த்ரில்லர் படம்... காமெடி உண்டு ...ஆனால், ஹீரோ காமெடி செய்யவில்லை!மலையாளத்தில் பிருத்விராஜ் நடித்து ஹிட்டான படம் ‘தியான்’. அதன் இயக்குநர் ஜியென் கிருஷ்ணகுமார். மல்லுவுட் ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்ற இயக்குநர் ஜியென் கிருஷ்ணகுமார் இப்போது ஆர்.ஜே.பாலாஜியை ‘ரன் பேபி ரன்’ என ஓட வைத்துக் கொண்டிருக்கிறார்.

மலையாளம் டூ தமிழ்... எப்படி நடந்தது இந்த இட மாற்றம்?

தமிழில் படம் பண்ண வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. மலையாள மொழிப் படங்கள் பண்ணும்போது தமிழ் டெக்னீஷியன்களுடன் வேலை செய்திருந்தாலும் நேரடி தமிழ்ப் படங்களை எடுப்பதற்கும் மலையாளத்தில் எடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அந்த விதத்துல, தமிழ் சினிமாவில் படம் இயக்குவதை பெருமையாகப் பார்க்கிறேன். மலையாளத்தில் மூன்று படங்கள் பண்ணியிருக்கிறேன். ஆனால், அங்கிருந்து எந்த டெக்னீஷியன்களையும் என்னுடன் அழைத்து வரவில்லை.

அதற்குக் காரணம், தமிழர்களின் கலாசாரத்தை நான் தெரிந்துகொள்ள விரும்பினேன். அதற்கு இங்கிருக்கும் டெக்னீஷியன்களுடன் வேலை செய்யும்போதுதான், தப்பு நடந்தாலும் என்னை அவர்கள் கரெக்ட் பண்ண வசதியாக இருக்கும் என்று நினைத்தேன்.மேக்கிங்கைப் பொறுத்தவரை தமிழில் கொஞ்சம் ஃபாஸ்ட் என்றே சொல்லலாம். மலையாளப் படம் பண்ணும்போது எந்தளவுக்கு கம்ஃபோர்ட் இருந்ததோ அதே கம்ஃபோர்ட்டை இங்கேயும் ஃபீல் பண்றேன். எந்த இடத்திலும் அந்நியப்பட்டு நின்றதில்லை என்றே தோன்றுகிறது. எனக்கு முதுகெலும்பாக இருந்து எல்லாவிதத்திலும் உதவியவர் தயாரிப்பாளர் லக்‌ஷ்மண் குமார்.

மலையாளத்தில் நான் இயக்கிய ‘தியான்’ 25 கோடி பட்ஜெட்டில் உருவான படம். அந்தப் படம் முடியும்போதே அடுத்த படத்தை தமிழில் பண்ணலாம் என்ற முடிவில் இருந்தேன். அதுமட்டுமல்ல; ஒரு கிரியேட்டராக தமிழில் படம் பண்ணும்போது பெரிய வெளிச்சம் கிடைக்கும் என்பதை மறுக்க முடியாது. அப்போது என்னிடம் இருந்த கதையும் தமிழுக்குப் பொருத்தமாக இருந்தது. அத்துடன் ‘தியான்’ பார்த்துவிட்டுத்தான் இந்தப் பட வாய்ப்பு கிடைச்சது.

‘ரன் லோலா ரன்’ என்ற ஜெர்மனி மொழி படத்தின் தழுவல்தான் ‘ரன் பேபி ரன்’ என்று நெட்டிசன்கள் கமெண்ட் போடுகிறார்களே?

அந்தப் படத்துக்கும் எங்கள் படத்துக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. மலையாளத்தில் இதே டைட்டிலில் மோகன்லால் நடித்து வெளிவந்த படத்துக்கும்  இதற்கும் சம்பந்தம் இல்லை.
இந்த டைட்டில் ஃபிக்ஸ் பண்ணும்போது இப்படியொரு குழப்பம் வரும் என்று தயாரிப்பு தரப்பிடம் முன்பே சொல்லிவிட்டேன். எங்கள் கன்டன்ட்டுக்கு ‘ரன் பேபி ரன்’ பொருத்தமான டைட்டில் என்பதால் இந்த டைட்டில் வைத்தோம். தமிழ் ஆடியன்ஸைப் பொறுத்தவரை இது ஃப்ரெஷ் டைட்டில்.

சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் என்பதால் என்னால் கதையை விரிவாக சொல்ல முடியாது. இது ஹீரோவை மையப்படுத்தி எழுதப்பட்ட கதை. படம் பார்க்கும் எந்த ஒரு ஆடியன்ஸும் கதையை தங்களோடு கனெக்ட் பண்ணிக்க முடியும்.

ஏனெனில், படத்தில் ஹீரோவுக்கு நடக்கிற மாதிரியான சம்பவம் யாருக்கு வேண்டுமானாலும் எப்ப வேண்டுமானாலும் நடக்கலாம் அல்லது நடந்திருக்கலாம்.
அந்த மாதிரி பிரச்னை வந்தால் சம்பந்தப்பட்டவர்களால் சர்வைவ் பண்ண முடியுமா, முடியாதா அல்லது தலையெழுத்து என்று அப்படியே விட்டுவிடுவார்களா என்பதை சுவாரஸ்யமாகச் சொல்லியுள்ளோம்.

எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும் அல்லது உடல் வலிமை உள்ளவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு இந்த மாதிரியான பிரச்னையோடு போராட்டம் இருக்கும். அந்த போராட்டத்தில் சிலர் ஜெயிக்கலாம், சிலர் தோற்கலாம் என்பதை விறுவிறு திரைக்கதையில் சொல்ல முயற்சித்துள்ளோம். ஆர்.ஜே.பாலாஜி காமெடி வேடங்களில் நடிக்கக் கூடியவர். ஐஸ்வர்யா ராஜேஷ் சீரியஸ் வேடங்களில் நடிக்கக் கூடியவர். இருவேறு துருவங்களான இவர்களின் ஜோடிப் பொருத்தம் எப்படி?

கதை முடிவானதும் என்னுடைய முதல் சாய்ஸாக ஆர்.ஜே.பாலாஜி இருந்தார். தமிழ்ப் படங்கள் பார்க்கும் வழக்கம் எனக்கு உண்டு. அதில் ஆர்.ஜே.பாலாஜியின் படங்களும் அடங்கும்.
ஆர்.ஜே.பாலாஜி பண்ணிய படங்கள் எல்லாமே காமெடி படங்கள். இது அந்தப் படங்களில் இல்லாத விஷயம். அவர் த்ரில்லர் கதை பண்ணியதில்லை.இந்தப் படத்துல காமெடி இருந்தாலும் ஹீரோவுக்கு காமெடி இருக்காது. காமெடி பண்ற இடத்திலும் ஹீரோ இருக்கமாட்டார். ஏனெனில், அவர் கேரக்டர் அப்படி.

ஆர்.ஜே.பாலாஜியிடம் கதை சொன்ன முதல் மீட்டிங்கிலேயே ‘கதை பிடிச்சுருக்கு, நான் பண்றேன்’னு சொல்லிட்டார். எனக்கு ஆச்சர்யம் என்னவென்றால், கதை எழுதிய மாதிரியே அப்படியே நடித்தார். அது  ஃப்ரெஷ்ஷாகவும், ஹைலைட்டாகவும் பாலாஜியைக் காண்பிக்கும்னு நினைக்கிறேன். ரெகுலராக இந்த மாதிரி கேரக்டர் பண்ற ஆர்ட்டிஸ்ட்டைவிட பண்ணாத ஆர்ட்டிஸ்ட்டுக்கு ஒரு ஃப்ரெஷ் ஃபீல் கிடைக்கும். அது இதுல கிடைச்சது. ஆர்.ஜே.பாலாஜி பேங்க் ஆபீஸர் சத்யா என்ற கேரக்டர் பண்றார்.

முக்கியமான வேடத்துல ஐஸ்வர்யா ராஜேஷ் வர்றார். அவருடைய கேரக்டர் பெயர் தாரா. அவர் எப்படி நடிப்பார் என்று நான் சொல்ல வேண்டியதில்லை. ஹீரோவுக்கு இணையாக அவரை மட்டுமே வைத்து தமிழில் கதை எழுதுகிறார்கள். தாரா கேரக்டர் எழுதும்போதே ஐஸ்வர்யா ராஜேஷ் ஞாபகத்துல வந்தார். அவரிடம் கதை சொல்லும்போது, இது ஹீரோ, ஹீரோயின் கதை இல்லை. கேரக்டருக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறது என்பதை மட்டும் பாருங்கள் என்றேன். அவருக்கு கேரக்டர் பிடித்ததால் ஓகே சொல்லிவிட்டார்.

ஆர்.ஜே.பாலாஜியின் அம்மாவாக ராதிகா சரத்குமார் வர்றார். இவர்களுடன் விவேக் பிரசன்னா, ஜார்ஜ் மரியன், ஜோ மல்லூரி ஆகியோரும் இருக்கிறார்கள். எல்லோருடைய பங்கும் கதைக்கு முக்கியமாக இருக்கும்.

சாம்.சி.எஸ்.மியூசிக்ல பாடல்கள் எப்படி வந்துள்ளது?

சாம்.சி.எஸ். மியூசிக் எப்போதுமே ஸ்பெஷலாக இருக்கும். கதைக்கு என்ன தேவை என்று சொல்லிவிட்டால் போதும் மீதி அனைத்தையும் அவர் பார்த்துக்கொள்வார். இயக்குநர் நினைப்பதைவிட பலமடங்கு அதிகம் தரக்கூடிய மியூசிக் டைரக்டர். 3 பாடல்கள். விவேகா எழுதியுள்ளார். ஒளிப்பதிவு யுவா. ‘டெடி’, ‘கேப்டன்’ பண்ணியவர். முதன் முறையாக அவருடன் சேர்ந்து வேலை பார்க்கிறேன். அவருடைய ஒர்க் பிடிச்சதால மலையாளத்தில் இப்போது நான் பண்ணும் படத்துக்கும் அழைத்துச் சென்றுள்ளேன். ஒரு இயக்குநருக்கு குவாலிட்டியாகவும் ஃபாஸ்ட்டாகவும் படம் பிடித்துத் தரும் ஒளிப்பதிவாளர் தேவை. அது யுவாவிடம் இருக்கிறது.

படத்துல வேறென்ன ஸ்பெஷல்?

இப்போது ஓடிடி வந்துவிட்டதால் ஆடியன்ஸ் ஹாரர் த்ரில்லர், சஸ்பென்ஸ் த்ரில்லர், க்ரைம் த்ரில்லர் என வகை வகையான த்ரில்லர் படங்கள் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்தவிதத்துல ஆடியன்ஸை ஏமாத்த முடியாது. படம் தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே அடுத்த காட்சி இதுதான் என்று சொல்ல ஆரம்பித்து விடுகிறார்கள்.

ஆடியன்ஸ் யூகிக்க முடியாதபடி இருந்தால்தான் படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டும். அந்த வகையில் அடுத்த சீன் எது என்று யூகிக்க முடியாமல் இருந்தால் அந்தப் படம் ஹிட். எங்கள் படம் ஆடியன்ஸை சீட் நுனிக்கு இழுத்துவரச் செய்யும்.

எஸ்.ராஜா