இ.ந்.தி.யா-வுக்கு என்ன ஆச்சு?
இந்தியா என்றதும் சட்டென்று நம் நாட்டின் நினைவு வரும். கூடவே ஆளும் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் ஒன்று திரண்ட கட்சிகளின் ஞாபகமும்தான்.ஆம். இந்த எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ‘இந்தியா’ என்றுதான் பெயர்!கடந்த ஆண்டு ஜூன் 28ம்தேதி. பீகார் மாநில தலைநகர் பாட்னாவில், ‘இந்தியா’ கூட்டணியின் முதல் கூட்டம் கூடியது.  15 எதிர்க்கட்சிகள் அதில் பங்கேற்றன. ‘2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதாவைத் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்புவதே நமது வேலை’ என அந்தக்கூட்டத்தில் ஒரு மனதாக உறுதியேற்கப்பட்டது. ஆனால், எண்ணி ஏழே மாதங்களில் ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள் மூலைக்கு ஒன்றாக முறைத்துக்கொண்டு திரும்ப ஆரம்பித்திருக்கின்றன. ‘இந்தியா’ கூட்டணியில் இவ்வளவு விரைவில் விரிசல்கள் விழும் என யாரும் எதிர்பார்த்திருக்கவே மாட்டார்கள்.
 சரி. ‘இந்தியா’ கூட்டணியில் என்னதான் பிரச்னை?
கடந்த ஆண்டு இறுதியில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலும், அதில் காங்கிரஸ் அடைந்த தோல்வியும்தான் ‘இந்தியா’ கூட்டணியின் பிரச்னைக்கான பிள்ளையார் சுழியாகக் கருதப்படுகிறது.அதைத் தொடர்ந்து தொகுதிப் பங்கீடு பிரச்னை.‘‘காங்கிரஸ் கட்சி, ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் காட்டும் அக்கறையை தொகுதிப் பங்கீட்டில் காட்ட மறுக்கிறது...’’ என்ற குமுறல் ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள பல கட்சிகளிடம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
 கூடவே ‘‘உயிர்பிழைத்து, உயிர்த்தெழ வேண்டிய நிலையில் இருக்கிற காங்கிரஸ் கட்சி, மறுமலர்ச்சியுடன் இருப்பதைப் போல காட்டிக் கொள்கிறது...’’ என்ற எண்ணப்போக்கும் ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள பல கட்சிகளிடம் நிலவுகிறதாம்.‘இந்தியா’ கூட்டணியின் முக்கிய கட்சிகளில் ஒன்று திரிணாமுல் காங்கிரஸ். மேற்கு வங்கத்தின் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ், மேற்கு வங்கத்தையும் தாண்டி அசாம், மேகாலயா மாநிலங்களில் காங்கிரசுடன் தொகுதிகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறது.

அதேபோல ‘இந்தியா’ கூட்டணியின் மற்றொரு முதன்மைக் கட்சியான ஆம் ஆத்மிக்கு தில்லி, பஞ்சாப்பைத் தாண்டி அரியானா, குஜராத் மாநிலங்களிலும் காங்கிரசுடன் தொகுதிகளைப் பகிர்ந்து கொள்ள ஆசை. ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு இதில் துளியும் விருப்பம் இருப்பதாகத் தெரியவில்லை என திட்டவட்டமாக சொல்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
இதற்கான காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். அதிக தொகுதிகளை ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளுக்கு அள்ளித் தந்துவிட்டால், தேசிய அளவில் எதிர்க்கட்சி என்கிற அந்தஸ்து ஒருவேளை தனக்குக் கிடைக்காமல் போய்விடுமோ என்று காங்கிரஸ் கட்சி பயப்படுகிறது.
இப்படி பல தரப்புகளின் ஆசையும் பேராசையும் கனவும் தொகுதிப் பங்கீட்டில் தொய்வை ஏற்படுத்தி வருகிறது. இதனால் ஏற்பட்டு வரும் தயக்கமும், சுணக்கமும் ‘இந்தியா’ கூட்டணிக்கு நாளுக்கு நாள் ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது.அண்மையில், மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, ‘‘வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திரிணாமுல் கட்சி தனித்துப் போட்டி...’’ என அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
ஆம். ‘இந்தியா’ கூட்டணியில் திரிணாமுல் கட்சி இருந்தாலும், மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டி என அவர் அறிவித்ததுதான் இதில் ஹைலைட். இதுதான் ‘இந்தியா’ கூட்டணியின் விரிசலுக்கான முதல் புள்ளி.அதைத்தொடர்ந்து அடுத்த அதிரடியை ஆரம்பித்தது ஆம் ஆத்மி கட்சி. ‘‘பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 மக்களவைத் தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்தே போட்டியிடும்...’’ என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்து பதற்றத்தைப் பற்ற வைத்தார்.
இதையடுத்து, பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் முறை. நிதிஷ்குமார் 8 முறை பீகார் முதல்வர் என்ற பெருமைக்குரியவர். இந்தி பேசும் வட இந்தியப் பகுதிகளில் நிதிஷின் முகம், பழகிய முகம்.
‘இந்தியா’ கூட்டணியின் முதல் கூட்டமே பாட்னாவில், முதல்வர் நிதிஷ்குமாரின் வீட்டில்தான் நடைபெற்றது என்பதை இங்கு நினைவுகொள்வது நல்லது.
இதனால் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர், தான்தான் என்ற பெரிய நினைப்பில் நிதிஷ் இருந்ததாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். ஆனால், ஒருங்கிணைப்பாளர் பதவி கூடக் கிடைக்காது என்று தெரிந்தபோது நிதிஷ்குமாருக்கு பெரிய ஏமாற்றமே ஏற்பட்டுவிட்டதாம்.
அதன்பிறகு நிதிஷ்குமாரின் நடவடிக்கைகளில் அதிரடி மாற்றம். தில்லியில் நடந்த ‘இந்தியா’ கூட்டணியின் 28 எதிர்க்கட்சிகள் பங்கேற்ற கூட்டத்தில், ‘‘இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி...’’ என்று திமுகவுக்கு எதிராகப் பேசி தெறிக்க விட்டார். அப்போதே ‘இந்தியா’ கூட்டணியின் பிளவுக்கு அச்சாரம் போடப்பட்டு விட்டது.பீகார் மாநிலத்தில், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளக் கட்சி, லாலுபிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் கூட்டு சேர்ந்து ஆட்சியில் இந்தக் கட்டுரை எழுதப்படும் நேரத்தில் இருக்கிறது. லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ், பீகாரில் துணை முதல்வராக இருக்கிறார்.
இந்தநிலையில், கர்ப்பூரி தாக்கூர் நூற்றாண்டு விழாவில், அவரை வாழ்த்திப் பேசிய நிதிஷ், சந்தடி சாக்கில் பரம்பரை அரசியல் பற்றிப் பேசினார். ‘‘கர்ப்பூரி தாக்கூர் குடும்ப அரசியலை ஊக்குவிக்கவில்லை. அவரது மறைவுக்குப் பிறகுதான் அவரது மகன் ராமநாத் அரசியலுக்கு வந்து மாநிலங்களவை எம்.பி ஆனார். இந்தக் காலத்தில் பலர் குடும்ப அரசியலை வளர்க்கிறார்கள்...’’ என்று நிதிஷ் பேச, ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் கொதித்துப் போனார்.
தனது மகன் தேஜஸ்வி யாதவ், மகள் மிசா பாரதி போன்றவர்கள் அரசியலில் இருப்பதைத்தான் நிதிஷ் குத்திக் காட்டுவதாக லாலு நினைக்க, லாலுவின் மகள் ரோகிணி ஆச்சார்யா நிதிஷுக்கு எதிராக ஒரு டுவிட்டர் பதிவு போட, லாலு மகள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கூற, அதைத்தொடர்ந்து நிதிஷ் - ஆளுநர் சந்திப்பு, ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் 3 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றியமைப்பு என நிறைய சம்பவங்கள் நடந்து முடிந்துவிட்டன.
பீகாரில் பூர்ணியா பகுதியில் ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் நிதிஷ் பங்கேற்க மறுத்து விட்டது மற்றொரு முக்கிய திருப்பம்.இந்தநிலையில், ‘முதல்வர் நிதிஷ்குமார், ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து விலகப் போகிறார். அமைச்சரவையைக் கலைத்துவிட்டு, பாரதிய ஜனதாவின் ஆதரவோடு அவர் மீண்டும் முதல்வராகப் போகிறார்’ என்றெல்லாம் ஊகங்கள் உதயமாகி வருகின்றன.
‘பாரதிய ஜனதாவைச் சேர்ந்த இருவர் பீகாரில் துணை முதல்வர்களாகப் போகிறார்கள். வரும் மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணியுடன் நிதிஷ்குமார் கைகோர்க்கப் போகிறார்’ என்றெல்லாம் பரபரப்பு பந்தாட ஆரம்பித்திருக்கிறது.
நிதிஷ்குமாரும் அவரது ஐக்கிய ஜனதா தளக் கட்சியும் சரி, யூ டர்ன் போட்டு கூட்டணி மாறுவது ஒன்றும் புதியதல்ல. ஏற்கெனவே டென்னிஸ் பந்து போல பாரதிய ஜனதா பக்கமும், மற்ற எதிர்க்கட்சிகள் பக்கமும் மாறி மாறிப் போனவர்தான் நிதிஷ். ஆகவே, இந்த முறை அவர் ‘இந்தியா’ கூட்டணியை விட்டு விலகினாலும் அதில் ஆச்சரியப்பட பெரிதாக எதுவும் இருக்காது.
பீகார் மாநிலத்தில் மொத்தம் 40 மக்களவைத் தொகுதிகள். 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், பாரதிய ஜனதாவுடன் கைகோர்த்து, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளக் கூட்டணி 33 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
ஆக, நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம், ‘இந்தியா’ கூட்டணியை விட்டு விலகினால், கூட்டணிக்கு அது மிகப்பெரிய பாதகமாக மாறும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. பீகாரில் மொத்தம் 243 சட்டமன்றத் தொகுதிகள். அங்கே ஆட்சியமைக்க 122 எம்எல்ஏக்கள் தேவை. நிதிஷ் வசம் 45 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். பாஜக வசம் 78 பேர். கூட்டுத் தொகை 123. ஆக, நிதிஷ் ‘இந்தியா’ கூட்டணியை விட்டு விலகினாலும் கூட அவரது ஆட்சிக்கு எந்த ஆபத்தும் வந்துவிடாது.
இதனிடையே, ‘நிதிஷ் ‘இந்தியா’ கூட்டணியில் நீடித்தால் ஒருவேளை அவர் பிரதமர் வேட்பாளராக வாய்ப்பிருக்கிறது’ என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் ஒருவர். அவர் உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சித்தலைவருமான அகிலேஷ் யாதவ்!அகிலேஷ் இப்படிக் கூறியிருந்தாலும் கூட, நிதிஷைத் தொடர்ந்து அடுத்ததாக ‘இந்தியா’ கூட்டணிக்கு ஆட்டம் காட்டப் போகிறவர் அகிலேஷ்தான் என்று கருதப்படுகிறது.
உத்தரப்பிரதேசத்தில் 2019ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி கூட வெற்றி பெறவில்லை. அமேதி தொகுதியில் அவர் தோற்றுப் போனார். இந்தநிலையில் உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 2 முதல் 8 இடங்கள் போதும் என அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி கருதுகிறது. காங்கிரஸ் கட்சியோ 20 இடங்கள் வேண்டும் என விரும்புகிறது.
42 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில் திரிணாமுல் கட்சி, காங்கிரசுக்குத் தர விரும்புவது 2 அல்லது 4 தொகுதிகள்தான். ஆனால், காங்கிரஸ் 10 தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது. பஞ்சாப்பைப் பொறுத்தவரை 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், மொத்தமுள்ள 13 தொகுதிகளில் 8 இடங்களில் காங்கிரஸ் வென்றது. ஆனால், அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 92 தொகுதிகளில் வெற்றிக்கனி பறித்து ஆம் ஆத்மி ஆளும்கட்சியானது.
அந்த ஆம் ஆத்மிக்கு இப்போது பஞ்சாப் மாநிலத்தை ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளுடன் பகிர்ந்து கொள்ள விருப்பம் இல்லை. தனித்துப் போட்டியிட்டால் தனக்கே வெற்றி வாய்ப்பு என்று ஆம் ஆத்மி கருதுகிறது.மேற்குவங்கம், பஞ்சாப், பீகார், உ.பி.யைத் தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் ‘இந்தியா’ கூட்டணியில் ஒரு குஸ்தி ஏற்பட வாய்ப்புள்ளது. அங்கே தேசியவாத காங்கிரசும், சிவசேனையும் என்ன நினைப்பில் இருக்கிறது என்பது தெரியவில்லை.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் கூட்டாக நடத்த திட்டமிடப்பட்டிருந்த ‘இந்தியா’ கூட்டணியின் பேரணி இறுதிவரை நடைபெறவே இல்லை. அதற்கான வாய்ப்பு ஏற்படவே இல்லை.
சரி. இறுதியாக தமிழகத்துக்கு வருவோம். 1991ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளுக்கு மேல் வென்றதே இல்லை. எனவே ‘இந்தியா’ கூட்டணிக்கு தமிழகமும் அக்னிப் பரீட்சை யாக இருக்கவே வாய்ப்பு அதிகம்.கூட்டிக்கழித்துப் பார்த்தால் ‘இந்தியா’ கூட்டணி பெரும் சிக்கலில் இருக்கிறது என்பது மட்டும் உண்மை.
என்.ஆனந்தி
|