அரசியல் ஆசை எனக்கும் வந்துடுமோனு பயமா இருக்கு!
‘அவ கண்ணப் பார்த்தா... ஐயோ! எம்மா... கருநாகப் பாம்பா கொத்துதம்மா...’ டி.இமான் இசையில் ‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தின் பாடல் வரிகள் இவை. வரிகளுக்கேற்ப பாந்தமான புடவை, கண்களில் காதல் மின்னல், லேசாக வாரிய தலை, கையில் ஹேண்ட்பேக்... என பக்கத்து வீட்டுப் பெண் சாயலில் கிறங்கடிக்கிறார் துஷாரா விஜயன்.
‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் ‘மாரியம்மா’, ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தில் ‘ரெனே’ என்றிருந்தவருக்கு இந்தப் படத்தில் கவிதா என்னும் கவித்துவமான கிராமத்து கதாபாத்திரம். இந்த இயல்பான கெட்டப்பிலும் அள்ளுறீங்களே என்றால் முகம் மலர சிரிக்கிறார். ‘‘படிச்சிட்டு பேங்கில் வேலை, டீச்சர், பஞ்சாயத்து யூனியன் ஆபீஸில் வேலை... இப்படி எல்லாம் எங்க ஊர் அக்காக்களைப் பார்த்திருக்கேன். அவங்களைதான் மனசிலே நினைச்சிக்கிட்டேன்.
இயல்பாகவே அவங்க கிட்டே ஒரு கெத்து இருக்கும். கூடவே ஒரு சின்ன அப்பாவித்தனமும் இருக்கும். அதைத்தான் உள்வாங்கி நடிச்சிருக்கேன்...’’ என்கிறார் துஷாரா. ‘மாரியம்மா’ துஷாரா... ‘கவிதா’ துஷாரா... என்ன மாற்றம் நிகழ்ந்திருக்கிறது?
முதல் படத்திலே என்ன நம்பிக்கை இருந்ததோ அந்த நம்பிக்கை இப்பவும் இருக்கு. சின்ன வயதில் இருந்தே சினிமா மேலே ஆசை, ஆர்வம்ன்னு கனவுகளோடு வந்தவ நான். இப்பவும் அதே துஷாராதான். எந்த மாற்றமும் இல்லை. நடிப்பில் முன்னேற்றம் இருக்கா... அதை நீங்கதான் சொல்லணும். நிறைய சினிமா பற்றிக் கத்துக்க வாய்ப்புகள் கிடைச்சிருக்கு. அடுத்தடுத்து அனுபவசாலி இயக்குநர்கள் படம் என்கிறதால் நிறைய சினிமா பற்றின புரிதல் கிடைச்சிட்டு இருக்கு.
தனக்குத்தானே மேக்கப் போட்டுக்கொள்ளும் நடிகை என்னும் பெயர் உள்ளதே?
ஆறாம் கிளாஸில் இருந்து மேக்கப் போட்டுக்கறேன்னா பார்த்துக்கோங்க! எனக்கு பேசிக்கா ஃபவுண்டேஷன் போட்டுக்கிட்டா செட் ஆகலை. நம்ம சருமம் என்னனு நமக்குத்தானே தெரியும்! அதனால் மேக்கப்பை நானே போட்டுக்குவேன். ஹேர் ஸ்டைல் எனக்கு செய்துக்கத் தெரியாது. அதனால என் கூட புய் என்கிற ஹேர் ஸ்டைலிஸ்ட் இருக்காங்க. என்னுடைய மாடலிங் காலத்திலே இருந்து அவங்கதான் எனக்கு ஹேர் ஸ்டைலிஸ்ட். அதேபோல என் ஸ்கின் டோனுக்கு ஹெவி மேக்கப் போட்டாலும் செட்டாகலை. கதைக்குத் தேவைப்பட்டா நிச்சயம் கெட்டப் சேஞ்ச், மேக்கப் சேஞ்ச் எல்லாம் செய்யத் தயாரா இருக்கேன்.
சமீபத்திய புகைப்படங்களில் டாம் கேர்ள் லுக் நிறையத் தெரிகிறதே?
பாலாஜி மோகன் சார் படத்துக்காக லண்டன் போயிருந்தேன். அங்கேயே ஒரு போட்டோ ஷூட் செய்துக்கிட்டேன். ஆக்சுவலி அந்த மாடர்ன் லுக்தான் என் ஸ்டைல். ஊரிலிருந்து நகரம், மெட்ரோ சிட்டின்னு வந்த பொண்ணு நான்... திடீர்ன்னு என்கூட இருந்த ஃபிரெண்ட்ஸ் டிரெஸ், பேச்சு இப்படியெல்லாம் பார்த்தா அல்ட்ரா மாடர்னா இருக்காங்க. அப்ப என்னை நானே மாத்திக்கிட்டாதான் நம்மளை கூட்டத்திலே சேர்த்துக்குவாங்களோன்னு யோசிச்சு அப்டேட் செய்துக்கிட்டேன்.
சில கிளாமர் புகைப்படங்களும் கூட எடுத்தேன். எனக்குன்னு ஒரு லிமிட் இருக்கு. கதைக்குத் தேவைன்னா நிச்சயம் அந்த லிமிட் வரை என்னால் கிளாமர் ரோல்ல நடிக்க முடியும்’.
படபடன்னு பேசுகிற பெண்... பிறப்பிலேயே துஷாரா இப்படித்தானா?
எங்க வீட்டில் என்னை இன்ஜினியரிங் படிக்க வெச்சு அக்கா மாதிரியே செட்டில் செய்யணும்னு நினைச்சாங்க. ஆனால், நான் என் பாதையிலே அப்படியே உல்டாவா மாறி ஃபேஷன், மாடலிங், சினிமா... இப்படிப் போகணும்னா முதல்ல என் வீட்டில் இருக்கவங்களுக்கு நான் தைரியமானவள்ன்னு நிரூபிக்கணும். அப்போ தெளிவா பேசணும், தெளிவா என்னை நானே ஹேண்டில் செய்துக்கணும்.
இதையெல்லாம் அப்பவே வீட்டிலேயே ஆரம்பிச்ச காரணம் கைகொடுத்தது. ‘அப்பாடா! இந்தப் புள்ள பொழைச்சிக்கும்’னு ஒரு நம்பிக்கை அவங்களுக்கு வந்துச்சு. அந்த போல்ட்தான் சினிமாவிலும் கைகொடுக்குது.
‘கழுவேத்தி மூர்க்கனி’ன் கவிதா..?
கௌதம் ராஜ் சார் கதை சொல்கிற ஸ்டைலே ரொம்பப் பிடிச்சிருந்தது. அவர் அப்பட்டமா கேரக்டரா மாறி நடிச்சுக் காட்டிடுவார். ரொம்ப ஈசியா உள்வாங்கிக்க முடியும். எப்படி பா.இரஞ்சித் சார் என் மேலே நம்பிக்கை வெச்சு மாரியம்மா, ரெனே கேரக்டர்கள் கொடுத்தாரோ அதே அளவு நம்பிக்கை கௌதம் சாருக்கு என் மேல இருந்துச்சு. ‘நீங்க செய்திடுவீங்க’னு பூஸ்ட் செய்து அனுப்புவார்.
அருள்நிதி சார் கஸினும் நானும் ‘NEFT’ கல்லூரியிலே ஒரே கிளாஸ். ஆனாலும் நான் அவர்கிட்டே பேசினது இல்லை. ஷூட்டிங் ஸ்பாட்டிலும் ரொம்ப ரிலாக்ஸா இருப்பார். நான்தான் என்ன சொல்வாரோன்னு பேச யோசிச்சேன். ஆனால் ஒரு சீன்ல அவரை நான் அடிக்கணும். உண்மையாவே அடிச்சிட்டேன். ‘என்னங்க உண்மையாவே இந்தப் புள்ள அடிக்குது’ன்னு சொன்னார். ‘ஹையோ சாரி சார்... சாரி சார்’ன்னு கேட்டேன். ஆனாலும் செம ரிலாக்ஸா ‘ஜஸ்ட் ஃபேக் பண்ணுங்க போதும்’னு சொன்னார்.
அடுத்தடுத்த படங்கள் பற்றி சொல்லுங்க?
பாலாஜி மோகன் சார் இயக்கத்தில் ஒரு படம் நடிச்சி முடிச்சிட்டேன். ஷூட்டிங் எல்லாம் லண்டன்ல நடந்துச்சு. இந்தப் படத்திலும் ஹீரோ காளிதாஸ். செம மாடர்ன் கேரக்டர். டைட்டில், படத்தின் மத்த டீடெய்ல்கள் எல்லாம் கூடிய சீக்கிரம் வரும். அடுத்து வசந்தபாலன் சார் இயக்கத்தில் ‘அநீதி’ படத்தில் அர்ஜுன்தாஸ் ஜோடியாக நடிச்சிருக்கேன். என்னுடைய கனவு இயக்குநர்கள் லிஸ்ட்டில் வசந்தபாலன் சாரும் ஒருத்தர். ஒரு பாவப்பட்ட பொண்ணு கேரக்டர்.ரொம்ப ஆழமான ரோல் எனக்கு. இன்னும் சில ப்ராஜெக்ட்ஸ் பேசிக்கிட்டு இருக்காங்க. இப்போதைக்கு ஓப்பனா சொல்ல முடியாது.
ஏன் ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் நிறைய இடைவேளை எடுத்துக்கறீங்க?
முக்கியத்துவம் வாய்ந்த கதைகளா நடிக்கணும்னு பொறுமையா அடியெடுத்து வைக்கிறேன். நல்ல நடிகைங்கற பெயர்தானே முக்கியம்! விஜயசாந்தி மேடம் மாதிரி அடிதடி, ஸ்டண்ட், பறந்து பறந்து ஆக்ஷன்... இப்படி ஒரு ரோல் நடிக்கணும்னு ஆசை இருக்கு.
காதல் அனுபவம் இருக்கா?
அதை ஏன் கேட்கறீங்க... அதெல்லாம் அடிபட்டு, காதல் தோல்வியிலே நொந்து நூடுல்ஸ் எல்லாம் ஆகி வெளியே வந்தாச்சு. தாடி மட்டும்தான் வளரலை. அப்ப நினைச்சேன் ‘அண்ணாமலை’ பட ரஜினி சார் மாதிரி ‘நீ ஃபீல் பண்ணுவ... என்னைய இழந்திட்டோமேன்னு ஃபீல் பண்ணுவ’னு சபதம் எடுத்தேன். இப்ப அந்தப் பையன் தினம் ஃபீல் பண்றாப்ல. அப்பாடான்னு இருக்கு!
அப்பா அரசியல் புள்ளி... உங்களுக்கு அரசியல் ஆசை இருக்கா?
இது நல்லாருக்கே! நல்ல ஐடியா கொடுத்திருக்கீங்க. பேசாம இறங்கி ஒரு கை பார்க்கலாமா? இதைப் பத்தி யோசிக்கிறேன்!
ஷாலினி நியூட்டன்
|