Must Watch



லாஸ்ட்

‘பிங்க்’ எனும் இந்திப்படத்தின் மூலம் பெரும் புகழடைந்த இயக்குநர் அனிருத்தா ராய் சவுத்ரியின் சமீபத்திய படைப்புதான் ‘லாஸ்ட்’. ‘ஜீ 5’ ல் நேரடியாக வெளியாகியிருக்கிறது இந்த இந்திப்படம். தொழிலதிபரின் மகள் விதி. அவளது பெற்றோர் வேறு இடத்தில் இருக்க, தாத்தாவுடன் வசித்து வருகிறாள். ஆனால், க்ரைம் ரிப்போர்ட்டர்தான் அவளது அடையாளம்.
சமூகத்தில் நடக்கும் குற்றச் செயல்களுக்குப் பின்னணியில் இருக்கும் உண்மையை வெளியில் கொண்டு வர உயிரைப் பணயம் வைத்து வேலை செய்கிறாள். யாருக்காகவும், எதற்காகவும் அவள் சமாதானம் ஆவதில்லை.

இந்நிலையில் போராளியும், நாடகக் கலைஞனுமான இஷான் பார்தி காணாமல் போகிறார். அவர் மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்துவிட்டதாக ஒரு புரளி வேறு கிளம்புகிறது. இஷான் கொல்லப்பட்டாரா... கடத்தப்பட்டாரா... இல்லை வேறு ஏதாவது நடந்ததா... என்பதைக் கண்டறிய களத்தில் குதிக்கிறாள் விதி. இஷானின் தேடலின்போது அவள் சந்திக்கும் ஆபத்துகளும், அந்த ஆபத்துகளை விதி எப்படி எதிர்கொள்கிறாள் என்பதுமே திரைக்கதை. சமகாலத்தின் முக்கிய அரசியல் படமாக மிளிர்கிறது ‘லாஸ்ட்’. விதியாக பொருந்திப்போகிறார் யாமி கௌதம்.

அன்லாக்டு

‘நெட்பிளிக்ஸின்’ டாப் டிரெண்டிங் பட்டியலில் இருக்கும் கொரியன் படம் ‘அன்லாக்டு’.எந்நேரமும் ஸ்மார்ட்போனையே பார்த்துக் கொண்டிருக்கும் இளம் பெண் நமி. ஒரு நாள் பேருந்தில் வரும்போது அசந்து தூங்கி விடுகிறாள். அவள் இறங்கும் இடம் வருகிறது. அவசரமாக இறங்கும்போது போனை பேருந்திலேயே தவறவிட்டுவிடுகிறாள்.

அடுத்த நாள் வீட்டில் கண் விழிக்கும்போதுதான் போனை தவறவிட்ட விஷயமே நமிக்குத் தெரிய வருகிறது. நமியின் போன் யியோங் என்பவன் கைக்குக் கிடைக்கிறது. அவன் போனை நமிக்குத் திருப்பிக் கொடுக்கிறான். யியோங் மீது நமிக்கு பெரிய மரியாதை வருகிறது. ஆனால், நமியின் போனை ஹேக் செய்து அவளை கண்காணித்து வருகிறான் யியோங். அவன் ஒரு சீரியல் கில்லர். யியோங்கிடம் வசமாக மாட்டிக்கொண்ட நமி எப்படி தப்பிக்கிறாள் என்பதே திரில்லிங் திரைக்கதை.

திரில்லிங் படப் பிரியர்களுக்கு செம விருந்து வைத்திருக்கிறது இந்தப் படம். அத்துடன் ஸ்மார்ட் போன் பயன்பாட்டின் மீதே ஒருவித ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது ‘அன்லாக்டு’.
இந்தப் படத்தின் இயக்குநர் தே ஜுன் கிம்.

மாளிகப்புரம்

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வசூலை அள்ளிய மலையாளப் படம் ‘மாளிகப்புரம்’. ‘ஹாட் ஸ்டாரி’ல் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது. சபரிமலைக்குச் செல்வதற்காக மாலை போட்ட ஆண்களை சாமி என்றும், பெண்களை ‘மாளிகப்புரம்’ என்றும் அழைப்பார்கள். எந்த வயதிலும் ஆண்கள் சபரிமலைக்குச் செல்லலாம். ஆனால், 10 வயதுக்குள் அல்லது 50 வயதுக்கு மேலான பெண்களால் மட்டுமே சபரிமலைக்குச் செல்ல அனுமதியுண்டு.

இந்நிலையில் எட்டு வயதான கல்லுவுக்கு ஐயப்பன் என்றால் உயிர். சபரிமலைக்குச் செல்லவேண்டும் என்பதுதான் கல்லுவின் லட்சியம், கனவு எல்லாமே. சபரிமலை செல்வதற்காக அப்பாவுடன் சேர்ந்து மாலை போடுகிறாள் கல்லு. அவளுடைய அப்பாவுக்கு கடன் பிரச்னை இருக்கிறது. கடன் கொடுத்தவன் கல்லுவின் கண் முன்னாடியே அப்பாவை அடித்துவிடுகிறான். மகள் முன் அடிபட்ட அவமானம் தாங்காமல் அப்பா தற்கொலை செய்துகொள்கிறார். அவளுடைய வீடு ஜப்தி செய்யப்படுகிறது.

இவ்வளவு துயரச் சம்பவங்களுக்குப் பிறகு கல்லு எப்படி தனது கனவை நிறைவேற்றிக் கொள்கிறாள் என்பதே திரைக்கதை. குடும்பத்துடன் கண்டுகளிக்க அழகான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் விஷ்ணு சசி சங்கர்.

டாப் கன்: மேவரிக்

மு ப்பத்து ஆறு வருடங்களுக்கு முன்பு வெளியாகி டாம் குரூஸின் புகழை உலகமெங்கும் பரப்பிய ஆங்கிலப்படம்’ டாப் கன்’.  இதன் அடுத்த பாகம்தான் ‘டாப் கன் : மேவரிக்’. இந்த வருடத்துக்கான 6 ஆஸ்கர் விருதுகளுக்கான இறுதிப்பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது. இப்போது ‘அமேசான் ப்ரைமி’ல் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது.  மிகச்சிறந்த விமானி கேப்டன் மேவரிக் மிச்செல். மற்றவர்களுக்கு விமானம் இயக்க கற்றுக்கொடுப்பதில் வல்லவர்.

நிறைய திறமைகள் இருந்தும் முப்பது வருடங்களுக்கு மேல் கண்டுகொள்ளப்படாத ஒரு மனிதராகவே இருக்கிறார். அவருக்கு புதிதாக ஒரு பணி தரப்படுகிறது. அதில் தன்னை ஒரு சிறந்த விமானியாக நிரூபிக்க வாய்ப்பும் இருக்கிறது. கேப்டன் மேவரிக் சாதித்தாரா என்பதே ஆக்‌ஷன் திரைக்கதை. மேவரிக் மிச்செல்லாக ஆக்‌ஷனில் அனல் பறக்க விட்டிருக்கிறார் டாம் குரூஸ். படத்தின் இயக்குநர் ஜோசப் கோஸின்ஸ்கி.

தொகுப்பு: த.சக்திவேல்