Must Watchத மெனு

திரையரங்குகளில் வெளியாகி, வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்த ‘த மெனு’, ஆங்கிலப் படம் இப்போது ‘ஹாட்ஸ்டாரி’ல் காணக்கிடைக்கிறது. உலகப்புகழ் பெற்ற சமையல் கலைஞர், ஸ்லோவிச். ரகசியமான தனித்தீவு ஒன்றில் ஓர் உணவகம் வைத்திருக்கிறார். அங்கே ஆடம்பரமாக இரவு உணவு விருந்து தயாராகிறது. இதில் அவருடைய ஸ்பெஷல் மெனு இடம்பெறுகிறது. இந்த மெனு உலகத்தில் வேறு எங்கேயும் கிடைக்காது.

இந்த விருந்தில் கலந்துகொள்ள ஒரு சில லட்சங்கள் கொடுத்து முன்பதிவு செய்ய வேண்டும். அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும். நட்சத்திர நடிகர், உணவு ஆர்வலர், பெரும் பணக்காரர், உணவு விமர்சகர்... என சமூகத்தில் பிரபலமாக இருக்கும் சிலர் மட்டுமே இந்த விருந்தில் கலந்துகொள்கின்றனர்.  மகிழ்ச்சியாக ஆரம்பிக்கும் விருந்து ஆபத்தில் முடிகிறது. அந்த ஒரு சிலரை மட்டும் ஸ்லோவிச் எதற்காக அழைத்தார்? அவர்களுக்கு நேர்ந்த ஆபத்துகள் என்ன... என்பதை திரில்லிங்காகவும், நகைச்சுவையாகவும் சொல்லியிருக்கிறது திரைக்கதை. ‘உணவை சாப்பிடக்கூடாது.ருசிக்க வேண்டும்...’ என வசனங்கள் அள்ளுகின்றன. படத்தின் இயக்குநர் மார்க் மைலோட்.

தாய் மசாஜ்

‘நெட்பிளிக்ஸி’ன் டாப் டிரெண்டிங் பட்டியலில் இருக்கும் இந்திப் படம், ‘தாய் மசாஜ்’. எழுபது வயதானவர் ஆத்மாராம் துபே. அவரது மனைவி இறந்து இருபது வருடங்களுக்கு மேலாகிவிட்டது. துபேவின் மகன்களும், பேரன்கள், பேத்திகளும் அவரைக் கடவுளைப் போல பார்க்கின்றனர். துபேவை ரொம்பவே ஒழுக்கமானவர் என்று நம்புகின்றனர். அத்துடன் பேரன்களும், பேத்திகளும் துபேவை ஒரு ரோல் மாடலாக எடுத்துக்கொள்கின்றனர்.

இந்நிலையில் அவர் ரகசியமாக ஒளித்து வைத்திருந்த பாஸ்போர்ட் கிடைக்கிறது. குடும்பத்தில் உள்ள எல்லோருக்குமே அதிர்ச்சி. பாஸ்போர்ட்டை திறந்து பார்த்தால் அவர் தாய்லாந்துக்கு போய் வந்திருப்பது தெரிய வருகிறது.

அத்துடன் ஓர் இளம் பெண்ணுடன் அவர் நெருக்கமாக இருக்கும் புகைப்படமும் பாஸ்போர்ட்டுக்குள் இருக்க, குடும்பத்தினருக்கு துபேவின் மீதிருக்கும் பார்வையே மாறுகிறது. தர்மசங்கடமான சூழலை துபே எப்படி எதிர்கொள்கிறார் என்பதை நகைச்சுவையாகச் சித்தரித்திருக்கிறது திரைக்கதை. முதியவர்களின் பாலியல் உணர்வுகளைப் பதிவு செய்திருக்கும் விதம் அருமை. ஆத்மாராமாக நடிப்பில் அப்ளாஸை அள்ளுகிறார் கஜ்ராஜ் ராவ்.  படத்தின் இயக்குநர் மங்கேஷ் கடவாலே.

மட்டோ கி சைக்கிள்

சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளை அள்ளிவரும் இந்திப்படம் ‘மட்டோ கி சைக்கிள்’. வட இந்தியாவில் உள்ள ஒரு குக்கிராமத்தில் படத்தின் கதை நிகழ்கிறது.
ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் மட்டோ. கட்டடத் தொழிலாளியான அவருக்கு மனைவியும், இரண்டு மகள்களும் இருக்கின்றனர். வீட்டிலிருந்து அவர் வேலை பார்க்கும் இடம் ரொம்ப தூரம். அதனால் தினமும் சைக்கிளில் வேலைக்குச் சென்று வருகிறார் மட்டோ. தன் குடும்பத்துக்கு சைக்கிள்தான் சோறு போடுகிறது என்று சைக்கிளின் மீது மிகுந்த பற்றுடன் இருக்கிறார். எப்போதும் அவரை சைக்கிளுடன்தான் பார்க்க முடிகிறது.

இந்நிலையில் ஒரு காரின் பின்பகுதியில் சைக்கிள் மோதிவிடுகிறது. சரி செய்ய முடியாதபடி  சைக்கிள் பழுதாகிவிடுகிறது. அவருடைய வேலை பாதிக்கப்படுகிறது. குடும்பத்தின் நிலையும் மோசமடைகிறது. புதிய சைக்கிள் வாங்க அவரிடம் பணமில்லை. இந்த இக்கட்டான சூழலிலிருந்து மட்டோவின் குடும்பம் மீண்டதா என்பதே மீதிக்கதை.
ஒரு சைக்கிளை வைத்துக்கொண்டு இந்தியாவின் ஏழ்மையை சுற்றிக்காட்டியிருக்கிறது இந்தப் படம். மட்டோவாக பின்னியிருக்கிறார் மட்டோ. படத்தின் இயக்குநர் எம்.கனி.

ஷபீக்கிண்டே சந்தோஷம்

மலையாள சினிமாவுக்குரிய அத்தனை சிறப்புகளுடனும் மிளிர்கிற ஒரு படம் , ‘ஷபீக்கிண்டே சந்தோஷம்’. ‘அமேசான் ப்ரைமி’ல் காணக்கிடைக்கிறது. கேரளாவில் உள்ள அழகிய ஒரு கிராமம். அந்தக் கிராமத்தில் வாழும் அனைவராலும் நேசிக்கப்படும் ஒரு மனிதன் ஷபீக். மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதுதான் ஷபீக்கின் மகிழ்ச்சி.

அவனுக்கு வளைகுடா நாட்டில் வேலை கிடைக்கிறது. வேலைக்குச் செல்வதற்கு முன்பு மூலநோயால் பாதிக்கப்படுகிறான். பணம் வாங்காமலேயே ஷபீக்குக்கு சிகிச்சையளித்து குணப்படுத்துகிறார் ஒரு மருத்துவர்.  மகிழ்ச்சியாக வளைகுடாவுக்குப் போய் வேலை செய்கிறான் ஷபீக். ஊரிலுள்ள ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயமாகிறது. நிச்சயதார்த்த நிகழ்வுக்காக கேரளாவுக்கு வரும்போது தன் அன்புக்குரியவர்களுக்காக பல பரிசுப் பொருட்களை வாங்கி வருகிறான். குறிப்பாக அந்த மருத்துவருக்கு ஹூக்கா ஒன்றை வாங்கி வருகிறான்.

எல்லாமே மகிழ்ச்சியாகச் செல்கிறது. நிச்சயதார்த்தம் அன்று காவல்துறையினரால் ஷபீக் கைது செய்யப்படுகிறான். போலீஸ் ஷபீக்கை எதற்காக கைது செய்தது? ஷபீக் விடுதலை அடைந்தானா? ஷபீக்குக்குத் திருமணம் நடந்ததா... போன்ற கேள்விகளுக்கு பதில் தருகிறது மீதிக்கதை. ரொம்பவே எதார்த்தமான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் அனுப் பண்டலம்.

தொகுப்பு: த.சக்திவேல்