அண்டார்க்டிகாவில் நீச்சல்!
பிப்ரவரி 9, 2023ம் தேதி. அண்டார்க் டிகாவில் உள்ள ஒரு நீர்நிலை. அங்கே நிலவும் 2.2 செல்சியஸ் குளிரால் அந்த நீர்நிலையின் பெரும்பகுதி பனிக்கட்டி போல உறைந்திருந்தது. ஆனாலும் நீச்சல் அடிப்பதற்கான நீரோட்டமும் இருந்தது.
இதில் 2.5 கிலோ மீட்டர் தூரம் நீச்சல் அடித்து கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார் பார்பரா ஹெர்னான்டெஸ். குளிரைத் தாங்குவதற்கான எந்த உடையும் அணியாமல், வெறுமனே நீச்சல் உடையில் இந்தச் சாதனையைச் செய்திருக்கிறார் பார்பரா என்பதுதான் இதில் ஹைலைட். இப்படியான சாதனையை ஒருவர் செய்வது உலகில் இதுவே முதல்முறை. சிலி நாட்டைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனையான பார்பராவிற்கு வயது 37. அண்டார்க்டிகாவில் நீச்சல் அடிப்பதற்காக மூன்று வருடங்களுக்கு மேலாக பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே அங்கே நீச்சல் அடித்திருக்கிறார் பார்பரா. சமூக வலைத்தளங்களில் பார்பராவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
த.சக்திவேல்
|