கல்விக்கு உதவும் ஆட்சி... +2 ரிசல்டே சாட்சி!



கடந்த வாரம் தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் மொத்தம் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் சிறப்பு என்னவென்றால் கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தின் பிளஸ் டூ தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருவதுதான்.
குறிப்பாக கடந்த நான்கு ஆண்டுகளில் தேர்ச்சி விகிதம் முறையே 2022ல் 93.76 சதவீதமாகவும், 2023ல் 94.03 சதவீதமாகவும், 2024ல் 94.56 சதவீதமாகவும் இருந்தது. இந்தாண்டு 95.03 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அதுமட்டுமல்ல. இந்தாண்டு 436 அரசு மேல்நிலைப் பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. கடந்த ஆண்டு நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 397 ஆக இருந்தது.

இதேபோல், நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற மொத்த மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 2,478. இந்தாண்டு 2,638. இப்படி ஆண்டுக்கு ஆண்டு தேர்ச்சி விகிதத்தில் தமிழகம் சிறப்பான உயர்வைக் கண்டு வருகிறது. இதற்கான காரணங்கள் குறித்து பேசும் கல்வியாளர் டாக்டர் ஆர்.ராஜராஜன், முதலாவதாக தமிழ்நாடு அரசின் முன்னெடுப்பைக் குறிப்பிடுகிறார்.

‘‘முதல் விஷயம் ‘நான் முதல்வன்’ திட்டத்தைச் சொல்ல வேண்டும். ஏனெனில், முன்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஐஐடி, என்டிஏ பற்றியெல்லாம் தெரியாது. சமீபத்தில் நான் மாதிரி பள்ளி ஒன்றுக்கு பேசப் போயிருந்தேன். அங்கே அவர்களுக்கு நிறைய விவரங்கள் தெரிய வந்திருப்பதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன்.

இதற்கு ‘நான் முதல்வன்’ திட்டமே காரணம். இதன்வழியே உயர்கல்விக்கான வழிகாட்டுதல்கள் மாணவர்களுக்கு சிறப்பாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டம் மாணவர்களின் படிப்பிற்கு ஒரு வினைஊக்கி போல் செயல்படுகிறது. பிளஸ் டூ முடித்து உயர்கல்விக்குப் போக வேண்டும் என்கிற எண்ணத்தை உண்டாக்குகிறது.  

இரண்டாவதாக ஊடகங்களைக் குறிப்பிட வேண்டும். அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் பலதரப்பட்ட கல்வியாளர்களை அழைத்து பேசுகின்றன. நிறைய கோர்ஸ்கள் பற்றி விவரிக்கின்றன.

இதனால் கிராமப்புற மாணவர்கள்கூட நன்றாகப் படிக்க வேண்டும் என நினைக்கின்றனர். அடுத்து என்ன படிக்கலாம், எந்தக் கோர்ஸில் படித்தால் சிறப்பாக வரலாம் என்கிற எண்ணம் அவர்களிடையே மேலோங்கி இருக்கிறது.

மூன்றாவதாக தமிழ்நாடு அரசின் சலுகைகள், உதவிகள் உள்ளிட்டவற்றைச் சொல்ல வேண்டும். ஏனெனில் பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை குறைக்க சிறப்பு ஊக்கத்தொகை, உயர்கல்வி உதவித்தொகை உள்ளிட்டவை மாணவர்களுக்கு வழங்குகிறது. இது மாணவர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.  

நான்காவதாக, முன்பெல்லாம் நிறைய பேர் கோயில்களுக்கு பணத்தை செலவழிப்பார்கள். அன்னதானம் செய்தல் மாதிரி செய்வார்கள். ஆனால், இப்போது கல்விக்காக உதவத் தொடங்கியுள்ளனர்.

சமீபகாலமாக நிறைய பவுண் டேஷன்கள் தோன்றியுள்ளன. குறிப்பாக வறுமைக்கோட்டில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களை மேற்கொண்டு படிக்க வைக்க பொதுமக்களிடையே சில முன்னெடுப்புகள் வந்துள்ளன. சமீபத்தில் ஒரு பேராசிரியர் நடத்திய நிகழ்வுக்குப் பேசச் சென்றிருந்தேன். அவர் மாவட்டம்தோறும் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள நூறு மாணவ-மாணவிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கல்வி சம்பந்தமான விஷயங்களில் உதவுகிறார்.

இப்படி மக்களிடையே தன்முனைப்பு வந்துள்ளதை பார்க்கிறேன். இது முன்பு அவ்வளவாக இல்லை. சமீப ஆண்டுகளாகவே வந்துள்ளது. ஆங்காங்கே இருக்கிறவர்கள் இந்தப் பிள்ளைகளை தத்தெடுத்து படிப்பிற்கு உதவி செய்கிறார்கள். சிலர், மற்றவர்களிடம் உதவி பெற்றுக்கூட கல்விக்கு உதவுகிறார்கள். இதை மாணவர்களும் உணர்ந்து பொறுப்புணர்வுடன் படிக்கின்றனர்.

ஐந்தாவதாக, பத்து ஆண்டுகளுக்கு முன்பு ரிசல்ட் வந்ததும் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் வாழ்த்துக்கள் சொல்வார்கள். அது சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு வருவார்கள். முதலிரண்டு இடங்களைப் பிடித்த மாணவர்களைப் பாராட்டுவார்கள். அவ்வளவுதான்.

இப்போது அப்படியில்லை. முதல்வர், அமைச்சர், ஆட்சியர் தவிர்த்து மற்ற கட்சியினர், புரவலர்கள் எனப் பலரும் பாராட்டி மாணவர்களுக்கு உதவுகின்றனர். இந்த முன்னெடுப்பு மற்ற மாணவ - மாணவிகளுக்கு உத்வேகம் அளிக்கிறது. இதனால் நன்றாகப் படிக்க வேண்டுமென நினைக்கின்றனர். ஆறாவதாக, தமிழக அரசு தோல்வியான மாணவர்களையும் கவனிக்கிறது. ஏன் தோற்றப் போனார்கள் என்பதை ஆராய்கிறது. ஒரு தரவுப்படி தமிழ்நாட்டில் 57.5 சதவீதம் பேர் பிளஸ் டூ முடித்துவிட்டு உயர்கல்விக்குச் செல்கின்றனர்.

அகிலஇந்திய அளவில் பார்க்கிறபோது 26.5 சதவீதம் பேர்தான் உயர்கல்வி நோக்கி பயணிக்கின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் இது 57.5 சதவீதமாக உள்ளது. இந்நிலையில் முதல்வர் தொடங்கி அமைச்சர்கள், அதிகாரிகள் வரை மீதமுள்ள 42.5 சதவீதம் பேர் என்ன ஆனார்கள் என்பதைக் கண்டறியச் சொல்கின்றனர்.மாணவர்கள் கடைசியாக வெளியேறிய பள்ளியின் தலைமையாசிரியரிடம் இதுகுறித்து கேட்கின்றனர். அப்படி தேடும்போது சில மாணவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது தெரிந்துவிடுகிறது.

இந்த உணர்வு பெற்றோருக்கும் வந்திருக்கிறது. பள்ளிக்கூடத்திற்கு அனுப்பினால் படிக்க வேண்டும் என்கிற எண்ணம் குழந்தைகளிடம் வளரும் என நினைக்கின்றனர். மாணவர்களும் படித்தால்தான் எதிர்காலம் என்ற நிலைமைக்கு வந்துள்ளனர். ஏழாவதாக, தோல்வியுற்றவர்களை உடனே கண்டறிந்து தனித்தேர்வு மூலம் வெற்றி பெறச் செய்து இந்தாண்டே அவர்களை உயர்கல்விக்கு அழைத்துச் செல்லும் பணியையும் அரசு செய்கிறது. 

ஏற்கனவே இது இருந்தாலும் இப்போது சிறப்பாக மாறியிருக்கிறது. தமிழக முதல்வரும் சாதித்த மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்வதோடு தேர்ச்சியடையாத மாணவர்களையும் ஊக்குவித்து நல்வழிபடுத்துகிறார்.

எட்டாவதாக, ஆசிரியர்களின் சிறப்பான செயல்பாடு. இப்போது அரசுப் பள்ளி நோக்கி வருகிறவர்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள மாணவர்களும், சிங்கிள் பேரண்ட் மாணவர்களும்தான். இவர்களை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாக கவனித்து முன்னோக்கிச் செலுத்த அரும்பாடுபடுகின்றனர். அதன் விளைவுதான் இப்போது பிளஸ் டூ தேர்வில் அதிகரித்து வரும் தேர்ச்சி விகிதம்...’’ என்கிறார் கல்வியாளர் ஆர்.ராஜராஜன்.

அடுத்த ஆண்டும் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும்..!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த முதுகலை ஆசிரியர் கே.கே.தேவதாஸ், ஆசிரியர்களின் பார்வையிலிருந்து சில விஷயங்களைக் குறிப்பிடுகிறார்.  

‘‘இப்போதைய பிளஸ் டூ பாடத்திட்டத்தை 2019ம் ஆண்டு அறிமுகப்படுத்தினார்கள். இது கடந்த நான்கு ஆண்டுகளில் ஆசிரியர்களிடையே நன்றாக பரிச்சயமாகிவிட்டது. அதனால், ஆசிரியர்கள் சிறப்பான முறையில் பாடங்களைக் கற்பித்து வருகின்றனர்.

அடுத்ததாக நூறு சதவீதம் எடுக்க வைத்த ஆசிரியர்களுக்கு தமிழக அரசு சான்றிதழ் தந்து ஊக்கப்படுத்துகிறது. அத்துடன் நூறு சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு சென்னையில் விழாவும் வைக்கிறார்கள். இதனால் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ரொம்பவே ஆர்வமாக வேலை செய்கின்றனர். குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு எனும்போது நம் பள்ளியிலிருந்து வரவேண்டும் என ஆசிரியர்கள் ஊக்கமாக உழைக்கின்றனர்.  

அப்புறம், மாணவர்களிடையே சில பிரச்னைகள் இருந்தாலும் ஊக்கத்துடனே படிக்கின்றனர். குறிப்பாக மாணவர்களைவிட மாணவிகள் படிப்பில் ஆர்வமாக உள்ளனர். காரணம், மாணவிகள் ஏதாவது சாதிக்க வேண்டும் என நினைக்கின்றனர். அதனால் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் உயர்ந்து வருகிறது.  

அடுத்து மற்றொரு முக்கிய காரணம் முன்பு கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் காலிப்பணியிடங்கள் அதிகம் இருந்தது. இதில் அரசு எடுத்த முன்னெடுப்பு என்னவெனில், பள்ளி மேனேஜ்மெண்ட் கமிட்டி வழியே தற்காலிக முதுகலை ஆசிரியர்களை நியமித்தது. இதனால் இப்போது காலிப்பணியிடங்களே அவ்வளவாகக் கிடையாது. பாடங்களும் தொய்வில்லாமல் நடக்கின்றன. இதுவும் தேர்ச்சி விகிதம் உயரக் காரணம்.   

அடுத்ததாக முதன்மை கல்வி அலுவலர்கள் ஊக்கமாகச் செயல்படும் மாவட்டங்கள் முன்னோக்கி வந்திருக்கின்றன. முன்பு விழுப்புரம் மாவட்டம் 28வது இடத்தில் இருந்தது. இப்போது 18வது இடம் வந்திருக்கிறது. கடலூர் 10வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. இது அதிகாரிகளின் செயல்பாடுகளாலும், ஆசிரியர்களின் பணிகளாலுமே நடந்தன.

அதேபோல் இப்போது இடைநிற்றலை முற்றிலுமாக நிறுத்திவிட்டனர். எல்லா மாணவர்களையும் பள்ளிக்கு வரவழைக்கின்றனர். அரசின் இந்த முன்னெடுப்பு சரியாக இருப்பதால் ரிசல்ட்டும் சிறப்பாகக் கிடைத்துள்ளது.அடுத்து உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களை அரசு கண்காணிக்கிறது. உதாரணத்திற்கு இப்போது எங்கள் பள்ளியில் 414 பேர் பிளஸ் டூ எழுதினர். இதில் 414 பேரும் தேர்ச்சி பெற்றனர். இந்த 414 பேரும் உயர்கல்விக்கு போகிறார்களா என்பதை அரசு கவனிக்கிறது. இதை நான் முதல்வன் திட்டத்தின் வழியாக செய்கிறது.

அப்புறம், உயர்கல்விக்கு அட்மிஷன் கிடைக்காத மாணவர்களுக்கு தனியாக ஒரு கூட்டமும் கலந்தாய்வும் நடத்தி மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்டிப்பான முறையில் நூறு சதவீதம் கல்லூரி கொண்டுபோய் சேர்க்கின்றனர். ஆக, பாஸ் செய்தால் போதும். ஏதாவது ஒரு உயர்கல்வி படிக்கலாம் என்கிற நம்பிக்கை மாணவர்களிடையே வந்திருக்கிறது.

அதனால், ஆரம்பத்தில் தொய்வாக உள்ள மாணவர்கள்கூட கடைசி நேரத்தில் படித்து பாஸாகி உயர்கல்விக்குப் போய்விடுகின்றனர். இந்த முன்னெடுப்புகளாலேயே இப்போது தேர்ச்சி விகிதம் உயர்ந்திருக்கிறது. அடுத்த ஆண்டும் தேர்ச்சி விகிதம் இதைவிட இன்னும் அதிகமாகவே இருக்கும்...’’ என்கிறார் முதுகலை ஆசிரியர் கே.கே.தேவதாஸ்.

பேராச்சி கண்ணன்