புயலில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணி!



எதிர்பார்த்தது போலவே இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழு பொறுப்பில் இருந்து சேதன் சர்மா ராஜினாமா செய்திருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணிக்குள், வீரர்களுக்குள் இருந்த ரகசியங்களை தனியார் தொலைக்காட்சியின் ரகசிய கேமிராவில் அவர் உளறிக் கொட்டியதுதான் இதற்குக் காரணம்.
உண்மையில் பந்துவீச்சாளராக இருந்த காலத்திலும் சரி, தேர்வுக்குழுவின் தலைவராக இருந்த காலத்திலும் சரி, ஒரு வில்லனாகத்தான் சேதன் சர்மா பார்க்கப்பட்டார்.

இத்தனைக்கும் 1987ம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஹாட்ரிக் சாதனை படைத்தவர் சேதன் சர்மா. இருந்தாலும், கபில்தேவ், ஸ்ரீநாத், ஜாஹிர் கான், பும்ரா போன்ற பந்துவீச்சாளர்கள் மீது இருந்த நம்பிக்கையை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இவர் மீது வைக்கவில்லை.

1986ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் மோதிய ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டன. அன்றைய காலகட்டத்தில் இது கொஞ்சம்கூட சாத்தியமில்லாத விஷயம். சேதன் சர்மாவிடம் சென்ற கேப்டன் கபில்தேவ், யார்க்கர் பந்தை வீசுமாறு ஆலோசனை கூறினார். காலுக்கு அருகில் பிட்ச் ஆகும் யார்க்கர் பந்தை வீசினால் பேட்ஸ்மேனால் சுழற்றி அடிக்க முடியாது என்பதே அதற்குக் காரணம்.

ஆனால், அந்த யோசனையை சேதன் சர்மா ஏற்கவில்லை. யார்க்கருக்கு பதில் தன் இஷ்டப்படி பவுன்ஸர் பந்தை வீசினார். மியான்தத் அதைச் சுழற்றி அடிக்க, பந்து சிக்சருக்கு
பறந்தது. பாகிஸ்தான் கோப்பையை வென்றது.

அந்த சம்பவத்துக்குப் பிறகு இந்திய ரசிகர்கள் சேதன் சர்மாவை ஒரு வில்லனாகவே பார்க்கத் தொடங்கினார்கள். என்றாலும் கேப்டன் கபில்தேவின் செல்லப் பிள்ளையாக சேதன் சர்மா இருந்ததால், அவர் தயவில் சில காலம் அவரது கிரிக்கெட் வாழ்க்கை ஓடியது. ஆனால், ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத், மனோஜ் பிரபாகர் போன்ற பந்துவீச்சாளர்கள் வந்தபிறகு காணாமல் போனார்.

பின்னர் திடீரென்று சில வருடங்களுக்கு முன் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவரானார். அப்போதும் அவர் மீது விமர்சனங்கள் குவிந்தன. குறிப்பாக டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்லாததற்கு அவரது அணித் தேர்வும் ஒரு காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். என்றாலும் ‘யார் சிபாரிசு காரணமாகவோ’ மீண்டும் அவரே தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்த சூழலில்தான் தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் சேதன் சர்மா சிக்கினார். கங்குலிக்கும், விராட் கோலிக்கும் மோதல், இந்திய வீரர்கள் சிலர் போட்டிகளுக்கு முன் ஊசி போட்டுக் கொள்கிறார்கள், இந்திய கிரிக்கெட் அணியில் கோஷ்டி மோதல்கள் உண்டு... என பல விஷயங்களை இதில் அடுக்கினார்.

சேதன் சர்மாவின் இந்த உளறல், இந்திய கிரிக்கெட் அணியின் நம்பகத்தன்மையை உலகளவில் கேள்விக்குறியாக்கியது. இப்போது சேதன் சர்மா கூறிய விஷயங்களை முழுவதுமாக பிசிசிஐ அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.

சேதன் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து பிசிசிஐ யோசித்துக்கொண்டு இருக்கும்போதே, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் ஆட வீரர்களை தேர்ந்தெடுக்க தேர்வுக்குழு கூடவேண்டிய நிலையில் தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் சேதன் சர்மா. சேதன் சர்மா ராஜினாமா செய்தாலும், அவரை பிசிசிஐ சும்மா விட்டுவிடுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

ஜான்சி