30 கோடி நஷ்டமானாலும் வாயை மூடமாட்டேன்!



அதிரடியாகப் பேசுவதும், மனதில் பட்டதை பட்டென்று சொல்வதும்தான் கங்கனா ரனாவத்தின் அடையாளம். பாலிவுட் நடிகையான கங்கனா, ஜெயம் ரவியுடன் ‘தாம்தூம்’ படத்தில் நடித்திருக்கிறார். இப்போது ‘சந்திரமுகி 2’ல் நடித்து வருகிறார்.
அவர்தான் தலைப்பில் இருக்கும் ஸ்டேட்மெண்ட்டை விடுத்திருக்கிறார். ‘‘அரசியல், அரசியல்வாதிகள், தேசவிரோத செயல்கள் பற்றி அடிக்கடி கருத்துகளைச் சொல்வதால் கடந்த சில வருடங்களில் மட்டும் 25 ப்ராண்ட்களின் விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்புகளை இழந்திருக்கிறேன்.

இந்த ப்ராண்ட் விளம்பரங்களில் நடித்திருந்தால் வருடத்திற்கு 30 முதல் 40 கோடி ரூபாய் வரை சம்பாதித்திருக்க முடியும்...’’ என்கிறார் கங்கனா ரனாவத்.‘‘எனக்கு மடியில் கனமில்லை. அதனால் பயமில்லை. தப்பு நடந்தால் அதைப் பார்த்துவிட்டு வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்க முடியாது.

மனதில் பட்டதை வெளிப்படையாக நான் கூறிவருவதால், பிரபலமான ப்ராண்ட்கள் அவர்களது விளம்பரங்களில் நடிக்க இருந்த என்னை ஒரே இரவில் கழற்றிவிட்டுவிட்டன. எத்தனை கோடி போனாலும் நான் வாயை மூடிக்கொண்டு இருக்கமாட்டேன்...’’ என்கிறார் கங்கனா.

காம்ஸ் பாப்பா