Must Watch



கடின கடோரமீ அண்டகடாஹம்

‘சோனி லிவ்’வில் வெளியாகியிருக்கும் மலையாளப் படம், ‘கடின கடோரமீ அண்டகடாஹம்’.  கொரோனா லாக்டவுன் நிகழும் கதைகளைப் பற்றி ஏராளமான படங்கள் வந்துவிட்டன. அதில் குறிப்பிடத்தக்கதாக திகழ்கிறது இந்தப் படம். கேரளாவில் உள்ள கடற்கரையை ஒட்டிய அழகான கிராமம். கொரோனா பரவிக்கொண்டிருக்கும் காலம். இப்படியான சூழலில் பெரிய பிசினஸ்மேனாக வேண்டும் என்ற கனவுகளுடன் இருக்கும் இளைஞன் பச்சு. அவனது பொருளாதார நிலையோ பல நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கிறது.

இன்னொரு பக்கம் அவனது சகோதரி கணவனுடன் சண்டை போட்டுவிட்டு வீட்டில் இருக்கிறார். மட்டுமல்ல, வீட்டில் உள்ளவர்கள் வளைகுடாவுக்குச் சென்று பணம் சம்பாதிக்க வற்புறுத்துகின்றனர். மாஸ்க்கை கொள்முதல் செய்து உள்ளூரிலேயே  பிசினஸ் செய்ய முயற்சிக்கிறான். தரம் குறைவான மாஸ்க்கால் அவனது பிசினஸ் சரியாகப் போகவில்லை. கடன்காரன் வேறு அவனுக்குத் தொல்லை தருகிறான்.

இந்நிலையில் வளைகுடாவில் இருக்கும் அவனது தந்தை இறந்துவிடுகிறார். லாக்டவுன் என்பதால் தந்தையின் உடலை கேரளாவுக்குக் கொண்டு வருவது சிரமம். இவ்வளவு பிரச்னைகளுக்கு நடுவில் பச்சு மீண்டானா என்பதே திரைக்கதை. இதன் இயக்குநர் முகாசின்.

மதர்’ஸ் டே

நல்ல ஆக்‌ஷன் படம் பார்க்க விரும்புகிறீர்களா? உங்களுக்காகவே ‘நெட்பிளிக்ஸி’ல் வெளியாகியிருக்கிறது ‘மதர்’ஸ் டே’ எனும் போலந்து படம். ஒரு காலத்தில் ஸ்பெஷல் ஆபரேஷன் ஏஜெண்ட்டாக இருந்தவள், நினா. பெரிய கேங்ஸ்டர்கள் கூட அவளைக் கண்டால் நடுங்குவார்கள். அவளுடைய உயிருக்கு எப்போதுமே ஆபத்து இருந்து வந்தது. தனது மகன் மேக்ஸை ஒரு வளர்ப்பு பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு, ஏஜெண்ட் தொழிலையும் விட்டுவிட்டு தனியாக வாழ்ந்து வந்தாள். வருடங்கள் வேகமாக ஓடியது. நினாவின் மகன் மேக்ஸ் வளர்ந்து பெரியவனாகிவிட்டான். வளர்ப்புப் பெற்றோரிடம் வளர்ந்ததால் நினாவைப் பற்றி மேக்ஸுக்கு எதுவும் தெரியாது.

நினாவால் பாதிக்கப்பட்ட ஒரு கேங்ஸ்டர் குழு அவளைப் பழிவாங்கும் நோக்கில் மேக்ஸைக் கடத்தி விடுகிறது. பலம் வாய்ந்த கேங்ஸ்டர் குழுவிடமிருந்து மகனை எப்படி நினா காப்பாற்றுகிறாள் என்பதை அதிரடியாக சொல்லியிருக்கிறது திரைக்கதை. வேகமாகச் செல்லும் திரைக்கதை, சண்டைக் காட்சிகளில் புதுமை காட்டியிருக்கிறது. தமிழில் ரீமேக் செய்ய நல்ல சாய்ஸ். படத்தின் இயக்குநர். மேத்யூஸ் ராக்கோவிக்ஸ்.  

குட் லக் டூ யூ, லியோ கிராண்டே

சமூக வலைத்தளங்களில் விவாதத்தைக் கிளப்பியிருக்கும் ஆங்கிலப்படம், ‘குட் லக் டூ யூ, லியோ கிராண்டே’. ‘அமேசான் ப்ரைமி’ல் காணக்கிடைக்கிறது.
ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை, நான்சி. அவரது கணவன் இறந்து இரண்டு வருடங்களாகிவிட்டது. தனது இயல்பான பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்ய விரும்புகிறாள் நான்சி. அதற்காக சொகுசு ஹோட்டலில் ஓர் அறையை வாடகைக்கு எடுத்து லியோ என்ற ஆண் பாலியல் தொழிலாளியை புக் செய்கிறாள்.  

இளைஞனான லியோவை பார்த்ததும் நான்சிக்கு தயக்கம் ஏற்படுகிறது. தனது உடல் மற்றும் வயதைக் குறித்தும், லியோவுக்குத் தன்னைப் பிடிக்காமல் போய்விடுமோ என்றும் நான்சி தாழ்வு மனப்பான்மை கொள்கிறாள்.  ஆனால், லியோவோ நான்சியிடம் மென்மையாக நடந்து கொள்கிறான். ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தாய்... வீட்டுக்குத் தெரியுமா... என்று லியோவைப் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுகிறாள் நான்சி.

ஒரு கட்டத்தில் லியோவைத் திருப்பி அனுப்ப நினைக்கிறாள். அவளது உண்மையான விருப்பங்கள் நிறைவேறியதா என்பதே மீதிக்கதை. வயது வந்தவர்களுக்கான இந்தப் படத்தை மிக நேர்த்தியாக இயக்கியிருக்கிறார் ஷோபி ஹைட் எனும் பெண் இயக்குநர்.

பீட்

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான இந்திப் படம், ‘பீட்’. இப்போது ‘நெட்பிளிக்ஸி’ல் காணலாம். இந்தியாவில் கொரோனோ பரவல் தீவிரமாக இருந்த காலகட்டம். பேருந்து, ரயில் என்று எல்லாவகையான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு, ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்ட நிலையில் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது கிராமங்களுக்கு கால்நடையாகவும், கிடைத்த வாகனங்களில் ஏறியும் சென்றுகொண்டிருந்தனர்.

மக்களின் நடமாட்டத்தை தவிர்ப்பதற்காகவும், அவர்கள் ஊரை விட்டு வேறு ஊருக்கு செல்வதை தடுப்பதற்காகவும் ஒவ்வொரு ஊரின் எல்லையிலும் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஓர் ஊரின் எல்லையில் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார் இன்ஸ்பெக்டர் சூர்ய குமார் சிங். ஆயிரக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அந்த எல்லையைக் கடந்தால்தான் தங்களது கிராமங்களுக்குச் செல்ல முடியும்.

இச்சூழலில் அதிகாரம் சொல்வதை சூர்ய குமார் கேட்கிறாரா அல்லது மனிதாபிமானத்துடன் செயல்படுகிறாரா என்பதே திரைக்கதை. கொரோனா லாக்டவுன் குறித்த முக்கியமான திரைப்படம் இது. இன்ஸ்பெக்டர் சூர்ய குமார் சிங்காக அசத்தியிருக்கிறார் ராஜ்குமார் ராவ். ‘ஆர்ட்டிகள் 15’ படத்தின் இயக்குநரான அனுபவ் சின்ஹாதான் இப்படத்துக்கும் டைரக்டர்.

தொகுப்பு: த.சக்திவேல்