கல்யாணமாகி குழந்தையும் இருக்கு... ஆனாலும் ஹீரோயினா நடிக்கறேன்!



குறுகிய காலத்தில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர், ஷிவதா. ‘நெடுஞ்சாலை’, ‘அதே கண்கள்’ உட்பட தமிழில் சில படங்களே நடித்திருந்தாலும் மலையாளத்தில் மம்மூட்டியைத் தவிர்த்து மற்ற முன்னணி ஹீரோக்களுடன் டூயட் பாடியவர். இப்போது ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் காம்போவில் அவர் நடித்த ‘தீராக் காதல்’ வெளியாகியுள்ளது. ‘தீராக் காதல்’, சினிமா பயணம், திருமண வாழ்க்கை என தன்னுடைய மினி பயோபிக்கை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் ஷிவதா.

‘தீராக் காதல்’ படத்துக்குள்ள ‘வந்தனா’வா நீங்க வந்த கதை?

இயக்குநர் ரோகின் சாருடன் ஏற்கனவே ‘அதே கண்கள்’ பண்ணியிருந்தேன். அந்தப் பழக்கத்துல இந்தப் படம் ஆரம்பிச்ச சமயத்துல, ‘வந்தனா என்ற கேரக்டருக்கு நீங்க பண்ணா சரியா இருக்கும். ‘அதே கண்கள்’ படத்துல வந்த  வசுந்தரா கேரக்டரைவிட வித்தியாசமா இருக்கும்’னு சொன்னார். அதுமட்டுமே காரணம் இல்லை. ரோகின் சாருடன் வேலை செய்ய எனக்குப் பிடிக்கும். அவருடைய படங்களில் கேரக்டர்கள் வலுவாக இருக்கும். அப்படி விரும்பி பண்ணிய படம்தான் ‘தீராக் காதல்’.

ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் காம்பினேஷன்ல நடிச்ச அனுபவத்தைப் பற்றி சொல்லுங்க?

ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் இருவருடன் படம் பண்ணுவது இதுதான் முதல் முறை. அவர்களுடன் ஒப்பிடும்போது என்னுடைய சினிமா அனுபவம் குறைவுதான். அவர்களுடன் சேர்ந்து பணியாற்றியபோது எனக்கான முழு சுதந்திரம் இருந்துச்சு. எப்போதும் இருவரும் கலகலப்பா இருப்பாங்க.
அவங்க இருக்கிற இடத்துல ஜாலிக்கு பஞ்சமே இருக்காது. சீன் பேப்பர் எங்கிட்ட வந்ததும் தேர்வு எழுதும் மாணவியா மாறி ரெடியாயிடுவேன். ஆனா, அவங்க எப்போதும்போல் ஜாலியா இருக்கிற மாதிரி தெரியும். ஷாட்  சொன்னதும் சீரியஸான காட்சியா இருந்தாலும் சரி, சிம்பிளான காட்சியா இருந்தாலும் சரி பிரமாதமான நடிப்பால் ஆச்சர்யப்படுத்துவாங்க.

அவங்களுடைய அந்த நடிப்பை ரொம்பவே ரசிச்சேன். ஐஸ்வர்யா என்னிடம் மலையாள இண்டஸ்ட்ரியைப் பற்றி பேசுவாங்க. நீண்ட நாள் பழகிய தோழியைப் போல் நட்பு பாராட்டினாங்க. இருவருடைய ஆதரவும் சிறப்பு.

ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கேரக்டர் என்று எப்படி அடையாளம் கண்டு படங்களை தேர்வு செய்கிறீர்கள்?

மலையாளத்தில் நடிச்சளவுக்கு தமிழில் அதிக படங்கள் பண்ணவில்லை. கதை கேட்கும்போதே இந்த கேரக்டர் முந்தைய படத்துல பண்ணலனு தோணும். ‘தீராக் காதல்’ படத்துல இல்லத்தரசியா ஒரு குழந்தைக்கு அம்மாவா நடிச்சிருப்பேன். அம்மா கேரக்டர் பண்ணணுமா என்ற கேள்வி இருந்துச்சு.

ஆனா, அந்த கேள்வி தேவையில்லாததுனு தெரிஞ்சது. ஐஸ்வர்யா ராஜேஷ் ‘காக்கா முட்டை’யில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவா நடிச்சு பேர் வாங்கினாங்க. அதுல அம்மா கேரக்டர் என்பதைவிட அவர் எவ்வளவு சிறப்பா நடிச்சாங்க என்பதைத்தான் ஆடியன்ஸ் கவனிச்சாங்க. அப்படிதான் எனக்கு இந்தப் படம் தயக்கத்தை உடைத்து அம்மா வேடத்துல நடிக்க உந்துதலா இருந்துச்சு.

சினிமாவில் உங்க தனிப்பட்ட விருப்பம் எது?  

தமிழைப் பொறுத்தவரை நான் குறிப்பிட்ட உயரத்தைத் தொடவில்லை. அப்படி முன்னணி இடத்தை பிடிக்கும்போது எனக்கு நானே சவாலாக இருந்து மேலும் மேலும் முன்னேறிச் செல்வேன் அல்லது என்னுடைய இடத்தை தக்க வெச்சுக்க வித்தியாசமான கேரக்டர்களை தேர்வு செய்து நடிப்பேன். தனிப்பட்ட விருப்பம் என்று சொன்னால், எனக்கும் ரசிகர்களுக்குமான தொடர்பு எப்போதும் நீடிக்கணும் என்பதால் சினிமாவில் ஓர் அங்கமா எப்போதும் நடிகையாக இருப்பேன்.

ஒரு நடிகையின் சிறந்த பகுதி என்றால் எதைச் சொல்வீர்கள்?

எனக்கு எப்போதும் தோன்றுவது, ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கணும். அத்துடன் ஒரு டாக்டராக, வக்கீலாக பல வேடங்கள் ஏற்று அவங்களுக்கான மெசேஜை கன்வே பண்ணுவது பிடிக்கும். அப்படி நாம் நடிக்கும் வேடத்துக்கு அங்கீகாரம் கிடைக்கும்போது அவர்கள் மனதில் அபிமான நடிகையாக இடம் பிடிக்க முடியும். சினிமா நட்சத்திரங்களின் சேவைக்கு ரசிகர்கள் தரும் ஒப்புதல்தான் அவர்கள் எங்கள் மீது வெளிப்படுத்தும் அபரிதமான அன்பு.

உங்கள் பார்வையில் வெற்றிக்கான இலக்கணம் எது?

என்னைப்பொறுத்தவரை சினிமாவிலும் சரி, வாழ்க்கையிலும் சரி வெற்றிகரமான வாழ்க்கை வாழவேண்டுமானால் உடல் ஆரோக்யத்தையும், மன மகிழ்ச்சியையும் எப்போதும் தக்க வைக்கணும். அதுதான் வெற்றிகரமான வாழ்க்கை. வெற்றி மட்டுமே குவித்துவிட்டு மகிழ்ச்சி இல்லை என்றால் அதனால் ஒரு பயனும் இல்லை. எந்த வேலை செய்தாலும் அந்த வேலையை திருப்திகரமாக செய்கிறோம் என்றால் அதுவே  வெற்றி.

உங்கள் முதல் படமான ‘நெடுஞ்சாலை’யில் சமரசம் செய்துகொண்டு நடித்ததாக நினைக்கிறீர்களா?

ஆமா. ஹீரோவுடன் நெருக்கமா இருக்கிற காட்சிகள், பாடல் காட்சிகள் பற்றி இயக்குநர் கிருஷ்ணா சாரிடம், ‘அந்தளவுக்கு நெருக்கம் காட்ட வேண்டுமா, தவிர்க்க முடியாதா’ என்றெல்லாம் கேள்வி  கேட்டிருக்கிறேன். ஒரு நடிகையா காட்சிக்கு என்ன தேவையோ அதை பண்ணுவதுதான் என்னுடைய வேலை. அந்த ஒரு படம்தான் என்னுடைய செளகரியத்துக்கு ஏற்ற மாதிரி பண்ணலை. இப்போது என்னால் எவ்வளவு சுதந்திரமா பண்ண முடியும்னு யோசிச்ச பிறகே படங்கள் பண்ணுகிறேன்.

மோகன்லாலுடன் பல படங்களில் நடித்துள்ளீர்கள்... அவருடன் நடித்த அனுபவம் எப்படி?

‘12த் மேன்’ என்ற படத்துலதான் லால் சாருடன் அதிக நாட்கள் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது. ஒரு ரிசார்ட்டில் முப்பது நாட்கள் தொடர்ச்சியாக நடந்தது. செல்ஃபோன் சிக்னல் இல்லாத பகுதி என்பதால் எந்தவித தொந்தரவுமில்லாமல் ஒரு குடும்பமாக பழக முடிந்தது. லால் சார் எல்லோரிடம் எளிமையா பழகுவார். அவருடைய அந்த குணத்தை பார்த்து நாங்கள் அவருடைய பலம் என்னன்னு தெரியாமலேயே இருக்கிறார்னு லால் சாரின் எளிமையைக் குறித்து பல முறை சொல்லியதுண்டு.

நள்ளிரவு படப்பிடிப்பு முடிந்திருந்தாலும் காலை ஏழு மணிக்கு ஃபர்ஸ்ட் ஷாட் என்றால் ஃபுல் மேக்கப்புடன் பத்து நிமிடத்துக்கு முன் ரெடியா ஸ்பாட்ல இருப்பார். ஷாட் இல்லாத சமயத்துல புத்தகம் படிக்கிற மாதிரி இருக்கும். நாங்கள் எதாவது சொதப்பினால் இந்த சீன்ல இப்படிதானே வரணும்னு கன்டினியூட்டியைச் சொல்லி அசரடிப்பார். யூனிட் முன்னாடி ‘நல்லா பண்ணினீங்
க’னு அவர் என்னிடம் சொன்னது எனக்கு கிடைச்ச பெரிய விருது.

குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கிறது?

சினிமா நண்பர்கள் பலர், சீக்கிரமே கல்யாணம் பண்ணிட்டீங்களே, ஹீரோயின் வாய்ப்பு அவ்வளவுதான் என்று சொன்னார்கள். இப்போதும் நான் மலையாளத்திலும், தமிழ் படங்களிலும்  ஹீரோயினாதான் பண்றேன். மலையாளத்தில் மோகன்லால், ஜெயசூர்யா, குஞ்சாக போபன் என்று முன்னணி ஹீரோக்களுடன்தான் பண்றேன். எனக்கான வாய்ப்பு எதுவோ அது கிடைக்கிறது. ‘இடும்பன்காரி’ சீக்கிரத்துல ரிலீஸாகவுள்ளது. மலையாளத்தில் ‘சீக்ரெட் ஹோம்’ வெளியாகஉள்ளது.

சினிமா எப்படி முக்கியமோ அப்படிதான் திருமண வாழ்க்கையும் முக்கியம். எனக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. பிறந்த வீடு, புகுந்த வீடு என இருவீட்டாரிடமிருந்தும் எனக்கு அன்பும் ஆதரவும் சிறப்பாக கிடைக்கிறது. எனக்கு பிடிச்ச விஷயத்தை பண்ணச்சொல்லி சுதந்திரம் கொடுத்ததால்தான் நடித்துக்கொண்டிருக்கிறேன்.

எஸ்.ராஜா