சிந்தூர் சிங்கப் பெண்கள்!



காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். குறிப்பாக புதிதாக திருமணமான தம்பதியரில் கணவர் இறந்து... மனைவி மொத்த வாழ்க்கையும் இழந்து... கணவரின் உடல் அருகில் அமர்ந்திருந்த புகைப்படம் நாட்டையே உலுக்கியது. 
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த 7ம் தேதி அதிகாலை இந்திய ராணுவம், பயங்கரவாதிகள் இருக்கும் 9 இடங்களை கண்டறிந்து கூடாரங்களைஅழித்தது. இதில் 90 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டனர். கணவனை இழந்த பெண்ணின் அடையாளமாக இந்தப் போராட்டத்திற்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என இந்திய ராணுவம் பெயரிட்டது.

இந்தப் பெயருக்கு வலிமை சேர்க்க இந்திய அரசின் சார்பில் இந்தச் செய்தியை தில்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது இந்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி உடன் இணைந்து கர்னல் சோஃபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய இரண்டு வீர மங்கைகள் தெரிவித்தனர்.‘புள்ளன்னு பெத்தா இப்படிப் பெக்கணும்யா’ என்னும் மீம்கள், வீடியோக்கள் தற்போது சோஃபியா மற்றும் வியோமிகாவை மையமாக வைத்து சுற்றிக் கொண்டிருக்கிறது.

யார் இவர்கள்?

கர்னல் சோஃபியா குரேஷி, குஜராத்தின் வடோதராவைச் சேர்ந்தவர். கர்னல் சோஃபியாவை ‘குஜராத்தின் மகள்’ என கொண்டாடி வருகிறார்கள்.ராணுவத்தில் ஏசியான் பிளஸ் படை 18க்கு தலைமை வகிக்கிறார் சோஃபியா. குஜராத்தின் வடோதராவின் மஹாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் 1997ம் வருடம் பயோகெமிஸ்ட்ரியில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

படிப்பை முடித்ததும் தன் அப்பா முகமது குரேஷி மற்றும் தாத்தா வழியில் இந்திய ராணுவ வேலையைத் தேர்ந்தெடுத்தார்.அவருடைய தாத்தாவும் ஒருவகையில் இந்திய ராணுவத்தில் மதபோதகராகவும் பணியாற்றியவர். சோஃபியாவின் கணவர் தஜூதின் பாகேவாடி. இவரும் ராணுவ அதிகாரியாக ஜான்சியில் வேலை  பார்க்கிறார்.

2016ம் ஆண்டில், இந்திய ராணுவ வரலாற்றில், சோஃபியாவின் பங்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு + (ASEAN Plus) நடத்திய ‘Force 18’ எனப்படும் பல நாடுகளுக்கான ராணுவப் பயிற்சியில் இந்திய ராணுவத்தை வழிநடத்திய முதல் பெண்ணாகவும், சுமார் 18 நாடுகள் கலந்து கொண்ட இந்த நிகழ்வின் ஒரே பெண் கமாண்டராகவும் விளங்கினார் சோஃபியா.

சோஃபியா களத்தில் வீரராக மட்டுமல்ல, பல சர்வதேச அமைதிப் பணிகளிலும் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார். ஐநா அமைதி காப்புப் பணிகளில் ஆறு வருடங்கள் சேவை புரிந்தபோது 2006ம் வருடம் காங்கோவுக்கு அனுப்பப்பட்டார்.‘‘எனது குறிக்கோள் அமைதியான தேசம். அதற்காக எந்த எல்லை வரையிலும் செல்வேன்...’’ என்கிறார் சோஃபியா.

அடுத்த வைரல் மங்கை விங் கமாண்டர் வியோமிகா சிங். ‘வானில் வாழ்பவள்’ என்பதுதான் அவர் பெயரின் அர்த்தம்.தனது பெயருக்காகவே வானத்தில் பறக்கவேண்டும் என்பதை கனவாகக் கொண்டு வளர்ந்தவர்.பள்ளி என்சிசியில் ஈடுபாட்டுடன் செயல்பட்ட இவர், தமது குடும்பத்தில் இருந்து ராணுவத்தில் சேர்ந்த முதல் பெண்.கல்லூரியில் பொறியியல் படிப்பைத் தேர்வு செய்தது, அவருக்கு விமானியாவதற்கு உதவியாக அமைந்தது.

2019ம் ஆண்டு விமானப் படையின் ஹெலிகாப்டர் விமானியாக இணைந்த வியோமிகா, வானில் 2,500க்கும் அதிகமான மணி நேரம் பறந்து சாதனை படைத்துள்ளார்.ஜம்மு - காஷ்மீர் தொடங்கி இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள சவாலான நிலப்பரப்புகளில் ஹெலிகாப்டர்களை திறம்பட இயக்கிய பெருமைக்குரியவர் இவர்.

2020ம் ஆண்டு அருணாச்சல் பிரதேசத்தில் ஏற்பட்ட பனிப்பொழிவு மற்றும் வெள்ள காலத்தில் மக்களை மீட்கும் பணியில் முக்கிய பங்காற்றியவர். இந்தியாவின் உயர் ரக போர் விமானங்களான சேத்தக் மற்றும் சீட்டா ஹெலிகாப்டர்களை இயக்கிய முதல் பெண்ணும் இவர்தான்.

அவசர காலத்தில் இலக்கு நோக்கிய தாக்குதல், தாழ்வாக பறந்து உயிர்களைக் காப்பாற்றும் பணி என அனைத்திலும் பயிற்சியும், அனுபவமும் கொண்டவர்.‘‘எங்கள் மகள்கள் நாட்டிற்காக முன்நின்று போராடுவது எங்களுக்கு மிகப்பெரும் பெருமை, வரம்...’’ என்கிறார்கள் இவ்விரு சிங்கப் பெண்களைப் பெற்ற பெற்றோர்கள்.தற்போது ‘ஆபரேஷன் சிந்தூர்’ தலைப்பிற்கு மட்டுமல்ல; சோஃபியா குரேஷி, வியோமிகா சிங் தலைப்பிற்கும் இந்திய சினிமா போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது.

ஷாலினி நியூட்டன்