யார் இந்த ஷமர் ஜோசப்?



சர்வதேச கிரிக்கெட்டில் ஹீரோவாக மாறியிருக்கிறார் வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் வேகப் பந்து வீச்சாளரான ஷமர் ஜோசப். ஆஸ்திரேலியாவுடனான அறிமுகத் தொடரிலேயே மேன் ஆஃப் த சீரிஸ் விருதினைப் பெற்றதால் அவருக்கு இந்தப் புகழாரம் கிடைத்திருக்கிறது. இத்தனைக்கும் கடந்த 2023ம் ஆண்டுதான் முதல்தர கிரிக்கெட் போட்டிக்குள்ளேயே வந்தார் ஷமர். இத்தனை சீக்கிரத்தில் அவரின் வளர்ச்சி அனைவரையும் வியக்க வைத்துள்ளது.  

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் விளையாட ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டது. இதில் டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம்பிடித்தார் வெஸ்ட் இண்டீஸின் ஷமர் ஜோசப்.
முதல் போட்டியில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 133 ரன்களுக்கு ஒன்பது விக்கெட்டுகளை இழந்து தவித்தது. அப்போது 11வது வீரராக களம் இறங்கிய ஷமர், 41 பந்துகளுக்கு 36 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தி கௌரவப்படுத்தினார். அத்துடன் ஐந்து விக்கெட்டுகளும் வீழ்த்தினார். இதிலும் அவரின் முதல் ஓவரின் முதல் பந்திலேயே ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் ஸ்மித்தை ஆட்டமிழக்கச் செய்தார்.

இந்த முதல் டெஸ்ட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோற்றது. பின்னர் இரண்டாவது நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் எட்டு விக்கெட்டுகள் எடுத்தார் ஷமர் ஜோசப். குறிப்பாக, இரண்டாவது இன்னிங்ஸில் மட்டும் 7 விக்கெட்டுகள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதனால் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.

கடந்த 1997ம் ஆண்டுதான் ஆஸ்திரேலியா மண்ணில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ். அதன்பிறகு இப்போதுதான் அந்த சம்பவம் நடந்திருக்கிறது. இதனாலும் ஷமர் ஜோசப் பாராட்டப்படுகிறார். அதுமட்டுமல்ல. பகலிரவு பிங்க் நிற பந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா தோற்றதும் இதுவே முதல்முறை. இதற்குமுன் 11 போட்டியிலும் அந்த அணி வெற்றி பெற்றிருந்தது.

சரி, யார் இந்த ஷமர் ஜோசப்?

கயானா நாட்டிலுள்ள பராகரா எனும் சிறிய கிராமத்தில் 1999ம் ஆண்டு பிறந்தவர் ஷமர் ஜோசப். ஐந்து சகோதரர்கள், மூன்று சகோதரிகள் எனப் பெரிய குடும்பத்தைக் கொண்டவர். அவரின் கிராமத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் இரண்டு நாள் கஞ்சே என்ற நதியில் படகு சவாரி செய்ய வேண்டும். அவரின் ஆரம்பகால வாழ்க்கை அங்கேதான் கழிந்தது. 

தனது தந்தை மற்றும் சகோதரர்களுடன் சேர்ந்து மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டார் ஷமர். அங்கிருந்து டிம்பர்களை கஞ்சே நதி வழியே நியூ ஆம்ஸ்டர்டாம் நகருக்குக் கொண்டு போவார். அவர் ஊரில் 2018 வரை டெலிபோன், இன்டர்நெட் வசதிகள் எதுவும் கிடையாது.

இதற்கிடையே அவருக்கு ஒரே பொழுதுபோக்கு டேப் பால் கிரிக்கெட் ஆடுவதுதான். டென்னிஸ் பந்தில் டேப் சுற்றி அதில் கிரிக்கெட் ஆடுவார். அவர் ஊரில் டிவி ரொம்ப அரிதானது. ஆனால், வெஸ்ட் இண்டீஸின் ஆம்புரோஸ் மற்றும் வால்ஷின் வேகப்பந்து வீச்சுகளின் ஹைலைட் ரீல்ஸ்களைப் பார்த்து கிரிக்கெட்டில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார்.

இப்படியிருந்த நேரம் ஒருமுறை அவர் மீது மரம் விழுந்து தாக்க, பராகராவிலிருந்து நியூ ஆம்ஸ்டர்டாம் நகருக்கு வேறு வேலை தேடிச் சென்றார். அங்கே காப்பாளராகப் பணியாற்றினார். இருந்தும் கிரிக்கெட் மீதான காதலால் அதிலிருந்து விலகி முழுநேரப் பயிற்சியில் ஈடுபட்டார்.

கடந்த பிப்ரவரி 2023ல் கயானா ஹார்பி ஈகிள்ஸ் அணிக்காக முதல் தர கிரிக்கெட்டை விளையாடத் தொடங்கினார். இதில் மூன்று போட்டிகளில் ஒன்பது விக்கெட்டுகள் எடுக்க, வெஸ்ட்இண்டீஸ் தேர்வாளர்களின் கவனத்திற்குள் வந்தார். பிறகு, தென்ஆப்ரிக்கா சென்ற வெஸ்ட்இண்டீஸ் ஏ அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதிலும் தனது திறமையைக் காட்டி விக்கெட்டுகளைக் குவிக்க, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு வெஸ்ட்இண்டீஸ் அணியில் சேர்க்கப்பட்டார் ஷமர். இதிலும் தனது முத்திரையை பதித்து உலகக் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிட்டார் 24 வயதே நிரம்பிய ஷமர் ஜோசப்.

பேராச்சி கண்ணன்