டிரையல் ரூம் இனி உங்கள் கைகளில்!
AR மற்றும் AI தொழில் நுட்பத்தின் அடுத்த ஆச்சர்யம் இது
AR மற்றும் AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சி எங்கேயோ சென்றுகொண்டிருக்கிறது. எனில் ஃபேஷன் உலகை மட்டும் விட்டு வைக்குமா என்ன?!ஃபேஷன் சில்லறை வியாபாரத்தில் ஆன்லைன் ஷாப்பிங் முறைதான் பெரும்பான்மையான நுகர்வோரை, குறிப்பாக இளைஞர்களை தன்னகத்தே வைத்திருக்கிறது. என்னதான் ஆன்லைனில் உள்ள மாடல்கள் , நடிகர்கள் என அவர்கள் அணிந்திருப்பதைப் பார்த்து வாங்கினாலும் துணிகளை நமக்கு நாமே அணிந்து பார்க்கும் பொழுதுதானே 100% திருப்தியை அடைய முடியும்?
 இதனால்தான் இன்றும் கூட எந்த விழாக்காலம் என்றாலும் ஜவுளிக் கடைகள், நகைகள், காலணிகள் உள்ளிட்ட கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதற்குத்தான் தற்போது பல ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் ஏஆர். (AR - Augmented Reality) மற்றும் ஏஐ (AI - Artificial Intelligence) தொழில்நுட்பங்களில் இயங்கும் டிரையல் ரூம்களில் அதிகம் முதலீடு செய்து வருகிறார்கள்.
 ஆம். இனி உங்கள் கைகளில் இருக்கும் மொபைல் அல்லது டேப் அல்லது கணினி அப்படியே கடையில் இருக்கும் டிரையல் ரூம்கள் போல் மாறிவிடும் தொழில்நுட்பம் விரைவில் களமிறங்கவிருக்கிறது. அமேசான், அலிபாபா, நைக், கெரிங் உள்ளிட்ட பல ஆன்லைன் போர்ட்டல்கள் இந்த விர்ச்சுவல் அதாவது மெய்நிகர் டிரையல் ரூம்கள் செயலி மற்றும் தொழில்நுட்பங்களில் முதலீடு செய்து வருகிறார்கள்.
 2022ம் ஆண்டின் கணக்கீட்டின்படி 4.03 பில்லியன் டாலர்கள் இந்த மெய்நிகர் டிரையல் ரூம்களில் முதலீடுகள் நடந்துள்ளன. இந்த கணக்கீடு 2029ல் 14.87 பில்லியன் டாலர்களைத் தொடலாம் என்கிறது ஏஆர் மார்க்கெட் புள்ளிவிபரம். ஏஆர் - ஆக்மென்டட் ரியாலிட்டி ட்ரையல் அறைகள் :ஏஆர் தொழில்நுட்பம் விளையாட்டு உலகில் ஏற்கனவே தனக்கென தனி இடம் பிடித்துவிட்டது. கிட்டத்தட்ட ஒரு கேம் உலகில் நாமே இறங்கி விளையாடும் அனுபவத்தைத்தான் தற்போது விஆர் பாக்ஸ், பிளே ஸ்டேஷன், எக்ஸ் பாக்ஸ் உள்ளிட்ட விளையாட்டுக் கருவிகள் கொடுத்து வருகின்றன.

இதனை பல கண்காட்சிகள், மால்கள், ஏன் வீடுகளில் வாங்கி விளையாடும் பிளே ஸ்டேஷன்கள் உட்பட பலவற்றில் பார்க்கலாம். இதன் முறையைப் பயன்படுத்தித்தான் மெய்நிகர் டிரையல் ரூம்கள் விரைவில் வரவிருக்கின்றன.  இதன் சோதனை ஓட்டத்தில் அலிபாபா ‘Outfit Anyone’ என்னும் கான்செப்ட்டில் விர்ச்சுவல் ரியாலிட்டி டிரையல் ரூம்களை கொண்டு வந்திருக்கிறது. தற்சமயம் மேற்கத்திய நாடுகளில் வாடிக்கையாளர்களிடம் இது புழக்கத்தில் உள்ளது.
இதில் உள்ள சிறப்பு என்னவென்றால் நீங்கள் கடைகளில் இருக்கும் உண்மையான டிரையல் அறையில் உடைகளை கழற்றி மாட்டுவது போல் இங்கே மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது.
உங்கள் முழு புகைப்படம் ஒன்றைக் கொடுத்தால் ஷாப்பிங் தளத்தில் நீங்கள் தேர்வு செய்த உடை உங்கள் புகைப்படத்தில் அப்படியே வந்து அமர்ந்துவிடும். உங்கள் சரும நிறம், தோற்றம், உங்கள் ஸ்டைலுக்கு ஏற்ப அந்த உடை பொருந்துமா என அணிந்து பார்க்காமலேயே முடிவு செய்துகொள்ளலாம்.
இந்தத் தொழில்நுப்டத்திலும் பல பிரச்னைகள் வந்திருக்கின்றன. அதாவது நம் உடல் அளவுக்கு தேர்வு செய்த உடையின் அளவு பொருந்துமா, அதன் தரம் என்ன என்னும் கேள்விகளுக்கு அதில் பதில் இல்லை. இவை விரைவில் சரிசெய்யப்படும். ஏஐ + ஏஆர் - டிரையல் அறைகள்:
அப்படியே உங்கள் வீட்டு கண்ணாடி போன்ற பிம்பத்தை உருவாக்கவல்லது இந்த டிரையல் ரூம்கள். இதில் நேரடி கேமராக்கள் மூலம் உங்கள் உடல் அளவீடுகள் முழுவதும் ஸ்கேன் செய்யப்பட்டுவிடும். தேர்வு செய்த உடைகளின் அளவீடுகளுடன் பொருத்தம் செய்யப்பட்டு - உதாரணத்திற்கு நீங்கள் L சைஸ் தேர்வு செய்து சோதனை பார்க்கும் தருவாயில் ‘உங்கள் உடலுக்கு XL தான் சரியாக இருக்கும், அதைத் தேர்வு செய்யவும்’ என்னும் ஆலோசனைகளுடன் இயங்கும் டிரையல் அறைகளாக இந்த மெய்நிகர் அறைகள் இருக்கும்.
இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் ஒருவேளை நீங்கள் கடற்கரை சார்ந்த சுற்றுலாவிற்காக உடைகள் வாங்குகிறீர்கள் எனில் அதற்குரிய பின்னணி காட்சிகளையும் நீங்கள் தேர்வு செய்து உடைகளைத் தேர்வு செய்யலாம். இப்படி சீன் கிட் (Scene kit) எனப்படும் பேக்ரவுண்ட் காட்சிகளை மாற்றிக்கொள்ளும் வசதிகளை இந்த டிரையல் அறைகள் கொண்டுள்ளன.
மேலும் 3டி பாடி ஸ்கேனிங் ( இந்த முறைதான் தற்போது உடல் பருமன் மற்றும் உடல் திருத்த சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகிறது), விர்ச்சுவல் உடைகள் ரெண்டரிங், பயனாளர்களுடன் கலந்துரையாடல், கருத்துகள் பதிவிடல் மற்றும் விமர்சனங்கள் பெறுதல், பகிரும் திறன்கள்... என பல வசதிகளை உள்ளடக்கியதாக இந்த டிரையல் அறைகள் விளங்குமாம். இந்த ட்ரையல் ரூம்களால் என்ன பயன்?
குறிப்பாக தொழில்நுட்பம் தெரிந்த பல இளைஞர்களுக்கு வேலை அதிகரிக்கும். கால் சென்டர் உள்ளிட்ட கஸ்டமர் கேர்களின் பணியாளர்கள் அதிகரிப்பார்கள். எல்லாவற்றிற்கும் மேல் ஆன்லைன் தளங்களில் அதிகம் நஷ்டத்தை உண்டாக்கும் ரிடர்ன் சேவைகள் குறையும். இதில் பகிர்தல் வசதி மூலம் உங்கள் நண்பர்கள் அல்லது விரும்பியவர்களையும் உங்களின் ஆன்லைன் டிரையல் அறையில் இணைத்துக் கொண்டு கருத்து கேட்டு சேர்ந்து ஷாப்பிங் செய்யும் அனுபவம் இருக்கும்.
டிரையல் அறைகளைத் திறந்தவுடனே ஒரு சாட் பாக்ஸ் கீழே திறக்கும். நீங்கள் சரிபார்த்துக் கொண்டிருக்கும் தருவாயிலேயே உடையின் அளவும், உங்கள் உடலின் அளவுமாக சோதனை செய்து ஏஐ தகவல்கள் பரிமாறத் துவங்கிவிடும். ஒருவேளை நீங்கள் விரும்பிய உடை உங்கள் அளவில் இல்லை எனில் அதற்குரிய தகவல்களும் சம்பந்தப்பட்ட ஷாப்பிங் தள உரிமையாளர்கள் அல்லது அதிகாரிகளுக்கு பகிரப்பட்டு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான கோரிக்கைகளும் கொடுக்கப்பட்டு விடுமாம்.
இத்தனை வசதிகள் இருப்பதாலேயே 2017ல் வெறும் 3.5 பில்லியன் டாலர்களிலிருந்து 2025க்குள் AR சந்தை 198 பில்லியனை எட்டும் என்கிறது ஜெர்மன் ஆன்லைன் மார்க்கெட் டேட்டாக்களை கணக்கிடும் ஸ்டேட்டிஸ்டா (Statista - The Statistics Portal for Market Data) நிறுவனம். ஆன்லைன் தளங்கள் மட்டுமின்றி நேரடி சில்லறை வியாபாரக் கடைகள், ஷாப்பிங் மால்கள் என எங்கும் கூட்டத்தை கட்டுப்படுத்தவும் கூட இந்த விர்ச்சுவல் டிரையல் அறைகளைப் பயன்படுத்தலாம் என்கிறது ஏஆர் மார்க்கெட்.
தற்போது மேற்கத்திய பிராண்ட்களான நைக், அடிடாஸ், மற்றும் சில விலைஉயர்ந்த ஃபர்னிச்சர் கடைகளும் கூட இந்த மெய்நிகர் டிரையல் அறைகளைத்தான் பயன்படுத்துகிறார்கள். உங்கள் வீட்டின் தோற்றத்திற்கு எந்த ஃபர்னிச்சர் பொருந்தும் என பார்த்து வாங்கும் முறையும் இதில் வரும் என்கிறது ஏஆர் சந்தை. பிரித்தானிய இணைய வங்கி மற்றும் முதலீட்டாளர்கள் குழுமமான ‘பார்க்லேய்ஸ்’ (Barclays - Corporate and Investment Bank) சமீபத்திய ஆய்வறிக்கையின்படி ஒவ்வொரு ஆண்டும் சுமார் 800 மில்லியன் டாலர்கள் நஷ்டத்தை வெறும் ரிட்டர்ன் என்னும் வசதியால் ஆன்லைன் தளங்கள் எதிர்கொள்கின்றன என்கிறது.
மேலும் ஆன்லைன் நுகர்வோரில் 19% வாடிக்கையாளர்கள் ஒரே பொருளை பலமுறை பல அளவுகளில் ஆர்டர் செய்து சரியான அளவு கிடைக்கும் வரை முயற்சி செய்வதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால் டெலிவரி ஆகும் செலவு, ரிட்டர்ன் செலவு என பலவாறு நஷ்டம் உண்டாவதாகவும் ஆய்வு தெரிவிக்கின்றது. அமெரிக்க உடைகள் பிராண்டான கோல்‘ஸ் (Khol’s) பிரபல சாட்டிங் தளமான ஸ்நாப்சாட் (Snapchat) உடன் இணைந்து விர்ச்சுவலாக தங்களது உடைகளைப் பார்த்து தேர்வு செய்து கிட்டத்தட்ட கடையிலேயே டிரையல் செய்து பார்ப்பது போன்ற அனுபவத்தை தனது வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்து வருகிறது.
எது எப்படியோ, நவீன தொழில்நுட்பங்கள் எந்த அளவிற்கு பயன்களைக் கொண்டு வருகின்றதோ அதே அளவிற்கு மறைமுகமான ஆபத்துகளையும் கொண்டு வரும்.
உதாரணத்திற்கு, 3டி பாடி ஸ்கேனிங் முறையில் நம் அங்க அடையாளங்கள் திருடப்படலாம். டேட்டா திருட்டுகள் அதிகம் நடக்கலாம்.
நம் ஆதார் உள்ளிட்ட ஐடிகள் கை ரேகைகளை அடிப்படையாகக் கொண்டவை என்கையில் ரேகைகள் திருட்டும் நடக்கலாம். டீப் ஃபேக் (Deep Fake), ஃபேஸ் ஸ்வாப் (Face Swap) போன்ற பெண்களைக் குறிவைக்கும் கும்பல்கள் நம்மை அச்சு அசலாக ஸ்கேன் செய்துகொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.
ஷாலினி நியூட்டன்
|