பயோடேட்டா-புக்ஸ்



எண்ணிக்கை : உலகம் முழுவதும் 13 கோடி தலைப்புகளில் புத்தகங்கள் வெளியாகியிருப்பதாக 2010ல் ‘கூகுளி’ன் ஆய்வு தெரிவித்தது.  ஒவ்வொரு வருடமும் 22 லட்சம் புதிய தலைப்புகளில் புத்தகங்கள் வெளியாவதாக ‘யுனெஸ்கோ’ சொல்கிறது. இதன்படி பார்த்தால் இப்போது 15.6 கோடி தலைப்புகளில் புத்தகங்கள் இருக்க வேண்டும்.

வகைமைகள் : நாவல், கட்டுரை, கவிதை, சிறுகதை, காமிக்ஸ், பாடப்புத்தகங்கள், சுய சரிதை, தத்துவம், கடிதங்கள், பேச்சுக்கள், உரையாடல்கள், டைரிக்குறிப்புகள், நாடகங்கள், குழந்தை இலக்கியம், நினைவுக்குறிப்புகள்... என பல வகைமைகளில் புத்தகங்கள் கிடைக்கின்றன.

மன அழுத்தம் : தினமும் 6 நிமிடங்கள் புத்தகம் வாசிப்பதால் 68 சதவீத மன அழுத்தம் குறைவதாக ‘யுனிவர்சிட்டி ஆஃப் சஸக்ஸ்’ நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. இசையைக் கேட்பது, தேநீர் அருந்துவது, சிறிது நடைப்பயணம் மேற்கொள்வதைவிட வாசித்தல் அதிக ஆசுவாசத்தை மனதுக்கு வழங்குவதாகச் சொல்கிறது அந்த ஆய்வு.

நீண்ட தலைப்பு: 3,777 வார்த்தைகளும், 26,021 எழுத்துகளும் கொண்ட தலைப்புடைய புத்தகத்தை எழுதியவர் என்ற பெருமையைத் தன்வசம் வைத்திருக்கிறார் வித்யாலா யெதிந்திரா. தெலுங்கானாவைச் சேர்ந்த மருத்துவர் இவர். ‘The Historical Development of the Heart...’ என்று நீண்டு செல்கிறது தலைப்பு.

பெரிய புத்தகம் : உலகிலேயே மிகப்பெரிய புத்தகம் என்ற கின்னஸ் சாதனையைத் தன்வசமாக்கியிருக்கிறது ‘ஐம் டெக்சாஸ்’ எனும் புத்தகம். 7 அடி உயரமும், 11 அடி அகலமும் கொண்டது இப்புத்தகம். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஐரைட் லிட்ரசி ஆர்கனைசேஷன் என்ற தொண்டு நிறுவனமும், த பிரைய்ன் மியூசியமும், ஆர்டினரி பீப்பிள் சேஞ்ஜ் த வேர்ல்டு என்ற பதிப்பகமும் இணைந்து இப்புத்தகத்தை நவம்பர் 05, 2022ல் வெளியிட்டுள்ளது. இப்புத்தகத்தில் டெக்சாஸைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்களின் படைப்புகள் இடம்பெற்றுள்ளன.

நடமாடும் நூலகம்: இன்று உலகம் முழுவதும் நடமாடும் நூலகம் செயல்பட்டு வருகிறது. எல்லோரையும் புத்தக வாசிப்பு சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் பல தொண்டு நிறுவனங்கள் நடமாடும் நூலகத்தை இயக்கி வருகின்றன. மக்களின் இருப்பிடத்திற்கே சென்று நூல்களை விநியோகிப்பதுதான் இதன் நோக்கம். இதற்காக பிரத்யேகமான வாகனங்கள் கூட தயாரிக்கப்படுகின்றன.

மட்டுமல்ல, அமெரிக்கா போன்ற நாடுகளில் வருடந்தோறும் நடமாடும் நூலக நாள் கொண்டாடப்படுகிறது. இவ்வளவு சிறப்பு வாயந்த நடமாடும் நூலகத்துக்கு மூல காரணமாக இருந்தவர் ஜார்ஜ் மூர். இங்கிலாந்தைச் சேர்ந்த பெரும் பணக்காரரும், சமூக சேவகருமான ஜார்ஜ் மூர் தீவிர புத்தகக் காதலராக இருந்தவர். அவர் காலத்தில் புத்தகம் வாங்குவது என்பது எல்லோராலும் இயலாத காரியம். அத்துடன் நூலகங்களும் அவ்வளவாக இல்லை.

இப்படியான சூழலில் தன்னைச் சுற்றியிருக்கும் மக்களுக்கு வாசிப்பனுபவம் கிடைக்க வேண்டும் என்று விரும்பினார் ஜார்ஜ். இதற்காக ஒரு குதிரை வண்டியைத் தயார் செய்தார். அந்த வண்டியில் தன்னிடமுள்ள புத்தகங்களை எடுத்துக்கொண்டு வடகிழக்கு இங்கிலாந்தில் உள்ள கிராமங்களுக்குச் சென்றார். புத்தகம் தேவைப்படுபவர்களுக்கு எல்லாம் இலவசமாக வழங்கினார். இதெல்லாம் நடந்தது 1857ல்.

அதிக விலை : லியோனார்டோ டாவின்சியின் ‘Codex Leicester’ என்ற புத்தகத்தை 1994ல் 253 கோடி ரூபாய் கொடுத்து வாங்கினார் பில்கேட்ஸ். பணவீக்கத்தின் அடிப்படையில் இந்தப் புத்தகத்தின் இன்றைய விலை ரூ.440 கோடி.

தட்டச்சு : தட்டச்சு மூலம் எழுதப்பட்ட முதல் புத்தகம் ‘த அட்வெஞ்சர்ஸ் ஆஃப் டாம் சாயர்’. 1876ல் வெளியான இந்தப் புத்தகத்தை எழுதியவர் மார்க் ட்வைன்.

முதல் புத்தகம்: பதினைந்தாம் நூற்றாண்டின் மத்தியில் ஜெர்மனியைச் சேர்ந்த ஜோகன்னஸ் கூட்டன்பர்க் என்பவர்தான் ஐரோப்பாவில் அச்சு இயந்திரத்தை அறிமுகப்படுத்தினார். நவீன அச்சுக்கலையில் பெரிய புரட்சியை உண்டாக்கியது அந்த இயந்திரம். அதன் மூலம் 1455ல் பைபிள் அச்சடிக்கப்பட்டது. இதுதான் உலகின் முதல் அச்சடிக்கப்பட்ட புத்தகமாக கருதப்படுகிறது; கூட்டன்பர்க் பைபிள் என்றே இந்தப் புத்தகம் அழைக்கப்படுகிறது.

புத்தகத்திருவிழா:  முக்கிய நகரங்களில் எல்லாம் புத்தகத்திருவிழா நடப்பது ஒரு வழக்கமாகிவிட்டது. ஜெர்மனியில் உள்ள ஃப்ராங்க்பர்ட் நகரம்தான் புத்தகத்திருவிழாவிற்கு ஆரம்பப்புள்ளி வைத்தது. அங்கே  500 வருடங்களுக்கு முன்பே  புத்தக வியாபாரிகள் ஒன்று சேர்ந்து, ஓரிடத்தில் கையெழுத்துப் பிரதிகளை விற்றிருக்கின்றனர்.

அப்போது பிரிண்டர் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஆரம்பித்த ஃப்ராங்க்பர்ட் புத்தகத்திருவிழா 1950களுக்குள் பெரு வளர்ச்சியடைந்திருக்கிறது. இன்று உலகின் மிகப்பெரிய புத்தகத் திருவிழாவே ஃப்ராங்க்பர்ட் புத்தகத் திருவிழாதான். 100க்கும் மேலான நாடுகளைச் சேர்ந்த 7 ஆயிரத்துக்கும் அதிகமான பதிப்பகத்தார் இந்தப் புத்தகத் திருவிழாவில் கலந்துகொள்கின்றனர்.

புத்தகத் திருடன் : ஸ்டீவன் ப்ளூம்பெர்க் என்ற புத்தகத் திருடன் உலகம் முழுவதும் உள்ள 268 நூலகங்களுக்குள் புகுந்து 23 ஆயிரம் அரிய புத்தகங்களைத் திருடியிருக்கிறான். இவற்றின் மதிப்பு 150 கோடி ரூபாயைத் தாண்டும்.

விற்பனை : எல்லா காலங்களிலும் அதிகமாக விற்பனையான புத்தகம் என்ற சிறப்பைப் பெற்றிருக்கிறது, பைபிள். 500 கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்பனை மற்றும் விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது பைபிள்.

இதற்கடுத்த இடத்தில் உள்ளது குரான். 80 கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது குரான். மதம் சாராத புத்தகங்களில் மிகுல் டி செர்வான்டிஸ் என்ற எழுத்தாளர் எழுதிய ‘டான் குவிக்ஸாட்’ என்ற நாவல் 50 கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகி இருக்கின்றன. தொகுப்பு புத்தகங்கள் வரிசையில் ஜே.கே.ரௌலிங் எழுதிய ‘ஹாரி பாட்டர்’ தொகுப்பு 50 கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகியுள்ளன.

வாசிப்பு : பைபிள், ஹாரி பாட்டர், மாவோவின் தத்துவங்கள் ஆகிய மூன்று புத்தகங்கள்தான் உலகளவில் அதிகமாக வாசிக்கப்பட்டவை.

மரம் : ஒரு மரத்திலிருந்து எடுக்கப்படும் காகிதங்கள் மூலமாக 50 புத்தகங்கள் வரை தயாரிக்கப்படுகின்றன.

த.சக்திவேல்