பறக்கும் ஹோட்டல்!



ஹோட்டல்களை தரையில் பார்த்திருக்கிறோம், தண்ணீரில் பார்த்திருக்கிறோம், சொகுசு கப்பலில் கூட பார்த்திருக்கிறோம்.ஆனால், வானில் பறந்து பார்த்ததுண்டா? அப்படி பறக்கும் ஹோட்டலைத்தான் இப்போது உருவாக்கி வருகிறார்கள். இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.
ஆனால், மிகமிக விரைவில் செயல்படத் தொடங்கும் என்கிறார்கள்.இந்த பறக்கும் ஹோட்டல் அணுசக்தியால் இயக்கப்படும். பைலட்டும் ஆர்டிஃபிஷியல் இன்டலிஜென்ட்தான். அதாவது AI-பைலட். இந்த ஸ்கை குரூஸ் பல நாட்கள் அல்லது மாதங்கள் கூட வானில் பறக்குமாம்.

இந்த பறக்கும் ஹோட்டல் 20 அணுக்கரு இணைவு இயந்திரங்களால் இயக்கப்படும். பயணிகள் அந்தந்த இடங்களிலிருந்து ஏற்றி இறக்கப்படுவார்கள். ஸ்கை க்ரூஸ் காற்றில் இருக்கும்போது பழுதுபார்க்கலாம்... பராமரிப்பு வேலைகளையும் மேற்கொள்ளலாம் என்கிறார்கள் இதன் வடிவமைப்பாளர்கள்.சுமார் 5000 பேர்களை ஏற்றிக்கொண்டு பல ஆண்டுகள் இந்த விமானத்தில் பறக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு.
ஒரு நீண்ட நாள் வெகேஷனுக்கு இது சிறந்த அனுபவமாக இருக்கக் கூடும் என்பதால் பல நிறுவனங்கள் இதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

பயணிகள் கப்பலில் இருக்கும் ஆடம்பர நட்சத்திர ஹோட்டல் போல இந்த பறக்கும் ஹோட்டலிலும் அனைத்துவிதமான வசதிகளும் இருக்கின்றன.

பொழுதுபோக்குத் தளம், ஒரு ஷாப்பிங் மால், உணவகம், பார், விளையாட்டு மைதானம், சினிமா, திருமண மண்டபம், நீச்சல் குளங்கள், மீட்டிங் ஹால்... என பட்டியல் நீள்கிறது.
இந்த பறக்கும் விமானம் குறித்த அனிமேஷன் வீடியோ ஒன்றை ஹஷேம் அல்-கைலி என்பவர் தனது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார்.எதிர்காலத்தில் பயன்படுத்தப்படும் ஹோட்டல் என்ற இந்த ஸ்கை க்ரூஸ் பறக்கும் ஹோட்டலின் விமான வடிவமைப்பு அனிமேஷனை டோனி ஹோம்ஸ்டன் உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காம்ஸ் பாப்பா