முனிஷ்காந்த் ஆன ராமதாஸ்!



கோலிவுட்டில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தின் மோஸ்ட் வாண்டட் நடிகராக இருப்பவர் முனிஷ்காந்த். கடந்த பதினைந்து ஆண்டுகளில் எண்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் முனிஷ்.

இருந்தாலும் இயக்குநர் ராம்குமாரின், ‘முண்டாசுப்பட்டி’யே அவரை ரசிகர்களுக்கு அடையாளம் காட்டியது. அதிலிருந்தே ராமதாஸ் என்ற அவரின் இயற்பெயரும் முனிஷ்காந்தாக மாறியது.

தனது தனித்துவமான நகைச்சுவையாலும், முகபாவனைகளாலும் ரசிகர்களைக் கவர்ந்திருக்கும் முனிஷ்காந்த்தை ஒரு பிஸியான ஷூட்டிங் ஷெட்யூலின் நடுவில் சந்தித்தோம்.
‘‘சின்ன வயசுல நிறைய சினிமா பார்ப்பேன். அப்படி படம் பார்க்கிறப்ப மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்வதைப் பார்த்து வந்ததுதான் நடிப்பு ஆசை. சென்னைக்கு வந்து சின்னச் சின்ன வேடங்கள் செய்து இன்னைக்கு ஓரளவுக்கு பேசும்படி வந்திருக்கேன். ரொம்ப சந்தோஷமாக இருக்கு...’’ என உற்சாகமாகச் சிரிக்கும் முனிஷ், தான் கடந்த வந்த பாதையை கொஞ்சம் ரீவைண்ட் செய்தார்.

‘‘எனக்கு சொந்த ஊர் வத்தலகுண்டு பக்கத்துல நிலக்கோட்டை. நாங்க மிடில் கிளாஸ் ஃபேமிலி. அப்பா அங்குள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துல கேசியராக வேலை செய்தார். அம்மா ஹவுஸ்வொய்ப். எனக்கு ஓர் அண்ணன், ஒரு தம்பி. இப்ப அப்பாவும், அம்மாவும் இல்ல. அண்ணன் அப்பாவின் வேலையில் இருக்கார். தம்பி ஆண்டிப்பட்டி காலேஜ் ஒன்றில் பேராசிரியராக வேலை செய்றார். எனக்கு 2018ல்தான் திருமணமாச்சு. என் மனைவி பேர் தேன்மொழி.

நான் முதன்முதலில் ஒரு முக்கிய நடிகராக படம் முழுவதும் வந்தது ‘முண்டாசுப்பட்டி’யில்தான். அந்தப் படத்தின் கேரக்டர் பெயரான முனிஷ்காந்த்தே பின்னாடி சினிமாவுக்கான பெயராகிடுச்சு. அதுக்கு முன்னாடி, ‘முண்டாசுப்பட்டி’யிலும், இன்னும் ரெண்டு மூணு படங்களிலும் ராமதாஸ்னு என் ஒரிஜினல் பெயரே வரும்.அப்புறம், ‘முனிஷ்காந்த்னு உங்க பேர் நல்லா ரீச்சாகி இருக்கு. இதுவே எல்லா படத்திலும் வைங்க’னு ‘முண்டாசுப்பட்டி’ டைரக்டர் ராம்குமார் சார், ‘பசங்க’ பாண்டிராஜ் சார் உள்ளிட்ட இன்னும் சில டைரக்டர்கள் சொன்னாங்க. சரினு வச்சிட்டேன்.

சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி கோயம்புத்தூர், திருப்பூர், மலேசியாவில் வேலை செய்தேன். அப்புறம், சென்னைக்கு வந்து கார் கம்பெனியில் வாஷிங் வேலை பார்த்தேன். சமையல் கேட்டரிங் வேலைக்குப் போனேன். இப்படிதான் வாழ்க்கை போனது. இங்கு எனக்கு தெரிந்த நண்பர்கள் மூலமாக சினிமா நட்பு கிடைச்சு, அவங்க வழியாக சின்னச் சின்ன வேடங்கள்ல நடிச்சேன்...’’ என்ற முனிஷ், ‘முண்டாசுப்பட்டி’யில் வாய்ப்பு கிடைத்தது பற்றி இப்போதும் சிலாகித்தார்.

‘‘‘முண்டாசுப்பட்டி’ படத்தில் நான் செலக்ட் ஆனதே சுவாரஸ்யமானது. முதல்ல ராம்குமார் சார் ‘முண்டாசுப்பட்டி’யை ஷார்ட் ஃபிலிமாக எடுத்தார். அப்பவே அவரைத் தெரியும். அந்த ஷார்ட் ஃபிலிம்ல முனிஷ்காந்த் கேரக்டர்ல திருப்பூர் நாடகக் கலைஞர் தண்டபாணி நடிச்சார். ஆனா, அதுக்கு டப்பிங் பேச அவர் வரல. 

அதனால் டப்பிங் பேச ஆட்கள் தேடினாங்க. அப்ப நடிகரும் என் நண்பருமான காளிவெங்கட் மூலமாகவும், சாமி என்ற இன்னொரு  நண்பர் மூலமாகவும் அந்த வாய்ப்பு அமைஞ்சது.இதன்பிறகு படமாக எடுக்கும்போது ராம்குமார் சார் ஆபீஸுக்கு போனேன். அப்ப சார் என்னிடம், ‘என்ன கேரக்டர் ரோல் கொடுத்தாலும் பண்ணுவீங்களா’னு கேட்டார். ‘கொடுங்க, நடிக்கிறேன் சார்’னு நம்பிக்கையாகச் சொன்னேன். என் கேரக்டருக்கான ஸ்கிரிப்ட்டை கொடுத்து படிக்கச் சொன்னார்.

பிறகு, திடீர்னு 650 ரூபாய் கொடுத்து நீங்க 1980ல் வருவதுபோல டிரஸ், விக் எல்லாம் வாடகை எடுத்துட்டு வாங்கன்னார். அதனை கேமிராமேன் பி.வி.சங்கர் சாரிடம் கொடுத்தேன். அவர் பார்த்துட்டு இரண்டு நாள் கழிச்சு வரச் சொன்னார்.அப்புறம் ‘முனிஷ்காந்த் கேரக்டர் நீங்கதான் பண்ணப்போறீங்க’னு சொன்னார். எனக்கு பயமாக இருந்தது. பிறகு, பத்து நாட்கள் ரிகர்சல் கொடுத்து ஓகே பண்ணினார். நல்ல அனுபவம் அது.

நானும் நடிப்பிற்காக ஆரம்பத்துல பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் பக்கத்துல தியேட்டர் லேப்னு இருக்கு. அங்கே ஆறு மாசம் பயிற்சி எடுத்தேன். நடிப்புதான் நம் வாழ்க்கைனு முடிவான பிறகு இதையெல்லாம் செய்யணும் இல்லையா? அதனால அங்க பயிற்சி செய்தேன். அதுல கொஞ்சம் அனுபவங்கள் கிடைச்சது. ஆனா, பொருளாதாரப் பிரச்னை இடம் தரல. 

அங்கிருந்து வெளியேறிட்டேன். ‘முண்டாசுப்பட்டி’க்குப் பிறகு அடுத்தடுத்து படங்கள் வாய்ப்பு வந்தது. ‘ஜிகர்தண்டா’, ‘பசங்க - 2’, ‘பத்து எண்றதுக்குள்ள’, ‘மாப்ளே சிங்கம்’, ‘ஒரு நாள் கூத்து’, ‘மோ’, ‘மாநகரம்’, ‘மரகத நாணயம்’, ‘குலேபகாவலி’, ‘ராட்சசன்’, ‘கனா’, ‘சண்டக்கோழி - 2’, ‘பெட்ரோமாக்ஸ்’, ‘பேட்ட’, ‘டிக்கிலோனா’, ‘டான்’, ‘திருச்சிற்றம்பலம்’, ‘சர்தார்’, ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’, ‘கட்டா குஸ்தி’, ‘லத்தி’, ‘டிடி ரிட்டன்ஸ்’, ‘அயலான்’ வரை நிறைய படங்கள். இப்ப நிற்க முடியாமல் சந்தோஷமாக ஓடிட்டு இருக்கேன்.

இதுல ‘மாநகரம்’, ‘மரகத நாணயம்’, ‘ராட்சசன்’, ‘டிடி ரிட்டன்ஸ்’ எல்லாம் என்னை ரொம்ப கவனிக்க வச்சது. அப்புறம், ரஜினி சாருடன் ‘பேட்ட’ படத்துல நடிச்சது தனி அனுபவம். அவருடன் ரொம்ப பயந்து பயந்து நடிச்சேன். சார் நடிக்கும்போது அவர் முகத்தைப் பார்த்தே அதிக டேக் வாங்கினேன்.

ரஜினி சார் அதைக் கவனிச்சு, ‘மறுபடியும் மறந்துட்டே’னு தட்டிக் கொடுத்து சிரிப்பார். பிறகு, டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் ‘என்ன ஆச்சு’னு கேட்டார். ‘இல்ல சார்... தலைவரை பார்த்து நடிக்கும்போது பயம் வந்துடுச்சு’னு சொன்னேன். ‘ஒண்ணுமில்லை தைரியமாக நடிங்க’னு சொன்னார். அவருடன் நடிச்சது கடவுள் கொடுத்த வரம். டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் சாருக்கு ரொம்ப நன்றி சொல்லணும்...’’ என்ற முனிஷ் காமெடியானாக நடிப்பதை விட  வில்லனாக நடிக்க வேண்டும் என்பதே தன் ஆசை என்கிறார்.

‘‘எனக்கு வில்லனாக நடிக்க ரொம்பப் பிடிச்சிருக்கு. வில்லனாக மட்டுமல்ல. சிறந்த நடிப்பிலும் என்னுடைய ரோல் மாடல் நாசர் சார்தான். அவர் நடிப்பு கல்லூரியில் படிச்சிட்டு வந்தவர். எந்த கேரக்டரைக் கொடுத்தாலும் சிறப்பாக செய்யக்கூடியவர். அதனால்தான் அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் மாதிரி நடிக்க கத்துக்கிட்டு வர்றேன். தவிர, எனக்கு ஹீரோவாக ரஜினி சாரையும் விஜயகாந்த் சாரையும் ரொம்பப் பிடிக்கும்.

இப்ப நான் டைரக்டர் ராம்குமார் சாருடன் ஒரு படம் பண்ணிட்டு இருக்கேன். அடுத்து ஹிப்ஹாப் ஆதி சாரின் இயக்கத்துல நடிக்கிறேன். அதுக்கு இன்னமும் பெயர் வைக்கல. அடுத்து இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார் தயாரிப்பில் அவருடைய உதவியாளர் இயக்கும் படத்திலும், விக்ரம் சாரின் மகன் நடிப்பில் ஒரு படத்திலும், அப்புறம், ‘மரகத நாணயம்’ எடுத்த ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் ஒரு படத்திலும் நடிக்கிறேன்.

இதுதவிர, ‘குரங்கு பொம்மை’ பட இயக்குநர் நித்திலன் இயக்கத்தில் ஒரு படமும், அஜயன் பாலா இயக்கத்தில் ஒரு படமும் பண்ணிட்டு இருக்கேன். பாரி கே விஜய் இயக்கத்துல ‘ஆலம்பனா’ ஷூட்டிங் முடிஞ்சிருக்கு. இதுல பூதமாக நடிக்கிறேன். நல்ல பேர் கிடைக்கும்னு நினைக்கிறேன். தொடர்ந்து வெவ்வேறு கேரக்டரில் சிறப்பாக நடிக்கணும் என்பதே என் ஆசை...’’ என மகிழ்ச்சியாகக் குறிப்பிட்டார் முனிஷ்காந்த்.

ஆர்.சந்திரசேகர்