அழகான அப்பா, அம்மா, மகளும், ஒரு பிரச்னையும்...வெள்ளந்தியான யோகி பாபு, உடன் கள்ளமில்லா சிரிப்புடன் யோகி பாபுவின் தோளைக் கட்டிக்கொண்டு விளையாடும் ஒரு குட்டி சிறுமி, பின்னணியில் ‘அடியே ராசாத்தி...’ என மனதை லேசாக மாற்றும் பாடல் சகிதமாக ‘பொம்மை நாயகி’ படத்தின் போஸ்டர், வெளியான வீடியோ பாடல்... என சுண்டி இழுக்கின்றன. என்ன கதை, என்ன கரு என புன்னகையுடன் பேசத் தொடங்கினார் இயக்குநர் ஷான். சமீபகாலமாக குணச்சித்திர நடிகராக யோகிபாபு..?  

‘மண்டேலா’ படம் கூட வெளியாகலை. மேலும் ‘மண்டேலா’ எப்படி இருக்கும்னு கூட ஒரு ஐடியாவும் இல்லாத சமயத்திலே ‘நீங்கதான் மெயின் லீட்... எமோஷனல் படம்’னு சொன்ன உடனே ‘ஓ... இது காமெடி படம் இல்லையா?’ன்னு கேட்டார். ஆரம்பத்திலே முடியாதுன்னு கூட சொல்லிட்டார். ‘நான்தான் ஹீரோ, எமொஷனல் படம்னா வேண்டாம் ப்ரோ’ன்னு சொன்னார்.
அப்பறம் கொ ரோனா, ஊரடங்கு இப்படி நிறைய சிக்கல். நாமளே என்ன ஆகப் போகிறோம்னு தெரியலை. இதிலே எங்கே இருந்து சினிமா, டைரக்‌ஷன் எல்லாம்... அப்பறம்தான் நீலம் புரடக்‌ஷன்ஸ் உள்ளே வர, படம் ஆரம்பிச்சது.

யார் இந்த இயக்குநர் ஷான்?

இயக்குநர் ஆர்.கண்ணன் சார் கிட்டே அஸிஸ்டென்டா வேலை செய்திருக்கேன். விளம்பரப் படங்கள் எடுக்கறதிலே உடன்பாடில்லைன்னாலும், என்னை நானே ஆக்டிவ்வா வெச்சுக்கவும், வேலையிலே பிஸியாக இருக்கவும் நிறைய விளம்பரப் படங்கள் செய்தேன். சொந்த ஊர் கடலூர். அப்பா ஒரு பெரிய சமூக ஆர்வலர்.
நிறைய தத்துவங்கள், சீர்திருத்தம் எல்லாம் பேசுவார். அப்பாவும் கொரோனா காலகட்டத்தில்தான் இறந்தார். அவரால்தான் சமூகம் சார்ந்த கொள்கைகளும், கருத்தியல்களும் எனக்குள்ளேயும் வந்தது. நான் ஒரு கதை செய்தா நிச்சயம் அதிலே ஒரு சமூக அக்கறை இருக்கணும்னு நினைப்பேன். அப்படியான ஒரு சமூகம் சார்ந்த கதைதான் ‘பொம்மை நாயகி’.

எதனால் இந்தத் தலைப்பு?

போன வருஷம் சினிமாவிலே நிறைய ஆரோக்கியமான நிகழ்வுகள் நடந்துச்சு. அதிலே ஒண்ணு பெண்களுக்கான, பெண் குழந்தைகளுக்கான பிரச்னைகள் பேசுகிற நிறைய படங்கள் படையெடுத்ததுதான். ‘கார்கி’ தொடங்கி கடைசியா வந்த ‘செம்பி’ படம் வரையிலும் கூட நிறைய பெண்கள் ஆளுமை இருந்ததை கவனிக்க முடிஞ்சது.

இதுவே பெரிய மாற்றமா பார்க்கறேன். அப்படியான இன்னொரு பெண், பெண் குழந்தைகள் சார்ந்த படம்தான் ‘பொம்மை நாயகி’. படத்துல குட்டி சிங்கர் ஸ்ரீமதி நடிச்சிருக்காங்க. அவங்கதான் படத்தினுடைய மையப்புள்ளி. அவங்கள சுத்திதான் கதை நகரும். அவங்களுடைய கேரக்டர் பெயர்தான் ‘பொம்மை நாயகி’.

கிராமப்புறங்கள்ல, ஊர்கள்ல குலதெய்வ வழிபாடுகள் நிறைய நடக்கும். தையல் நாயகி, பொம்மை நாயகி... இப்படித்தான் அந்த சிறு தெய்வங்களுக்கு பெயர்கள் கூட இருக்கும். அந்த தெய்வங்களின் பெயர்களைத்தான் கிராமத்துல இருக்குற சிறுவர் சிறுமிகளுக்கும் கூட வைப்பாங்க. அதுவும் சேர்த்து ‘பொம்மை நாயகி’. ‘பொம்மை நாயகி’ இந்த சமூகத்துக்கு என்ன கருத்து சொல்லப் போகிறாள்?

பெண்ணியம் பேசுமா... பெண் சுதந்திரம், பெண் பாதுகாப்பு இதெல்லாம் குறித்து கிளாஸ் எடுக்குமானு கேட்டா அப்படி எதுவுமே கிடையாது. ஒரு பெண் குழந்தைக்கு நடக்குற பிரச்னை... அதை அவளும் அவளுடைய அப்பாவி அப்பாவும் எப்படி எதிர்கொள்கிறார்கள்... அப்படிங்கிறதுதான் கதை. இதுல கருத்தோ சமூகத்துக்கான மெசேஜோ டயலாக்கா சொல்லப்போறது இல்ல. ஒரு சின்ன வாழ்வியலா படம் முழுக்க கதை போய்க்கிட்டே இருக்கும்.

யோகிபாபு, பேபி ஸ்ரீமதி தவிர்த்து படத்தின் மற்ற கேரக்டர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் பற்றி சொல்லுங்க?

யோகி பாபுவை ஹீரோன்னு சொல்றதை விட இந்தக் கதையின் நாயகன் அவர்தான்னு சொல்லலாம். கதையின் நாயகி ஸ்ரீமதி பாப்பாதான். அதைத் தாண்டி யோகி பாபு கதைக்குள்ள சின்னச் சின்ன காமெடியும் செய்திருக்கார். இவர்கள் இல்லாமல் ஹரி, ஜி.என்.குமார், ‘ஜெய்பீம்’ புகழ் சுபத்ரா நடிச்சிருக்காங்க. அருள்தாஸ் நடிச்சிருக்காரு. அதைத் தாண்டி படம் முழுக்கவே நான் பிறந்து வளர்ந்த கடலூர், அதன் சுற்றுவட்டாரத்தில் நடக்கறதால அங்கே இருக்கும் உள்ளூர் நடிகர்கள் நிறைய பேர் இந்தப் படத்தில் நடிச்சிருக்காங்க.

அதேபோல படத்தின் லொகேஷனும் ரொம்ப ரியாலிட்டியா எந்த செட்டிங்கும் இல்லாமல் தேர்வு செய்து கடலூர் சுற்று வட்டாரத்திலேயே எடுத்திருக்கோம். என்னுடைய நீண்ட கால நண்பர் அதிசயராஜ் இந்தப் படத்தின் சினிமாட்டோகிராபர், சுந்தரமூர்த்தி இசை. அவருடைய இசையிலே முதல் சிங்கிள் வீடியோ ரிலீஸ் செய்திருக்கோம். வெறுமனே லிரிக்ஸ் வீடியோவா இல்லாம ஒரு சின்ன காட்சி வீடியோவாகவே அந்த பாடல் வெளியாகியிருக்கு. படத்தின் கதையை அந்த பாடல் மூலமா ஒரு சின்ன அறிமுகமா கொடுக்கலாம்னு தோணுச்சு.

நிறைய பேர் பாராட்டினாங்க. பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. ஆர்.கே.செல்வா எடிட்டர், அவர்தான் ‘கர்ணன்’, ‘சார்பட்டா பரம்பரை’ உள்ளிட்ட நிறைய படங்களுக்கு எடிட்டர். ஜெய ரகு ஆர். டைரக்‌ஷன். ஆக்ச்சுவலி இதுதான் அவருக்கு முதல் படம். ஆனால், ‘நட்சத்திரம் நகர்கிறது’ முதல் படமா ரிலீஸ் ஆகிடுச்சு.

நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் பா.இரஞ்சித் எப்படி ‘பொம்மை நாயகி’ படத்தின் தயாரிப்பில் இணைந்தார்கள்?

எங்க ரெண்டு பேருக்கும் எந்த தொடர்பும் கிடையாது. எனக்கும் இரஞ்சித் சாருக்கும் இருக்கற ஒரே தொடர்பு எங்களுடைய கருத்தியல்கள்தான். என்னுடைய நண்பர்கள் நிறைய பேர், அவருடைய படங்களும் என்னுடைய எண்ணங்களும் ஒரே மாதிரி இருக்கிறதா சொல்லுவாங்க. அதனாலேயோ என்னவோ அப்போதிருந்தே அவர் கூட தொடர்பில் இருந்துட்டே இருந்தேன்.

இரஞ்சித் சாரைப் பொறுத்தவரை ஒரு விஷயம் பாராட்டியே ஆகணும்... முதலில் அவரைச் சார்ந்த மக்களுக்கு நல்லது செய்யணும்னு நினைப்பார். தயாரிப்புனு முடிவு செய்தப்ப கூட தன்னுடைய அசிஸ்டெண்ட் இயக்குநர்களுக்குதான் ஆரம்பத்தில் வாய்ப்பு கொடுத்தார். நா

ன் விடாம இந்த ‘பொம்மை நாயகி’ கதையோடு அவரை கிடைக்கும் கேப்பில் எல்லாம் சந்திச்சுக்கிட்டே இருந்தேன். ஒவ்வொரு முறையும் அவர் தயாரிப்பில் படம் வெளியாகும் பொழுதும் அவரை மீட் செய்துடுவேன். ஒரு கட்டத்துக்கு மேலே என்னுடைய கதையை வாங்கிப் படித்தவர் பிடிச்சுப்போக அவரே தயாரிக்க முன்வந்தார். ‘நீலம் புரொடக்‌ஷன்ஸ்’ உள்ளே வந்ததும் படம் அடுத்த கட்டத்துக்கு போயிடுச்சு.

‘பொம்மை நாயகி’ ஆடியன்ஸுக்கு என்ன கொடுக்கும்?

ரிலீஸ் பிளான் போயிட்டு இருக்கு. இப்போதைக்கு பாடல்கள், டீசர், டிரைலர்கள் எல்லாமே பிளான் செய்துட்டு இருக்கோம். இந்தப் படம் இப்படி இருக்குமோ, அப்படி இருக்குமோனு எல்லாம் யோசிச்சு உருவாக்கல. ஒரு அப்பா, அம்மா, குழந்தை... அவங்களுடைய சின்ன உலகம்... அவங்களுக்குள்ளே நடக்கற டிராவல்... இதுதான் கதை. பெண்கள், பெண் குழந்தைகள்னாலே பாலியல் ரீதியான பிரச்னை மட்டும்தான் நடக்குதுன்னு இல்லை. அதைத் தாண்டி சொல்ல முடியாத இன்னமும் நிறைய பிரச்னைகள் இருக்கு. அந்த மாதிரியான ஒரு பிரச்னையைத்தான் எளிமையா ஒரு சின்ன கதையா சொல்லியிருக்கேன்.

ஷாலினி நியூட்டன்