Must Watch
 ஆண்டனி சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான மலையாளப்படம், ‘ஆண்டனி’. இப்போது ‘அமேசான் ப்ரைமி’ல் காணக்கிடைக்கிறது. அப்பாவியான இளைஞன் ஆண்டனி. அவனது அப்பா, அம்மா மற்றும் இரண்டு சகோதரிகளும் தற்கொலை செய்துகொள்கின்றனர். நிலைகுலைந்து போகிறான் ஆண்டனி. தனது குடும்பத்தினரின் தற்கொலைக்குக் காரணமானவர்களைக் கொன்றுவிட்டு, ஒரு கேங்ஸ்டராக மாறுகிறான் ஆண்டனி.
வருடங்கள் ஓடுகின்றன. பெரிய கேங்ஸ்டராக உருவெடுக்கிறான் ஆண்டனி. அவனுக்கு வேண்டப்பட்ட ஒருவரின் காலை வெட்டிவிடுகிறான் உள்ளூர் ரவுடியான சேவியர். பழிவாங்கும் நோக்கில் சேவியரின் காலை வெட்டுகிறான் ஆண்டனி.
ஆனால், சேவியர் இறந்துவிடுகிறான். பிறகு சேவியரின் மனைவி ஜெஸ்ஸியும், கல்லூரியில் படிக்கும் மகள் ஆன் மரியாவும் வறுமையில் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு உதவச் சொல்லி ஆண்டனியை நிர்ப்பந்திக்கிறார் பாதிரியார் பால். இந்நிலையில் ஜெஸ்ஸி இறந்துவிட, ஆன் மரியாவைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு ஆண்டனியிடம் வருகிறது. ஆன் மரியாவின் வருகை ஆண்டனியின் வாழ்க்கையில் என்ன மாதிரியான மாற்றங்களை உருவாக்குகிறது என்பதே மீதிக்கதை. ஆண்டனியாக கலக்கியிருக்கிறார் ஜோஜு ஜார்ஜ். நெகிழ்வான ஒரு அனுபவத்தைத் தரும் இப்படத்தை இயக்கியிருக்கிறார் ஜோஷி.
சப்டா சாகர்டாச்சே எல்லோ - சைடு பி
சில மாதங்களுக்கு முன்பு ‘சப்டா சாகர்டாச்சே - சைடு ஏ’ என்ற கன்னடப் படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் இரண்டாம் பாகம்தான் இது. ‘அமேசான் ப்ரைமி’ல் தமிழில் காணக்கிடைக்கிறது ‘சப்டா சாகர்டாச்சே எல்லோ- சைடு பி’. பத்து வருட சிறை வாழ்க்கைக்குப் பிறகு வெளியில் வருகிறான் மனு. தனது காதலி பிரியாவைத் தேடி அலைகிறான். பிரியாவுக்குக் கல்யாணமாகி ஒரு குழந்தை இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கிறான்.
கொரோனா லாக்டவுன் காரணமாக அவளது கணவனின் பிசினஸ் சரியாகப் போகவில்லை, திருமண வாழ்க்கையில் பிரியா மகிழ்ச்சியாக இல்லை என்பதை அறிந்து உடைந்து போகிறான். பிரியாவுக்குத் தெரியாமலே அவளது கஷ்டங்களைப் போக்க முயற்சிக்கிறான் மனு. இதற்கிடையில் சுரபி என்ற பெண்ணைச் சந்தித்து நெருக்கமாகிறான் மனு.
பிரியாவும் மனுவும் சந்தித்தார்களா? பிரியாவுக்குத் தெரியாமலே அவளின் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை மனு கொண்டு வருகிறான்? மனுவுக்கும் சுரபிக்கும் இடையிலான உறவு என்னவாகிறது... என்பதை நெகிழ்வாகச் சொல்லியிருக்கிறது திரைக்கதை. படத்தின் இயக்குநர் ஹேமந்த் எம்.ராவ். அனிமல்
ஒரு பக்கம் கடுமையான விமர்சனங்களையும், இன்னொரு பக்கம் ரூ.900 கோடிக்கும் அதிகமான வசூலையும் அள்ளிய இந்திப்படம், ‘அனிமல்’. இப்போது ‘நெட்பிளிக்ஸி’ல் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது. பெரிய தொழில் அதிபர் பல்பீர் சிங். குடும்பத்துடன் இருப்பதற்கு அவருக்கு நேரமே கிடைப்பதில்லை.
பல்பீரின் மகன் ரான்விஜய். அப்பாவை வெறித்தனமாக நேசிக்கிறான் விஜய். அவனுக்கு அப்பாதான் சூப்பர் ஹீரோ. ஆனால், அப்பாவோ மகனின் அன்பை ஒருபோதும் புரிந்துகொள்வதில்லை. அதனால் இருவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்படுகிறது. அதனால் போர்டிங் ஸ்கூலுக்கு அனுப்பப்படுகிறான் விஜய்.
பல்பீரின் 60 வது பிறந்த நாளுக்கு வீட்டுக்கு வருகிறான் விஜய். அப்போது அவமதிப்புக்கு உள்ளாகி வீட்டைவிட்டு வெளியேற்றப்படுகிறான். எதிர்பாராத விதமாக கீதாஞ்சலியைச் சந்தித்து, திருமணம் செய்துகொண்டு, அமெரிக்காவில் செட்டிலாகிவிடுகிறான்.
மர்ம நபர்களால் பல்பீர் தாக்கப்படுகிறார். அப்பாவைத் தாக்கியவர்களைக் கண்டுபிடிக்க இந்தியாவுக்கு வருகிறான் விஜய். சூடுபிடிக்கிறது திரைக்கதை. வழக்கமான அப்பா - மகன் கதையையே அதிக வன்முறையுடன் சொல்லியிருக்கின்றனர். ரான் விஜய்யாக நல்ல நடிப்பைக் கொடுத்திருக்கிறார் ரன்பீர் கபூர். படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா. பேட்லேண்ட் ஹன்டர்ஸ்
‘நெட்பிளிக்ஸின்’ டாப் டிரெண்டிங் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் கொரியன் படம், ‘பேட்லேண்ட் ஹன்டர்ஸ்’. தமிழ் டப்பிங்கிலும் பார்க்கலாம். மாபெரும் பூகம்பம் சியோல் நகரை அடியோடு அழித்து விடுகிறது. தங்குவதற்கு இடம் இல்லாமல், தண்ணீர் கூட கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். எங்கும் பஞ்சம். இந்நிலையில் முதலை உட்பட கண்ணில் படும் உயிர்களை வேட்டையாடி, மக்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர் நம் சனும், அவனது கூட்டாளியான சோயும். நம் சன் வசித்து வரும் கிராமத்தில் தனது பாட்டியுடன் வசிக்கிறாள் சுனா.
சோயுவுக்கு சுனாவின் மீது காதல். அத்துடன் நம் சனும் பாட்டிக்கும், சுனாவுக்கும் வேண்டிய உதவிகளைச் செய்து வருகிறான். இந்நிலையில் ஒரு கும்பல் நல்லது செய்கிறோம் என்று சுனாவையும், பாட்டியையும் அழைத்துச் செல்கிறது. இடையில் பாட்டியைக் கொன்றுவிட்டு சுனாவைக் கடத்திக்கொண்டு போய்விடுகிறது.
சுனாவின் கடத்தலுக்குப் பின்னணியில் இருப்பது யார், நம் சனும், சோயுவும் எப்படி சுனாவை மீட்கின்றனர் என்பதே மீதிக்கதை. வித்தியாசமான ஆக்ஷன் படத்தை விரும்புபவர்களுக்கு நல்ல சாய்ஸ் இந்தப் படம். இதன் இயக்குநர் ஹியோ மியூங்.
தொகுப்பு: த.சக்திவேல்
|