திக் திக் திக் ஹாரர் ட்ரீட்!



‘எல்லாருக்குள்ளேயும் ரெண்டு உயிர், எல்லார் தலைக்குள்ளேயும் ரெண்டு குரல், ரெண்டு அறிவு...’- ‘அஸ்வின்ஸ்’ படத் தலைப்பின் பொருளாக டீசரில் வசந்த் ரவியின் குரல் ஒலிக்க, காட்சிகள் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. ‘தரமணி’, ‘ராக்கி’ என தனக்கென தனி ஸ்டைலில் படங்கள், வித்யாசமான கதைக்களம் என பொறுமையாக அடியெடுத்து வைக்கும் வசந்த் ரவியின் அடுத்த படம் ‘அஸ்வின்ஸ்’. அறிமுக இயக்குநர் தருண் தேஜா, பட வெற்றி குறித்து நம்பிக்கையுடன் பேசத் தொடங்கினார்.  

உங்களைப் பற்றி சொல்லுங்க?

சொந்த ஊர் வைசாக். செட்டிலானது சென்னையில். பேச்சிலர் டிகிரி எல்லாம் சென்னையில்தான். சினிமா மேக்கிங் படிக்கணும்னு ஜெர்மன்ல படிச்சேன். அப்பா, அம்மா எல்லாம் சென்னைல செட்டிலாகிட்டாங்க. அடிக்கடி வைசாக் டிரிப் அடிப்போம். சர்வதேச ஃபிலிம் மேக்கிங்கை கத்துகிட்டு அங்கயே ஒரு சர்வதேச திரைப்படக் குழுவையும் உருவாக்கியிருந்தேன்.
திடீர் லாக்டவுனால சென்னை வரவேண்டிய நிலை. அந்த ஊரடங்குக் காலத்துல ஷார்ட் ஃபிலிம் எடுக்கலாமேனு இந்த ‘அஸ்வின்ஸ்’ படத்தின் கதையையே ஷார்ட் ஃபிலிம்மாக செய்தோம். பிரபல யூடியூப் தளத்திலேதான் வெளியாச்சு. நல்ல வரவேற்பு கிடைச்சது. எஸ்.வி.சி.சி ப்ரொடக்‌ஷன் அந்த குறும்படத்தை பார்த்துட்டு முழு நீள படமா தயாரிக்க முன்வந்தாங்க.

‘அஸ்வின்ஸ்’னு ஏன் பெயர் வைச்சீங்க..?

‘அஸ்வினி’ தேவர்கள்னு ரிக் வேதத்திலே இரண்டு தேவர்கள் இருக்காங்க. இந்த குறும்படம் எடுக்கறதுக்காக வீட்டுல ஏதாவது ப்ராபர்ட்டி இருக்கானு தேடினேன். அப்ப அம்மா 15 வருடங்களுக்கு முன்னாடி வீட்டுல வாங்கி வெச்சிருந்த ரெட்டைக் குதிரை தலை கொண்ட அஸ்வினி தேவர்கள் சிலையைப் பார்த்தேன்.

வீரர்கள் போரில் அடிபட்டாலோ அல்லது அவர்களை நினைச்சு வணங்கினாலோ நமக்கு ஆரோக்கியமும் நலமும் கொடுப்பாங்கன்னு படிச்சுத் தெரிஞ்சுக்கிட்டேன். அந்த அஸ்வினி தேவர்கள்தான் இந்தப் படத்துக்கான கரு. அதனாலதான் ‘அஸ்வின்ஸ்’ என்கிற பெயர்.

டீசர் பயங்கர ஹாரரா தெரியுதே..?

இந்தப் படம் பயங்கர சைக்கலாஜிக்கல் ஹாரர், திரில்லர். 1500 வருடங்களுக்குப் பிறகு ஒரு சாபம் திறக்கப்படுது. அஞ்சு யூ டியூப் இளைஞர்கள் அந்த சாபத்துல மாட்டிக்கறாங்க. அந்த சாபம் அவர்களை என்ன செய்யுது... அதிலே இருந்து அவங்க தப்பிச்சாங்களா என்பதுதான் கதை.

வசந்த் ரவி என்ன சொல்றார்..?

இந்தக் கதையை சொல்லும் போதே ஆன் தி டேபிள் ஓகே சொல்லிட்டார். ஸ்கிரிப்ட் வேலைகள்ல தன்னை இணைச்சிக்கிட்டார். ஒர்க் ஷாக், ரிஹர்சல்னு எல்லாத்துலயும் கலந்துக்கிட்டார். லண்டன்ல ஒரு தீவில்தான் 90% படப்பிடிப்பு நடத்தினோம். லொகேஷன் பார்க்கணும்னாலும் 10 - 15 நிமிடங்கள் நடக்கணும். எங்க கூடவே அவரும் யோசிக்காம வந்தார். ரொம்ப டெடிகேஷனான நடிகர். அவருடைய கரியர்ல ரொம்ப முக்கியமான சவாலான கேரக்டரா இந்தப் படம் இருக்கும். இயக்குநர் ராஜிவ் மேனனின் மகள் சரஸ்வதி மேனன் இந்தப் படத்துல அறிமுகமாகறாங்க. ஏற்கனவே ஓடிடி பிளாட்ஃபார்மில் அவங்க பிரபலம். ‘புத்தம்புது காலை’, ‘சர்வம் தாள மயம்’ உள்ளிட்ட ப்ராஜெக்ட்ஸ்ல டெக்னிக்கலா வேலை செய்திருக்காங்க.

இந்தப் படத்தில் நடிகையாக அறிமுகம். அவங்க கேரக்டர் சுவாரஸ்யமா இருக்கும். டெக்னிக்கலி அவங்க படு ஸ்டிராங். விமலா ராமன் மேடம் கதைக்குத் தேவையான ஒரு கேரக்டரில் நடிச்சிருக்காங்க. ‘ராக்கெட்ரி: த நம்பி எஃபெக்ட்’ படப் புகழ் முரளிதரன் மிகச் சிறந்த உதவி இயக்குநர். பார்த்திபன் சாருடைய மெயின் அஸிஸ்டென்ட் அவர்தான். நம்ம ‘அஸ்வின்ஸ்’ படத்திலும் அவர் ஃபர்ஸ்ட் அஸிஸ்டென்ட் இயக்குநரா வேலை செய்திருக்கார். ஒரு முக்கியமான கேரக்டர்லயும் வர்றார்.

‘நிலா காலம்’ படத்துக்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது வாங்கின உதய தீப், இந்தப் படத்துல முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்ல நடிச்சிருக்கார். இவங்க இல்லாம சிம்ரன் ஃபரீக், அழுத்தமான ரோல்ல வர்றார்.

ஹாரர், திரில்லர் படங்களுக்கு தொழில்நுட்பக் கலைஞர்கள்தான் பலம்... இந்த ப்ராஜெக்ட்ல எப்படி..?

‘அஸ்வின்ஸ்’ படம் பெரும்பாலும் இருட்டுலதான் பயணிக்கும். ஆனா, அந்த இருட்டு ஃபீலே இல்லாம ஆடியன்ஸுக்கு வித்யாசமான ஷாக் எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும். ‘அந்தகாரம்’ ஒளிப்பதிவாளர் ஏ.எம்.எட்வின் சாக்கே, இந்தப் படத்திலும் முத்திரை பதிச்சிருக்கார். விஷுவல்ஸ் கண்டிப்பா பேசப்படும்.படம் பார்த்து முடிச்சதும் எல்லாரும் மியூசிக், பின்னணி இசை யாருன்னு தேடுவாங்க. அந்தளவுக்கு என்னுடைய கிளாஸ்மேட் விஜய் சித்தார்த், பிரமாதப்படுத்தி இருக்கார்.

‘சின்க் மியூசிக்’ சச்சின் சுதாகரன், ஹரிஹரன் ரெண்டுபேரும்தான் சவுண்ட் டிசைனர்கள். எடிட்டிங், வெங்கட்ராஜன். ஆர்ட் டைரக்‌ ஷன் பாலா. ஹரீஷ் சவுண்ட் மிக்ஸ் இன்ஜினியர். வெங்கடேஸ்வரா சினி சித்ராவின் (SVCC) பிவிஎஸ்என் பிரசாத், படத்தை தயாரிச்சிருக்கார்.

ஜெர்மன் சினிமா உருவாக்கம் - இந்திய சினிமா உருவாக்கம்... என்ன வித்யாசம்?

கதை நடக்கும் களமும், கலாசாரமும்தான் மாறும். ஆனா, கதை சொல்லலும், ஆடியன்ஸை கையாள்கிற விதமும் எல்லா நாட்டிலும் ஒண்ணுதான். டெக்னிக்கல் விஷயங்கள் கொஞ்சம் மாறும். இன்னும் சில டெக்னிக்கல் அப்டேட்கள் நம்ம இந்தியாவுக்கு வரணும். வந்தா இன்னும் உலகத் தரமான மேக்கிங் கொடுக்க முடியும்.

‘அஸ்வின்ஸ்’ ஆடியன்ஸ்க்கு என்ன அனுபவம் கொடுக்கும்?

படம் முடியற வரைக்கும் டெக்னிக்கலி எவ்ளோ ஸ்டிராங்கான மேக்கிங் கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு கொடுத்திருக்கோம். ஹாரர், திக் திக் திக் மொமெண்ட்ஸ் விரும்பற ஆடியன்ஸுக்கு இந்தப் படம் நிச்சயமா விஷுவல் - சவுண்ட் ட்ரீட் கொடுக்கும்.

ஷாலினி நியூட்டன்