உக்ரைன் எனும் சங்கு!



உக்ரைன் - ரஷ்யா போர் ஆரம்பித்து கிட்டத்தட்ட 15 மாதங்கள் ஆகிவிட்டன. உக்ரைன் இரண்டே மாதத்தில் சுருண்டுவிடும் என்று பல ராணுவ வல்லுநர்கள் கணித்தார்கள். பல ஐரோப்பிய நாடுகளே அப்படித்தான் நினைத்து அஞ்சின.
ஆனால், அதிபர் ஜெலான்ஸ்கி, ஒரு நாடு தனது இருப்பே கேள்விக்குள்ளாகும் போது எப்படி எதிர்த்து நிற்கும் என்பதை செயல்முறையில் காண்பித்திருக்கிறார். நேரடி போர் நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்து ராணுவ மற்றும் தார்மீக ஆதர்வை திரட்டுவதிலும் பெரும் வெற்றியை ஈட்டியிருக்கிறார் ஜெலான்ஸ்கி.

தற்சமயம் ஜப்பானில் நடக்கும் G7 கூட்டத்தொடரில் இந்தியா, உக்ரைன் தலைவர்கள் சந்திப்பு நிகழ்ந்தது. நடக்கும் போருக்கு அமைதியான முறையில் ஒரு தீர்வைக் காண எல்லா வகையிலும் உதவுவோம் என்று பிரதமர் மோடி ஆதரவளித்திருக்கிறார். உக்ரைனில் நடந்துகொண்டிருப்பதை சுட்ட ‘போர்’ என்ற வார்த்தையைக் கூட இந்தியா இப்போதுதான் பயன்
படுத்த ஆரம்பித்திருக்கிறது.

இந்தியா முக்கிய ராணுவ தளவாடங்களுக்கு ரஷ்யாவை எதிர்பார்த்திருப்பது அனைவரும் அறிந்ததுதான். எனவே இதுவரை உக்ரைன் விவகாரம் குறித்து இந்தியா மெளனம் சாதித்து வந்திருந்தது. மேலும் இந்த ஓரிரு வருடங்களில் இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெயின் அளவும்  பத்து மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. உக்ரைன் போரினால் நேரடியாக பொருளாதார நன்மை பெற்ற நாடுகள் இந்தியாவும் சீனாவும்தான். இருநாடுகளுமே குறைந்த விலையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருபவை.

இந்த G7 கூட்டத்தின் முக்கிய குறிக்கோள் ரஷ்யாவின் மீது மேலும் எப்படி பொருளாதாரத் தடைகளை விதிக்கலாம் என்பதில் கவனம் கொள்ளவிருக்கிறது. இது இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவது குறித்த அழுத்தத்தை உருவாக்கும். இந்த சர்வதேச அழுத்தத்தின் பின்புலத்தில் இருந்துதான் இந்தியா இப்போது வெளிப்படையாக உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டை நோக்கி நகர்ந்துள்ளது.

பெட்ரோல் விலை உயர்வா... இல்லை உக்ரைன் ஆதரவா... புள்ளியில் இந்தியா உக்ரைன் ஆதரவு என்ற நிலைப்பாட்டை நோக்கி நகர்ந்துள்ளது. இது இந்தியாவுக்கு நல்ல
விஷயமே உக்ரைனின் மற்றுமொரு நீண்ட நாள் கோரிக்கையும் இப்போது நிறைவேறியுள்ளது. உக்ரைன் ராணுவம் பல தளங்களில் ரஷ்ய படைகளுக்கு ஒரு சவாலாக விளங்கினாலும் உக்ரைன் விமானப்படை ரஷ்யாவை விட பல மடங்கு வலுவற்ற  நிலையில் இருந்தது. அவர்கள் பயன்படுத்தி வந்தவைகளும் பழைய ரஷ்ய போர் விமானங்களே.

இந்தப் போரில் அமெரிக்க போர் விமானங்கள் (F-16’s) தேவை குறித்து அதிபர் ஜெலான்ஸ்கி வெகு நாட்களாகவே கோரிக்கை வைத்து வந்திருந்தார். நவீன போர் விமானங்களை உக்ரைனுக்கு அளிப்பது ரஷ்யாவை சீண்டுவதாக அமையும் என்று அமெரிக்கா வெகு நாட்களாக இதற்கு செவிசாய்க்காமல் இருந்து வந்தது.ஆனால், அந்த நிலைப்பாட்டை அமெரிக்கா இப்போது மாற்றிக்கொண்டுள்ளது. உக்ரைனுக்கு F-16களை வழங்குவது இரு நாடுகளையும் ஏறக்குறைய சமபலம் கொண்டவர்களாக ஆக்கும். அதாவது அணு ஆயுதங்களைத் தவிர்த்து.

எனவே ரஷ்யா உக்ரைனை முழுமையாக ஆக்கிரமிக்கலாம் என்ற கொஞ்சநஞ்ச சாத்தியக்கூறும் இத்தோடு இல்லாமல் போய்விடும். இனி இரண்டு நாடுகளுக்கும் இருக்கும் ஒரே வாய்ப்பு இப்போது ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் குறித்த ஒரு பரஸ்பர புரிதலுக்கு வந்து போர் நிறுத்தத்தை அறிவிப்பதாகவே இருக்கும்.இதுவே அனைவரின் எதிர்பார்ப்பும். ஆனால், அதிபர் புடின் இதை எப்படி எதிர்கொள்வார் என்று ஊகிப்பது கடினம். குறிப்பாக சீனா ரஷ்யாவுடன் limitless partnership என்ற நிலைப்பாட்டில் இருப்பது இந்தப் போரை இன்னும் ஒரு வருடம் கூட இழுக்கலாம். ஆனால், Outrigtht Victory என்பது யாருக்குமே சாத்தியமில்லை என்ற புள்ளிக்கு  நாம் வந்துவிட்டோம்.

இதில் ஒரு அவல நகைச்சுவை என்னவென்றால் உக்ரைன் நேட்டோவுக்கு ஆதரவாக போய்விடும் என்று பயம் காட்டி இன்று உக்ரைனை ரஷ்யாவே மேற்கத்திய நாடுகளின் கரங்களுக்கு தாரை வார்த்துக்கொடுத்து விட்டது என்பதுதான். இனி உக்ரைன் என்றைக்கும் நேட்டோ மற்றும் ஐரோப்பாவின் செல்லப் பிள்ளையாகவே இருக்கும்.அதுபோக, போனமாதம்தான் பின்லாந்து நேட்டோ உறுப்பினரானது. ஸ்வீடனும் சீக்கிரமே நேட்டோவில் சேர்ந்து விடும். சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுப்பது என்பார்களே... புடின் நன்றாகவே ஊதியிருக்கிறார்.                            

கார்த்திக் வேலு