இசை நிகழ்ச்சியும் 25 லட்சம் பேரும்!
நடிகை, பாடகி, பாடலாசிரியை என பன்முக ஆளுமை கொண்ட அமெரிக்கப் பாடகி, லேடி காகா. இவருடைய இசைப் படைப்புகள் 17 கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகி சாதனை புரிந்திருக்கின்றன. இவருடைய நான்கு தனிப்பாடல் ஆல்பங்கள் ஒரு கோடி பிரதிகள் விற்பனையாகியிருக்கின்றன.  ஒரு பெண் இசைக் கலைஞரின் தனிப்பாடல் ஆல்பங்கள் இவ்வளவு பிரதிகள் விற்பனையானது இதுவே முதல்முறை. மட்டுமல்ல, 2011ல் அதிகமாக வருமானம் ஈட்டும் பெண் இசைக் கலைஞர், உலகின் மிக அதிகாரம் வாய்ந்த பிரபலம் என்று ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகையால் புகழப்பட்டார்.
கிராமி விருது, கோல்டன் குளோப் விருது என ஏராளமான விருதுகளைத் தன்வசமாக்கியிருக்கிறார்.விஷயம் இதுவல்ல. சமீபத்தில் பிரேசிலில் உள்ள ரியோ நகரில் அமைந்திருக்கும் கோபகபானா கடற்கரையில் ஓர் இசை நிகழ்ச்சியை நடத்தினார் லேடி காகா.
இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதற்குக் கட்டணம் கிடையாது. யார் வேண்டுமானாலும் கலந்துகொண்டு, பார்வையிடலாம். லேடி காகா இசை நிகழ்ச்சியை சுமார் 25 லட்சம் பேர் நேரடியாக பார்வையிட்டிருக்கின்றனர். ஒரு பெண் இசைக் கலைஞரின் நிகழ்ச்சிக்கு இவ்வளவு லட்சம் பேர் வந்தது இதுவே முதல் முறை.
தொகுப்பு: த.சக்திவேல்
|