53 ஆண்டுகள் கழித்து +2வில் பாஸான 70 வயது இளம்பெண்!



கடந்த வாரம் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் கோவையைச் சேர்ந்த 70 வயது மூதாட்டியும் பிளஸ் 2 தேர்வெழுதி வெற்றி பெற்றிருப்பது பலரையும் திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது. படிப்பிற்கு வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்துள்ளார் இந்த மூதாட்டி. அவர் பெயர் ராணி. கோவை கலிக்க
நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர்.

கடந்த 1972ம் ஆண்டு எஸ்எஸ்எல்சியில் தேர்ச்சிபெற்ற இவர், 53 ஆண்டுகள் கழித்து இப்போது பிளஸ் 2வில் அதுவும் முதல் முயற்சியிலே 346 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.

வெற்றிக் களிப்பில் நண்பர்களோடு கொண்டாடிக் கொண்டிருந்த மூதாட்டி ராணியை வழி மறித்து பேசத் தொடங்கினோம். 
‘‘எனக்குச் சொந்த ஊர் தேனி பக்கம் போடி. மிளகும், ஏலக்காயும் மணம் வீசும் அழகிய கிராமம். பிறந்தது, வளர்ந்ததெல்லாம் அங்கேதான். 1972ல் எஸ்எஸ்எல்சி படிப்பு முடித்தேன். அந்தக் காலத்தில் 11ம் வகுப்பு வரை பள்ளிக் கல்வி இருந்தது. அப்போது பிளஸ் 2 கிடையாது.

மேற்படிப்பு படிக்க எங்கள் ஊரில் வசதியில்லை. கல்லூரி செல்வதற்கு வெளியூர் போக வேண்டும் என்பதால், படிக்க வேண்டும் என்ற ஆசை பள்ளிக் கல்வியுடனே நின்றுவிட்டது. இதன்பின், எனது அண்ணனுக்கு கோவையில் வேலை கிடைத்ததால் குடும்பத்துடன் இடம் பெயர்ந்தோம். கோவைக்கு வரும்போது எனக்கு 22 வயது. 

கோவையில் சில காலமும் எனது கணவரின் வேலை மாற்றத்தால் சென்னையில் 40 ஆண்டுகளுமாக இருக்க நேர்ந்தது. எனக்கு ஒரு மகன், ஒரு மகள். இருவரையும் சென்னையிலேயே என்ஜினியரிங் வரை படிக்க வைத்தேன். தற்போது, எனது மகன் அமெரிக்காவிலும், மகள் ஹைதராபாத்திலும் வேலை செய்கிறார்கள். மூன்று பேரக்குழந்தைகள் இருக்கிறார்கள்.

நான் சென்னையில் இருந்து மீண்டும் கோவை திரும்பினேன். எனது உறவினர்கள் அனைவரும் இங்கே இருப்பதால் நானும் கோவையிலேயே தங்கிவிட்டேன். எனது கணவர் இறந்தபிறகு வீட்டில் எந்த வேலையும் இல்லாமல் சும்மா இருப்பது போல் தோன்றியது. அந்தச் சமயத்தில் எனக்கு யோகா, சித்தா, வர்மம் போன்றவற்றின் மீது ஆர்வம் வந்தது. 

எல்லாவற்றையுமே முறைப்படி கற்றுக்கொள்ள வேண்டுமென நினைத்து, தற்போது அனைத்திலுமே ஓரளவு தேர்ச்சி பெற்றிருக்கிறேன்.இந்நிலையில் யோகா, சித்தா சார்ந்த வகுப்புகள் எடுக்க வேண்டும் என நினைத்தேன். இதனால் அந்தத் துறையில் பட்டம் வாங்க முடிவெடுத்தேன். அதேநேரம் சித்தா படிக்க கல்லூரி செல்ல வேண்டும் என்ற ஆசையும் வந்தது. ஆனால், கல்லூரி செல்ல வேண்டுமென்றால் பிளஸ் 2 சான்றிதழ் தேவை. என்னிடம் இருப்பதோ எஸ்எஸ்எல்சி சான்றிதழ்தான்.

அதுவும் அந்தக்காலத்தில் படித்து வாங்கிய சான்றிதழ். அதனால், தற்போது பிளஸ் 2 சான்றிதழ் வாங்குவதற்கு முறைப்படி படித்து தேர்ச்சி பெற்று சான்றிதழ் வாங்கலாம் என முடிவெடுத்தேன்.
முதலில் 2024ல் பிளஸ் 1 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றேன். இப்போது 2025ல் பிளஸ் 2 தேர்வெழுதி தேர்ச்சி பெற்றிருக்கிறேன்...’’ என்கிறவர், நிதானமாகத் தொடர்ந்தார்.

‘‘பிளஸ் 2 தேர்வு எழுதுவதற்குப் பள்ளி சென்றுதான் படிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு ஏதுமில்லை என்பது என்னைப்போல பலருக்கும் மகிழ்ச்சியான விஷயம். அதனால், தனித்தேர்வுகள் மூலம் வீட்டில் இருந்தபடியே தேர்வுக்காக படித்தேன்.

கோவையில் என்னைப்போல், ஆனால், என்னைவிட வயது குறைந்த பலரும், இந்த பிளஸ் 2 தனித்தேர்வு எழுதுகிறார்கள். நாங்கள் அனைவருமே குழுவாகப் படித்தோம். நான் காமர்ஸ் மற்றும் அக்கவுண்டன்சி குரூப் எடுத்து படித்தேன். முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றிருக்கிறேன்.

எனது மூன்று பேரக்குழந்தைகளில் ஒருவர் பத்தாம் வகுப் பும், ஒருவர் ஆறாம் வகுப்பும், ஒருவர் மூன்றாம் வகுப்பும் படிக்கின்றனர். எனது மகன் மற்றும் மகள் இருவருமே ஐடியில் நல்ல வேலையில் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் நான் பிளஸ்2 தேர்வெழுதி தேர்ச்சி பெற்றிருப்பது ரொம்பவே மகிழ்ச்சியாக உள்ளது.

அனைவருமே எனது விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்தார்கள். என்னை என் வழியில் செல்ல அனுமதித்தார்கள். இந்த வயதிலும் நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நானே முடிவெடுக்கிறேன் என்பது மகிழ்ச்சியான ஒன்று அல்லவா! இத்தனை ஆண்டுகள் கழித்து நான் மீண்டும் பள்ளிக்குச் சென்று தேர்வு எழுதும்போது நான் பள்ளிக் குழந்தையாகவே மாறியிருந்தேன். அதுவும் இந்தாண்டு பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களோடு அமர்ந்து 70 வயதில் நானும் தேர்வு எழுதும்போது அது ஒரு தனி சந்தோஷம்.

நினைத்தபடி தேர்வில் தேர்ச்சி அடைந்து விட்டேன். எனக்கு யோகா, சித்தா சார்ந்த பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு விருப்பம். அடுத்து அதற்கான முயற்சியில் இறங்கப் போகிறேன்.
இந்தக்கால பிள்ளைகள் தேர்வுக்கு பயந்தும், தேர்வுத் தோல்வியை எதிர்கொள்ள பயந்தும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். 

அதேபோல், நீட் போன்ற தேர்வுக்கு பயந்தும் நிறைய பேர் உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள். படிப்பு நமக்கு வேண்டும்தான். அது எந்த வயதிலும் நாம் பெற முடியும். தற்கொலை எதற்குமே தீர்வாகாது...’’ நம்பிக்கையோடும் மகிழ்ச்சியோடும் பேசி முடித்தார் மூதாட்டி ராணி.

செய்தி: ச.விவேக்

படங்கள்:கார்த்தீஸ்வரன்