யார் இந்த கர்ப்பூரி தாக்கூர்?
சாதியைச் சொல்லி ஜனசங்கம் விமர்சித்தது... பாரத ரத்னா வழங்கி பாஜக கவுரவிக்கிறது!
இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது பீகாரைச் சேர்ந்த கர்ப்பூரி தாக்கூருக்கு வழங்கப்பட உள்ளது. பிரதமர் மோடி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

கர்ப்பூரி தாக்கூரை இந்தியாவில் பலருக்குத் தெரியாது. ஆனால், பீகார் மற்றும் மத்திய இந்திய அரசியலை அறிந்தவர்களுக்கு இந்தப் பெயர் மிகப் பிரபலம்.‘I bow to Jan Nayak Karpoori Thakur Ji on his birth centenary.  On this special occasion, our Government has had the honour of conferring the Bharat Ratna on him. I’ve penned a few thoughts on his unparalleled impact on our society and polity...’ என்று தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டு, கர்ப்பூரி தாக்கூர் குறித்து நீண்ட கட்டுரையையும் எழுதியிருக்கிறார் பிரதமர் மோடி,‘நான் கர்ப்பூரி தாக்கூரை சந்தித்ததில்லை. ஆனால், அவரைப் பற்றி அவருடன் நெருங்கிப் பழகியவர்களிடமிருந்து நேரடியாக கேட்டுத் தெரிந்துகொண்டிருக்கிறேன். 
சமூக நீதிக்காக அவர் நடத்திய போராட்டங்கள் பல கோடி மக்களின் வாழ்க்கையை நல்லவிதமாக மாற்றியிருக்கிறது. மிகுந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்து கடுமையான தடைகளைக் கடந்து சமூக மாற்றத்துக்கான சாதனைகளைச் செய்திருக்கிறார்...’ என்று பிரதமரின் கட்டுரை தொடங்குகிறது.உண்மைதான்.
கர்ப்பூரி தாக்கூர் பிற்படுத்தப்பட்ட மக்களின் சாதனை நாயகன். மண்டல் கமிஷனுக்கு முன்னோடி. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீட்டுக்காக, அவர்கள் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக தொடர்ந்து போராடியவர்.இன்று கர்ப்பூரி தாக்கூரின் 100வது பிறந்த நாள். ஜனவரி 24, 1924ல் பிறந்த தாக்கூர் பிப்ரவரி 17, 1988ல் 64வது வயதில் காலமானார். பீகாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில் மிகவும் ஏழ்மையான, பிற்படுத்தப்பட்ட நாவிதர் குடும்பத்தில் பிறந்தார். மிகுந்த சிரமத்துடன் கல்லூரிப் படிப்புக்கு உயர்ந்தார். அது சுதந்திரப் போராட்டக் காலம். தாக்கூரும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். சுமார் 26 மாதங்கள் சிறையில் இருந்தார். ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். ஆசிரியப் பணியிலிருந்து அரசியலுக்கு வந்தவர்.
அந்தக் காலக் கட்டத்தில் சக்தி வாய்ந்த கட்சியாக இருந்த காங்கிரசை எதிர்த்து அரசியல் செய்தவர். சோஷலிஸ்ட் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு 1952ல் எம்எல்ஏ ஆனார். அப்போது அவருக்கு வயது 28.அரசியலில் பல படிகள் உயர்ந்து 1970ம் ஆண்டு பீகாரின் முதல்வரானார். பீகாரில் காங்கிரஸ் அல்லாத அரசு அமைந்தது அப்போதுதான். அவர் முதல்வரானதும் பீகாரில் மதுவிலக்கை அமல்படுத்தினார். இந்த முறை அவர் ஆறு மாதங்கள்தாம் முதல்வராக இருந்தார். மீண்டும் 1977ல் முதல்வர் பொறுப்புக்கு வந்தார். 1979 வரை முதல்வராக இருந்தார்.
கர்ப்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டு பீகார் சட்டமன்றக் கட்டடத்தின் நூற்றாண்டு விழா நிகழ்வில் பேசிய ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரும், துணை முதல்வருமான தேஜஸ்வி பிரசாத் யாதவ், தாக்கூருக்கு ‘பாரத ரத்னா’ வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். இப்போது அது நடந்திருக்கிறது.
இந்த பாரத ரத்னா வழங்கலில் பாஜகவின் அரசியலும் இருக்கிறது. பிற்படுத்தப்பட்டோரின் வாக்குகளைக் கவர்வதற்காக இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது என்ற கருத்துக்கள் எழுந்துள்ளன. பாஜகவின் பல நடவடிக்கைகள் அதன் அரசியல் ஏற்றத்துக்கு ஏற்றவாறே இருக்கும். இந்த நடவடிக்கையையும் அப்படியே பார்க்க வேண்டியிருக்கிறது.
கர்ப்பூரி தாக்கூரின் நீண்ட அரசியல் சரித்திரத்தில் அவரை தீவிரமாக எதிர்த்தவர்கள் ஜனசங்கத்தினர். அவரை சாதி ரீதியாக கடுமையாக விமர்சித்தனர். அவருக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டனர். அந்த ஜனசங்கத்தின் வழித் தோன்றலான பாரதிய ஜனதா அரசு இன்று கர்ப்பூரி தாக்கூருக்கு நாட்டின் உயரிய விருதைக் கொடுத்திருக்கிறது.அரசியல், ஆச்சர்யங்கள் நிறைந்தது. ஆதாயங்களைக் குறி வைப்பது.
என்.ஆனந்தி
|