பிளாஸ்டிக்கை அகற்ற உலகம் சுற்றும் கப்பல்!
இன்று உலகை அச்சுறுத்தும் முக்கியமான சூழலியல் பிரச்னையே, பிளாஸ்டிக் குப்பைகள்தான். ஒவ்வொரு நிமிடமும் சுமார் 20 டன் பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் கலப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. அந்தளவுக்கு மனிதன் தினமும் பிளாஸ்டிக் குப்பைகளை உற்பத்தி செய்துகொண்டே இருக்கிறான்.  ஆனால், பிளாஸ்டிக் குப்பைகளை மறுசுழற்சி செய்யும் விகிதம் மிகவும் குறைவு. அதாவது, உற்பத்தியாவதில் பத்து சதவீதம் கூட மறுசுழற்சி செய்யப்படுவதில்லை. பிளாஸ்டிக் குப்பைகள் எல்லாம் மனிதன் வாழ்கின்ற நிலப்பரப்பிலிருந்து கால்வாய் மற்றும் நதிகள் மூலமாக கடலில் கலக்கின்றன.  கடலில் கலப்பதற்கு முன்பு பிளாஸ்டிக் குப்பைகள் பெரிதாக இருக்கும். கடலில் கலந்தபிறகு சிறு துகள்களாக உடைந்து, மைக்ரோ பிளாஸ்டிக்குகளாக அந்தக் குப்பைகள் மாறிவிடுகின்றன. இந்த மைக்ரோபிளாஸ்டிக்குகள் கடலில் வாழும் மீன் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிப்பதோடு, சூழல் அமைப்புக்கும் கேடு விளைவிக்கின்றன. மட்டுமல்ல, நாம் உண்ணும் உணவு, குடிக்கும் தண்ணீரிலும் கூட மைக்ரோபிளாஸ்டிக்குகள் நுழைந்து, நம் உடல் ஆரோக்கியத்தையும் தொந்தரவு செய்கின்றன.
அத்துடன், கடலில் இருக்கும் பிளாஸ்டிக் குப்பைகளில் ஒரு சதவீதம் மட்டுமே மேற்பரப்பில், நம் கண்களுக்கு அகப்படக்கூடியதாக இருக்கும். மற்ற 99 சதவீத பிளாஸ்டிக் குப்பைகளும் கடலில் மூழ்கி, கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து இருக்கும்.
அப்படி மறைந்திருக்கும் பிளாஸ்டிக் குப்பைகள் தொடர்ந்து சேதத்தை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும். கடலில் உள்ள அனைத்து பிளாஸ்டிக் குப்பைகளையும் அகற்றுவது என்பது மனித குலத்துக்கே பெரும் சவால். அதே நேரத்தில் நிலப்பரப்புகளில் பிளாஸ்டிக் குப்பைகளைப் புதிதாக உருவாக்காமல் இருப்பதும் நம் முன் இருக்கின்ற இன்னொரு பெரும் சவால்.
இந்நிலையில் ‘பிளாஸ்டிக் ஒடிஸி’ என்ற கப்பல் கடல், கடலாகப் பயணம் செய்து பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுவதோடு, அவற்றை மறுசுழற்சி செய்து, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இதனை மிதக்கும் ஆய்வகம் என்றும் அழைக்கின்றனர். கடந்த 2022ம் வருடம் அக்டோபர் ஒன்றாம் தேதியன்று ஃபிரான்ஸில் உள்ள மார்சேல்ஸ் நகரிலிருந்து புறப்பட்டது, பிளாஸ்டிக் ஒடிஸி.
40 மீட்டர் நீளமுள்ள இக்கப்பல், ஆழமான பகுதிகளை ஆய்வு செய்யாது. இந்தக் கப்பலுக்குள் ஆய்வகம், பயிற்சி அறைகள், மறுசுழற்சி செய்யும் அறை, மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகளைக் காட்சிப்படுத்தும் அறை என பத்துவிதமான அறைகள் இருக்கின்றன.
பிளாஸ்டிக் ஆராய்ச்சியாளர்கள், 9 தொழில்முறை மாலுமிகள், தொழிலதிபர்கள், எஞ்சினியர்கள் என்று இருபதுக்கும் மேற்பட்ட ஆளுமைகள் இதில் பயணித்து, பிளாஸ்டிக் குப்பைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
பயணத்தின்போது ஒவ்வொரு நாட்டிலும் சில நாட்கள் நின்று ஆய்வு செய்கிறது, பிளாஸ்டிக் ஒடிஸி. கப்பல் எங்கே முகாமிட்டிருக்கிறதோ, அங்கே உள்ள தொழிலதிபர்களும், உள்ளூர்வாசிகளும், மாணவர்களும் கப்பலுக்கு வந்து பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். இப்படி உலகம் முழுவதும் மூன்றரை வருடங்கள் பயணம் செய்து, பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுவது மற்றும் மலிவான விலையில் அவற்றை எப்படி மறுசுழற்சி செய்வது என்பதைக் கண்டறிந்து, உலகுக்குத் தெரிவிப்பதுதான் பிளாஸ்டிக் ஒடிஸியின் முக்கிய நோக்கம். இந்தப் பயணம் ஆரம்பித்து, இரண்டரை வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இதுவரை லட்சக்கணக்கானவர்களுக்கு பிளாஸ்டிக் குப்பைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது, பிளாஸ்டிக் ஒடிஸி.
ஹாங்காங், தாய்வான், வியட்நாம், செனகல், மலேசியா, பிலிப்பைன்ஸ் உட்பட முப்பது நாடுகளுக்குப் பயணம் செய்துவிட்டு, சமீபத்தில் சென்னை வந்தடைந்தது பிளாஸ்டிக் ஒடிஸி.
இங்கே பாலவாக்கத்தில் உள்ள இந்தியன் விஷன் இன்ஸ்டிடியூட்டுடன் இணைந்து பிளாஸ்டிக் குப்பைகளை மறுசுழற்சி செய்து காட்டியது.
அதாவது, உள்ளூர் மக்களிடமிருந்தே பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரித்து, அதை மறுசுழற்சி செய்து மூக்குக் கண்ணாடியாக மாற்றிக்காட்டினார்கள் பிளாஸ்டிக் ஒடிஸியின் ஆய்வாளர்கள்.
இந்த மறுசுழற்சி செய்முறை புது வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம் என்கின்றனர். மக்கள் பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரித்து, தாங்களே மறுசுழற்சி செய்து, உருவாக்கப்படும் பொருட்களை விற்பனை செய்யலாம் என்று நம்பிக்கையூட்டியிருக்கின்றனர் அந்த ஆய்வாளர்கள்.
மட்டுமல்ல, மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியர்கள் மிகவும் குறைவாக பிளாஸ்டிக்கை நுகர்கின்றனர் என்கின்றனர். ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் சராசரியாக ஒரு வருடத்தில் ஏழு கிலோ பிளாஸ்டிக்கை பயன்படுத்துகிறார். ஃபிரான்ஸ் குடிமகன் வருடத்துக்கு 70 கிலோ பிளாஸ்டிக்கை பயன்படுத்துகிறார்.
இந்தியாவில் பிளாஸ்டிக் குப்பைகள் குறைவாகவே உற்பத்தியாவதைக் கண்டு பிளாஸ்டிக் ஒடிஸி குழுவினர் ஆச்சர்யமடைந்திருக்கின்றனர். முக்கியமாக சில மாதங்களுக்கு முன்பு பிளாஸ்டிக் ஒடிஸி செனகல் நாட்டுக்குச் சென்றிருந்தது.
கப்பலில் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக செனகலின் தொழிலதிபர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பிளாஸ்டிக் ஒடிஸியை மொய்க்க ஆரம்பித்துவிட்டனர். கப்பலில் செய்து காட்டப்பட்ட மறுசுழற்சி சோதனைகள் அங்கிருந்த பலரைக் கவர்ந்திருக்கிறது.
பிளாஸ்டிக் ஒடிஸியின் மூலம் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு, செனகலில் புதிதாக பத்து மறுசுழற்சி நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதை, பிளாஸ்டிக் ஒடிஸியின் பயணத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதுகின்றனர். பிலிப்பைன்ஸில் சிறிய அளவில் மறுசுழற்சி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அவை வருடத்துக்கு 300 டன் பிளாஸ்டிக் குப்பைகளை மறுசுழற்சி செய்து வருகின்றன. பிளாஸ்டிக் ஒடிஸியின் வழிகாட்டலின் படி அங்கே புதிதாக 20 வேலை வாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன. இதுபோக இதுவரையிலான பிளாஸ்டிக் ஒடிஸியின் பயணத்தில் நானூறுக்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் கலந்து கொண்டு, தங்களின் ஐடியாக்களைப் பகிர்ந்திருக்கின்றனர்.
இந்த தொழிலதிபர்களில் சில பேர் விரைவில் புதிதாக மறுசுழற்சி நிறுவனங்களைத் தொடங்கப்போகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.தவிர, இதுவரை ஐந்தாயிரத்துக்கும் மேலான மாணவர்கள் இக்கப்பலைப் பார்வையிட்டிருக்கின்றனர். அவர்களுக்குப் பிளாஸ்டிக் குப்பைகளை மறுசுழற்சி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அடுத்த வருடத்தில் பிளாஸ்டிக் ஒடிஸியின் பயணம் நிறைவடைகிறது.
த.சக்திவேல்
|