மணிரத்னத்தின் 2வது படத்தில் அண்ணன் ஒளிப்பதிவாளர்... இப்ப அவருக்கு நான் கேமராமேன்!



மனம் திறக்கிறார் ஒளி ஓவியர் ரவி கே.சந்திரன்

கமலஹாசன், மணிரத்னம் கூட்டணி நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்துள்ள படம் ‘தக் லைஃப்’. இருவரும் அவரவர் துறைகளில் சாதனையாளர்கள் என்பதால் படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. அப்பா - மகன் கதை என்று சொல்லப்படும் இதில் அப்பாவாக கமலும், மகனாக சிம்புவும் நடித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. 
த்ரிஷா, அபிராமி, சானியா மல்ஹோத்ரா உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தப் படத்துக்கு பாலிவுட்டின் மோஸ்ட் வான்டட் கேமராமேன் ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.மணிரத்னம் இயக்கிய ‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ‘ஆய்த எழுத்து’, ‘யுவா’ போன்ற படங்களில் இணைந்து வேலை செய்தவர்.

மீண்டும் மணிரத்னம் படத்தில் வேலை செய்த அனுபவம், தனது 30 ஆண்டு சினிமா பயணம் எனப் பலதரப்பட்ட அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் ரவி கே.சந்திரன்.
உங்கள் அண்ணன் ராமச்சந்திர பாபு, மணிரத்னம் இயக்கிய ‘பகல் நிலவு’ படத்தின் ஒளிப்பதிவாளர். அவரிடமிருந்துதான் சினிமாவை கற்றுக்கொண்டீர்களா?
எங்கள் வீட்டில் அண்ணன் ராமச்சந்திர பாபு மூத்தவர். நான் ஏழாவதாகப் பிறந்தேன். டபுள் ப்ரொமோஷன் வாங்குமளவுக்கு அண்ணன் நன்றாகப் படிக்கக் கூடியவர். 13 வயசுல ஸ்கூல் ஃபைனல் முடிச்சுட்டு, 17 வயசுல டிகிரி முடிச்சுட்டார்.

புனே ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் 2ம் ஆண்டு படிக்கும்போதே ‘அக்ரஹாரத்தில் கழுதை’ (மலையாளம்) பண்ணினார். அப்போது அவருக்கு 19 வயசு. அதை அப்போது பெரிய சாதனையாகப் பார்த்தார்கள். என்னுடைய வீட்டில் எதற்கு எடுத்தாலும் அண்ணனை ஒப்பிட்டு பேசுவாங்க. அது நல்ல முன் மாதிரி என்ற கோணத்தில் இருக்கும். அப்படி அண்ணன் எல்லாவிதத்திலும் எனக்குப் பெரிய இன்ஸ்பிரேஷனா இருந்தார்.

மதுராந்தகம் என்ற நகர்ப்புறத்தில் பிறந்த ஒருவர் பேர் வாங்கியது ஒரு பக்கம் பெருமையாக இருந்தாலும் இன்னொரு பக்கம் அவர் மாதிரி வரணும் என்ற ஆர்வத்தை தூண்டுச்சு.
எங்கள் ஊருக்குப் பக்கத்து ஊர் உத்திரமேரூர். 
அங்கிருந்துதான் இயக்குநர் ஸ்ரீதர் சார் வந்தார். அவர் அப்பாவும் என்னுடைய அப்பாவும் நண்பர்கள். ஸ்ரீதர் சார் ‘சிவந்த மண்’ படப்பிடிப்புக்காக ஃபாரீன் சென்றபோது அப்பாவுக்கு டிரான்சிஸ்டர் வாங்கி வந்தார். வால்வு ரேடியோ காலத்தில் டிரான்சிஸ்டர் கையில் இருப்பது பெருமையாக இருக்கும்.

அந்த டிரான்சிஸ்டரிலிருந்தும் என்னுடைய சினிமா ஆர்வம் ஆரம்பிச்சது என்றும் சொல்லலாம். வீட்டில் கேமரா, லேப் இருந்ததால் போட்டோ எடுக்கவும் தெரியும். அந்த பேக்ரவுண்ட் ஈசியா சினிமாவை கனெக்ட் பண்ணுச்சு.

 ‘தக் லைஃப்’ வாய்ப்பு எப்படி?

மணிரத்னம் சார் ‘தக் லைஃப்’ ஆரம்பிக்கப் போகிறார்ன்னு தெரிஞ்சதும் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ சிவா சாருக்கு போன் பண்ணி ‘கேமராமேன் ஃபிக்ஸ் பண்ணவில்லை என்றால் நான் ரெடியாக இருக்கிறேன். கமல் சாருடன் ‘மருதநாயகம்’ பண்ணினேன். அதன்பிறகு அவருடன் பண்ணவில்லை. 

கமல் சாரும் இடையே சில படங்களுக்குக் கூப்பிட்டபோது கால்ஷீட் இல்லாததால் மிஸ் பண்ணிட்டேன். ‘தக் லைஃப்’ல இரண்டு ஜாம்பவான்கள் இருக்கிறார்கள். யாரையும் கமிட் பண்ணவில்லைன்னா நான் ஒர்க் பண்ண ரெடி’ என்று நானே கைதூக்கினேன்.
கமலஹாசன், மணிரத்னம் இருவரும் டெக்னிக்கலாக பல நுட்பங்கள் தெரிந்தவர்கள்.

அவர்களை எளிதில் திருப்தி செய்ய முடியாது என்று சொல்வார்களே?

கமல் சாருடன் ‘மருதநாயகம்’ படத்துக்காக ஒரு வருடம் டிராவல் பண்ணியிருக்கிறேன். அவருடன் எனக்கு நல்ல புரிதல் உண்டு. அவர் எதாவது புதுசா எக்யூப்மெண்ட் வாங்கிவந்தால் என்னிடம் காட்டுவார். என்னுடைய உதவியாளர்களுக்கு ‘விருமாண்டி’, ‘விஸ்வரூபம்’ போன்ற படங்கள் கொடுத்தவர். 

ரவிவர்மன், மனுஷ் நந்தன் போன்றவர்களுக்குப் படம் கொடுத்துள்ளார். என்னுடைய டீம் டெக்னிக்கலாக நாலெட்ஜ் உள்ளவர்கள் என்ற எண்ணம் அவருக்கு உண்டு. சமீபத்தில் ஒரு கேமரா வாங்கியிருந்தார். நானும் அதே கேமரா வாங்கியிருந்தேன். இருவரும் அந்த கேமராவைப் பற்றி அதிகம் பேசினோம். சினிமா உபகரணங்கள், புத்தகம் என்று எதைப் பற்றிப் பேசினாலும் அதை அவர் தெரிஞ்சு வெச்சிருப்பார். அவர் தேடலுக்கு முற்றுப்புள்ளியே கிடையாது.

60 வருஷமா சினிமாவில் இருக்கும் அவர் புதுசா டெக்னிக் வந்தால் அதைக் கத்துக்க  ஃப்ளைட் ஏறிப் போகிறவர்.மணி சார் பற்றிச் சொல்வதாக இருந்தால், நான் இதுவரை சஞ்சய் லீலா பன்சாலி, ஷங்கர், முருகதாஸ் என 35 இயக்குநர்களிடம் வேலை செய்துள்ளேன். ஒரு சீனை படிக்கும்போது இந்த மாதிரி ஷாட் வைப்பாங்கன்னு சொல்லிவிட முடியும். ஆனால், மணி சார் வித்தியாசமா ஷாட் வைப்பார். அடுத்து எப்படி எடுக்கப்போகிறோம் என்ற தவிப்பை ஏற்படுத்துவார்.

கதை படிக்கும்போது ஒரு விஷுவல் இருக்கும். ஆனால், அவர் வேறு கோணத்தில் யோசிப்பார். அதுதான் அவர் படம் எப்போதும் வித்தியாசமாக இருக்கக் காரணம். அதுதான் அவர் பலம்.
ஒரு ஷாட் என்று வரும்போது கிரேன், டிராக் போடுவது, சஜஷன் ஷாட் எடுப்பது என்று சில நடைமுறை இருக்கும். அவர் படத்தில் அது இருக்காது.

‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் ‘விடைகொடு...’ பாடலுக்கான சீக்வென்ஸை ஒரு வாரம் எடுப்பார் என்று நினைத்தேன். ஏனெனில், 2000 பேர் இடம் பெறும் காட்சி அது. 6 கேமரா வரவழைச்சு ஒரு நாளில் முடித்துவிட்டார். இந்த பிராசஸ் அவருடைய எல்லா படத்திலும் இருக்கும்.

சூரியன் உதிக்கும் முன் 3 ஷாட் எடுப்பார். அவர் இருக்கும்போது செட் எனர்ஜியா இருக்கும். நான் பார்த்த இளம் மணிரத்னம் அப்போது தொடங்கி இப்போது வரை மாறாமல் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. 

மலையில் இறங்கிப் போவதாக இருந்தாலும் அவர்தான் முதலில் இறங்கிப் போவார். 69 வயதை நெருங்கியுள்ள அவரிடம் அந்தச் சுறுசுறுப்பு மாறவில்லை.

தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழி படங்கள் செய்துள்ளீர்கள். சவால் இருப்பதால் படங்களைச் செய்கிறீர்களா அல்லது இது என்னால் முடியும் என்ற மனநிலையில் படங்களைச் செய்கிறீர்களா?

அப்படி பார்க்க முடியாது. கதை, இயக்குநர் திருப்தியளிக்கும்போது படம் பண்ணுகிறேன். சவாலை முன்வெச்சு படம் செய்ய முடியாது. எல்லாப் படங்களிலும் சவால் இருக்கும். எதிர்பார்க்கும் லைட் இருக்காது. ஆர்ட்டிஸ்ட் கால்ஷீட் குறைவாக இருக்கும். இன்னும் பல பிரச்னைகள் இருக்கும். அதையெல்லாம் சால்வ் பண்ணுவதே முக்கிய வேலையாக இருக்கும்.

‘தக் லைஃப்’ படத்தைப் பொறுத்தவரை கமல், சிம்பு, த்ரிஷா, அபிராமி, நாசர் என எல்லோரும் பிரமாதமான ஆர்ட்டிஸ்ட்ஸ். அவர்களின் பெர்ஃபாமன்ஸ், எக்ஸ்பிரஷன் முக்கியம். லைட்டிங் பண்றேன்னு அதைக் காலி பண்ணிடக் கூடாது. படத்தோட ‘மூடை’ அப்படியே கொண்டு வரணும். மணி சார் வேகமாக எடுப்பவர் என்பதால் திட்டமிடலுடன் இருக்கணும்.
‘தக் லைஃப்’ ஆடியன்ஸுக்கு என்ன மாதிரி அனுபவம் கொடுக்கப் போகிறது?

எந்த படமாக இருந்தாலும் படம் நல்லா வரணும்னு 100 சதவீத முயற்சியுடன் எடுக்கிறோம். காலையில் 4 மணிக்கு எழுந்து வேலை பார்க்கிறோம். மணி சார் காலையில் தினமும் 5 மணிக்கு படப்பிடிப்புக்கு வந்துவிடுவார். 

அவருடைய இரண்டாவது படமான ‘பகல் நிலவு’ படத்தில் என்னுடைய அண்ணன் ஒளிப்பதிவாளர். நான் உதவி ஒளிப்பதிவாளர். அப்போது பார்த்த அதே மணிரத்னத்தை இப்போதும் காம்ப்ரமைஸ் பண்ணாதவராகப் பார்க்கிறேன். தயாரிப்பு தரப்பில் பட்ஜெட் அதிகமாகும் என்று எந்த எக்யூப்மெண்டும் தரமாட்டேன்னு சொன்னதில்லை.

அவருடன்  4 படம் பண்ணியிருக்கிறேன். இந்த எக்யூப்மெண்ட் காஸ்ட்லியா இருக்குன்னு எப்பவுமே சொன்னதில்லை. சரியான டைமில் படம் முடிப்பது, சம்பளம் செட்டில்மென்ட் என எல்லாம் சரியாக இருக்கும். அதனால்தான் அவருடைய கம்பெனி வெற்றிகரமாக இயங்கி வருகிறது. கோவிட் காலகட்டத்தில் ‘பொன்னியின் செல்வன்’ என்ற பிரம்மாண்டமான படம் எடுப்பது அவ்வளவு சுலபம் இல்லை.

மூன்று தசாப்தங்களாக சினிமாவில் இருக்கிறீர்கள். உங்கள் சினிமா அப்ரோச் மாறியுள்ளதா?

மாறாமல் இருந்தால் சினிமாவில் இருக்க முடியாது என்று நினைக்கிறேன். என்னை மாற்றிக்கொண்டதால் பெரிய படங்கள் ஒர்க் பண்ணுகிறேன். மாறாமல் இருந்தால் பின்தங்கி இருப்போம்.

எல்லாத்துக்கும் எக்ஸ்பயரி தேதி உண்டு. அதைத் தள்ளிப்போடுவது பெரிய விஷயம். கிரிக்கெட்ல சச்சின், டோனி, கோலி என அடுத்தடுத்து பல வீரர்கள் வருகிறார்கள். அதுபோல் பல இளம் கேமராமேன்கள் வருகிறார்கள். அவர்களுக்கு இணையாகப் படங்கள் கிடைத்து வேலை செய்கிறோம் என்றால் அது பெரிய விஷயம்.

பரீட்சார்த்த முறையில் அகிலா கிரேன், நவீன லைட்ஸ் எனப் பல புது முயற்சிகள் செய்தவர் நீங்கள். ‘தக் லைஃப்’ படத்துக்காக என்ன புதுமை செய்தீர்கள்?

பல எக்யூப்மெண்ட்டுகளை சில படங்களுக்குக் கொண்டு வருவோம். அந்த மாதிரி ‘தக் லைஃப்’ படத்துக்காக ஸ்பெஷல் லென்ஸ் யூஸ் பண்ணினோம். டீசர் பார்த்திருப்பீங்க. அதில் வித்தியாசமான லென்ஸிங் கமல் சாருக்கு பயன்படுத்தினோம். டீசரில் கமல் சார் குளோஸ்அப் வித்தியாசமாக இருந்திருக்கும். ஸ்பெஷல் லென்ஸில் ஷூட் பண்ணியதால் அதுல வித்தியாசம் பார்க்க முடிஞ்சது. கமல் சார், மணி சார் எல்லோருமே என்ன லென்ஸ் என்று கேட்டார்கள்.

அவர்களுக்கும் அந்தப் புதுமை வியப்பை கொடுத்துச்சு. ஆடியன்ஸும் ரெஸ்பான்ஸ் பண்ணியிருந்தார்கள். டீசர் வந்ததும் 30, 40 கேமராமேன்கள் பல இடங்களிலிருந்து கூப்பிட்டார்கள். எல்லோரும் கேட்ட கேள்வி என்ன லென்ஸ் யூஸ் பண்ணினீங்க என்பதுதான்.

ஹாலிவுட்ல அல்போன்ஸா குரோன் என்ற கிரியேட்டர் இருக்கிறார். டைரக்டராகவும், கேமராமேனாகவும் ஆஸ்கர் விருது வாங்கியவர். அவர் கமல் சாரை சந்திக்க வந்தபோது டீசர் பார்த்துவிட்டு, என்ன லென்ஸ் யூஸ் பண்ணினீங்க என்று கேட்டார். முகத்தில் அடிக்காத மாதிரி தெரிந்தால், வித்தியாசமாக இருந்தால், விஷயம் தெரிந்தவர்கள் அந்தக் கேள்வியைக் கேட்பார்கள். ஆடியன்ஸுக்கு அது தெரியாது. இம்பேக்ட் ஏற்படுத்தினால் அதுவும் ஒரு தாக்கம்.

எஸ்.ராஜா