தமிழ்நாட்டை தெரிஞ்சுக்க நடக்கிறேன்!அமெரிக்கத் தமிழரின் ஓர் ஆச்சரிய நடைப் பயணம்

‘‘நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன். தமிழன். வீட்டிலும் தமிழ்தான் பேசுறேன். ஆனா, தமிழ்நாடு பத்தின விஷயங்கள் எனக்கு அவ்வளவாகத் தெரியாது. இது எனக்கு ரொம்ப நாளாக உறுத்தலா இருந்தது. எனக்கு தமிழ்க் கலாசாரமும், பண்பாடும் ரொம்பப் பிடிக்கும். அதன் மதிப்பு என்னனு தெரியும். உண்மையில் அதை அனுபவமாகப் பெற்றதில்ல. அதுவும் பெரிய குறையாக மனசுல கிடந்தது. அதுக்காகவே இந்த நடைப்பயணத்தைத் தேர்ந்தெடுத்து நடந்திட்டு வர்றேன்...’’ அத்தனை உற்சாகமாகச் சொல்கிறார் சுரேஷ் ஆதிகேசவன்.

கன்னியாகுமரியிலிருந்து திருப்பதி வரை ரிலாக்ஸான நடைப்பயணத்தைத் தொடங்கியிருக்கும் இவர் ஓர் அமெரிக்கத் தமிழர். உலகையே சுற்றி வந்தவருக்கு தாய் மண்ணான தமிழ்நாட்டைச் சுற்றவில்லையே என்கிற ஏக்கம் மேலோங்க, எல்லா வேலைகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு இங்கே வந்துவிட்டார். கடந்த டிசம்பர் 20ம் தேதி கன்னியாகுமரியிலிருந்து நடையைத் தொடங்கியவர், திருநெல்வேலி, எட்டயபுரம், திருச்சுழி, மானாமதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் வழியாக கும்பகோணம் வந்தார். இதனைக் கேள்விப்பட்டு நாம் அவரை போனில் பிடித்தோம்.

‘‘இந்த நடைப்பயணம் ரொம்ப சந்தோஷமா இருக்கு. என் அப்பாவின் பூர்வீகம் திருவெண்ணெய்நல்லூர். அவர் இந்தியன் வங்கியில் வேலை செய்தார். அதனால் நாங்க ஒவ்வொரு ஊராகப் போயிட்டு இருந்தோம். நான் பாண்டிச்சேரியில் பிறந்தேன். என்னுடைய பெரும்பாலான பள்ளிப்படிப்பு நெய்வேலியில் நடந்தது. தில்லியில் ரெண்டு ஆண்டுகள் இருந்தோம். பிறகு, சென்னை கல்லூரி ஒன்றில் எஞ்சினியரிங் பண்ணினேன். 2000ல் அமெரிக்காவுக்குப் போனேன். 22 ஆண்டுகளாக அங்கதான் இருக்கேன்.

ரெண்டு ஆண்டுகளுக்கு முன்னாடி அப்பா இறந்திட்டார். நீண்டநாட்களுக்குப் பிறகு அப்போது தமிழ்நாட்டிற்கு வந்தேன். அதன்பிறகு இப்பதான் வர்றேன். அதுவும் தமிழ்நாட்டைச் சுற்றிப் பார்த்து தெரிஞ்சுக்கணும்னு வந்திருக்கேன்...’’ என மகிழ்ச்சியாகச் சொன்னபடி தொடர்ந்தார். ‘‘இப்ப நான் அமெரிக்காவில் தெரபிஸ்ட்டா இருக்கேன். நான் படிச்சது எஞ்சினியரிங். பிறகு, வடக்கு கரோலினாவுல மாஸ்டர்ஸ் முடிச்சேன். பத்தாண்டுகள் ஐடியில் வேலை செய்தேன். அப்புறம், எனக்கு கவுன்சிலிங்கில் ஆர்வம் வந்தது. அதுவும் மனநலம் சம்பந்தமான கவுன்சிலிங் பண்ணணும்னு ஆசை.

இதுக்காக சைக்காலஜியில் dual diagnosis counselling படிச்சேன். கடந்த ரெண்டு ஆண்டுகளாக தெரபிஸ்ட்டா பணியாற்றுகிறேன். இப்ப கலிபோர்னியா மாநிலத்துல உள்ள சான் பிரான்சிஸ்கோவுல வசிக்கிறேன். அமெரிக்க சிட்டிசன்ஷிப் வாங்கி பத்தாண்டுகள் ஆகிடுச்சு.இந்த நடைப்பயணத்திற்கான சிந்தனையே ஓராண்டுக்கு முன்னாடிதான் வந்தது. அதுக்கு முன்னாடி எனக்கு தமிழ்நாடு பத்தின விஷயங்கள் தெரியலையேனு ஒரு உறுத்தல் இருந்தது. பள்ளியிலும், கல்லூரியிலும் படிக்கும்போதுகூட குறிப்பிட்டவங்ககிட்ட மட்டுமே பழகிட்டு இருந்தேன். அப்படியே அமெரிக்கா போயிட்டேன்.

ஒருநாள் அமெரிக்கப் பெண்மணி ஒருவரிடம் பேசிட்டு இருந்தேன். அவங்களுக்கு இந்தியா ரொம்பப் பிடிக்கும். அவங்க கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை நடந்தேன்னு சொன்னாங்க. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அமெரிக்காவுல இருந்துபோய் நடந்திருக்காங்க. நான் தமிழனாக இருந்தும் எதுவும் செய்யலையேனு தோண ஆரம்பிச்சது.  
நாமும் இதுமாதிரி செய்யலாம்னு நினைச்சு ஓராண்டாக திட்டம் போட்டேன். இதை சம்மர்ல பண்ணமுடியாது. அப்புறம், மழைக்காலத்திலும் நடக்கமுடியாது. அதனால, இந்த நேரம்தான் வெப்பமும் மழையும் குறைவாக இருக்கும்னு டிசம்பர் கடைசி தேதியைத் தேர்ந்தெடுத்தேன்.

கடந்த 20ம் தேதி தென்கோடி எல்லையான கன்னியாகுமரியில் இருந்து நடையைத் தொடங்கினேன்.  நான் இந்தமாதிரி நடைப்பயணம் எல்லாம் செய்ததில்ல. இதுக்காக உடல்ரீதியாகவும் கொஞ்சம் பயிற்சி எடுத்துக்கிட்டேன். இப்ப தினமும் 20 முதல் 30 கிமீ தூரம் நடக்கிறேன். ஆரம்பத்துல தொடர்ந்து நடக்கும்போது கால்கள், முட்டிகள் எல்லாம் வலிக்குமோனு பயம் இருந்தது. ஆனா, அப்படி எதுவும் இருக்கல. ரொம்ப அமேஸிங்காக இருக்கு.

என்னுடைய டார்கெட் கிராமங்கள், அங்குள்ள மக்கள்தான். ஏன்னா, நெடுஞ்சாலை வழியாக போனால் வண்டிகளைத்தான் பார்க்க முடியும். மக்களையோ, அவங்க வாழ்க்கைமுறையையோ ரசிக்க முடியாது. அதனால், கிராம வழியான ரூட்டை தேர்ந்தெடுத்து நடக்கிறேன். காலையில் 4 மணிக்கு நடைப்பயணத்தை ஆரம்பிச்சு 9.30 மணிக்குள் ஓரளவு அன்னைக்கான நடையை முடிச்சிடுவேன். பிறகு சாப்பிட்டுட்டு பத்து கிமீ தூரம் வரை மெதுவாக நடப்பேன். அந்நேரம் மக்கள்கிட்ட நிறைய பேசுவேன். அவங்க சொல்றதை காதுகொடுத்து கேட்பேன். இந்த நடையும் மதியம் 3 மணிக்கெல்லாம் முடிச்சிடுவேன். அப்புறம், இரவு தூங்க இடம் தேடுறது ஒரு வேலையாக இருக்கும்.

கையில் டென்ட் வச்சிருந்தாலும் வழியில் ஊர்கள் வந்திடுது. அதனால, திருமண மண்டபம். அல்லது அறை கிடைச்சிடுது. இருந்தும் இதுவரை நான்கு முறை வழியில் உள்ள வீடுகளில் இரவில் படுத்துக்கலாமானு கேட்டுத் தூங்கியிருக்கேன்...’’ என்கிறவர், தமிழ்நாட்டு மக்களைப் புகழ்கிறார். ‘‘நம்ம மக்கள் எல்லாம் வேற லெவல். அவங்களமாதிரி உபசரிப்பும், கவனிப்பும், விருந்தோம்பும் பண்பும் உலகில் வேறெங்கும் இல்ல. இந்தமாதிரி நடக்குறேன்னு சொன்னதும் புரிஞ்சுக்கிட்டு தானாக முன்வந்து நிறைய உதவி செய்றாங்க. வராண்டாவில், மொட்டைமாடியில் படுத்துக்க இடம் கொடுத்தாங்க.  

இது நம்ம தமிழ்நாட்டு மக்களுக்கு இயல்பாகவே உள்ள குணம் என்பதுதான் ஸ்பெஷல். நான் இந்தியாவுல வெவ்வேறு மாநிலங்கள்ல இருந்திருக்கேன். தென் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருக்கேன். நான் ரொம்ப  டிராவல் செய்வேன். அமெரிக்காவில் எல்லா மாநிலங்களுக்கும் போயிருக்கேன். ஆனா, மேற்கத்திய கலாச்சாரத்துல இதெல்லாம்
பார்க்கவே முடியாது.

முதல்ல அவங்களுக்கு இப்படியெல்லாம் உபசரிக்கணும்னு தோணாது. நாம் கேட்டால் வாங்கித் தருவாங்க. ஆனா, இங்க நம்ம மக்களுக்கு அந்த விஷயம் இயல்பாகவே வருது. முதியவர்கள், இளைஞர்கள்னு எந்த வித்தியாசமும் பார்க்காமல் பேசுறாங்க. பல விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்குது.  கன்னியாகுமரி டூ திருப்பதி சுமார் 770 கிமீ தூரம் வரை வருது. நான் தினமும் 15 கிமீ நடக்கணும்னு திட்டமிட்டு 50 நாட்கள்ல முடிக்கணும்னு நினைச்சிருந்தேன். ஆனா, கிராமத்து பாதை, வழியில் உள்ள மக்களின் அன்பு எல்லாம் நிறைய நடக்க வைக்குது. இந்தப் பயணத்தின் மையப்பகுதி தஞ்சாவூர். அதுக்கு 25 நாட்கள்ல வந்திடலாம்னு இருந்தேன். ஆனா, 18 நாட்கள்லயே கடந்திட்டேன். இடையில் இரண்டு நாட்கள் ரெஸ்ட் வேறு எடுத்திருக்கேன்...’’ என்கிறவர், சில இடங்களைச் சொல்லிச் சிலாகிக்கிறார்.

‘‘எட்டயபுரம் மகாகவி பாரதியார் வீட்டுக்குப் போயிட்டு வந்தேன். அப்புறம், திருச்சுழியில் ரமண மகரிஷியின் வீட்டிற்கு போனேன். ரெண்டுமே அவ்வளவு அற்புதமான இடங்கள். அருமையாக இருந்தது. அப்புறம், கந்தர்வகோட்டை வந்ததும் தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு நடப்பதாகக் கேள்விப்பட்டேன். உடனே பாதையை கொஞ்சம் மாற்றி அங்க போனேன். ஓர் உள்ளூர்க்காரர் உதவியுடன் என் வாழ்க்கையில் முதல்முறையாக ஜல்லிக்கட்டைப் பார்த்து ரசிச்சேன்.  

அதை லைவ் வீடியோவாக என் மனைவிக்கும், மகனுக்கும், நண்பர்களுக்கும் காட்டினேன். அவங்களும் பார்த்து ரசிச்சாங்க. இப்ப என் மகனுக்கும், அவன் நண்பர்களுக்கும் நான் செய்கிற இந்த விஷயம் ரொம்ப இன்ஸ்பயராகிடுச்சு. என் மனைவிக்கும் சென்னைதான். அவங்களும் நண்பர்களுடன் பெரிய உயரமான மலையேற்றம் பண்ணுவாங்க. அமெரிக்காவின் உயரமான சிகரம்,  ஆப்ரிக்காவுல கிளிமஞ்சாரோ, தென்அமெரிக்காவில் மச்சுபிச்சு மலைகள்ல எல்லாம் ஏறியிருக்காங்க. அவங்க ஃப்ரண்ட்சுடன் போவாங்க. எனக்கு தனியாகப் போகவே பிடிக்கும். எனக்கு இது எவ்வளவு முக்கியம்னு அவங்களுக்கு தெரியும் என்கிறதால ரொம்ப சப்போர்ட் பண்றாங்க...’’ என்கிறவர், இந்த நடைப்பயணத்தின் மூலம் கிடைத்த அனுபவங்களையும், தமிழ்நாட்டு கலாச்சாரம், பண்பாடு பற்றியும் எழுத இருக்கிறாராம்.  

‘‘நான் பிளாக்ல நிறைய எழுதுவேன். ஒருமுறை மெக்ஸிகோ போனப்ப அந்தப் பயணத்தை எழுதியிருந்தேன். அதை பலரும் படிச்சிட்டு பாராட்டினாங்க. ஆனா, இப்போதைக்கு இதை எழுதணும்னு நினைக்கல. இப்ப நான் பண்றது எல்லாம் அனுபவத்திற்காகவும் தெரிந்து கொள்வதற்காகவும் மட்டுமே செய்றேன்.

ஏன்னா, இப்ப ரிக்கார்டு பண்ற நோக்கம் நம் மண்டைக்குள் வந்திட்டால் என் நோக்கம் மாறிடும். வீடியோவுக்காகவும், ஆவணப்படுத்தவுமே செய்கிற மாதிரி ஆகிடும். நல்ல விஷயங்களையும் மக்களையும் பார்க்க முடியாமல் போயிடும். அதனால, போட்டோஸ் எடுக்குறேன். ஒவ்வொரு போட்டோவுக்கு கீழும் ஒரு சிறுகுறிப்பு மாதிரி எழுதியிருக்கேன். இதை எல்லாம் வச்சு பின்னாடி எழுதணும்னு ஆசையிருக்கு...’’ நெகிழ்வாகச் சொல்கிறார் சுரேஷ் ஆதிகேசவன்.   

பேராச்சி கண்ணன்