மிடில் க்ளாஸ் வெகேஷன்!
பிடித்த பாடலை உங்களது செல்போன் திரையில் பார்த்துக்கொண்டோ, நல்ல தரமான சவுண்ட் சிஸ்டம் கொண்ட இயர்போனில் கேட்டுக்கொண்டே புதுச்சேரி நோக்கி பயணியுங்கள். நீங்கள் சென்னையில் இருப்பவராக இருந்தால் அதிகபட்சம் 4 மணிநேரம். தமிழகத்தின் வேறு பகுதியாக இருந்தால் அதற்கேற்ற நேரத்தை கால்குலேட் செய்துகொள்ளுங்கள்.எப்படிப் பார்த்தாலும் இன்றிரவு கிளம்பினால் நாளை காலைக்குள் அடைந்துவிடலாம் புதுச்சேரியை. பல லட்சங்களை செலவு செய்து வெளிநாடுகளுக்கு சென்று நீங்கள் பெறும் அனுபவத்தில் ஏறக்குறைய பாதியளவையாவது புதுச்சேரியில் பெற்றுவிடலாம்.ஃபிரெஞ்சுக்காரர்கள் ஆண்ட பிரதேசம் என்பதால் அவர்களின் ஸ்டைலில் எழும்பி நிற்கும் கம்பீரமான கட்டடங்கள், மஞ்சள் நிற பூக்கள் உதிர்ந்துகிடக்கும் நேர் நேரான வீதிகள், கற்பாறைகளில் அலைகள் மோதும் அழகான கடற்கரை... என பல ஸ்பெஷல்களை தமக்குள் பொதிந்து வைத்திருக்கும் புதுச்சேரி, சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபூமியாகவே திகழ்ந்து வருகிறது.
 புதுச்சேரி என்று நாம் டைப் செய்தாலே அங்குள்ள ராக் பீச், அரவிந்தர் ஆஸ்ரமம், பேரடைஸ் தீவு, பாண்டி மெரினா என பல சுற்றுலாத்தலங்கள் குறித்த விபரங்கள் வந்து கொட்ட ஆரம்பிக்கும்.இந்த வரிசையில் தற்போது அதிகம் டிரெண்டிங்காகி வருவது மாங்குரோவ் போட்டிங்தான்.மாங்குரோவ் படகு சவாரிக்கு இந்திய அளவில் பெயர் போன இடம் கடலூர் மாவட்டத்தில் உள்ள பிச்சாவரம். இங்கு ஏக்கர் கணக்கில் நீண்டிருக்கும் சதுப்புநிலக் காடுகள் இடையே இயக்கப்படும் படகு சவாரி உலகளவில் பிரசித்தம்.

எம்ஜிஆரின் ‘இதயக்கனி’ கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி, ‘காதலே நிம்மதி’ படத்தில் இடம்பெற்ற ‘கங்கை கங்கை நதியே...’ பாடல், ‘துப்பறிவாளன்’ படத்தில் விஷால் - வினய் மோதிக்கொள்ளும் த்ரில்லிங்கான சேசிங் காட்சி என பல புகழ்பெற்ற காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டிருக்கின்றன.
உலகின் இரண்டாவது பெரிய சதுப்புநிலக்காடு என்ற புகழையும் பெற்றிருக்கும் இந்த பிச்சாவரத்திற்கே டஃப் கொடுத்துக் கொண்டிருக்கிறது புதுச்சேரியின் மாங்குரோவ் போட்டிங்.அதிலும் பழங்காலத்தில் ரோமானியர்களுடன் நேரடி வர்த்தகத்தில் ஈடுபட்ட அரிக்கமேடு அகழாய்வுத் தளத்தைக் கண்டு ரசிக்கும் வகையில் இந்த படகு சவாரி அமைந்திருப்பதுதான் வெரி ஹைலைட்! இந்த ஏரியா அவ்ளோ ஸ்பெஷலா என்கிறீர்களா?
ஆமாம். கடலூர் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையின் குறுக்காக ஏராளமான ஆறுகள் பாய்ந்து செல்கின்றன. தமிழகத்தில் உற்பத்தியாகும் சங்கராபரணி, மலட்டாறு என பல ஆறுகள் புதுச்சேரி பகுதியில் கடலில் சங்கமிக்கின்றன.
அத்தகைய ஓர் ஆறுதான் அரியாங்குப்பம் ஆறு. உப்பனாறு என அழைக்கப்படும் இந்த ஆறு புதுவை அரியாங்குப்பம் - முருங்கப்பாக்கம் பகுதிகளுக்கு இடையே பயணித்து தேங்காய்த்திட்டு பகுதியில் கடலில் கலப்பதால் அரியாங்குப்பம் ஆறு என்றும் முருங்கப்பாக்கம் ஆறு என்றும் இதை அழைக்கிறார்கள். இதில் நாம் மூன்றாவதாக ஒரு பெயரை வைக்கலாம். அந்தப் பெயர் அரிக்கமேடு ஆறு. மிகப் பொருத்தமானதாகவும், உலகளவில் புகழ்மிக்கதாகவும் இந்தப் பெயர் நாளடைவில் மாறலாம்.
கிழக்கு மேற்காக பாய்ந்து வரும் இந்த ஆறு கடலூர் நெடுஞ்சாலையைக் கடந்து சிறிது தூரம் பயணித்து வடக்குப்புறமாக வளைந்து செல்லும். இந்த வளைவுப்பகுதியின் கரைதான் அரிக்கமேடு.
இப்போது மாமரங்களும், இன்னபிற புதர்ச்செடிகளும் நிரம்பிக் காட்சியளிக்கும் இந்த மேட்டு நிலத்தில் ஒரு காலத்தில் பல்வேறு விலையுயர்ந்த மணிகள் தயாரிக்கப்பட்டு ரோமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் மிஞ்சிய அடையாளங்களைப் பார்த்து வரும் வகையில் ஒரு ஜாலி படகுப்பயணம் என்றால் அது ஸ்பெஷல்தானே!
வேற என்னெல்லாம் இருக்கு?
மாங்குரோவ் போட்டிங் துவங்கும் இடமே ஒரு கலைநயம் மிக்க இடமாக இருக்கும். இதன் பெயரே கலை மற்றும் கைவினை கிராமம்.புதுச்சேரியில் புகழ்பெற்று விளங்கும் டெரகோட்டா சிற்பங்கள், களிமண் பாண்டங்கள், கைத்தறி ஆடைகள், கண்கவர் ஓவியங்கள் என கலைப்பொருட்களும், கைவினைப் பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த மையத்தின் வழியாகச் சென்று, அந்த வளாகத்திலேயே நமது வாகனத்தை பார்க்கிங் செய்துவிட்டு, உள்ளே சென்றால் மாங்குரோவ் போட்டிங் நம்மைக் குளிர்ச்சியோடு வரவேற்கும்.
ஆற்றின் கரையோரத்தில் சுற்றிலும் அலையாத்தி மரங்கள் நிழல் பரப்பி இருக்க, மரப்பலகைகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ள நடைமேடை வழியாக உள்ளே சென்றால் படகுத்துறை வந்துவிடும்.என்ட்ரன்சில் டிக்கெட் வாங்கிக்கொள்ளலாம். ஆன்லைனிலும் டிக்கெட் புக் செய்யலாம். ஒருவருக்கு ரூ.500 முதல் 700 வரை டிக்கெட் வசூலிக்கப்படுகிறது. குழந்தைகள் என்றால் கொஞ்சம் விதிவிலக்கு தருகிறார்கள்.
சாதாரண நாட்களில் ஆட்கள் வர கொஞ்சம் தாமதம் ஆகும். சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள் என்றால் உடனுக்குடன் படகு நிறையும்.படகு நிறைந்தால் குஷியோடு ஆரம்பித்துவிடும் நமது படகுப்பயணம்.
ஆற்றின் இருபுறமும் வளர்ந்து நிற்கும் தென்னை உள்ளிட்ட நெடுமரங்கள் நாம் கேரளாவிலோ அல்லது தாய்லாந்து போன்ற வேறு ஒரு நாட்டிலோ பயணிக்கிறோம் என்ற உணர்வை நமக்கு நிச்சயம் கடத்தும். அந்த உணர்வோடு ஏறக்குறைய 20 நிமிடப் பயணத்தில் அரிக்கமேடு படகுத்துறைக்கு சென்றுவிடலாம்.
நெடுஞ்சாலையில் 10 நிமிடம் பஸ் நிற்கும் என்பது போல நமக்கு படகோட்டி ஒரு அறிவிப்பைத் தருவார். இங்குள்ள படகோட்டிகள் டூரிஸ்ட் கைடுகளாகவும் செயல்படுவார்கள். சுற்றுலா வருபவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழ் தெரியாதவர்கள் என்பதால் ஆங்கிலத்தில் அறிவிப்பைத் தருவார்.
அரிக்கமேடு குறித்த அரிய தகவல்களை நமக்கு பகிர்ந்துகொண்டே சில இடங்களைச் சுற்றிக் காட்டுவார். அரிக்கமேடு குறித்து ஏற்கனவே அறிந்து வரும் சுற்றுலாப் பயணிகள் அந்த நிலத்தின் எஞ்சிய அடையாளங்களோடு வாஞ்சையாக நின்று புகைப்படம் எடுத்து மகிழ்வதில் அலாதி ஆனந்தம் பெறுகிறார்கள்.
அரிக்கமேடு சைட் சீயிங் முடித்துவிட்டு, ஆற்றின் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தங்கள் படகுகளைக் கண்டுபிடித்து ஏறுவதே கொஞ்சம் சவாலான டாஸ்க்காக இருக்கும். அந்தளவுக்கு ஏராளமான படகுகள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். சுற்றுலாப் பயணிகளும் வரிசை கட்டி தங்கள் படகில் ஏறி இடம் பிடிப்பார்கள்.
ரோமுக்கு மணிகளுடன் சென்ற பழங்கால கப்பல் பிரயாணக் கற்பனையோடு ஆரம்பிக்கும் நமது பயணம் பிச்சாவரம் போலவே அலையாத்திக் காடுகள் நெருக்கமாக இருக்கும் பகுதிக்குச் சென்று வட்டமடித்து மீண்டும் திரும்பி வரும்.இதுவரை குஷி மற்றும் கொண்டாட்டப் பயணம். அடுத்ததாக ஆரம்பிப்பது த்ரில்லிங் பயணம். அமைதியான நதியினிலே ஓடம் என்பது போல நமது மகிழ்ச்சியான மொமண்ட்களைச் சுமந்து செல்லும் படகு தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகம் வழியாக கடலின் முகத்துவாரத்திற்குச் சென்று நமது ரத்த ஓட்டத்தைக் கொஞ்சம் எகிறச் செய்யும்.கடலும் ஆறும் சங்கமிக்கும் அந்த முகத்துவாரப் பகுதியில் படகு நான்கைந்து ரவுண்ட் அடித்து நமக்கு வேற லெவல் அனுபவம் ஒன்றைக் கிடைக்கச் செய்யும்.
படகைச் செலுத்துபவர்கள் அனுபவம் மிக்க மீனவர்கள் என்பதால் பாதுகாப்பாகவும், த்ரில்லிங்காகவும் இந்தப் பயணத்தை நமக்கு மாற்றித் தருகிறார்கள்.அதன்பிறகு நமது பயணம், அடுத்த பயணம் எப்போது நிகழும் என்ற ஏக்கத்தோடு கலை மற்றும் கைவினை கிராமத்தை நோக்கி திரும்ப ஆரம்பிக்கும்!
சேஃப்டி ஃபர்ஸ்ட்
‘‘எங்களை நம்பி பயணிகள் வருகிறார்கள். அவர்களுக்கு த்ரில்லிங்கான அனுபவத்தைத் தரும் அதேவேளையில் பாதுகாப்புக்கும் உறுதுணையாக இருக்கிறோம்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் லைஃப் ஜாக்கெட் வழங்குகிறோம். படகில் ஏறியவுடன் அதை நிச்சயம் அணிய வேண்டும்.
அரிக்கமேட்டின் சிறப்புகள் குறித்து வெளியூர்க்காரர்களுக்கு தெரிவிக்கும் நாங்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்தும் வலியுறுத்துகிறோம். பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை உள்ளே கொண்டு செல்லக்கூடாது என்பதை ஸ்ட்ரிக்டாக சொல்லிவிடுகிறோம்...’’ என்கிறார் படகு உரிமையாளரான குபேந்திரன். மாங்குரோவ் போட்டிங்கின் வரலாறு
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு கலை மற்றும் கைவினை கிராமம் அமைக்க திட்டமிட்டபோது அரியாங்குப்பம் ஆற்றில் படகு இயக்கலாம் என்ற எண்ணம் உருவானது.
அந்த எண்ணம் செயல்வடிவம் பெற்றபோது வரவேற்பு கொஞ்சம் குறைவாகத்தான் இருந்தது. ஆனால், இப்போது பயணிகள் காத்திருந்து படகில் ஏறும் நிலை உருவாகி இருக்கிறது. கைவினை கிராமம் மட்டுமின்றி புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சுற்றுலாத்தலமான பாண்டி மெரினா பகுதியில் இருந்தும் படகுகள் இயக்கப்படுகின்றன.
இதையும் மிஸ் பண்ணாதீங்க!
போட்டிங் செல்பவர்கள் மிஸ் பண்ணக்கூடாத இடங்களில் ஒன்று கலை மற்றும் கைவினை கிராமம். இங்கு கருங்கல்லில் பொறிக்கப்பட்டு வண்ணம் தீட்டப்படும் விலங்கு, பறவைகளின் சிற்பங்கள் இந்தியாவின் பல்வேறு பூங்காக்கள், மிருகக்காட்சிச் சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. பத்மஸ்ரீ விருது பெற்ற சுடுமண் சிற்பக்கலைஞரான டெரகோட்டா முனுசாமி என்பவரின் ஆக்கங்களும் இங்கிருந்து வெளிநாடு உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
செய்தி:அ.உ.வீரமணி
படங்கள்:ஆர். முபாரக் ஜான்
|