா ஒருவனது வாழ்க்கை பயணத்தை முடித்து வைக்க கொடுக்கும் டிக்கெட்களுக்குதான் மக்களிடம் மரியாதையும் பயமும் அதிகம்.

வளவளன்னு பேசிக்கொண்டிருக்கும் வயசான தாத்தா பாட்டிகளை விட எதுவுமே பேசாமல் பொக்கை வாய் புன்னகையால் எல்லோரையும் தன்னிடத்தில் கூட வைக்கிறது பேசக்கூட ஆரம்பிக்காத கைக்குழந்தை. வளவளன்னு பேசுவது வில்லன் கேரக்டர், வெறும் பன்ச் மட்டும் பேசுவது ஹீரோ கேரக்டர். பொண்டாட்டி களின் கோவ குரைப்புகளை விட பொண்டாட்டி களின்  முறைப்புதான் பல கணவர்களை பயமுறுத்துகிறது; பதற வைக்கிறது.

கத்தி சகுனம் சொல்லி சுவரில் சுற்றும் பல்லிகளை விட, சைலன்ட்டா சுருண்டு கிடக்கும் பாம்புதான் நம்மை பதற வைக்கிறது. வாய் மூடாமல் பாடம் நடத்தும் வாத்தியார்களைவிட, பார்வையாலேயே பயமுறுத்திப்போகும் ஹெட்மாஸ்டருக்கு சம்பளம் அதிகம். அதிகம் பேசுற ஆளு ஆங்கரிங் பண்றாங்க. குறைவா பேசி நிறைவா வேலை செய்யற ஆளோ அதே மேடைல அவார்டு வாங்குறாங்க. சரி, இப்ப என்னதான்யா சொல்ல வரனு நீங்க கேட்கறது தெரியுது.ஒண்ணுமில்லங்க... நல்ல சம்பாத்தியமும் புகழும் மரியாதையும் வரணும்னா, பேச்சைக் குறைங்க!

- தோட்டா ஜெகன்