1947 முதல் ஆபரேஷன் சிந்தூர் வரை



இந்தியா, பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் எல்லையில் அவ்வப்போது அரங்கேறிய சிறு சிறு மோதல்களைத் தவிர்த்து, இருநாடுகளும் மூன்று முறை மிகப்பெரிய போர்களை சந்தித்துள்ளன. 
அதிலும் சில நாட்களுக்கு முன் நடந்தேறிய பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் முன் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு பதற்றம் அதிகரித்துள்ளது.இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக் குப் பின் 1947ம் ஆண்டு காஷ்மீருக்காக ஏற்பட்ட போர்தான் இரு நாடுகளுக்கு இடையிலான முதல் போர்.

இந்தப் போர், காஷ்மீரின் உரி, பராமுல்லா மற்றும் பூஞ்ச் ஆகிய இடங்களில் நடந்தன. இப்போது வரை நடைபெற்று வரும் போர்களுக்கு மூலக்காரணமே இந்தப் போர்தான்.

ஜம்மு காஷ்மீரை பாகிஸ்தான் கைப்பற்ற நினைத்த போது, அந்நாட்டின் மகாராஜா ஹரி சிங், இந்தியாவின் உதவியை நாடினார். அதற்குள்ளாக பாகிஸ்தான் அந்த மாகாணத்திற்குள் ஊடுருவி விட்டது.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டு பல வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, ஐநா சபை இதில் குறுக்கிட்டு சமரசம் பேசி பிரச்னையை தீர்த்து வைத்தது.

அதன்பிறகு 1965ம் ஆண்டு போர் வெடித்தது. இந்தப் போர் மொத்தம் 17 நாட்கள் நடைபெற்றன. பாகிஸ்தான் ராணுவத்தினர் காஷ்மீருக்குள் ஊடுருவி பொதுமக்களுடன் சேர்ந்து கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதைக் கண்டு வெகுண்டெழுந்த இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதிக்குள் நுழைந்ததால் போர் வெடித்தது.
 
இந்தப் போரை அப்போதைய சோவியத் ரஷ்யாவும் அமெரிக்காவும் தலையிட்டு தடுத்து நிறுத்தின. அதன்பின்னர் 1966, ஜனவரியில் தாஷ்கண்டில் ஒப்பந்தம் கையொப்பமானது.
அதன்பின் 5 ஆண்டுகள் அமைதியாக இருந்த பாகிஸ்தான் தனது நாட்டினருடனேயே முரண்பட்டு போருக்கான சூழலை உருவாக்கியது. 

அப்போது பாகிஸ்தான் இரு பகுதிகளாக இருந்தன. ஒன்று மேற்கு பாகிஸ்தான்; இன்னொன்று கிழக்கு பாகிஸ்தான். இந்த கிழக்கு பாகிஸ்தான்தான் இன்றைய வங்கதேச நாடு.

அப்போது கிழக்கு பாகிஸ்தானில் இருந்த மக்கள் மேற்கு பாகிஸ்தானியர்களால் தரம் தாழ்த்தி நடத்தப்பட்டனர். 1970ல் நடந்த தேர்தலில், கிழக்கு பாகிஸ்தானின் அவாமி லீக் கட்சி பெரும்பான்மை பெற்றது. 

ஆனாலும் ஜனநாயகத்தை சற்றும் மதிக்காத மேற்கு பாகிஸ்தான் ஆட்சியை ஒப்படைக்க மறுத்தது. இது போருக்கு காரணமாக அமைந்தது.

அங்கு ஏற்பட்ட அசாதாரணமான சூழலால் பலர் இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர். இந்தியா, சுதந்திரம் கேட்ட கிழக்கு பாகிஸ்தான் மக்களுக்கு ஆதரவாக நின்றது.

இதனால், பாகிஸ்தான் இந்தியாவை தாக்க ஆரம்பித்தது. இந்தப் போர் 13 நாட்கள் நடந்தன. பல உயிரிழப்புகளுக்குப் பிறகு இந்தியாவிடம் பாகிஸ்தான் ராணுவம் டாக்காவில் சரணடைந்தது. அதன்பிறகுதான் வங்காளதேசம் என்ற தனி நாடாக உருவானது. அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் வலிமையை இந்தப் போர் பறைசாற்றியது.

அதன்பின் 1986ல் பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறியதால், ‘ஆபரேஷன் பிராஸ்ஸ்டாக்ஸ்’ என்ற தாக்குதலை இந்தியா முன்னெடுத்தது. 1989ல் ஏற்பட்ட காஷ்மீர் கிளர்ச்சியையும் இந்திய ராணுவம் ஒடுக்கியது. அதன்பின்னும் அடங்காத பாகிஸ்தான் 1999ல் கார்கிலில் அத்துமீறியது.  

அப்போது இந்தியா ‘ஆபரேஷன் விஜய்’ நடவடிக்கையை கையில் எடுத்தது. மலைக்காடுகளுக்குள் புகுந்து இந்திய வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதல்களால் தலைதெறிக்க திரும்பி ஓடினர் பாகிஸ்தான் ராணுவத்தினர். இதில் இந்திய ராணுவம் மகத்தான வெற்றியைப் பதிவு செய்தது. 

இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள், 2001ம் ஆண்டு யாரும் எதிர்பாராத நேரத்தில் இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்தினர். இதனால் இருநாடுகளிடையிலான வணிகத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. போர் பதற்றம் ஏற்பட்டது. ஆனால், அமெரிக்கா தலையிட்டு சமரசம் செய்து வைத்தது.

அதன்பிறகு 2008ம் ஆண்டு மும்பையில் ஆத்திரமூட்டும் அத்துமீறலை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அரங்கேற்றினர். கடல்மார்க்கமாக மும்பைக்குள் புகுந்த பயங்கரவாதிகள் நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களை சுட்டுத் தள்ளினர். துப்பாக்கிகளுடன் நுழைந்த தீவிரவாதிகளை சுட்டுத்தள்ளிய இந்திய வீரர்கள் அஜ்மல் கசாப்பை மட்டும் உயிருடன் பிடித்து பின் தூக்கிலிட்டனர்.

அதன்பின் 2013ம் ஆண்டு காஷ்மீரின் மெந்தர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவி, இந்திய ராணுவ வீரரின் தலையை வெட்டியது. இதற்கு இந்தியா பதிலடி நடத்தியதில்
இருதரப்பிலும் 22 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

தொடர்ந்து 2016ம் ஆண்டு காஷ்மீரில் உரி பாதுகாப்பு நிலை மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது. 2019ல் பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகம்மது பயிற்சி முகாமை அழிக்கும் நோக்கில், இந்திய பைட்டர் ஜெட்கள் வான்வழித் தாக்குதலை நடத்தியது.

2019ல் நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. தற்போது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப்பயணிகள் மீது நடத்திய தாக்குதல் இருதரப்பு மோதலை மீண்டும் கொண்டு வந்தது. அதிரடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என களத்தில் இறங்கிய இந்தியா, பாகிஸ்தானை சுதாரிக்க விடாமல் அடித்து துவைத்தது. அரண்ட பாகிஸ்தான், தங்களைக் காப்பாற்றும்படி உலக நாடுகளிடம் கெஞ்சின.

இதனைத் தொடர்ந்து ‘இனி அத்துமீறினால் எவ்வளவு கெஞ்சினாலும் விடமாட்டோம்... புரிந்ததா’ என பாகிஸ்தானுக்கு வார்னிங் கொடுத்திருக்கிறது இந்தியா.பாகிஸ்தான் அடங்கியிருக்குமா என்பது போகப் போகத் தெரியும்.

என்.ஆனந்தி