96 வயதில் பத்மஸ்ரீ விருது!
சமீபத்தில் கலைத்துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக பீமவ்வா தொட்டபாலப்பா ஷிலேக்யதாரா என்ற பெண்மணிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டதுதான் சமூக வலைத்தளங்களில் ஹாட் நியூஸ். காரணம், பீமவ்வாவின் வயது 96. இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீயைப் பெற்றதிலிருந்து, பீமவ்வாவின் புகழ் இந்தியா முழுவதும் பரவியிருக்கிறது.
 மட்டுமல்ல, இந்தியாவின் முதல் பெண் பொம்மலாட்டக் கலைஞராக பீமவ்வாதான் இருக்கக்கூடும் என்கின்றனர். ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்கா, இத்தாலி, ஃபிரான்ஸ், ஈராக், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, சவுதி அரேபியா போன்ற நாடுகளிலும் பொம்மலட்டத்தை நிகழ்த்தி, பாராட்டுகளை அள்ளியிருக்கிறார்.
யார் இந்த பீமவ்வா?
கர்நாடகாவில் உள்ள கொப்பல் எனும் மாவட்டத்தில் அமைந்திருக்கும் மொரனலா கிராமத்தில், 1929ம் வருடம் பிறந்தவர், பீமவ்வா. நூறு வருடங்களுக்கு மேலாக தொகலு கோம்பேயாட்டா எனும் பொம்மலாட்டத்தைப் பாதுகாத்து வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் இவர்.
கர்நாடகாவைச் சேர்ந்த தனித்துவமான பொம்மலாட்டம்தான், தொகலு கோம்பேயாட்டா. தோலினால் செய்யப்பட்ட பொம்மைகளை வைத்து நிகழ்த்தப்படும் நிழல் பொம்மலாட்டம் இது. இதிகாசங்களையும், நாட்டுப்புறக்கதைகளையும் சொல்வதற்காக இந்த பொம்மலாட்டத்தைப் பயன்படுத்துகின்றனர். தென்னிந்தியாவில் உருவான இக்கலை வடிவம் இலங்கை, இந்தோனேஷியா என மற்ற ஆசிய நாடுகளுக்கும் பரவியது.
ஆயிரம் வருடங்களுக்கு மேலாக பழமையான கலைவடிவமான நிழற் பொம்மலாட்டம் அழிவின் விளிம்பில் உள்ளது. இன்றைய தேதியில் நிழற் பொம்மலாட்டத்தைப் பாதுகாத்து வருகிறவர்களில் முதன்மையானவர், பீமவ்வாதான்.
ஆம்; நிழற் பொம்மலாட்டக் கலையில் முடிசூடா ராணியாக, 80 வருடங்களுக்கு மேல் வலம் வருகிறார், பீமவ்வா. மட்டுமல்ல, கர்நாடகா இளைஞர்களுக்கு நிழற் பொம்மலாட்டத்தைக் கற்றுக்கொடுத்து, அடுத்த தலைமுறைக்கும் கடத்துகிறார். உண்மையில் கர்நாடகாவில் நிழற் பொம்மலாட்டம் பற்றிய விழிப்புணர்வுக்கு முக்கிய காரணமே பீமவ்வாதான்.
மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த பீமவ்வா, தனது 14 வயதிலேயே குடும்பத் தொழிலான நிழற் பொம்மலாட்டத்தை நிகழ்த்த ஆரம்பித்துவிட்டார். பள்ளிப் பக்கம் கூட செல்லாத பீமவ்வாவுக்குபொம்மலாட்டத்தின் மூலம் இராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட இதிகாசங்களும், பழங்கதைகளும் அத்துப்படி.
ஆம்; அவரது குடும்பத்தினர் நிகழ்த்துகிற பொம்மலாட்டங்களைப் பார்த்து இந்தக் கதைகளை எல்லாம் கற்றுக்கொண்டார். இருபது வயதுக்குள்ளேயே பீமவ்வாவுக்கு இந்தியாவின் முக்கியமான இதிகாசங்கள், நாட்டுப்புறக்கதைகள் எல்லாம் தெரியும். சிறுவயதில் தனது கிராமத்தில் மட்டுமே பொம்மலாட்டத்தை நிகழ்த்திய பீமவ்வா, படிப்படியாக முன்னேறி பக்கத்து ஊர்களிலும் நிகழ்த்தினார். அப்போது இந்தியாவிலேயே நிழற் பொம்மலாட்டத்தை நிகழ்த்திக் கொண்டிருந்த ஒரே பெண் கலைஞர் பீமவ்வாதான். பெண் ஒருவர் பொம்மலாட்டத்தை நிகழ்த்துகிறார் என்பதற்கு எதிர்ப்புக்குரல்களும் கிளம்பின. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருந்தார்.
கர்நாடகாவில் தொகலு கோம்பேயாட்டா என்றாலே பீமவ்வா என்று பொருள் என்கிற அளவுக்கு அவரது பெயர் பதிவானது. அந்தளவுக்கு நிழற் பொம்மலாட்டத்தை மாநிலம் முழுவதும் கொண்டு சேர்த்தார்.
பீமவ்வாவிற்கு மற்ற வகையிலான பொம்மலாட்டங்களைவிட, தோல் பொம்மைகளை வைத்து நிழற் பொம்மலாட்டத்தை நிகழ்த்துவது மீதுதான்பெருங்காதல். இராமாயணம், மகாபாரதம், பழங்கதைகளைத் தனது பாணியில் புதுவிதமாக நிழற் பொம்மலாட்டத்தின் மூலமாகச் சொல்வது அவரது தனிச்சிறப்பு.
பீமவ்வாவின் இராமாயணஅல்லது மகாபாரத நிழற் பொம்மலாட்டத்தை ஒருமுறை பார்த்தாலே போதும். இராமாயணமும், மகாபாரதமும் நம் வாழ்க்கையில் மறக்காது என்கின்றனர்.
இடையிடையே புராணக்கதைகளைக் கலப்பது, இசை, அசாத்தியமான பொம்மலாட்ட நகர்வுகள் போன்றவை பீமவ்வாவின் பொம்மலாட்ட முத்திரைகள். அந்தக் காலத்தில் போக்குவரத்து வசதிகள் இல்லையென்பதால், பல ஊர்களுக்கு நடந்து சென்று, அங்கேயே தங்கியிருந்து நிழற் பொம்மலாட்டத்தை நிகழ்த்தியிருக்கிறார்.
குறைவான பார்வையாளர்கள், பொம்மலாட்டம் நிகழ்த்துவதற்கான சரியான வசதியின்மை உள்ள இடங்களில்கூட முழு அர்ப்பணிப்புடன் பொம்மலாட்டத்தை நிகழ்த்தியதால்தான் மக்கள் மனதில் பீமவ்வாவிற்கு இடம் கிடைத்தது. பெரிதாகப் பணம் வாங்காமல், கொடுப்பதை வாங்கிக்கொண்டு ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகளை நிகழ்த்தியிருக்கிறார். தொகலு கோம்பேயாட்டாவைப் பாதுகாப்பதும், அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும்தான் பீமவ்வாவின் வாழ்க்கையாகவே இருந்திருக்கிறது.
மட்டுமல்ல, பீமவ்வா கிராமம் கிராமமாகச் சென்று பொம்மலாட்டத்தை நிகழ்த்தும்போது, அது உள்ளூரில் வசிக்கின்ற கலைஞர்களுக்கு உந்துதலை அளித்திருக்கிறது.
நொடிந்துபோயிருந்த உள்ளூர் கலைஞர்களும் உற்சாகமாக தங்களின் கலைச் செயல்பாடுகளில் ஈடுபட ஆரம்பித்தனர். இதனால் காணாமல் போகவிருந்த கலைஞர்களும், கலைகளும் உயிர் பெற்றன. பீமவ்வாவின் கலைச்சேவை பயணம் தொடர்கிறது.
த.சக்திவேல்
|