Single ஆக வாழ்வது வரமா... சாபமா?‘சிங்கிளா..? விளையாடறீங்களா..? எங்களுக்கு இப்ப அதிகாரபூர்வமா இன்னொரு பேரு இருக்கு! அதுதான் #Self-partnered!அதாகப்பட்டது இவங்களை இவங்களே பார்த்துப்பாங்களாம்! இப்படித்தான் இப்போது சிங்கிள்ஸ் எல்லாம் கெத்து காட்டுகிறார்கள்.
‘இப்படி நீங்க அசால்ட்டா இருக்கறதால உங்களைச் சுத்தி இருக்கறவங்களுக்கு என்னென்ன நடக்குது தெரியுமா..?’ சட்டையை / சுரிதார் நுனியைப் பிடித்து உலுக்கியபடி ‘கமிட்டட்’ ஆட்கள் 10 பளார் கேள்விகளைக் கேட்கிறார்கள். 1. உங்களுக்கு ஆள் கிடைக்காததால் சிங்கிள் ஆக இருக்கிறீர்கள். சரி. அது ஏன் உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் ஆளே கிடைக்கக் கூடாது என பிரார்த்தனை செய்கிறீர்கள்?!

2. ஃபேஸ்புக் / டுவிட்டர் மாதிரியான சமூகவலைத்தளங்களில் உங்கள் நண்பர்களின் காதலி / காதலன் கண்களில் படுவது போல் ஏன் உங்கள் ஜிகிரி தோஸ்துகளை ப்ளே பாய் / ப்ளே கேர்ள் ஆக சித்தரிக்கிறீர்கள்..? 3. உங்கள் நண்பர்களுக்கு யாரிடம் வேண்டுமென்றாலும் போன் வரலாம். அப்பா, அம்மா, சித்தி, சித்தப்பா, அக்கா, தங்கை, அண்ணன், தம்பி... ஏன், அலுவலக உயர் அதிகாரி கூட நேரம்கெட்ட நேரத்தில் அழைக்கலாம். இதை எல்லாம் உணராமல் ஏன் எப்போது call வந்தாலும், ‘என்ன... உன் ஆளா..?’ என நக்கலாக சிரிக்கிறீர்கள்?!  

4. அதென்ன Alone Traveller?! இப்படிச் சொல்லிவிட்டு உங்கள் வண்டியை எடுக்கிறீர்களே... வெட்கமாக இல்லையா..?! ஏன், உங்கள் வண்டியில் உங்கள் நண்பர்களோ / உறவினர்களோ ஏறவே மாட்டார்களா..? யாருக்கும் நீங்கள் லிஃப்ட்டே தரமாட்டீர்களா..? பிறகு எப்படி அலோன் டிராவலர் என உங்களை நீங்களே அழைக்க முடியும்?!

5. தனியாக இருக்கிறீர்களே என பரிதாபப்பட்டு உங்களை சினிமாவுக்கு அழைத்துச் சென்றால், அங்கு வந்திருக்கும் கமிட்டட் ஜோடிகளை எல்லாம் பார்த்துப் பார்த்து நக்கல் அடிப்பதற்கு பெயர் பொறாமைதானே?! 6. சிங்கிளாக இருந்தபடியே கேர்ள் / பாய் பெஸ்டி ஆகி நண்பர்களின் காதலுக்கு கபால மோட்சம் கொடுக்கிறீர்களே... இது என்ன வகையான டிசைன்?!

7. நக்கலடிப்பது இருக்கட்டும். ஒரு சாக்லெட்டின் விலை என்னவென்று உங்களுக்கு தெரியுமா..? ரோஜாப்பூ விலை..? டெடி பியர் ரேட்..? எதுவும் தெரியாமல், எவ்வளவு ஜிஎஸ்டி செலுத்துகிறோம் என்று அறியாமல் கிண்டலடிக்கக் கூடாது!

8. அப்பா, அம்மாவிடம் ஒரு பொய்... பணியிடத்தில் ஒரு பொய்... ஃப்ரெண்ட்ஸ் மத்தி யில் ஒரு பொய்... என பொய் பொய் யாக உதிர்த்துவிட்டு காதலன் / காதலியைப் பார்க்கச் சென்றால்... அலட்சியமாக ஒரு கேள்வி வந்து விழும். ‘ஏன் லேட்..?’ இதற்கு இன்னொரு பொய்யைச் சொல்ல வேண்டும். இத்தனையும் சமாளிக்க எந்தளவுக்கு மெனக்கெட வேண்டுமென்று உங்களுக்குத் தெரியுமா?!
9. திரையரங்கில் இருக்கும் கார்னர் சீட்டின் மகிமை என்ன வென்று உங்களுக்குத் தெரியுமா?!

10. லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்… உண்மையிலேயே சிங்கிள் ஆக இருப்பதற்கு பெருமைப்படுகிறீர்களா அல்லது உங்களைச் சுற்றி யிருப்பவர்கள் கமிட்டட் ஆக இருப்பதைப் பார்த்து பொறாமைப்படுகிறீர்களா?! கண்டிப்பாக இந்தப் பத்து கேள்விகளுக்குமான விடைகள் சிங்கிள்ஸிடம் இருக்கும்! அந்த பதில்கள் இங்கு நமக்கு அவசியமில்லை. மாறாக, சைக்காலஜி குறித்த பார்வையே இங்கு தேவை!

இதைத்தான் பொட்டில் அடிப் பதுபோல் ‘‘சிங்கிள் என்பதே ‘ஸ்டைலிஷ் எஸ்கேப்’தான்...’’ என்கிறார் உளவியல் மருத்துவரான அபிலாஷா.
‘‘ஜாலியா சிங்கிள் மோடுக்கு போறதும் கலாய்ப்பதும் பிரச்னையே இல்ல. பொதுவா ஆள் கிடைக்காம, இல்லைனா இருந்த ஆள் கூட பிரச்னை ஏற்பட்டதால சிங்கிள் மோடுக்கு போயிருப்பாங்க.

ஆனா, கல்யாணத்துக்கு அப்புறமும் சிங்கிள் என்பதுதான் ஆபத்து. இப்ப தினம் தினம் இந்த வகைதான் பெருகிட்டு இருக்கு.
ஆக்சுவலா சிங்கிள் என்பதே தப்பித்தல்தான். பொறுப்புகள், பிரச்னைகள், சகிப்புத்தன்மை இல்லாம இருப்பது, கேட்கப்படும் கேள்விகள்ல இருந்து நழுவறது... இப்படி எஸ்கேப் ஆக விரும்பறவங்கதான் சிங்கிள் மோடுக்கு போறாங்க; ‘மை லைஃப் மை ரூல்’னு முஷ்டியை உயர்த்தறாங்க.
இது விவாகரத்து வரை போவதுதான் இன்றைய ஆபத்து. ‘நானும் சம்பாதிக்கறேன்... நீ யாரு என்னை கேள்வி கேட்க’னு ஒரு பெண் எப்ப நினைக்கறாளோ அப்ப அவ சிங்கிள் மோடுக்கு போக ஆரம்பிக்கறானு அர்த்தம்.

அதேமாதிரி பெரும்பாலான ஆண்களுக்கு அடிப்படைலயே சூழலை பேலன்ஸ் செய்யறதுல தடுமாற்றம் இருக்கு. பெற்றோர்கள், மனைவி, வேலை செய்யற இடம், நண்பர்கள்... இப்படி யாருக்கு எந்த நேரத்துல முக்கியத்துவம் தருவதுனு ஆண்களுக்கு தெரியலை... மனைவிக்கான இடமும், பெற்றோருக்கான இடமும் எதுனு பிரிச்சுப் பார்க்க முடியாம வாழ்க்கையையே சிக்கலாக்கிக் கிறாங்க.

திருமணத்துல இருக்கற சில கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டிய நிலைதான் அமெரிக்கா மாதிரியான வளர்ந்த நாடுகள்லயே இருக்கு. அப்படியிருக்கறப்ப வளர்ந்து வரும் நாட்ல வாழற நம்மைப்பத்தி யோசிச்சுப் பாருங்க. எப்படி ஆபீஸ்ல இருக்கற ரூல்ஸை மதிக்கிறோமோ அப்படி வீட்டுக்கான ரூல்ஸையும் ஆணும் பெண்ணும் மதிச்சுதான் ஆகணும்.

இன்னொண்ணு தெரியுமா..? சிங்கிள்னு சொல்லிக்கற யாருமே சிங்கிள் கிடையாது! எல்லாரும் எல்லாரையும் சார்ந்துதான் வாழறோம்; சார்ந்துதான் வாழவே முடியும்.உண்மையாவே பிரச்னையாகி பிரிவது வேறு. ஆனா, எல்லாத்துக்கும் பிரிவு தீர்வல்ல. உணர்வுகளால் சூழ்ந்ததுதான் வாழ்க்கை. இதைப் புரிஞ்சுக்கணும்...’’ அழுத்தம்திருத்தமாகச் சொல்கிறார் அபிலாஷா.

ஷாலினி நியூட்டன்