ஒரே இரவில் நடக்கும் க்ரைம் த்ரில்லர்!



‘‘‘காதல் கதை நல்லா இருக்கு... ஆனால், எனக்கு இப்போ காதல் கதை வேண்டாம். நல்ல கிரைம் கதை இருந்தால் சொல்லுங்க...’னு உதயநிதி சார் கேட்ட இந்த வார்த்தைகள்தான் இப்போது ‘கண்ணை நம்பாதே’ படம்...’’ பின்னணியில் ஆயுதங்களின் சப்தங்கள், பரபர டார்க் கிரைம் பிரத்யேக டிரெய்லருடன் நம்மை வரவேற்றார் இயக்குநர் மு.மாறன். அருள்நிதி நடிப்பில் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்திற்குப் பிறகு டபுள் டிரிபிள், கிரைம் திரில்லருடன் தயாராக இருக்கிறார் இயக்குநர் மு.மாறன்.

உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா, சதீஷ், பூமிகா சாவ்லா, பிரசன்னா, ஸ்ரீகாந்த், வசுந்தரா உட்பட பலர் நடித்துள்ளனர். சித்துக்குமார் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லிப்பி சினி கிராப்ட்ஸ் சார்பில் வி.என்.ரஞ்சித்குமார் தயாரிக்கிறார்.‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘கண்ணை நம்பாதே’... இரண்டுமே கண்கள்... இரண்டுமே பிரபல பாடல் வரிகள்..?

அந்தப் படத்துக்கும் சரி இந்தப் படத்துக்கும் சரி இந்தத் தலைப்புகள் சரியா பொருந்திச்சு. தலைப்பு யோசிக்கும் போது எங்கேயோ அல்லது மனதில் ஓடிக்கொண்டிருந்த பாடல்கள்தான் இது. அந்தப் பாட்டு சிவாஜி சார் நடிச்ச ‘குலமகள் ராதை’ படப் பாடல், இந்த பாடல் எம்ஜிஆர் சார் நடிச்ச ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தில் வருகிற ஃபேமஸ் பாடல். படம் முழுக்கவே இருட்டில் நடக்கற கதை என்கிறதால ‘கண்ணை நம்பாதே’ அப்படிங்கற தலைப்பு இந்த படத்துக்கு கரெக்ட்டா இருந்துச்சு.  

படத்தின் கதைக்களம் என்ன?

ஒரே இரவில் நடக்கற கதை. விடிஞ்சா படம் முடிஞ்சிடும். ஒரு அப்பாவி தெரியாம ஒரு பிரச்னைக்குள்ள மாட்டிக்கிறான். ஏன் மாட்டிக்கிறான்... எப்படி அந்த பிரச்னைக்குள்ள வந்தான்... அதிலிருந்து எப்படி வெளியே வந்தான்... அப்படிங்கறதுதான் கதை. முதல் பகுதி வேறு வேறு நாட்கள்ல இருக்கும்.
ரெண்டாம் பாதி ஒரு ராத்திரியிலே முடிஞ்சிடும். படத்தில் கொலை முக்கியத்துவமான கதை நகர்த்தலா இருக்கும். அது ஒரு கொலையா, பல கொலைகளா... இதெல்லாம் படத்தில் பாருங்க. படத்தில் ஒரு சின்ன மெசேஜ் கூட வெச்சிருக்கோம்.

உதயநிதியிடம் கதை சொன்னபோது அவருடைய ரியாக்‌ஷன் என்னவாக இருந்தது..?

கதை சொல்ல அவர் கிட்ட அப்பாயின்ட்மென்ட் கேட்டேன். ரெண்டு மணி நேரம் டைம் கொடுத்தார். ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படம் முழுமையா கிரைம் திரில்லரா இருந்ததால் உதய் சாருக்கு ஆரம்பத்தில் ஒரு லவ் ஸ்டோரி சொன்னேன். மேலும் அந்தக் கதை காதல் + அரசியலா இருந்துச்சு.

ஆனால், உதய் சார் ‘காதல் சார்ந்த படங்கள் நிறைய நடிச்சிட்டேன், ஒரு நல்ல க்ரைம் திரில்லர் சொல்லுங்க’ அப்படின்னு சொன்னார். எனக்கு ஒரு பத்து நாட்கள் டைம் கொடுங்க அப்படின்னு கேட்டுட்டு வந்தேன். அப்படி மறுபடியும் சொல்லி ஓகே ஆன திரில்லர் கதைதான் ‘கண்ணை நம்பாதே.

உதய் சார் ரொம்ப பணிவான மனிதர், ஜாலியான நபர். கொஞ்சம் நிறைய கேள்வி கேட்பார். ஒரு சீன் எடுக்கறோம் அப்படின்னா இது எதுக்கு எடுக்கறோம், இந்த சீன் எதுக்குத் தேவை அப்படின்னு புரிதலோடு நடிக்கணும்னு யோசிப்பார்.

கேட்டுட்டு அதற்கேத்த மாதிரி தன்னையும் தயார் செய்துக்குவார். எங்கேயுமே, தான் ஒரு அரசியல்வாதி, தயாரிப்பாளர்... இப்படியான பந்தா அல்லது ஆதிக்கத்தை அவர்கிட்டே பார்க்கவே முடியாது. ஒரு படத்துல நடிக்க என்ன தேவையோ அப்படியான ஒரு நடிகரா இருப்பார். எல்லாத்தையும் மீறி செம ஃபிரண்ட்லியான மனிதர். கதைக்கான கரு எங்கே... எப்படி கிடைத்தது?

தினம் தினம் நாம பார்க்கற, படிக்கிற, நம்மைச் சுத்தி நடக்கற சம்பவங்கள், செய்திகள்ல இருந்து எடுத்ததுதான். ஆனால், உண்மைச் சம்பவம் எதுவும் கிடையாது. சம்பவங்கள், பார்த்த கிரைம் திரைப்படங்கள் இதையெல்லாம் அடிப்படையாக வைத்து நான் கற்பனையா ஒரு கதை செய்தேன். பிரசன்னா, ஸ்ரீகாந்த், நீண்ட இடைவேளைக்குப் பிறகு பூமிகா சாவ்லா... இன்னும் யாரெல்லாம் படத்தில் இருக்கிறார்கள்?

உதய் சார் இந்த படத்துல ஒரு சிஜி கிராபிக்ஸ் கம்பெனியிலே வேலை செய்கிற இளைஞரா வருவார். உதய் சார், ஸ்ரீகாந்த், பிரசன்னா... இதிலே ஹீரோ யார் அப்படின்னு கேட்டா மூணு பேருமே ஹீரோக்கள்தான். உதய் சாருக்கு ஜோடியா சில சீன்கள்ல வந்தோம்ன்னு இல்லாம இந்தக் கதை ஆரம்பிக்கிறதுக்கு முதல் புள்ளியா ஆத்மிகா இருப்பாங்க. அதன்பிறகு பூமிகாவைச் சுத்தி மொத்த கதையும் நகரும்.

வசுந்தரா காஷ்யப்புக்கு ரொம்ப முக்கியமான ரோல். எல்லாருக்குமே சமமான முக்கியத்துவமான கேரக்டர்கள் இருக்கும். எல்லாருக்குமே, எல்லார் கூடவுமே காம்பினேஷன் காட்சிகளும் இருக்கு. சதீஷ், பழ.கருப்பையா, மாரிமுத்து, சுபிக்‌ஷா கிருஷ்ணன் இவங்களுக்கெல்லாம் கூட முக்கியத்துவமான ரோல். கிரைம் திரில்லர் என்றாலே படத்துக்கு பெரிய பலம் டெக்னீசியன்கள்தான்... யார் யாரெல்லாம் வேலை செய்திருக்காங்க?

ஜலந்தர் வாசன் சினிமாட்டோகிராபி. நைட் லைட்டிங்குக்கு நிறைய மெனக்கெட்டு வேலை செய்திருக்கார். படத்தினுடைய 80% காட்சிகள் இரவுல நடக்கும். மேலும் நாங்கள் ஷூட்டிங் செய்த வேளை ஊரடங்கு நேரம் என்கிறதால ஒருசில காட்சிகள் டே லைட்ல எடுத்து நைட் எஃபெக்ட் கொடுக்க வேண்டியதா இருந்துச்சு. அதெல்லாம் ரொம்ப சூப்பரா வொர்க் பண்ணி கொடுத்தார்.

சான் லோகேஷ், எடிட்டிங். இந்தப் படத்துல ஒரு வித்தியாசமான எடிட்டிங் மெத்தட் முயற்சி செய்திருக்கோம். அதாவது ஒரு காட்சி ஓடிட்டு இருக்கும்போதே அடுத்த காட்சியின் டயலாக், ஓடிக்கிட்டு இருக்கற காட்சி மேலே ஏறி வர்ற மாதிரி எடிட்டிங் இருக்கும். ஆனாலும் காட்சியை உறுத்தாம சுவாரஸ்யமா செய்திருக்கார் சான் லோகேஷ். மியூசிக், சித்துகுமார். மொத்தம் மூணு பாடல்கள். ஆனா, படத்தில் ஒரு பாட்டுதான் இருக்கும். டிரெய்லரில் பார்த்த மாதிரியே நிறைய லைவ் இன்ஸ்ட்ருமெண்ட், ஆயுதங்களுடைய சப்தங்கள்ன்னு இதையெல்லாம் கூட பேக்ரவுண்ட் ஸ்கோரா முயற்சி செய்திருக்கார் சித்து.

‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்திலே ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒரு பின்னணி தொடர்ந்து வரும். பொதுவாகவே திரில்லர் படங்களில் இந்த ஸ்டைல் பேக்ரவுண்ட் இருக்கும். அதை பிரேக் செய்திருக்கோம். எந்தத் தீமோ, அல்லது டெம்ப்ளேட் பின்னணியோ இல்லாம பேக்ரவுண்ட் மியூசிக் செய்திருக்கார் சித்து. 

ஜி.வி.பிரகாஷுடன் அடுத்த படம் எப்படி வந்திருக்கு?

ஜி.வி.பிரகாஷ் படத்துக்கான ஒர்க் போயிட்டு இருக்கு. ரொம்ப நல்லா வந்திருக்கு. ‘கண்ணை நம்பாதே’ படத்தின் ரிலீஸுக்குப் பிறகு அந்தப் படம் குறித்த அறிவிப்புகள் ரிலீஸ் ஆகும்.
‘கண்ணை நம்பாதே’...?கிரைம் விரும்பிகளுக்கு மட்டுமில்லாம, பொதுவான ஆடியன்ஸுக்கும், நல்ல திரில்லர் படம் பார்த்த எக்ஸ்பிரீயன்ஸை கொடுக்கும். பன்ச் டயலாக், மாஸ் சீன்கள் எல்லாம் இல்லாம எதார்த்தமான ஒரு கிரைம் படமா இருக்கும்.

நம்மைச் சுற்றி நிறைய கொலைகள் நடக்குது. அதை மையமா வெச்சு நாம என்ன கதை சொல்லப் போறோம்ன்னு யோசிச்சு உருவாக்கின படம். சின்ன
கதைதான். ஆனால், திரைக்கதை சுவாரஸ்யமா கொடுக்க முயற்சி செய்திருக்கோம். பார்த்துட்டு சொல்லுங்க.

ஷாலினி நியூட்டன்