மகாபாரத சாகுந்தலை... காளிதாசரின் சாகுந்தலை... சமந்தாவின் சாகுந்தலை...



வேறுபாடுகளும் மிடில் க்ளாஸ் மனப்பான்மையும்

சாகுந்தலம் எனும் ஒரு பெண்ணின் கதைக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. வேதங்கள், புத்த ஜாதகக் கதைகள், புராணங்கள், வாய்வழிக் கதைகள் என்று சிறு குறிப்பாக வந்த இந்தக் கதை மகாபாரதக் காவியத்தில் ஒரு முழுமையான வடிவத்தை அடைந்தது. பிறகு மகாகவி காளிதாசின் கையில் இது ஒரு நாடகமாக மலர்கிறது.
மகாபாரதத்துக்கும் காளிதாசுக்கும் இடைப்பட்ட காலம் சுமார் 10 நூற்றாண்டுகள். மகாபாரதத்தில் சாகுந்தலா எனும் பாத்திரம் ஒரு சுதந்திரமான, விடுதலை உணர்வுடைய பெண்ணாய் இருக்க, காளிதாசரின் நாடகத்தில் சாகுந்தலா அடங்கி ஒடுங்கும் பெண்ணாக பெட்டிப் பாம்பாக சுருண்டுவிடுகிறார் எனச் சொல்கிறார் இந்தியாவின் பிரபல வரலாற்று ஆசிரியரான ரொமிலா தாப்பர்.

தமிழ்ப் பண்பாட்டு உலகிலும் சகுந்தலா என்கிற சாகுந்தலாவின் கதை ஒருகாலத்தில் சக்கைபோடு போட்டிருக்கிறது. உதாரணமாக தமிழ் இணையக் கழகத்தின் இலவச புத்தக தரவிறக்கத்தின் வலைத்தளத்தை பார்வையிட்டால் விதவிதமான சாகுந்தலா டைட்டில்கள். உதாரணத்துக்கு ‘சாகுந்தலா சரித்திரமென்னும் துஷ்யந்த நாடகக் கும்மி’, ‘சாகுந்தலை விலாசம்’, ‘பார்ஸி சாகுந்தலா சரித்திரம்’, ‘காணாமற்போன கணையாழி அல்லது சாகுந்தலா சரித்திரம்’... என பட்டியல் நீள்கிறது. இவற்றில் சில நாடகமாக நிகழ்த்தப்பட்டவை. இது நடந்த காலம் 1920கள்.

இந்த சாகுந்தலா நாடகங்கள்தான் தமிழில் திரைப்படங்களை இயக்கி வந்த பிரபல அமெரிக்க சினிமா டைரக்டரான எல்லிஸ் ஆர்.டங்கனை எம்.எஸ்.சுப்புலட்சுமியை கதாநாயகியாகக் கொண்டு ‘சகுந்தலை’ எனும் படத்தை 1940ல் இயக்கவைத்தது. இந்த ‘சகுந்தலை’ படத்தை யூடியூபில் இப்போதும் பார்க்கலாம். சுமார் 23 பாடல்கள் இதில் உள்ளன. எம்.எஸ்.சுப்புலட்சுமியை ஒரு ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்த்திய படமாகவும் இது இருந்திருக்கிறது.

வழக்கமாக தமிழ் புராணப்படங்கள் பலவும் பிராமண பாஷையில் பேசுவதைப்போலவே இந்தப் படம் இருந்தாலும் இதில் காமெடி டிராக்கில் வரும் என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் துரைசாமியின் நகைச்சுவை பிரபலம். ஒரு பக்கம் பிராமண பாஷை ஓடிக்கொண்டிருக்க என்.எஸ்.கே., துரைசாமி அண்ட் கோ நாகர்கோவில் தமிழில் பேசுவது பலருக்கு ரிலாக்‌சானது.
இதில்தான் துரைசாமி, என்.எஸ்.கே.யைப் பார்த்து ‘உங்க அப்பன் மவனே அடிப்பியா... நான் சிங்கம்டா’ என்று பலமுறை அழுதுபுலம்புவார். இந்த டயலாக் பல தலைமுறைகளாக ஒருகாலத்தில் ரவுண்ட் வந்ததை பலரும் அவதானித்திருக்கலாம்.

தமிழில் ‘சகுந்தலை’ 40களில் வந்தது என்றால் 1943ல் வி.சாந்தாராம் இயக்கத்தில் இந்தியில் வந்தது. கிருஷ்ண பகவான் என்.டி ராமராவ் நடிப்பில்கூட ‘விசுவாமித்திரர்’ எனும் தலைப்பில் இதே கதை சக்கைபோடு போட்டது. இப்போது சமந்தா நடிக்கும் ‘சாகுந்தலம்’ படத்தின் டிரெய்லரில் மகாபாரதத்தில் இருந்து இந்தக் கதை எடுக்கப்படிருப்பதாக டைட்டிலில் வந்தாலும் இது ஆய்வாளர் ரொமிலா தாப்பர் சொல்வதுபோல சாகுந்தலா ஒரு சுதந்திரப் பெண்ணாக இந்தப் படத்தில் சித்தரிக்கப்பட்டிருப்பாளா அல்லது காளிதாசரின் குடும்பக் குத்துவிளக்காக சித்தரிக்கப்பட்டிருப்பாளா என்பது படம் வந்தால்தான் தெரியும்.

உளவியல் மற்றும் வரலாற்று ஆய்வுகளில் பரிச்சயம் உடைய சஃபியிடம் ரொமிலா தாப்பரின் ஆய்வுப் புத்தகம் மற்றும் அதில் ரொமிலா சொல்லும் முடிவுகள் பற்றிக் கேட்டோம்.
‘‘மகாபாரத்தின் சகுந்தலை பாத்திரம் பல்வேறு கதைகளில் இருந்து கோர்க்கப்பட்ட கலவையாக இருப்பதால் அந்தப் பாத்திரம் அந்த பழமையான காலத்துக்கு ஏற்ப ஒரு சுதந்திரமான பெண்ணாக படைக்கப்பட்டிருக்கிறாள்.

உதாரணமாக மகாபாரத சகுந்தலை, துஷ்யந்த ராஜாவை கந்தர்வ மணம் புரிந்துகொள்வாள். ஆனால், நீண்ட இடைவேளைக்குப் பின் ராஜாவை தரிசிக்கும் சகுந்தலையை ஏற்றுக்கொள்ள மன்னன் தயங்குவான். சகுந்தலை, மன்னனின் தர்மத்தையும், ஆட்சியையும் இகழ்ந்து கடுமையாகப் பேசுவதுடன் ‘இனிமேல் நீ ஏற்றுக்கொண்டாலும் உன்னுடன் வாழமாட்டேன். என் வயிற்றில் இருக்கும் குழந்தையை நான்கு உலகத்துக்கும் ஆட்சி செய்யவைப்பேன்’ என்று சபதம் செய்வாள்.

ஆனால், காளிதாசரின் நாடகத்தில் சகுந்தலை ஒரு அப்புராணியாக சித்தரிக்கப்பட்டிருப்பாள். காளிதாஸ் எழுதிய காலகட்டம் இனக்குழு அழிந்து மன்னர் ஆட்சி நடைபெற்ற காலம். காலத்துக்கு ஏற்ப காளிதாஸ், கதையில் மாற்றம் செய்திருப்பதாக ரொமிலா சொல்கிறார். அதிலும் காளிதாஸின் நாடகம் நிகழ்த்தப்பட்டது அரண்மனையிலும் அரசு உயர் மட்டத்தில் இருந்தவர்களுக்காகவும். பிரிட்டிஷ் ஆட்சியில் வில்லியம் ஜோன்ஸ் முயற்சியில் 1789ல் முதன்முறையாக இந்த நாடகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுக்க பிரபலமானது.

ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு 1900களில் சுதந்திரப் போராட்டம் நடைபெற்ற காலத்தில் மீண்டும் காளிதாசரின் நாடகம்தான் தூசு தட்டப்பட்டு இந்தியர்களிடையே பிரபலமானது...’’ என்று சொல்லும் சஃபி, பாரத சாகுந்தலை, காளிதாசரின் சாகுந்தலைக்கான வித்தியாசங்கள் மற்றும் காளிதாசரின் சாகுந்தலை சுதந்திர இந்தியாவில் ஏன் பிரபலமாகியது என்பது பற்றியும் விளக்கினார்.

‘‘பாரதத்தில் கந்தர்வ மணம் என்றால், காளிதாசரில் வளர்ப்பு தந்தையின் சம்மதத்துடன் கந்தர்வ மணம்; பாரதத்தில் மோதிரம், சாபம், பிறகு அது கிடைத்தல்... போன்ற சம்பவங்கள் இல்லை.
பாரதத்தில் சாகுந்தலை தன்னை ஏமாற்றும் மன்னனை எதிர்த்து நியாயம் கேட்கிறாள். ஆனால், இது காளிதாசரில் இல்லை. அதுபோல இன்னும் பல வித்தியாசங்கள் இரண்டுக்கும் இடையில் உண்டு. இந்த மோதிர விஷயம்தான் முக்கியமான வேறுபாடாக  மாறுகிறது.

மோதிரம், சாபம், மோதிரம் காணாமல்போவது, மோதிரம் காணாமல்போவதால் மன்னன் சகுந்தலையை மறப்பது... போன்றவை ஒரு ஆன்மீக தளத்துக்கு மாற்றப்படுகிறது. இதைத்தான் ரொமிலா விமர்சிக்கிறார். பாரதத்தில் ஒரு இயற்கையான பெண்ணாக இருக்கும் சாகுந்தலையும், அவள் ஏமாற்றப்படும்போது நியாயம் கேட்கும் சாகுந்தலையும்; காளிதாசரின் நாடகத்தில் வேறு பரிணாமம் பெறுகிறது. அதாவது மோதிரம் எனும் பொருள் மூலம் விதி, ஆன்மீகமாக மாற்றப்படுகிறது. இதை பிற்போக்குத்தனமாகவே ரொமிலா பார்க்கிறார்.

இதுதான் சுதந்திரப்போராட்டக் காலக்கட்டத்தில் எதிரொலித்தது. அதாவது தேசிய போராட்டத்தின்போது பல்வேறு துறைகளில் சீர்திருத்தத்துக்கான முயற்சிகள் நடந்தன. ஆனாலும் கடைசியில் மிடில் கிளாஸ் ஆண்கள், பெண்கள் வீட்டோடு அடங்கியிருக்க வேண்டியவர்கள்தான் என்ற எண்ணத்தின் பிடியில் சிக்கியிருந்தார்கள். இந்த அடிப்படையில் இந்த நாடகத்தை பலவிதங்களில் தூக்கிப்பிடித்தனர் என்கிறார் ரொமிலா.

ஆனால், தாகூர் போன்றவர்கள் காளிதாசரின் நாடகத்தை ஆன்மீக நலனுக்காக பாராட்டுவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்...’’ என்று சொல்லும் சஃபி, தாகூர் சாகுந்தலையின் இன்னொரு சாயலில் எழுதிய சித்ராங்கதா எனும் ஒரு நாடகமும் விமர்கர்களால் விமர்சிக்கப்பட்டதை சுட்டிக் காட்டுகிறார்.தாகூரின் படைப்பு தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனாலும் ரொமிலா தாப்பரின் ஆய்வு முறையையும் அதன் கருத்துக்களையும் நாம் பாராட்டாமல் இருக்கமுடியாது என்கிறார் சஃபி.

டி.ரஞ்சித்