12 ஆயிரம் கிமீ நடந்த பயணி!
இங்கிலாந்தைச் சேர்ந்த பயண விரும்பி, லூக் டாகின். கடந்த செப்டம்பர் மாதம் இங்கிலாந்திலிருந்து, வியட்நாம் வரை பயணம் செல்ல திட்டமிட்டார். மற்றவர்களைப் போல விமானத்தின் மூலமாகவோ அல்லது வேறு வாகனங்களைப் பயன்படுத்தியோ பயணிக்காமல், வித்தியாசமாக ஏதாவது செய்யலாம் என்று நினைத்தார்.
நடந்தே பயணம் செய்யலாம் என்று முடிவு செய்து, கடந்த செப்டம்பர் 24ம் தேதி தனது பயணத்தை ஆரம்பித்தார்.
பேருந்து, டாக்ஸி, ஆட்டோ என்று எந்த வாகனங்களையும் பயன்படுத்தக்கூடாது; குறுக்கு வழியிலும் செல்லக்கூடாது என்பது அவர் வகுத்துக்கொண்ட பயண விதி. இங்கிலாந்து, ஃபிரான்ஸ், பெல்ஜியம், லக்ஸம்பெர்க், ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி, செர்பியா, பல்கேரியா, கிரீஸ் என பல நாடுகளின் வழியாக, 12 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றே வியட்நாமை அடைந்திருக்கிறார் லூக்.
தினமும் குறைந்தபட்சம் 50 கிலோ மீட்டர் தூரம் நடந்திருக்கிறார். ஐரோப்பாவில் ஆரம்பித்த அவரது நடைப்பயணம் ஆசியாவில் முடிந்திருக்கிறது. இரண்டு கண்டங்களை நடந்தே கடந்தவர் என்ற பெருமையையும் தன்வசமாக்கியிருக்கிறார் லூக்.
|