நாடுவிட்டு நாடு சென்று மருத்துவ உதவிகள் செய்யும் இளம் பெண்!



‘‘கடந்த 2011ம் ஆண்டுதான் தெற்கு சூடான் அங்கீகரிக்கப்பட்ட நாடானது. இந்த பத்து ஆண்டுகள்ல அங்க பெரிசா வளர்ச்சியில்ல. மக்கள் பலரும் உடல் நலிந்து, ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் இருப்பதைப் பார்க்கிறப்ப ரொம்ப வருத்தமாக இருக்கு.
இப்ப எங்க குழு அவங்களுக்கு மருத்துவ உதவிகள் செய்திட்டு வருது. இதுல நான் மனஆரோக்கியத்தை மேம்படுத்தும் பணியை செய்றேன். மனம் நன்றாக இருந்தால் வாழ்க்கை சிறப்பானதாக மாறும் இல்லையா?’’ வெகு இயல்பாகப் பேசுகிறார் செந்தூரி.

31 வயதே நிரம்பிய ஈழத்தமிழ்ப் பெண் இவர். மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்கிற நல்லெண்ணத்துடன் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றில் இணைந்தவர், அங்கிருந்து ஒவ்வொரு நாடாகச் சென்று மருத்துவப் பணிகள் செய்துவருகிறார்.

கடந்த ஆண்டு பங்களாதேஷில் பணி செய்தவர், இந்த ஆண்டு தெற்கு சூடான் மக்களோடு உறவாடி வருகிறார். ஆண்டுகள் இரண்டுதான் என்றாலும்கூட அனுபவங்கள் நிறைய வைத்திருப்பவர். 
‘‘என் பூர்வீகம் இலங்கை என்றாலும் நான் பிறந்து வளர்ந்த தெல்லாம் கனடாவுலதான். சைக்காலஜியில் மாஸ்டர் முடிச்சிருக்கேன். எனக்கு சின்ன வயசுல இருந்தே மனம் சார்ந்து படிக்கணும்னு ஆசை.

ஏன்னா, நாம் எப்படி இருக்கிறோம் என்பதை மனம்தான் தீர்மானிக்குது. நம்மை நமக்கே புரியணும்னா முதலில் மனதை புரிஞ்சுக்கணும். அதுக்காகவே சைக்காலஜி எடுத்து படிச்சேன். பிறகு, படிப்பு முடிச்சதுமே கனடாவுல இருந்து செயல்படுகிற ‘டாக்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ்’ என்கிற அரசு சாரா நிறுவனத்துல வேலைக்கு சேர்ந்துட்டேன். இதுக்கு எல்லைகள் இல்லாத மருத்துவர்கள்னு பெயர்.

அதாவது போர்ப் பகுதிகள், இயற்கைப் பேரழிவுகள் மற்றும் தொற்றுநோய் உள்ள இடங்களில் எங்கள் மருத்துவக் குழுக்கள் சென்று பணிகள் செய்யும்.

1971ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த தன்னார்வ நிறுவனம் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் 40,000 ஊழியர்களைக் கொண்டு செயல்படும் உலகளாவிய இயக்கம். இதற்கு எல்லைகளே கிடையாது. அதனாலயே எல்லைகள் இல்லாத மருத்துவர்கள்ங்கிற பெயருடன் செயல்படுறாங்க.

நான் முதல்ல பங்களாதேஷ்ல மனநல செயல்பாட்டு மேலாளராகப் பணிக்கு அமர்த்தப்பட்டேன். அங்க ஒன்பது மாதங்கள் வேலை செய்தேன். இதில் என்னுடைய பணி ஹெச்ஐவி, டி.பி, ஊட்டச்சத்து குறைபாடு, பாலியல் வன்முறை மற்றும் நோய்த்தாக்குதல் உள்ள பகுதிகள்ல மக்கள் அதிக மனஅழுத்தத்துடன் பதட்டத்தில் இருப்பாங்க. அவங்களுக்கு மனஆரோக்கியம் சம்பந்தமாக மருத்துவ உதவிகள் அளித்து இயல்பு நிலைக்குக் கொண்டு வரணும். அவங்க வளர்ச்சிக்கு வழிகாட்டணும்...’’ என்கிறவரிடம், பங்களாதேஷ் அனுபவங்கள் எப்படி இருந்தது என்றோம்.   

‘‘நான் மனநல செயல்பாட்டு மேலாளர் என்கிறதால டாக்காவுல இருந்துதான் வேலை செய்தேன். என் குழு பங்களாதேஷ் கிழக்கு பக்கமாக உள்ள மக்களுக்காக வேலை செய்தது. எங்களுக்கு மொழிகள் தெரியாததால உள்ளூர் குழுவுடன் இணைந்தே பணிகள் செய்வோம். அந்தக் குழுவிற்கு, எப்படியான கவுன்சிலிங் தரணும்... என்ன விஷயங்கள் பேசணும்னு நான் முதல்லயே சொல்லி தயார்படுத்திடுவேன்.

அங்க ரோஹிங்கியா அகதிகள் முகாமை நான் பார்வையிட்டேன். அது ஒரு பெரிய அகதிகள் முகாம். அவங்களுக்கு வேலைகள் எதுவும் கிடையாது. கிட்டத்தட்ட சிறையில் இருக்கிற மாதிரிதான் அங்க இருந்தாங்க. அவங்க மனதளவில் ரொம்ப பாதிச்சிருந்தாங்க. குறிப்பாக பெண்களும் குழந்தைகளும் சொல்லமுடியாத துயரத்தில் வாழ்ந்திட்டு இருப்பதை பார்த்தேன். அவர்களுடன் பேசினேன். அவங்களுக்கு சில ஆலோசனைகள் மட்டும் சொன்னேன். அங்க எங்களப்போல இன்னொரு குழு வேலை செய்திட்டு இருந்தாங்க.

அப்புறம், பங்களாதேஷ்ல குழந்தைத் தொழிலாளர்கள் அதிகம். எட்டு வயதில்கூட குழந்தைத் தொழிலாளர்கள் இருந்தாங்க. அவங்ககிட்ட பேசினபோது ரொம்ப சுரண்டப்படுறதை உணரமுடிஞ்சது. 16 மணி நேரம் வேலை செய்து குறைவான கூலி வாங்கினதைக் கேட்டபோது சிரமமாக இருந்தது. இதுல சாப்பாடும் தரமாட்டாங்களாம்.

இந்தக் குழந்தைகள் ரொம்ப பாதிக்கப்பட்டிருந்தாங்க. குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலும், பெண்கள் மீதான தாக்குதலும் அங்க நிறைய இருந்தது. குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி, அபார்ஷனுக்கு வந்து நிற்பதை பார்க்கிறபோது வேதனையாக இருந்தது. இவங்களுக்கு மருத்துவ உதவிகள் செய்தோம். கவுன்சிலிங் கொடுத்தோம். அவங்க நிலைமைகள் மாற விழிப்புணர்வு செய்தோம்...’’ என்கிறவர், இடைவெளிவிட்டு தொடர்ந்தார்.  

‘‘அப்புறம், இந்த ஆண்டு தெற்கு சூடான் வந்திருக்கேன். இங்குள்ள மக்களுக்கும் சரியான சாப்பாடு இல்ல. ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருப்பதைப் பார்க்கிறோம். ஒரு குழந்தை அம்மாவின் தாய்ப்பாலை குடிக்க முடியாமல் தவிக்குது. அந்தளவுக்குத்தான் அந்த அம்மாவின் உடல்நிலை இருந்தது. இங்க ஆஸ்பத்திரி வசதிகளும் இல்ல.

மக்களுக்கு தடுப்பூசி பற்றின விழிப்புணர்வு எதுவும் கிடையாது. இப்ப இவங்களுக்கு நிறைய விழிப்புணர்வு கொடுத்திட்டு வர்றோம்...’’ என வருத்தமாகச் சொல்கிறவர், ‘‘ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனமாக எங்களாலான உதவிகள் செய்றோம். ஆனா, உண்மையில் அந்த மக்களின் நிலைமை மாறணும்னா அதற்கு அந்தந்த நாட்டு அரசுகள்தான் கருணையுடன் உதவிகள் செய்யணும்...’’ என்கிறார்.   

பேராச்சி கண்ணன்