சொகுசு கார்களின் விலை ஏன் இந்தியாவில் அதிகம்?
இன்று இந்தியாவில் ரேஞ்ச் ரோவர், பிஎம்டபிள்யு, பென்ஸ், ஆடி, லேண்ட் க்ரூஸர், டயோட்டா ஃபார்சூனர் என விதவிதமான சொகுசு கார்கள் வந்துவிட்டன. இந்த சொகுசு கார்களின் விலை ரொம்பவே அதிகம். 
ஆனால், இவற்றின் விலை ஏன் இவ்வளவு அதிகமாக இருக்கிறது என எப்போதாவது யோசித்திருக்கிறோமா? சமீபத்தில் இதற்கான காரணம் குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டு பலருக்கும் ஆச்சரியத்தை உண்டாக்கி இருக்கிறார் இந்திய தொழில்முனைபவரும், ஸ்டார்ட்அப் ஆலோசகருமான சர்தக் அஹுஜா.
அந்த வீடியோவில் SUV எனப்படும் சொகுசு கார்களின் விலை துபாய் மற்றும் அமெரிக்காவை ஒப்பிடுகையில் இந்தியாவில் மிக மிக அதிகம் என்கிறவர், அதுகுறித்து விளக்கமாகப் பேசுகிறார். 
லேண்ட் க்ரூஸ் கார் இந்தியாவில் 2 கோடி ரூபாய் என்றால், துபாயில் அந்தக் காரின் விலை இந்திய மதிப்பில் வெறும் 30 லட்சம் ரூபாய்தான் என்கிறார்.
இது 80 சதவீதம் விலை வித்தியாசம் கொண்டதெனக் குறிப்பிடுகிறார்.இதேபோல் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரின் விலை இந்தியாவில் 2 கோடி ரூபாய். இதே காரின் விலை அமெரிக்காவில் 80 லட்சம் ரூபாய் என்றும், இதனை இந்திய விலையுடன் ஒபீபிடு செய்தால்அங்கே தோராயமாக 60 சதவீதம் மலிவானது எனவும் சொல்கிறார். 
அடுத்து பிஎம்டபிள்யு எக்ஸ்5 காரின் விலை இந்தியாவில் ஒரு கோடி ரூபாய். இதே காரின் விலை அமெரிக்காவில் 65 ஆயிரம் டாலர், அதாவது சுமார் 55 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது 50 சதவீதம் விலை மலிவு என்கிறார் சர்தக் அஹுஜா.
இதுமட்டுமில்லாமல் துபாயில் இந்த விலை இடைவெளி இன்னும் அதிகமாக உள்ளதாகக் குறிப்பிடுகிறார் அவர். அதாவது இந்தியாவில் 50 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் டயோட்டா ஃபார்சூனர் காரின் விலை துபாயில் 35 லட்சம் ரூபாய்தானாம். போலவே, பிஎம்டபிள்யு எக்ஸ்5யின் விலையோ 75 லட்சம் ரூபாய்தான்.
இப்படி அமெரிக்காவிலும், துபாயிலும் விலை குறைவாக விற்கப்படும் சொகுசு கார்கள் இந்தியாவில் மட்டும் விலை ஏன் அதிகம் என்பதற்கு, இங்கே விதிக்கப்படும் வரிகளே காரணம் என்கிறார் சர்தக் அஹுஜா.
இந்தியாவில் சொகுசு கார்கள் மீதான இறக்குமதி வரிகள் 60% முதல் 100% வரை விதிக்கப்படுவதாகவும், இதனுடன் மேலும் ஜிஎஸ்டி வரி 28% சேர்கிறது என்றும், கூடவே இழப்பீட்டு வரியும், மாநில சாலை வரிகளும் இணைவதாகவும் குறிப்பிடும் சர்தக் அஹுஜா, உண்மையில், இந்தியாவில் காரின் ஆன்-ரோடு விலையில் 45% வெறும் வரிகள்தான் என்கிறார். இதனாலேயே இந்தியாவில் சொகுசு கார்களின் விலை துபாய், அமெரிக்காவை ஒப்பிடும்போது அதிகம் என்கிறார். இதற்கு நேர்மாறாக துபாயில் மிகக் குறைந்த இறக்குமதி வரிகள் உள்ளன என்றும், மேலும் காரின் இறுதி விலை என்பது வரிகளைவிட உள்ளூர் தேவை, கப்பல் வழிகள் மற்றும் மொத்தமாக ஆர்டர் செய்தல் போன்ற காரணிகளைப் பொறுத்து அமையும் எனவும் குறிப்பிடுகிறார்.
இதனால் அங்கே வரிகள் குறைவாக இருந்தாலும் வண்டிகளின் மாடல்களுக்கு ஏற்ப விலைகளில் வேறுபாடுகள் இருக்கும் என்கிறார். இருப்பினும் மாருதி சுசூகி, டாடா, ஹூண்டாய் போன்ற பெருமளவிலான பிராண்டுகளை வாங்கும் இந்தியர்கள் இதனால் பாதிக்கப்படுவதில்லை என்கிறார் சர்தக் அஹுஜா. ஏனெனில், இந்த கார்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவதுதான்.
பி.கே.
|