வடக்குப்பட்டி ராமசாமி ரகசியங்கள்
எந்த சர்ச்சையையும் கிளப்பும் நோக்கம் எங்களுக்கு இல்லை... சோஷியல் மீடியாவில் மிதிபடுவோம்னு நாங்களே எதிர்பார்க் கலை...
‘ஒரு விசித்திரமான கிராமம். ஆண்டு 1974...’ சொல்லி முடித்ததும் வரும் ‘நேர்ல பார்த்தால்..?’ என்னும் ஒற்றை வார்த்தையிலேயே காமெடி கலாட்டா வசனங்கள் சகிதமாக சந்தானத்தின் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ பட டிரெய்லர் கவனம் ஈர்த்து கலகலப்பூட்டுகிறது. இன்னொரு பக்கம் கலகத்தையும் உண்டாக்கியிருக்கிறது. என்ன சொல்கிறார் இயக்குநர் கார்த்தி யோகி? அறிய சந்தித்தோம்.
 ‘டிக்கிலோனா’, ‘வடக்குப்பட்டி ராமசாமி’... கவுண்டமணியின் அடையாளங்களாகவே தலைப்புகளில் வைக்கிறீர்களே... என்ன காரணம்?
 எனக்கு சின்ன வயசிலே இருந்தே கவுண்டமணி சாரை ரொம்பப் பிடிக்கும். அவருடைய மிகப்பெரிய ரசிகன் நான். சந்தானம் சாரும் கவுண்டமணி சாருடைய பெரிய ரசிகர். அதனாலேயே இந்தத் தலைப்புகளாநானும் தேர்வு செய்யறேன். ‘டிக்கிலோனா’ படம் வெளியாகி ஓடிடியில் நல்ல வரவேற்பு. கவுண்டமணி சாரை சந்திச்சு பூங்கொத்து கொடுத்து ஆசீர் வாதம் வாங்கினோம். ‘சார்... உங்க டயலாக்தான் தலைப்பாகவே வெச்சிருக்கோம்’ அப்படின்னு சொன்னோம்.
 அதுக்கு சார் ‘அட என்னப்பா... உங்க டயலாக், எங்க டயலாக், எல்லாம் அந்தந்த படத்திலே வந்த டயலாக்தானே’ அப்படின்னு சொன்னார். இந்தப் படம் என்னன்னா... ஒரு கிராமம், அந்த கிராமத்துக்குப் பெயர் ‘வடக்குப்பட்டி’. அங்கே இருக்கும் ஒரு ராமசாமி. அதை அடையாளப்படுத்தத்தான் இந்தத் தலைப்பு.
 என்ன கதை?
1974ம் ஆண்டு பீரியட், அதே சமயம் சென்னை... அப்போதைய மெட்ராஸில் கண் நோய் ஒண்ணு பரவுது. எல்லோரும் பீதியிலே இருக்காங்க. இந்த சமயத்தில் மூடநம்பிக்கைகளை நம்புகிற ஒரு கிராமம். அந்த நோய் தீவிரத்தைப் பயன்படுத்தி ராமசாமி என்கிற இளைஞன் எப்படி மக்களை ஏமாத்துகிறான், காசு சம்பாதிக்கிறான்... இதனுடைய முடிவு என்ன என்கிறதுதான் கதை.
ராமசாமியில் இத்தனை சர்ச்சைகள் இருக்கும்போது ஏன் அதை கையில் எடுத்தீர்கள்?
கவுண்டமணி சார் டயலாக்கில், அவர் நடிச்ச படத்தில், வடக்குப்பட்டி ராமசாமி காசை கொடுக்காமல் போய்ச் சேர்ந்திடுவார். அங்கேயும் காசுதான் பிரதானம். இங்க, இந்தப் படத்துலயும் காசுதான் பிரதானம்.
அதனால்தான் இந்தத் தலைப்பே வைத்தோம். ஆனால், இந்த அரசியல் பிரச்னை எல்லாம் எங்களுக்கு படமெடுக்கும்போதுகூட தோணலை. அந்த சர்ச்சைதான் எங்கே பார்த்தாலும். உண்மையாகவே படமாக பார்க்கும் போது எதுவுமே சர்ச்சையாகவோ அல்லது கலகமாகவோ தெரியாது. இந்தப் பிரச்னையைப் பொருத்தவரை நான் பதில் சொல்லவே முடியாது. இது சந்தானத்தின் தனிப்பட்ட கருத்து. அவரே இதற்கு நிச்சயம் பதில் சொல்வார். தவிர டிரெய்லர் டயலாக்கைத்தான் அவர் மேற்கோள் காட்டி அந்த டிரெய்லரை பகிர்ந்திருந்தார். யார் மனதும் புண்படக் கூடாதென அந்த டுவீட்டையும் அவர் டெலீட் செய்திட்டார். தந்தை பெரியார் போன்ற தலைவரை அவமதிக்கும் நோக்கமெல்லாம் நிச்சயம் இல்லை. சந்தானத்திற்கும் இருக்க வாய்ப்பே இல்லை.
சந்தானம் & கோ... தவிர வேறு யாரெல்லாம் படத்தில் இருக்கிறார்கள்?
ஒரு நல்ல கிராமத்து சப்ஜெக்ட்... அதிலே காமெடி... இப்படி ஒரு கதை ரொம்ப நாட்களா சந்தானம் கேட்டுக்கிட்டு இருந்தார். 2021ல் இந்தப் படம் குறித்து பேச ஆரம்பிச்சோம். போன வருஷம் ஷூட்டிங் ஆரம்பிச்சு 63 நாட்கள் ஒரே ஷெட்டியூலில் படப்பிடிப்பு முடிச்சிட்டோம். ஹீரோயினாக மேகா ஆகாஷ். ஒரு ரெட்ரோ ஸ்டைல் கெட்டப், அதற்குரிய அமைதியான முகம் தேவைப்பட்டது. மேகா ஆகாஷ் மருத்துவம் படிக்கிற பொண்ணாக நடிச்சிருக்காங்க. மேலும் அந்த ஊரிலே புத்திசாலி அவங்கதான்.
உடன் நிழல்கள் ரவி சாருக்கு ஒரு சர்ப்ரைஸ் கேரக்டர். எம்.எஸ்.பாஸ்கர் சார், மொட்டை ராஜேந்திரன், மாறன், மனோகர், சேசு, ஜான் விஜய், ரவிமரியா, சுரேஷ், பிரசாந்த்... இன்னும் பெரிய நடிகர்கள் பட்டாளமே இருக்காங்க. பீபிள் மீடியா ஃபேக்டரி பேனரில் டி.ஜி.விஸ்வபிரசாத் தயாரிக்கிறார். மியூசிக், சான் ரோல்டன், பீரியாடிக் மோட் பின்னணி ரொம்ப அருமையா கொடுத்திருக்கார். தீபக் இந்தப் படத்துக்கும் சினிமாட்டோகிராபி செய்தார். ‘தீரன்:
அதிகாரம் 1’, ‘டெடி’ படங்களின் டி.சிவநந்தீஸ்வரன் இந்தப் படத்துக்கு எடிட்டர். ஏ.ராஜேஷ் இந்தப் படத்துக்கு ஆர்ட் டைரக்ஷன். படம் 70களில் நடக்கறதால் மூணு, நாலு கிராமங்களா சேர்த்து அங்கே இங்கேன்னு இப்போதைய லுக் அல்லது அடையாளம் வராமல் ஷூட் செய்திருக்கோம். கோயில்கள், சில இடங்கள் எல்லாம் அருமையா செட் போட்டுக் கொடுத்திருக்கார் ராஜேஷ்.
‘இன்னும் என்ன நீ பைத்தியக்காரனாவே நினைச்சுக்கிட்டு இருக்கேல்ல...’ போன்ற டிரேட்மார்க் மீம் பன்ச் இந்தப் படத்தில் உண்டா?
நிச்சயம் ‘டிக்கிலோனா’ படம் போலவே நிறைய காமெடி வசனங்கள், டைமிங் கலாய்கள் இந்தப் படத்தில் இருக்கும். ஆனால், எந்த டயலாக் ஒர்க் அவுட் ஆகும்ன்னு சொல்லவே முடியாது. காரணம், நாங்க ‘டிக்கிலோனா’ படத்தின் போது ஏதேதோ வசனங்கள் எல்லாம் மீம்கள்ல வரும்ன்னு நினைச்சோம். ஆனால், கொஞ்சமும் எதிர்பாராமல் மாறன் சொன்ன டயலாக் டிரெண்டாகி இப்போ வரைக்கும் மீம்கள்ல பார்க்க முடியுது.
அதனால் படம் வந்தால்தான் எந்தக் காமெடி பன்ச் ஹிட்டாகும்ன்னு தெரியும். ஆனால், நீங்க கேட்கற காமெடி பேக்கேஜை எங்களால் எவ்வளவு சிறப்பா கொடுக்க முடியுமோ கொடுத்திருக்கோம்.
‘வடக்குப்பட்டி ராமசாமி’ கொண்டாட வைக்குமா?
எனக்கே முதலில் இந்தப் படம் ரொம்ப ஸ்பெஷல். காரணம், ‘டிக்கிலோனா’ கொரோனா காரணமாக ஓடிடியில்தான் வெளியாச்சு. ஓர் இயக்குநரா எனக்கு தியேட்டரில் வெளியாகப் போகிற முதல் படம் இது. நானும் காத்திருக்கேன். படத்தில் எவ்வித அரசியலோ அல்லது சர்ச்சையோ எதுவும் கிடையாது. குடும்பமா எல்லோரும் பார்த்து ரசிச்சு, சிரிச்சுட்டு வெளியே வருவீங்க.
ஷாலினி நியூட்டன்
|