தீபிகா!



*வேர்ல்ட் கப் ட்ராஃபியை [FIFA WORLD CUP TROPHY] அறிமுகப்படுத்திய முதல் இந்தியர்...

*உலகின் புகழ்பெற்ற ஃப்ரெஞ்ச் ஜுவல்லரி ப்ராண்டான கார்டியரின் [CARTIER] முகமாக ரசிக்க வைத்தவர்...

*லக்ஸ்சரி ப்ராண்டாக கொண்டாடப்படும் உலகப் புகழ்பெற்ற லூயி விட்டனின் [LOUIS VUITTON] முதல் இந்திய ப்ராண்ட் அம்பாஸிடர்...

*லெவைஸ் [LEVIS], அடிடாஸ் [ADIDAS] என உலகின் உச்ச ஸ்போர்ட்ஸ் ப்ராண்ட்களின் விளம்பரங்களில் வசீகரித்தவர்...

*75வது கான்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் [CANNES FILM FESTIVAL] ஜூரி மெம்பராக அலங்கரித்தவர்...

*2017ல் வெளியான ஹாலிவுட் படமான ‘XXX: RETURN OF XANDER CAGE’ படத்தில் நடித்தவர்...

*இந்திய சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நடிகை...

இத்தனைக்கும் சொந்தக்காரர் தீபிகா படுகோன்.

யார் இந்த தீபிகா படுகோன்?

அவதரித்தது டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் 1986 ஜனவரி 5ம் தேதி. பிறந்தது வெளிநாட்டில் என்றாலும் வாழ்ந்தது நம்முடைய பெங்களூருவில்தான். இவரது அப்பா பிரகாஷ் படுகோன், சர்வதேச அளவிலான பேட்மிண்டன் விளையாட்டு வீரர்.சிறுவயதில் தீபிகாவுக்கு பேட்மிண்டனில்தான் ஆர்வம் அதிகம். பத்தாவது படிக்கும் போது, அவரது அழகும் பத்து மடங்கு அதிகரிக்க மாடலிங் உலகம் அணைத்துக் கொண்டது.

மகளின் ஆர்வத்தைப் புரிந்து கொண்ட இந்தியாவின் புகழ்பெற்ற பேட்மிண்டன் விளையாட்டு வீரரான பிரகாஷ் படுகோன், மகளை உற்சாகப்படுத்தினார்.அந்த தருணம்தான் இன்றைய தீபிகா படுகோன் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை உருவாக்கியது.அப்பொழுது பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த லிரில் சோப் விளம்பரத்தில் அருவியில் நனைந்தார் தீபிகா. அவ்வளவுதான், மக்கள் மனமும் அவரது அழகில் கரைந்தது. அடுத்தடுத்து பல தயாரிப்புகளுக்கும் ப்ராண்ட்களுக்கும் தீபிகாவின் முகம் விளம்பரமாகியது.

2005ல் கிங்ஃபிஷர் ஃபேஷன் அவார்டில் ‘மாடல் ஆஃப் த இயர்’ விருது இவர்வசம் வர, தீபிகாவின் புகழ் பலமடங்கு அதிகரித்தது.ஹிமேஷ் ரேஷமய்யாவின் மியூசிக் வீடியோவில் ஒரு பாடலில் ஆடினார். அடுத்து கன்னட நடிகர் உபேந்திராவின் படத்தில் கமிட் ஆனார். அங்கே ஆரம்பித்தது அவரது சினிமா பயணம்.பாலிவுட்டின் பரபரப்பான கோரியோகிராஃபரான ஃபரா கான், ஷாருக்கானை வைத்து, தான் இயக்கும் இந்திப்படமான ‘ஓம் சாந்தி ஓம்’ படத்துக்காக ஹீரோயினைத் தேடிக்கொண்டிருந்தபோது தீபிகா அவர் பார்வையில் பட்டார்.

விளைவு... 2007ல் ஷாருக்கானுடன் டூயட் பாடினார். தேசத்தின் கனவுக் கன்னியாக உயர்ந்தார். அடுத்தடுத்து ரன்பீர் கபூர், அக்‌ஷய் குமார், சைஃப் அலிகான்... என வரிசையாக கமர்ஷியல் ஹீரோக்களின் ஜோடியானார். யார் கண் பட்டதோ... சர்ரென உயர்ந்த தீபிகாவின் கிராஃப், மூன்றே ஆண்டுகளில் பாதாளத்தில் விழுந்தது. 2010ல் மட்டும் தீபிகாவின் 5 படங்கள் வெளியாகின. அனைத்தும் அட்டர் ஃப்ளாப். 2011ல் வெளியான இரு படங்களும் ஃப்ளாப்.ஆனால், 2012 பிரமாதமான ஆண்டாக தீபிகாவுக்கு அமைந்தது.

‘காக்டெயில்’ முதல் வெற்றியாக அமைந்தது. 2013ம் ஆண்டு தீபிகாவை இந்தி சினிமாவின் முன்னணி நடிகையாக முன்னிறுத்தியது. காரணம், ‘ரேஸ் 2’, ‘யே ஜவானி ஹை திவானி’, ‘சென்னை எக்ஸ்ப்ரஸ்’, ‘கோலியோன் கி ராஸ்லீலா ராம் லீலா’ போன்ற படங்கள் இவருக்கும் கமர்ஷியல் ஹீரோயினுக்கான அடையாளத்தைக் கொடுத்தன.2015 இறுதியில் ரன்வீர் சிங்குடன் நடித்த ‘பாஜிராவு மஸ்தானி’ சூப்பர் டூப்பர் ஹிட். வீரமிக்க இளவரசி மஸ்தானியாக தீபிகா தூள் கிளப்பியிருந்தார். இந்த கதாபாத்திரத்திற்காக குதிரையேற்றம், வாள் சண்டை, தற்காப்புக்கலையான களரிப்பயட்டு என எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு ஒரு அசல் இளவரசியாகவே மாறியிருந்தார்.

2017ல் ஹாலிவுட்டில் அட்டகாசமான என்ட்ரி. அடிதடி ஆக்‌ஷன் ஹீரோவான வின் டீசலுக்கு ஜோடியாக ‘XXX: Return of Xander Cage’ படத்தில் நடித்தார். ஆனால், இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் தீபிகாவின் திறமையை வீணடித்துவிட்டார்கள் என நொந்தார்கள். 2018ல் மீண்டும் ரன்வீர் சிங், சஞ்சய் லீலா பன்சாலி கூட்டணியில் ‘பத்மாவதி’ உருவானது. ராஜபுத்ர ராணி பத்மாவதியாக அசரவைத்தார் தீபிகா படுகோன். இந்தியாவில் மிக அதிக பட்ஜெட்டில் உருவான படங்களின் வரிசையில் ‘பத்மாவதி’யும் ஒன்று. அதிக வசூல் ஈட்டிய தீபிகாவின் படங்களில் இதுவும் ஒன்று!

இவ்வளவு புகழ், பணம், பாப்புலாரிட்டி இருந்தால் என்ன நிகழும்? அதுவேதான். தீபிகாவுக்கும் வந்தது மன அழுத்த பிரச்னை. ஆனால், இதை அவர் மூடி மறைக்கவில்லை. வெளிப்படையாக அறிவித்து சிகிச்சை எடுத்து மீண்டார். மட்டுமல்ல; ‘The Live Love Laugh Foundation’ அறக்கட்டளையை ஆரம்பித்து மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் செயலில் இறங்கினார். மென்டல் ஹெல்த் கேர் 2,10,000 மாணவர்கள் மற்றும் 21,000 ஆசிரியர்களுக்கு கொடுக்கப்பட்டது.

மருத்துவர்களுக்கான இந்நிகழ்ச்சியின் மூலம் 2,383 மருத்துவர்களுக்கும் இதுகுறித்து விழிப்புணர்வு உருவாக்கப்பட்டது. மூன்று மாநிலங்களைச் சேர்ந்த 20 தாலுகாக்களில் தீபிகா படுகோனின் நல்லெண்ணத்தால் 9,200 பேர் நேரடியாகவும், 23,000 பேர் மறைமுகமாகவும் பயன் அடைந்திருக்கிறார்கள். இதை முன்னின்று நடத்தியது தீபிகாவின் சகோதரி அனிஷா படுகோன்.

இப்படிப்பட்ட தீபிகாவைச் சுற்றி புகழுக்கு சமமாக சர்ச்சைகளும் வலம் வருகின்றன. ஷாரூக் கானுக்கு ஜோடியாக அவர் நடித்திருக்கும் ‘பதான்’ படப்பாடல் சர்ச்சை அவற்றில் ஒன்று.
இந்த ‘பதான்’ படம், வரும் புதன் அன்று (ஜனவரி 25, 2023) வெளியாகிறது. இந்நிலையில்தான் ‘பதான்’ படப் பாடல் சர்ச்சை உச்சத்தை எட்டியிருக்கிறது. காரணம், காவி நிற பிகினியில் ஷாருக் கானுடன் நெருக்கமாக தீபிகா ஆடிப் பாடுவதுதான். காவி என்பது குறிப்பிட்ட மதத்தின் அடையாளம்... அப்படிப்பட்ட அடையாளத்தை தீபிகா அவமானப்படுத்துகிறார்... என்பது சர்ச்சைக்கான அடிநாதம்.

இதனைத் தொடர்ந்து தீபிகாவின் ‘பழைய க்ரைம் ரிக்கார்டுகளை’ தூசி தட்டி எடுத்திருக்கிறார்கள். அதாவது, 2020ம் ஆண்டு ஜனவரியில் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முகமூடி அணிந்த கும்பலொன்று அத்துமீறி நுழைந்து அங்கு படித்துக் கொண்டிருந்த மாணவர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கியது அல்லவா..? அந்த சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஜனவரி 7ம் தேதி தீபிகா படுகோன் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்குச் சென்றார் அல்லவா..? இதை முடிச்சுப் போட்டு தீபிகா ‘துக்டே துக்டே’ குழுவின் ஆதரவாளர் என்ற பிரசாரத்தை முடுக்கிவிட்டிருக்கிறார்கள்.

அதென்ன ‘துக்டே துக்டே’ குழு?

தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த தாக்குதலில் மத அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக அப்போது குற்றம் சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த மதவாத சக்திகளால் உச்சரிக்கப்பட்ட சொல்தான் ‘துக்டே துக்டே கேங்’. அதாவது நாட்டைப் பிரிக்க முயற்சிக்கும் குழு. ஆனால், என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள்... எனக்கு வேறு வேலைகள் இருக்கின்றன என கெத்து காட்டி வருகிறார் தீபிகா. அப்படித்தான் அசால்ட் ஆக பிஸினஸ்சிலும் கலக்கி வருகிறார்.

2017ல் கே.ஏ. என்டர்பிரைசஸ் என்னும் முழு உரிமம் உள்ள கம்பெனியை ஆரம்பித்தார். இந்நிறுவனம் மூலம் பல ஸ்டார்ட்-அப் நிறுவனங்களைத் தொடங்கினார். femtech s tartup Nua, cleantech s tartup Atomberg Technologies, space tech s tartup Bellatrix Aerospace, yoghurt firm Epigamia, pet s tore Supertails and edtech firm FrontRow... என பட்டியல் நீள்கிறது. இவற்றில் பல இப்பொழுது வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.

இப்படியாக சினிமா, பிஸினஸ், சமூக சேவை, விளம்பரத் தூதர்... என பல தளங்களில் பரபரப்பாக இருக்கும் தீபிகா படுகோன், ‘பதான்’ படத்திற்குப் பிறகு ஹிர்த்திக் ரோஷனுடன் ‘ஃபைட்டர்’, பிரபாஸுடன் ‘ப்ராஜெக்ட் - கே’, அமிதாப் பச்சனுடன் இணைந்து தயாரிக்கும் ‘த இன்டெர்ன்’ ரீமேக்... என கைவசம் படங்களும் வைத்திருக்கிறார்.ஆம். தீபிகா என்றால் தீ. வெளிச்சமும் தரும்... உணவை வேகவைக்கவும் செய்யும்... தீயவர்களைப் பொசுக்கவும் செய்யும்!

என்.ஆனந்தி