பாகிஸ்தான் அல்ல... பாகிஸ்தான் ராணுவம்தான் எல்லா பிரச்னைகளுக்கும் காரணம்!



கடந்த மாதம் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் 25 அப்பாவி சுற்றுலாப் பயணிகளை தீவிரவாதிகள் படுகொலை செய்தது ஒட்டுமொத்த இந்தியாவையும் கொந்தளிக்க வைத்தது. இதற்குப் பின்னணியில் இருந்தது பாகிஸ்தான் ராணுவம்தான் என்பது செல்போனுக்குள் இருக்கும் சிம்கார்ட் போல் உலகறிந்த விஷயம். 
இப்படித்தான் பாகிஸ்தான் காலம் காலமாக நடந்து கொள்கிறது. பாராளுமன்ற தாக்குதல், தில்லி மார்க்கெட் குண்டுவெடிப்பு, மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதல், புல்வாமா என நீளும் பட்டியலே இதற்கு சாட்சி.

மூன்று-நான்கு வருடங்களுக்கு ஒருமுறை ஏதாவது ஓர் இடத்தை தாக்குவது, பாதுகாப்பு நெருக்கடியை உருவாக்குவது, பரஸ்பரம் காட்டமான அறிக்கைகள், சர்ஜிக்கல் ஸ்டிரைக், உலக நாடுகளிடம் கெஞ்சல், சமரசம். கப் சிப். சில வருடங்கள் கழித்து மீண்டும் பாகிஸ்தான் வம்பிழுக்கும். இதுதான் பாகிஸ்தானின் வரலாறு. பல பாகிஸ்தான் பிரதமர்களும் ராணுவ அமைச்சர்களும் வெளிப்படையாகவே தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இருப்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

இம்முறை இந்தியா எடுத்திருக்கும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை இதை இன்னமும் அழுத்தமாக உலக நாடுகள் மத்தியிலும் பிரபஞ்ச மக்களிடமும் பதிய வைத்திருக்கிறது; பாகிஸ்தானை - குறிப்பாக பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்படுத்தி இருக்கிறது.ஆம். விரல்விட்டு எண்ணக் கூடிய நாட்களில் மொத்தமாக பாகிஸ்தானையும் பாகிஸ்தான் ராணுவத்தையும் நிலையகுலைய வைத்துள்ளது இந்தியா.

‘இரண்டு பக்கத்தின் கதையையும்’ சொல்ல வேண்டும் என்று கவனமாக செயல்படும் சர்வதேச ஊடகங்களுக்கே கூட பாகிஸ்தானின் ‘நாங்க அப்பாவிகள்’ நிலைப்பாடு கடுப்படிக்க ஆரம்பித்திருக்கிறது . ஏனெனில் உண்மையான அதிகாரத்தை பாகிஸ்தானில் கையில் வைத்திருப்பது சந்தேகமேயில்லாமல் ராணுவம்தான். பொருளாதாரம், அரசியல், உளவுத்துறை என்று எல்லா இடத்திலும் ராணுவம் நேரடியாகவே தலையிட்டு தனக்கான அதிகாரத்தை நிறுவிக்கொண்டு விட்டது.

இந்தியாவுடன் அமைதிக்கான எந்த நிமித்தமும் அவர்களால் - ராணுவத்தால் - எதிர்க்கப்படும். புட்டோ முதல் இம்ரான்கான் வரை தொடரும் பாரம்பரியம் இது.ராணுவத்தில் இருந்து வந்த முஷாரப், அரசாங்கத்தில் மிலிட்டரியின் செல்வாக்கை நிரந்தரமாக்க பல முயற்சிகளை மேற்கொண்டார். 

ஆனால், அவருமே இந்தியாவுடன் நல்லுறவு என்ற திசை நோக்கி போகிறார் என ராணுவம் கருத ஆரம்பித்ததுமே தனது அதிகாரத்தை இழந்தார். நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழலும் அவருக்கு உருவானது.பாகிஸ்தானின் உளவுத்துறையின் தலைவரை, அந்நாட்டு அரசாங்கம் நியமிப்பதில்லை. மாறாக ராணுவம்தான் நியமிக்கிறது.
 
ரியல் எஸ்டேட், வங்கிகள், ஷாப்பிங் மால், பெட்ரோல் பங்க் நடத்துவது என்று ராணுவமே நேரடியாக பல தொழில்களில் ஈடுபட்டிருக்கிறது. எனவே நிதி ஒதுக்கீடு, அரசாங்க ஒப்புதல் என்றெல்லாம் யாரிடமும் ராணுவம் போய் நிற்க வேண்டியதில்லை. கிட்டத்தட்ட State inside a State போல பாகிஸ்தான் ராணுவம் செயல்படுகிறது. இந்தியாவுடன் வம்பிழுத்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் பாகிஸ்தான் மக்கள், தங்கள் நாட்டு ராணுவத்தின் இருப்பும் அதிகாரமும் இன்றியமையாத ஒன்று என ஏற்பார்கள்.

ஆப்கானிஸ்தானை அன்றைய சோவியத் ரஷ்யா ஆக்கிரமித்தபோது, முஜாஹிதீன்களை அவர்களுக்கு எதிராக வளர்க்க பாகிஸ்தான் ராணுவத்தையும் உளவுத்துறையையும்தான் அமெரிக்கா  பயன்படுத்திக்கொண்டது. இதற்காக பணத்தை வாரி இறைத்தது. அந்த விதைதான் இன்று ஆலமரமாக கிளைத்து நிற்கிறது. 2018 வரை அமெரிக்க ஆதரவு பாகிஸ்தானுக்கு தொடர்ந்தது. அமெரிக்கா விலகியதும் அந்த இடத்தை சீனா பிடித்துக் கொண்டிருக்கிறது.

தற்போது இந்தியா மேற்கொண்ட இந்த எதிர்வினை - ஆபரேஷன் சிந்தூர் நியாயமானது  என்றே உலக நாடுகள் உரக்கச் சொல்கின்றன. இது குறித்த இந்திய ராணுவத்தின் அறிக்கையும் நிதானமான மொழியிலேயே இருக்கின்றன. இது தீவிரவாத நிலைகளை திருப்தித் தாக்கும் Non-Escalatory நடவடிக்கை என்பதை தெளிவாக பதிவு செய்திருக்கிறது.

உண்மையில் பாகிஸ்தான் ராணுவம் தனது செல்வாக்கை இழக்கும் போதுதான் இந்தியா - பாகிஸ்தான் பிரச்னைக்கான நிரந்த தீர்வு உருவாகும். இதற்கான முதல் அடியை ‘ஆபரேஷன் சிந்தூர்’ எடுத்து வைத்திருக்கிறது.

கபிலன்