இது கலைஞரின் தமிழ்நாடு!



முத்தமிழறிஞர், கலைஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடங்கியிருக்கிறது. 13 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல்வர் பதவியையும் அலங்கரித்த ஒரு மகத்தான மனிதரின் நூற்றாண்டு இது.
பத்திரிகையாளராக, எழுத்தாளராக, கவிஞராக, வசனகர்த்தாவாக, அரசியல்வாதியாக... எனப் பல துறைகளில் அவரின் பன்முக ஆற்றலும், ஆளுமையும் வியக்கத்தக்க ஒன்று. இந்த நூற்றாண்டு கொண்டாட்டத்தையொட்டி அவற்றை கொஞ்சம் பின்நோக்கி பார்க்கலாம்.

*இளமைப் பருவம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை எனும் சிறு கிராமத்தில் 1924ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தவர் கலைஞர் கருணாநிதி. இவருக்கு முன் இரு சகோதரிகள். இளமையிலேயே போராட்ட குணமும், எதையும் ஆராய்ந்து கேள்வியெழுப்பும் பகுத்தறிவும், ஏற்றத்தாழ்வுகளை விரும்பாத சுயமரியாதை மிக்கவராகவும் வளர்ந்தார் கலைஞர்.

சிறுவயது முதலே மான உணர்ச்சியும், கொண்ட கொள்கையில் பிடிவாதம் மிக்கவருமான கலைஞர், தந்தையார் ஏற்பாடு செய்த இசைப்பயிற்சி வகுப்பில் நிலவிய சாதி ஏற்றத்தாழ்வைக் கண்டு இனி இசை வகுப்புக்குச் செல்வதில்லை என்று தீர்மானமாகத் தன் தந்தையாரிடம் தெரிவித்தார். தனது மகனின் மனவலியை உணர்ந்த முத்துவேலரும் மகனது இசைப்பயிற்சியை நிறுத்திக் கொள்ள இசைந்தார். இசைப் பயிற்சி நின்றாலும் தினசரி இரவு நேர உறக்கக் கதைகள் இளம்வயது கருணாநிதியின் படைப்பாற்றலைத் தூண்டின.

திருக்குவளை கிராமத்தில் ஆரம்பக்கல்வியும், பின்னர் திருவாரூர் போர்டு உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி பயின்ற கலைஞர், பள்ளிப் பருவத்திலேயே நாடகம், கவிதை, சொற்பொழிவு ஆகியவற்றில் தீவிர ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். சிறுவயதிலேயே அறிவுமுதிர்ச்சியுடன் இருந்தார். 1939ம் ஆண்டு கலைஞர் எட்டாம் வகுப்பு படித்தபோது, பள்ளியில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில், ‘நட்பு’ என்ற தலைப்பில் பேசினார். இதுவே, கலைஞரின் முதல் மேடைப் பேச்சு.

தன் 14 வயதில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டார். பெரியார், அண்ணாவின் பேச்சாற்றலால் ஈர்க்கப்பட்டிருந்த கலைஞர் அப்போதே திராவிட இயக்க பிரசுரங்களை தீவிரமாகப் படித்து வந்தார்.

*பத்திரிகையாளர்

தன் 16வது வயதில் ‘மாணவ நேசன்’ என்ற கையெழுத்துப் பத்திரிகையைத் தொடங்கினார். இது எட்டு பக்கங்கள் கொண்ட மாதம் இருமுறை வெளிவரும் கையெழுத்துப் பத்திரிகை.
அவரும் அவரின் நண்பர்களும் சேர்ந்து இந்தப் பத்திரிகையை 50 பிரதிகள் எடுப்பார்கள். இதை திராவிட இயக்கத் தலைவர்களுக்கும் அனுப்பி வைத்தார் கலைஞர். இது வாசகர்களிடையே நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தியது.

பிறகு, 1942ல் ‘முரசொலி’யை மாத இதழாகத் தொடங்கினார். இந்தப் பத்திரிகையின் ஆசிரியராக மட்டுமில்லாமல் பிரதான எழுத்தாளராகவும் செயல்பட்டார் கலைஞர். அண்ணாவின் ‘திராவிட நாடு’ பத்திரிகைக்கு ‘இளமைப்பலி’ என்ற கட்டுரையை அனுப்பி வைத்தார். அது அடுத்த இதழிலேயே பிரசுரமாகி, அண்ணா உள்ளிட்ட தலைவர்களின் கவனத்தைப் பெற்றார் கலைஞர். அடுத்த ஒரு வாரகாலத்தில் அண்ணா திருவாரூர் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற வந்தபோது கலைஞரை அழைத்துவரச் சொன்னார். அவரை ஒரு மாணவனாகக் கண்டதும் அண்ணாவுக்கு பெரும்ஆச்சரியம்.

1945ம் ஆண்டு பெரியாரின் ‘குடியரசு’ பத்திரிகையின் துணை ஆசிரியரானார் கலைஞர். இதுமட்டுமல்ல. பத்திரிகையின் முகப்பு கட்டுரைகளையும் அவர்தான் எழுதினார். இதனால், ஈரோட்டில் பதினோரு மாத காலம் தங்கியிருந்தார். பெரியாரிடம் பயிற்சி பெற்றது மகிழ்ச்சி அளித்தாலும் இன்னும் பயணிக்க விரும்பினார் கலைஞர்.

*சினிமா

இந்நேரம், ஏ.எஸ்.ஏ.சாமியிடமிருந்து அவரின் ‘ராஜகுமாரி’ திரைப்படத்திற்கு வசனம் எழுத வேண்டுமென வந்த அழைப்பை ஏற்றுக் கொண்டார் கலைஞர். 1946ம் ஆண்டு ‘ராஜகுமாரி’ படத்திற்கு வசனம் எழுதினார். அங்கிருந்து கலைஞரின் சினிமா பயணம் தொடங்கியது.

பிறகு, ‘அபிமன்யூ’, ‘மருதநாட்டு இளவரசி’, ‘மந்திரிகுமாரி’, ‘பராசக்தி’, ‘மனோகரா’, ‘பூம்புகார்’, ‘மறக்கமுடியுமா’, ‘இருவர் உள்ளம்’, ‘வண்டிக்காரன் மகன்’, ‘பாலைவன ரோஜாக்கள்’, ‘நியாயத் தராசு’, ‘பொன்னர் சங்கர்’... என 65 ஆண்டுகால திரைத்துறை வாழ்க்கையில் அறுபதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதியிருக்கிறார் கலைஞர்.

1952ல் கலைஞர் கதை, வசனம் எழுதி வெளியான ‘பராசக்தி’ திரைப்படம், தமிழ்த் திரையுலக வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. தமிழகத்தின் புகழ்பெற்ற நடிகராக சிவாஜி கணேசனை அறிமுகப்படுத்தியது. ‘பராசக்தி’ திரைப்படத்தில் இடம்பெற்ற சமூக நோக்கிலான கூர்மையான வசனங்கள் திரைப்படத் துறையை புதிய பாதைக்கு அழைத்துச் சென்றது.

அப்போது தமிழ்த் திரையுலகில் கோலோச்சிய எம்ஜிஆர், சிவாஜி ஆகிய இருவருக்கும் மிகப்பெரிய வெற்றிப்படங்களை அளித்தவரும் கலைஞர்தான்.

சிவாஜிக்கு ‘பராசக்தி, மனோகரா’ என்றால், எம்ஜிஆருக்கு ‘மந்திரிகுமாரி’, ‘மலைக்கள்ளன்’ ஆகியவை திருப்புமுனையை ஏற்படுத்தின. இதுதவிர, ‘தென்பாண்டிச் சிங்கம்’, ‘ராமானுஜர்’ ஆகிய தொலைக்காட்சித் தொடர்களுக்கும் வசனம் எழுதியுள்ளார் கலைஞர். இதில் ‘ராமானுஜர்’ தொடருக்கு வசனம் எழுதும்போது கலைஞரின் வயது 92.

*அரசியல்

1949ம் ஆண்டு சென்னை ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்றக் கழகத்தை அண்ணா தொடங்கினார். அப்போது அண்ணாவின் படைத்தளபதியாக இருந்த கலைஞர், பொதுக்குழு மற்றும் பிரசாரக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

இங்கிருந்தே கலைஞரின் அரசியல் பணி வேகமெடுத்தது. கட்சிப்பணியுடன் திரைப்படப்பணியையும் கவனித்து வந்தவர், பத்திரிகைத்துறையின் மீது கொண்ட காதலால் அதிலும் கவனம் செலுத்தினார்.

1953ம் ஆண்டு திருச்சி அருகேயுள்ள கல்லக்குடி என்ற ஊரின் பெயர் டால்மியாபுரம் என மாற்றியமைக்கப்பட்டதைக் கண்டித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார் கலைஞர். இந்தப் போராட்டம் கலைஞருக்கு மிகப்பெரிய அரசியல் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. 1957ம் ஆண்டு திருச்சி மாவட்டம் குளித்தலை தொகுதியிலிருந்து முதல்முறையாக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கிடையே 1960ம் ஆண்டு திமுகவின் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் கலைஞர்.

இதன்பிறகு 1962, 1967, 1971, 1977, 1980, 1989, 1991, 1996, 2001, 2006, 2011, 2016 என தொடர்ந்து 13 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இதில், 1969, 1971, 1989, 1996, 2006 என ஐந்துமுறை தமிழ்நாட்டின் முதல்வர் பதவியையும் அலங்கரித்தார். இதில், அவர் மக்களுக்காக கொண்டு வந்த திட்டங்கள் ஏராளம்.     

*இலக்கியம்

இலக்கியத்திலும் தனித்துவமான ஆளுமை செலுத்தியவர் கலைஞர். 10 சமூக நாவல்களும், 6 சரித்திர நாவல்களும், 44 சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். தவிர தன் வரலாறு, குறளோவியம், திருக்குறள் உரை, தொல்காப்பியப் பூங்கா, கவிதைகள், கட்டுரை நூல்கள், பயணநூல், பொன்மொழிகள் என எண்ணற்ற படைப்புகளைப் படைத்துள்ளார்.

கார்க்கியின் ‘தாய்’ நாவலை கவிதை வடிவில் படைத்தார். இதனுடன் கலைஞரின் நாடக உலகம் தனித்து இருப்பவை. ‘சாந்தா (அ) பழனியப்பன்’ நாடகத்தில் தொடங்கி ‘சேரன் செங்குட்டுவன்’ வரை சொல்லிக் கொண்டே போகலாம்.

*தன்னிகரற்ற தலைவர்

தமிழகத்தின் சிற்பியாக விளங்கியவர் கலைஞர். அரை நூற்றாண்டு கால தமிழக அரசியலின் தலைப்புச் செய்தியாக இருந்தவர். தன்னுடைய தொலைநோக்குத் திட்டங்கள் மூலம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தார். அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம், சிப்காட் தொழில் வளாகங்கள், மாநில திட்டக்குழு உருவாக்கம், பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பேருந்துகள் நாட்டுடைமை, திருமண மற்றும் மறுமண உதவித்திட்டங்கள், உழவர் சந்தைகள், மினி பஸ்... உள்ளிட்ட எண்ணற்ற விஷயங்களைச் செய்து தமிழகத்தை முன்னேற்றப்பாதையில் அழைத்துச் சென்றார்.

சென்னையில் தகவல் தொழில் நுட்ப பூங்கா ஒன்றினை அமைத்து தமிழகத்தை தகவல் தொழில் நுட்பத்துறையின் தலைநகராக உருமாற்றினார்.வள்ளுவர் கோட்டம், பெரியார் சமத்துவபுரம், குமரியில் 133 அடி திருவள்ளுவர் சிலை, அண்ணா மேம்பாலம் என பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர் கலைஞர். மாநில சுயாட்சித் தீர்மானத்தை சட்டமன்றத்தில் இயற்றி மாநில உரிமைகளுக்கு வித்திட்ட முதல் முதல்வரும் கலைஞர்தான்.

வாழ்நாள் முழுவதும் தமிழ், தமிழர், தமிழ்நாடு என ஒவ்வொரு நொடியும் தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்டு பல தொலைநோக்குத் திட்டங்களின் மூலம் தமிழகத்தைச் சிறந்து விளங்கிடச் செய்தவர் கலைஞர் என்றால் அது மிகையல்ல.  அவரது கனவை இப்பொழுது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்து தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார் கலைஞரின் அன்பு
மகனான மு.க.ஸ்டாலின்.

பி.கே