அதிமுகவின் அலட்சியத்தால் தமிழக மாணவர்கள் பாதியிலேயே படிப்பை நிறுத்துகிறார்கள்!
அண்மையில் 5, 8ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டது. எதிர்ப்புக்கு முக்கிய காரணமாக, மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு நடத்தினால் இடைநிற்றல் - பாதியில் படிப்பை நிறுத்துவது - அதிகரிக்கும் என்று கூறப்பட்டது.ஆனால், பொதுத் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பதற்கு முன்பிருந்தே இங்கு மாணவர்கள் பாதியில் படிப்பை நிறுத்துவது அதிகரித்து வருகிறது!
இந்த அதிர்ச்சிகரமான உண்மையை சொல்லியிருப்பது சமூக ஆய்வாளர்களோ எதிர்க்கட்சிகளோ அல்ல. மத்தியில் ஆளும் பாஜக அரசுதான்! இந்தச் சூழலில் தமிழகத்தில் மாணவர்களின் இடைநிற்றல் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது.
மாணவர்கள் இடைநிற்றல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி.க்கள் சுதாகர் துகாராம், பிபி சவுத்ரி ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால், தேசிய அளவில் இடைநிலைப் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் 2015 - 16ம் ஆண்டுகளில் 8.1% ஆக இருந்தது, 2016 - 17ம் ஆண்டுகளில் 10% ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான், கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் மாணவர்களின் இடைநிற்றல் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், தமிழகத்தைப் பொறுத்தவரை ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களின் இடைநிற்றல் 100% அதிகரித்துள்ளதாக சொல்லியிருக்கிறார். அதாவது 2015 - 16ம் ஆண்டில் இடைநிற்றல் 8% ஆக இருந்த நிலையில் 2017 - 18ம் ஆண்டில் 16.2% ஆக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.இதனை அடுத்து திமுக தலைவர் ஸ்டாலின், முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பியிருக்கிறார்:
“அதிமுக ஆட்சியில் ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை அனைத்து மட்டத்திலும் பள்ளிக் கல்வித் துறையானது கீழிருந்து மேல்வரை எந்த அளவுக்கு சீரழிந்துள்ளது என்பதையே இது காட்டுகிறது.அதாவது, தமிழகத்தில் இடைநிற்றல் இரு மடங்காக (8ல் இருந்து 16.2 %) அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், இடைநிற்றல் 2015 - 16ல், 3.76%, 2016 - 2017ல் 3.75%, 2017 - 18ல் 3.61 % என்று தமிழகத்தில் குறைந்துள்ளதாக சட்டமன்றத்தில் வைத்த கொள்கை விளக்கக் குறிப்புகளில் அதிமுக தெரிவித்துள்ளது. அப்படியானால் யார் சொல்வது உண்மை..? மத்திய அரசா அல்லது அதிமுகவா..?’’ என்று கேள்வியை எழுப்பியுள்ளார்.இந்நிலையில் “இடைநிற்றலுக்குக் காரணம், பள்ளிக்கு உள்ளேயும் - வெளியேயும் இருக்கிறது. அதேபோல் பாடம் சார்ந்தும் - சாராமலும் இருக்கிறது...” என்று விரிவாகச் சொல்கிறார் கல்வியாளர் மாடசாமி:
“2017ம் ஆண்டில் பள்ளிக்கு வெளியே இடைநிற்றல் அதிகமாகியிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் 2016ம் ஆண்டு அமல் படுத்தப்பட்ட பண மதிப்பிழப்பால் ஏற்பட்ட பொருளாதார மந்தமும், வேலையில்லாத் திண்டாட்டமுமே.எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் குடியுரிமை திருத்தச்சட்டம், ராமர் கோயில் என்று வாய் சவடால் விட்டபடி மத்திய அரசு நாட்டை ஆள்கிறது. 60 ஆண்டு காலமாக அரசியலை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். இவ்வளவு மோசமான ஓர் அரசை என் வாழ்நாளில் இதுவரை பார்க்கவேயில்லை...’’ என்ற மாடசாமி, பெருமூச்சுடன் தொடர்ந்தார்:
‘‘பட்ஜெட்டிலும் கல்விக்கான தொகையை மாநிலங்களுக்கு ஒதுக்குவது குறைந்து கொண்டே வருகிறது. ஒதுக்கப்படும் குறைந்த அளவு நிதியையும், ஐஐடி போன்ற நிறுவனங்களுக்குத்தான் அதிகமும் செலவிடச் சொல்கிறார்கள். அரசுப் பள்ளிகள், ஏழைகள் பயிலும் பள்ளிகளை மேம்படுத்த எந்த திட்டமும் இவர்கள் வகுக்கவில்லை.
2017க்குப் பின் பெருமளவு சீரழியத் தொடங்கிய மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. இங்கு உறுதியான கல்விக் கொள்கையும், அரசுப் பள்ளிகள் மீதான அக்கறையும் கிடையாது. இங்குள்ள அரசு, மாநில நலனைக் கருத்தில் கொள்ளாமல் மத்திய அரசுக்கு சாதகமாகவே எல்லா முடிவுகளையும் எடுக்கிறது. இதற்கு மத்திய அரசைப் பார்த்து அதிமுக அரசு அச்சப்படுவதே காரணம். இந்தியாவில் வேறெந்த மாநிலமும் இப்படி நடந்து கொள்ளவில்லை. ஒரு காலத்தில், தமிழகத்தில் இடைநிற்றல் என்பது குறைவாக இருந்தது.
அந்நிலை மாறி இன்று இடைநிற்றலில் முதலிடத்தில் இருக்கிறது. நிச்சயமாக இதற்கு மாநிலத்தை ஆளும் அதிமுக அரசுதான் காரணம்...’’ அழுத்தம்திருத்தமாகச் சொல்லும் மாடசாமி, பொருளாதாரத்தை அடுத்து பண்பாடும் ஒரு பிரச்னையாக உள்ளது என்கிறார்: “1930 ஏப்ரல் 1ம் தேதி இந்தியாவில் ‘சாரதா சட்டம்’ அமலானது. ஆங்கிலேயர்கள் எடுத்த சர்வேயில் குழந்தையிலேயே மணமானவர்களின் எண்ணிக்கை அன்று 8 லட்சமாக இருந்துள்ளது. அதில் 8 வயதுக்கும் கீழ் விதவையானவர்கள் 4 லட்சம் பேர்!
இதைக் கணக்கில் கொண்டு பெண்ணின் திருமண வயதை 14 என நிர்ணயித்து சட்டம் இயற்றினார்கள். இந்த அவலம் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் முற்றிலுமாக அகலவில்லை. 2001ம் ஆண்டு எடுக்கப்பட்ட சென்சஸில், 10 வயதுக்குக் கீழ் 2 லட்சத்து 50 ஆயிரம் விதவைகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
2012ம் ஆண்டு ராஜஸ்தானில் பத்திரிகையாளர்கள் பள்ளி பள்ளியாகச் சென்று வகுப்பு வகுப்பாகப் பார்த்தார்கள். அப்போது ஐந்து வயதுக் குழந்தைகளில் பலர் மணமானவர்களாக இருந்ததைக் கண்டு அதிர்ந்தார்கள். இது இந்தியாவின் சாபக்கேடு. பெண் குழந்தைகள் இடைநிற்றலுக்கு முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று...’’ வேதனையுடன் குறிப்பிடும் மாடசாமி, அரசுப் பள்ளிகளில்தான் இடைநிற்றல் அதிகமாக நிகழ்கிறது என்கிறார்: ‘‘நாங்கள் படித்த காலத்தில் வகுப்புக்கு ஓர் ஆசிரியர் இருந்தார். ஆனால், இப்போது 70% அரசுப் பள்ளிகளில் மொத்தமாக இரண்டே இரண்டு ஆசிரியர்கள்தான் இருக்கிறார்கள். ஆசிரியர்களே இல்லாத வகுப்பறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக தமிழகத்தில்! அரசுப் பள்ளிகளில் ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளும் ஒன்றாகப் படிக்கிறார்கள்.
இப்படிப்பட்ட சூழலில் பெண் குழந்தைகளுக்கு என தனியாக கழிப்பறைகள் இருக்க வேண்டியது அவசியமல்லவா..? ஆனால், பெரும்பாலும் இருப்பதில்லை என்பதுதான் முகத்தில் அறையும் நிஜம். இதற்காகவே பல பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை அரசுப் பள்ளிகளுக்கு அனுப்பத் தயங்குகிறார்கள். போலவே பெண் பிள்ளைகள் நடந்து வரும் வழியில் டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் இருக்கின்றன. இதை தடுக்கும்படி அனைத்து பெற்றோர்களும் பல வருடங்களாக கதறி வருகிறார்கள். அதிமுக அரசு இதை பொருட்படுத்தாமலேயே இருக்கிறது.
அரசாங்கம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி இந்தியாவில் ஒரு லட்சம் குழந்தைகள் ஆண்டுதோறும் கடத்தப்படுகிறார்கள். இவர்களில் 70% பெண்கள்...’’ ஆற்றாமையுடன் சொல்லும் மாடசாமி, இடைநிற்றலுக்கு பாடத் திட்டங்களும் ஒரு காரணம் என்கிறார்: ‘‘மத்தியதர வர்க்கத்தை திருப்திப்படுத்தும் வகையிலேயே பாடத் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. 15 ஆண்டுகளுக்கும் மேலாக பாடக்குழுவில் இருக்கிறேன். 2011ம் ஆண்டு திமுக ஆட்சியில் தங்கம் தென்னரசு கல்வி அமைச்சராக இருந்தார். அப்போது சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன் வழியாக பாடத்திட்டங்களை எளிமைப்படுத்தினோம்.
அப்போது, ‘இது மலிவு விலையில் கிடைக்கும் வாழைப்பழம் போல் உள்ளது’ என்றார் ஒரு விமர்சகர். அது அவருடைய கருத்து மட்டுமல்ல... நமது பெற்றோர், ஆசிரியர்களின் மனோபாவமும் அதுதான். பாடம் என்றால் குவாலிட்டியாக இருக்க வேண்டும். குவாலிட்டி என்றால் கடினமாக இருக்க வேண்டும். எதைப் படிக்க பள்ளிக் குழந்தைகள் சிரமப்படுகிறார்களோ அதுவே தரமானது - குவாலிட்டியானது என்ற எண்ணம் இங்குள்ள பெரும்பாலான பெற்றோர்களிடம் உள்ளது.
அமெரிக்கா போன்ற நாடுகளில் ‘ஃபிளிப்ட் கிளாஸ்’ முறை உள்ளது. அதாவது குழந்தைகளே பாடங்களைப் படித்து அதில் சந்தேகம் கேட்பார்கள். ஆசிரியர் அதை தீர்த்து வைப்பார்; தெளிவுபடுத்துவார். இதுதான் சரி. வெளிச்சம் பாய்ச்சுவதுதான் ஆசிரியரின் வேலை. அடிப்படைத் தகவல்களைத் தருவதல்ல.
ஆனால், தமிழகத்தின் நிலை இன்று என்னவாக இருக்கிறது? போதுமான ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில் இல்லாததால் ஒரே ஆசிரியர் பல பாடங்களை நடத்துகிறார். அவரால் தனி மனிதராக எப்படி அனைத்து மாணவர் நலனிலும் அக்கறை செலுத்த இயலும்? அதனால்தான் இன்று தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்கள், ஆவணப்படுத்தும் அதிகாரிகளாக மாறியுள்ளனர்.
வேலைப்பளு அதிகமாகியுள்ளது. தில்லி, கேரளாவில் எல்லாம் மாநில அரசுகள் பள்ளிக் கல்விக்காக நிதியை ஒதுக்குகின்றன. வகுப்புக்கு ஓர் ஆசிரியர் என்ற நிலையை நோக்கி முன்னேறுகின்றனர். ஆனால், தமிழகத்துக்கு வரும் நிதி அனைத்தும் ஆடம்பரங்களுக்கே செலவு செய்யப்படுகின்றன...’’ என்று சொல்லும் மாடசாமி, அதிகாரமும் அதட்டலும் இல்லாமல் அன்பு நிறைந்த சூழல் பள்ளிகளில் நிலவ வேண்டும் என்கிறார்:
‘‘இது ஆசிரியர்களும் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம். கவுன்சிலிங் என்று ஆரம்பிக்கும் போது இங்கு நிறைய பிரச்னைகள் உண்டு. நீதி நெறி வகுப்புகள் என்பார்கள். இது ஒரு விதமான பித்தலாட்டம். புராணக் கதைகள் சொல்லி, கடவுள் பக்தியோடு இரு என்பார்கள். இது இன்றைய அறிவியல் முன்னேற்றங்களைப் புறக்கணித்துவிட்டு மீண்டும் பழைய காலத்துக்கு இழுத்துச் செல்லும் நடவடிக்கை.
உண்மையில் சரியான முறையில் மாணவர்களுக்கு ஒவ்வொரு ஸ்டேஜிலும் கவுன்சிலிங் அவசியம். ஒரு பெண் குழந்தை, மலர்ந்து பெரிய மனுஷியாகும்போது கட்டாயம் கவுன்சிலிங் தேவைப்படும். அதேபோல் ஆணும் வளரிளம் பருவத்துக்கு நுழையும்போது கவுன்சிலிங் அவசியம். இது குறித்து எந்த அக்கறையும் இல்லாமல்தான் இன்றைய கல்வித்துறை இயங்குகிறது.
பலகட்ட எதிர்ப்புகளுக்குப் பிறகு 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நிறுத்தப்பட்டிருக்கிறது. இது ஒருவகையில் வெற்றிதான். ஆனால், பொதுத் தேர்வை கொண்டு வந்தபோது தமிழக அரசு ஒரு வாதத்தை முன்வைத்தது பாருங்கள்... ‘கல்வியில் தரம்’ என்று... இது குறித்து முதலில் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
‘கல்வியில் தரம்’ என்கிற வார்த்தையை 100 ஆண்டுகளாகவே உலகம் முழுவதும் உள்ள கல்வியாளர்கள் எதிர்த்து வருகிறார்கள். ஏனெனில் தரம் என்பது குழந்தைகள் மீது ஏவப்படும் வன்முறை. ஏற்கனவே கல்வியைக் கைப்பற்றி வைத்திருக்கும் ஒரு குழுவினர், அதைத் தொடர்ந்து அனுபவிப்பதற்கான தந்திரமே தரம் என்னும் சொல். வறுமையில் வாடும் பிள்ளைகள் பள்ளிக்கே வரக் கூடாது... மாறாக, குழந்தைத் தொழிலாளர்களாக மாற வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடே தரமான கல்வி என்னும் வாதம்.
வளர்ந்த நாடுகளில் ஒரேயொரு தேர்வுதான். இந்தத் தேர்விலும் பெறும் மதிப்பெண்கள், உயர் கல்விக்கு உதவாது. குறிப்பிட்ட அந்த மாணவன் எவ்வளவு சமூக சேவை செய்திருக்கிறான், சமூகத்தோடு எந்தளவு கலந்திருக்கிறான், படிப்பைத் தவிர வேறு எந்தத் துறையில் சிறப்பாக விளங்குகிறான்... என்றெல்லாம் பார்த்துதான் உயர்கல்வியில் சேர்க்கிறார்கள்.
இதனால்தான் அங்கு புதிய கண்டுபிடிப்புகளும், அறிவியல் புரட்சிகளும் சாத்தியமாகின்றன.இப்படியொரு நிலை நம் நாட்டில்... குறிப்பாக தமிழகத்தில் வரவேண்டும். ஆனால், இப்படியொரு நிலை / மாற்றம் வந்துவிடக் கூடாது என்றுதான் அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது!’’ என்கிறார் மாடசாமி.
அன்னம் அரசு
|