மு.க.ஸ்டாலின் முதல் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வரை...



இந்த மார்ச் 1ம் தேதி அன்று 70வது வயதில் அடியெடுத்து வைக்கிறார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின். முதல்வராக பதவியேற்றபிறகு அவர் மக்களுடன் கொண்டாட இருக்கும் இரண்டாவது பிறந்தநாள் இது. அவர் கடந்து வந்த பாதை அவ்வளவு எளிதானதல்ல.  1953ம் ஆண்டு கலைஞர் மு.கருணாநிதிக்கும் தயாளு அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். பள்ளிப் படிப்பை சென்னை சேத்துப்பட்டு கிறிஸ்துவக் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் பயின்றார்.

பள்ளி மாணவப் பருவத்திலேயே தன் நண்பர்களுடன் சேர்ந்து ‘கோபாலபுரம் இளைஞர் திமுக’ என்ற அமைப்பை உருவாக்கி அரசியல் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார். இதன்மூலம் அந்தப் பகுதி மக்களுக்கு சமூகப் பணிகள் செய்து வந்தார். இதுவே பின்னாளில் திமுக இளைஞரணியாக உருவெடுத்தது.

1975ம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தியால் கொண்டுவரப்பட்ட நெருக்கடி நிலைப் பிரகடனம்தான் ஸ்டாலினை தீவிர அரசியலில் பங்காற்றச் செய்தது. ஆம். அப்போது நெருக்கடி நிலையை எதிர்த்த அரசியல் தலைவர்கள் அனைவரும் ‘மிசா’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இதில் முரசொலி மாறன், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும், எம்.பி., எம்.எல்.ஏக்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஓராண்டு காலம் சிறையில் இருந்தார் ஸ்டாலின். அப்போது இவருடன் சிறையிலிருந்த முன்னாள் மேயர் சிட்டிபாபு போலீஸாரின் சித்திரவதைக்கு ஆளாகி இறந்துபோனார். அந்நிகழ்வு ஸ்டாலினின் இதயத்தில் முள்ளாகத் தைத்தது; அரசியல் பணியில் அதிதீவிரமாகச் செயல்பட வைத்தது. 1980ல் மதுரை ஜான்சிராணி பூங்காவில் அதிகாரபூர்வமாக திமுக இளைஞரணி தொடங்கப்பட்டது. பிறகு 1982ல் இரண்டாம் ஆண்டு விழாவில் இளைஞரணிக்கு ஏழு பேர் கொண்ட ஒரு அமைப்புக்குழு உருவாக்கப்பட்டது. அந்தக் குழுவில் மு.க.ஸ்டாலினும் ஒருவராக இருந்தார்.

தமிழ்நாடு முழுவதும் பயணித்த அந்த அமைப்புக்குழு ஒவ்வொரு மாவட்டத்திலும் இளைஞரணியைக் கட்டியெழுப்பியது. இதனால் ஸ்டாலினுக்கு இளைஞரணியின் மாநிலச் செயலாளர் பதவி தரப்பட்டது. அவர் தலைமையில்தான் முதல்முதலாக அன்பகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு திமுக இளைஞரணி செயல்படத் தொடங்கியது.இதற்கிடையில் 1984ம் ஆண்டு முதன்முதலாக ஆயிரம் விளக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டார் ஸ்டாலின்.

அந்தத் தேர்தலில் 2 ஆயிரத்து 292 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார். ஆனால், மனம் தளரவில்லை. 1989ம் ஆண்டு நடந்த அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு, 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினரானார்.

பிறகு 1991ல் மீண்டும் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோற்றுப்போனார். அதன்பின்பு 1996, 2001, 2006 ஆகிய மூன்றுமுறை தொடர்ந்து ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற்றார். ஒவ்வொரு முறையும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை ஈட்டினார். மக்களிடையே அவருக்குத் தனி மதிப்பும், மரியாதையும் உருவானது. காரணம், எளிமையாகப் பழகக்கூடியவராக மட்டுமல்ல, எளிதாக அணுகக்கூடியவராகவும் இருந்தார் ஸ்டாலின். அதனால், மக்கள் அவரை சிம்மாசனத்தில் இருத்தி அழகுபார்த்தனர். பிறகு 2011, 2016, 2021 ஆகிய மூன்றுமுறை கொளத்தூர் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார்.

இதற்கிடையே 1996ம் ஆண்டு சென்னை மேயர் தேர்தலில் போட்டியிட்டு மக்களால் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்கிற பெருமையைப் பெற்றார் ஸ்டாலின். இவர் மேயராக இருந்தபோதுதான் ‘சிங்காரச் சென்னை’ திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்வழியே பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போதே சென்னை நகரின் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணவேண்டி ஒன்பது மேம்பாலங்கள் கட்டப்பட்டது இவர் காலத்தில்தான்.  

இதனாலேயே 2001ம் ஆண்டும் மேயர் தேர்தலில் ஸ்டாலினை மக்கள் வெற்றி பெறச் செய்தனர். ஆனால், 2002ம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, ஒரே நபர் இரு அரசு பதவிகளை வகிக்கமுடியாது என்கிற சட்டத்தைக் கொண்டு வந்தார். இதனால் தன்னுடைய மேயர் பதவியை ராஜினாமா செய்தார் ஸ்டாலின். தொடர்ந்து 2003ம் ஆண்டு திமுகவின் துணைப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2008ம் ஆண்டு திமுகவின் பொருளாளராக ஆனார். அடுத்த ஆண்டே தமிழக வரலாற்றில் முதல்முறையாக துணை முதல்வரானார் ஸ்டாலின்.

2006ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினரானபோது உள்ளாட்சித் துறை அமைச்சராக்கி அழகு பார்த்தது திமுக தலைமை. அப்போது பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அறிமுகப்படுத்தினார் ஸ்டாலின்.2017ம் ஆண்டு திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்ட திமுக பொதுக்குழு, ஸ்டாலினை திமுகவின் செயல் தலைவராக்கியது. 2018ல் கலைஞரின் மறைவிற்குப் பிறகு திமுகவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2021ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலினின் தலைமையில் பெரும் வெற்றியை ஈட்டியது திமுக. அப்போது தமிழ்நாடு முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் முத்துவேல்
கருணாநிதி ஸ்டாலின்.  அது கொரோனா இரண்டாம் அலையின் இக்கட்டான காலகட்டம். அந்நேரம், பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மூலம் பலரின் பாராட்டுகளைப் பெற்றார் ஸ்டாலின். பதவியேற்ற அன்றே ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு பலரையும் கவனிக்கச் செய்தார்.

அதில் முக்கியமானது அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் தலா 4000 ரூபாயும், ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பும், பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் செய்யும் உரிமையும், ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ நிகழ்ச்சியில் பெற்ற மனுக்களை கவனிக்க தனித் துறையும், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக் கட்டணம் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் வழங்குவதற்கான அரசாணையும் அடங்கும்.

இதன்பிறகு நிறைய திட்டங்களைக் கொண்டு வந்தார். குறிப்பாக, அரசுப் பள்ளியில் படித்த மாணவ - மாணவிகளுக்கு மருத்துவம் மற்றும் தொழிற்படிப்புகளில் சேர 7.5 சதவீத இடஒதுக்கீடும், அவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசு ஏற்கும் என்பதும், அரசுப் பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர்கல்விக்குச் செல்லும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு அல்லது தொழிற்படிப்பு என இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை அரசு மாதம் 1000 ரூபாய் வழங்கும் என்பதும் எளிய பெற்றோரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.

தவிர, நான் முதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடிக் கல்வி, விவசாயத்திற்கு தனி பட்ஜெட், விவசாயிகளுக்கு இலவச மின்சாரத் திட்டம், தொழில்துறையில் அதிக தொழில்முதலீட்டை ஈர்த்தது, சர்வதேச புத்தகக் கண்காட்சியை நடத்தியது எனப் பல்வேறு சாதனைகள் செய்து ‘திராவிட மாடல் ஆட்சி’யைக் கட்டியெழுப்பி மற்ற மாநிலங்களுக்கு உதாரணமாகத் திகழ்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.  

குங்குமம் டீம்