சேலம் ஆர்.ஆர். பிரியாணி!



உலகம் முழுவதும் பல்வேறு சுவைகளில் பலதரப்பட்ட பெயர்களில் பிரியாணி கிடைத்தாலும் தென்னிந்திய பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் சேலம் ஆர்.ஆர். பிரியாணியின் சுவையே தனிதான். பிரியாணியைப் பொறுத்த வரை ‘மொகலி’ல் தொடங்கி, `ஹைதராபாத்’, `திண்டுக்கல்’, `கல்கத்தா’, `ஆற்காடு’, `தலசேரி’, `மலபார்’, `சிந்தி’, `பாம்பே’ என நீண்டாலும் சேலம் ஆர்.ஆர். பிரியாணி இதில் எதிலும் சேராத தனித்த
சுவையுடையது.

இவை அனைத்தும் மக்கள் நீண்டகாலமாக சமைத்து மெருகேறிய பிறகே பிரபலமானவை. ஆனால், சேலம் ஆர்.ஆர். பிரியாணி, அதன் உரிமையாளர் தமிழ்ச்செல்வனின் தனித்துவமான கண்டுபிடிப்பு. ‘‘இன்னைக்கு சீரக சம்பா அரிசி நல்லதுனு எல்லா தரப்பு மக்களும் விரும்பி சாப்பிடறாங்க.
நல்ல விஷயம்தான். ஆனா, 1996ல எல்லோராலும் பாசுமதி அரிசில பிரியாணி சாப்பிட முடியாது. அந்தக் காலத்துலயே பாசுமதி அரிசில பிரியாணி செஞ்சு எல்லாரும் சாப்பிடறா மாதிரி கொடுத்தேன். அதுவும் தள்ளு வண்டிக் கடைல! அப்ப பாசுமதி அரிசி விலையும் அதிகம். ஸ்டார் ஹோட்டல்கள்லதான் கிடைக்கும். ஆனா, ஏழை மக்களும் பாசுமதி அரிசில பிரியாணி சாப்பிடணும்னு குறைந்த விலைல கொடுத்தேன்.

முதன் முதல்ல கூடுவாஞ்சேரி மார்க்கெட்ல கடை தொடங்கினேன். அங்கிருந்த எல்லா உழைக்கும் மக்களும் என் தள்ளுவண்டி கடைல சாப்பிடுவாங்க. என் கை பக்குவத்துக்கு அடிமையாகி முன்கூட்டியே காத்திருப்பாங்க...’’ புன்னகைக்கும் தமிழ்ச்செல்வன், 15 வயதிலிருந்து ஹோட்டல் துறையில் இருக்கிறார்.

‘‘ரொம்ப ஏழ்மையான குடும்பம். ரோட்டுக் கடைகள்ல தட்டு கழுவியிருக்கேன். சப்ளையராகி அப்புறம்தான் சமையல் கத்துக் கிட்டேன். குரானு ஒரு பாய்... நல்லா பிரியாணி செய்வார். அவர்கிட்டதான் நுணுக்கங்களை கத்துக்கிட்டேன். அவரை மாதிரி பிரியாணி செய்ய முடியாது. அவ்வளவு சுவையாக் இருக்கும். ஆனா, செஞ்சு முடிக்க ரொம்ப நேரமாகும்.

அவர்கிட்ட தொழில் கத்துக்கறப்ப சமையல் நுணுக்கங்களை ஒழுங்குபடுத்தினேன். அடி கனமான பாத்திரங்களை பயன்படுத்தி, அதிக விறகை எரிய வைச்சு, அனலோட சூட்டை பிரியாணி அண்டாவுல நிறுத்தி வைப்பேன். அதனால தம் நின்னு பிரியாணி பூப்போல உதிரும். சுவையாவும் இருக்கும்.
முழுமையா கத்துக்கிட்ட பிறகு தனியா கடை ஆரம்பிச்சேன். பூண்டும் வெங்காயமும் வாய்க்கு உகந்த மிதமான மசாலா. இதுதான் எங்க பிரியாணியோட ரகசியம்...’’ என்கிறார் தமிழ்ச்செல்வன்.

பிரியாணிதான் இவர்களின் சிக்னேச்சர். இங்கு கிடைப்பது போல் வேறெங்கும் சிக்கன் 65 அவ்வளவு சுவையுடன் கிடைப்பதில்லை!
சாதாரண தள்ளுவண்டிக் கடையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த சேலம் ஆர்.ஆர். பிரியாணிக்கு இன்று சென்னையில் மட்டுமே 20க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. தவிர, பிரான்ஸ் உட்பட பல மேலை நாடுகளிலும் இவர்களுக்கு கிளைகள் இருக்கின்றன!

‘‘பிரியாணியை, பிரியாணியாதான் சாப்பிடணும். ஆமா... தனிச்சு சாப்பிடணும். அதுதான் உண்மையான ருசி. எந்தவித தொட்டுகை, பச்சடி, கத்தரிக்காய் கூட்டு... எதையும் சேர்த்துக்க கூடாது. அப்பதான் பிரியாணியோட உண்மையான ருசியை ரசிச்சு சாப்பிட முடியும்.

கடலெண்ணெய்தான் பயன்படுத்தறோம். சமைக்கிறப்ப மசாலா பொருட்களை கையாலதான் அள்ளிப் போடுவோம். அதுதான் எங்க பக்குவம்.
எல்லா ஊர் மிளகாய்த்தூளும் ஒரே மாதிரி இருக்காது. அதே மாதிரி எல்லா பட்டை, ஏலக்காய், கிராம்பும் ஒரே காரசாரத்துடன் இருக்காது. அதனால சமைக்கிறப்ப கவனமா கையாள்வோம்.

மசாலா பொருட்கள் மேல வேகமா அனல் பாயக்கூடாது. எப்பவும் அடி கனமான பாத்திரம்தான் பிரியாணிக்கு சரியா இருக்கும். அதுவும் அடி அகலமான கூம்பு வடிவ பாத்திரமா இருந்தா இன்னும் சிறப்பு. மிதமான வெப்பத்துல வெந்தா ருசியா இருக்கும்...’’ என்கிறார் தமிழ்ச்செல்வனின் மகள் தமிழ்ச்செல்வி. உணவகக்கலையில் நிபுணத்துவம் பெற்று இப்போது தந்தைக்கு உதவியாக இருக்கிறார்.    

‘‘400 வகையான மசாலா பொருட்கள் சேர்ந்தாதான் சுவையான பிரியாணி கிடைக்கும். பாசுமதி அரிசியின் வாசம்தான் பிரியாணிக்கு பதம். ஒவ்வொரு பருக்கைலயும் கறியோட வாசனை இருக்கணும். பட்டையோ, ஏலக்காயோ கூடவோ குறைச்சோ இருந்தா முகத்துல அடிச்சா மாதிரி பிரியாணி ஆகிடும். எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டக் கூடாது. இதுதான் எங்கப்பா எனக்கு சொல்லித் தந்த ஃபார்முலா.

சாப்பிட்டா மறுநாள் வரை உள்ளங்கைல மசாலா வாசனை இருக்கணும்... அது எங்க பிரியாணில கண்டிப்பா இருக்கும்...’’ தலைநிமிர்ந்து தமிழ்ச்செல்வி சொல்ல, ஆமோதிப்பாக புன்னகைக்கிறார் தமிழ்ச்செல்வன்.

செய்தி:திலீபன் புகழ்

 படங்கள்:ஆ.வின்சென்ட் பால்