கோயில் சிலைகள் காணவில்லையா..? பாண்டிச்சேரி போங்க!



தமிழகத்தின் ஒரு கோயிலில் ஒரு சிலை திருடப்பட்டிருக்கிறது என்று தெரிந்தால் காவல்துறை ஆஜராகும் முதல் இடம் பாண்டிச்சேரியில் உள்ள ஃபிரெஞ்சு நிறுவனம்தான் (French Institute).
கோயில் சார்ந்த புகைப்படங்கள் மட்டுமல்லாமல் மொபைல் ஃபோன்களின் வருகையால் சுமார் 90 சதவீதம் அழிந்துபோன நம் ஃபோட்டோ ஸ்டூடியோக்களில் இருந்த சுமார் 50 ஆயிரம் புகைப்படங்களையும் ‘ஸ்டார்ஸ்’ கலெக்‌ஷன் (STARS{Studies in Tamil archive and society} ARCHIVE) எனும் பெயரில் சேகரித்து வைத்திருக்கிறது இந்த ஃபிரெஞ்சு நிறுவனம். ஸ்டார்ஸ் சேகரிப்பின் காப்பாளராக பலவருடங்கள் இருக்கும் ரமேஷ்குமார் கோதண்டபாணியிடம் பேசினோம்.

‘‘1956ல் இருந்து இந்த ஃபிரெஞ்சு நிறுவனம் இருக்கிறது. இந்திய அரசும் ஃபிரான்ஸ் தேசமும் செய்துகொண்ட ஒரு கலாசார புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் இந்த நிறுவனம் அன்று முதல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்தில் பல்வேறு விதமான கலாசார அமைப்புகள் இருக்கின்றன. அதில் புகைப்பட ஆவணக் காப்பகம் என்னும் அமைப்பும் 1956 முதல் செயல்பட்டு வருகிறது. இதன் வேலை கோயில்களையும், அவை சார்ந்த கட்டடக் கலையையும், கோயில்களில் இருந்த சிலைகளின் புகைப்படங்களையும் சேகரிப்பதாகும்.

இப்படி சேகரிக்கப்பட்ட புகைப்படங்களின் எண்ணிக்கை மட்டுமே சுமார் ஒரு லட்சத்து 66 ஆயிரம் இருக்கும். இதுதான் தமிழக சிலை திருட்டுகளைக் கண்டுபிடிக்க ஆதாரமாகத் திகழ்கிறது...’’ என்று சொல்லும் ரமேஷ்குமாரிடம், ‘ஸ்டார்ஸ்’ புகைப்பட சேகரிப்பு பற்றிக் கேட்டோம்.‘‘நான் சென்னைக்காரன். சென்னையில் இண்டஸ்ட்ரியல் போட்டோகிராஃபி துறையில் ஆரம்ப காலங்களில் வேலை செய்து வந்தேன். பிறகுதான் பாண்டிச்சேரிக்கு சுமார் 20 வருடங்களுக்கு முன் குடிபெயர்ந்தேன்.

ஃபிரெஞ்சு நிறுவனத்தின் புகைப்பட ஆவணக் காப்பகத்தில் ஒரு சாதாரண புகைப்படக்காரனாகத்தான் வாழ்க்கையை ஆரம்பித்தேன். கோயில் சார்ந்த புகைப்படக்கலையில் தீவிரமாக வேலை செய்ததால் அந்த காப்பகத்தின் தலைவராகவும் 1997 முதல் இருக்கிறேன்...’’ என்று சொல்லும் ரமேஷ்குமார் தனியாக ‘ஸ்டார்ஸ் கலெக்‌ஷன்’ எனும் பெயரில் ஒரு காப்பகம் உருவாகியது பற்றியும் விளக்கினார்.
‘‘கோயில் சார்ந்த  புகைப்பட சேகரிப்பின்போது 2015களில் சோ ஹாட்லி (Zoe Hadley) என்னும் ஒரு வெளிநாட்டுப் பெண்மணியை பாண்டிச்சேரியில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அந்த அம்மையார் மானுடவியல் மற்றும் சமூகவியல் போன்ற படிப்புகளைப் படித்திருந்தார். இருவரும் பரஸ்பரம் தத்தம்  செயல்பாடுகளைப் பற்றி விவாதித்துக்கொண்டோம்.

அப்போது கோயில் சார்ந்த புகைப்படம் மட்டுமல்லாமல் தமிழகத்தின் சாதாரண மக்களின் வரலாற்றைப் பேசக்கூடிய புகைப்பட சேகரிப்பு பற்றிய பேச்சு வந்தது. சாதாரண மக்கள் என்றால் அது ஸ்டூடியோக்களில்தானே கிடைக்கும் என்ற புரிதல் எங்களுக்கு இருந்தது. அப்படித்தான் ஸ்டூடியோ புகைப்படங்களையும் சேகரிக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டோம்.
2015களில் சுமார் 90 சதவீத ஸ்டூடியோக்கள் அழிந்திருந்தன. ஸ்டூடியோக்கள் அழிந்திருந்தால் அவை அதுவரை சேகரித்திருக்கும் 90 சதவீத புகைப்படங்களாவது அழிந்திருக்கும் என்று சொல்லலாம். ஆகவே, எஞ்சியிருக்கும் 10 சதவீத புகைப்படங்களையாவது எப்படியாவது காப்பாற்றவேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு ஏற்பட்டது.

உடனே ஸ்டூடியோக்களைத் தேடி நாங்கள் புறப்பட்டோம்...’’ என்று சொல்லும் ரமேஷ்குமார் அந்த சேகரிப்புகளை ஃபிரெஞ்சு நிறுவனத்தின் ஒரு துணை அமைப்பாக அமைத்து இதுவரை சுமார் 35 ஆயிரம் டிஜிட்டல் புகைப்படங்களையும், 5000 ஒரிஜினல் புகைப்படங்களையும் சேகரித்து வைத்திருக்கிறார்.‘‘நாங்கள் ‘ஸ்டார்ஸ்’ கலெக்‌ஷனுக்காக புகைப்படங்களைச் சேகரிக்கத் தொடங்கும்போது தமிழகத்தின் புகைப்பட வரலாறு குறித்து எந்த ஒரு புத்தகமும் இல்லை. புகைப்படக் கலை கண்டுபிடிக்கப்பட்டது 1839ல். ஃபிரான்சில்தான் முதன் முதலாக இந்தக் கலை கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசாங்கம் 1845களிலேயே அந்தப் புகைப்படக் கலையை இந்தியாவில் அறிமுகம் செய்துவிட்டது.

ஆரம்பத்தில் பிரித்தானிய அதிகாரிகள், இந்திய செல்வந்தர்களிடம்தான் புகைப்படக் கலை இருந்தது. ஆனால், 1880களில் ஒரு மாற்றம் வந்தது. அதாவது இந்த ஆண்டில் இருந்துதான் புகைப்படக் கலை எல்லா மக்களையும் சேரக்கூடிய ஒரு வணிகப் பொருளாக மாறியது. அதாவது ஸ்டூடியோக்கள் பல முளைத்த ஆண்டு இது. ஆகவே, இந்தியாவையும் தமிழகத்தையும் எடுத்துக்கொண்டால் 1880 முதல் 1980 வரை ஸ்டூடியோக்களில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்துதான் இந்தியாவின் புகைப்பட வரலாற்றையும் ஒரு சமூகத்தின் வரலாற்றையும் பேசமுடியும் என்ற காரணங்களால்தான் ‘ஸ்டார்ஸ் கலெக்‌ஷன்’ இந்த சேகரிப்பில் ஆர்வம் காட்டியது...’’ புன்னகைக்கும் ரமேஷ்குமார், இந்த காப்பகத்தில் உள்ள புகைப்படங்களைக் குறித்து சில சுவாரஸ்யமான வரலாறுகளைப் பேசினார்.

‘‘புகைப்படங்கள் பல வரலாறுகளைச் சொல்லலாம். இந்த வரலாறுகள் புகைப்படம் எனும் ஒரு தொழில்நுட்பத்தின் வரலாற்றையும் அதில் இடம்பெறும் சமூகம் தொடர்பான சரித்திரத்தையும் விளக்கும்.உதாரணமாக, புகைப்பட தொழில்நுட்பத்தின் ஆரம்பக் காலம் ஒளி இல்லாமல், டார்க் ரூம் எனும் இருட்டறை இல்லாமல், பெரிய தொழில்நுணுக்கங்கள் இல்லாமல்தான் ஆரம்பித்தது.

அப்படி என்றால் ஒளி இல்லாமல் எப்படி புகைப்படம் எடுத்திருப்பார்கள் என்று ஆய்வு செய்யலாம். எங்கள் சேகரிப்பில் உள்ள ஒரு புகைப்படம் குரூப் ஃபோட்டோவாக இருந்தது. சுமார் 50 பேர் அதில் இடம்பெற்றிருந்தனர். அதில் குழந்தை முதல் கிழவர் வரை அடக்கம். அன்றைய பழைய பாக்ஸ் கேமராக்கள் ஒரு நபரை சுமார் ஒரு நிமிடமாவது நிற்கவைத்துதான் படம் பிடிக்கும். அப்படி என்றால் அந்த குரூப்பில் இருந்த குழந்தை முதல் கிழவர் வரை எப்படி கண் இமைக்காமல், சிறிதும் அசைந்துகொடுக்காமல் ஒரு நிமிடம் வரை இருந்து அந்த புகைப்படம் தெளிவாக இருக்க ஒத்துழைத்தார்கள் என்ற கேள்வி எழும்.

இது எல்லாம் அந்த புகைப்படக்காரரின் கைத்திறன், தொழில்நுட்பம் என்று சொல்லலாம். இத்தோடு அன்றைய காலங்களில் ஒரு சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளையும் இலகுவாக கவனிக்கலாம்.
எடுத்துக்காட்டாக, ஆரம்பக் காலங்களில் ஒரு கணவன் மனைவி புகைப்படத்தில் தோன்றினால் கால ஓட்டத்தில் முதலில் கணவன் இருக்கையில் அமர்ந்திருக்க மனைவி பின்பக்கமாக நிற்பது, பிறகு கணவர் உட்கார்ந்திருக்க மனைவி பக்கவாட்டில் இருப்பது, பிறகு மனைவி உட்கார்ந்திருக்க கணவன் ஒரு பாதுகாப்பாளனைப் போல பின்பக்கமாக நிற்பது... என இருக்கும். இவற்றை வைத்து ஒரு சமூகவியல், சமூக மாற்ற ஆய்வே செய்யலாம்...’’ என்று சொல்லும் ரமேஷ்குமார் சில நையாண்டியான விஷயங்களைப் பற்றியும் பேசினார்.

‘‘அன்றைய காலங்களில் புகைப்படம் எடுத்தால் ஆயுசு குறையும் என்று தமிழக வரலாற்றில் பதிவாகியிருப்பது உண்மைதான். உதாரணமாக, ஒருவர் தன் வாழ்நாளில் ஒரு புகைப்படத்தைக்கூட எடுத்திருக்காத நிலையில் அவர் இறந்துவிட்டால் அவரை நினைவுபடுத்தும் விதமாக குடுப்பத்தினர் அவரின் இறந்த உடலை புகைப்படம் எடுக்க விரும்புவார்கள். இதை டெட் பாடி ஃபோட்டோகிராஃபி (dead body photography) என்று அழைப்பார்கள். இறந்தவரின் உடலை புகைப்படம் எடுப்பது லேசுப்பட்ட காரியம் அல்ல. அத்தோடு புகைப்படக்காரர்கள் இறந்த உடலை எல்லாம் புகைப்படம் எடுக்க மாட்டேன்... அது தொழிலை பாதிக்கும்... என்றெல்லாம் பேசி வந்திருக்கிறார்கள்.

ஒருவேளை ஒரு புகைப்படக்காரர் ஒப்புக்கொண்டாலும், பிணத்தை அப்படியே புகைப்படம் எடுக்க முடியாது. பிணத்தின் கண்களைத் திறந்துவைத்துதான் படம் எடுக்கவேண்டும்.
இப்படி பல சிரமங்களுக்கு மத்தியில்தான் புகைப்படக் கலை வளர்ந்தது...’’ என்ற ரமேஷ்குமார், ‘ஸ்டார்ஸ் கலெக்‌ஷன்’ தொடர்பான புகைப்படங்களை வைத்து பல மாணவர்கள் ஆய்வு செய்து வருவதாகவும், ஒரு ஐரோப்பிய மாணவி பிஎச்.டி செய்திருப்பதாகவும், விருப்பப்படும் மாணவர்களுக்காக இந்த ‘ஸ்டார்ஸ்’ அமைப்பு எப்பொழுதும் திறந்திருக்கும் என்றும் கூறுகிறார்.

டி.ரஞ்சித்