அழிந்து வரும் உயிரினங்களை ஓவியமாக ஆவணப்படுத்தும் அரசு ஊழியர்…



‘‘இயற்கைச் சமநிலை மாறாமல் இருக்க பறவைகளும், வனவிலங்குகளும், தாவரங்களும் ரொம்ப ரொம்ப முக்கியம். காடுகள் இருந்தால்தான் தட்பவெப்பமும் சமநிலையில் இருக்கும். அப்பதான் சூழல் காக்கப்படும். ஆனா, இன்னைக்கு பல பறவைகளும், விலங்குகளும், தாவரங்களும் அழியும் தருவாயில் இருக்கு.
இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தணும்னு தோணுச்சு. அதனால, அழிவின் விளிம்பில் உள்ளவற்றை ஓவியமாக ஆவணப்படுத்தியிருக்கேன்...’’ என ஓவியங்களைக் காட்டியபடியே பேசுகிறார் ராகவன் சுரேஷ். இவர் கோவையிலுள்ள ஒன்றிய அரசின் இந்திய தாவர மதிப்பீட்டு ஆய்வகத்தில் ஓவியராகப் பணிபுரிந்து வருபவர். அவரின் அந்த ஓவியங்கள் ஒவ்வொன்றும் அத்தனை தத்ரூபமாக மிளிர்கின்றன.

‘‘சொந்த ஊர் காஞ்சிபுரம் பக்கத்துல இருக்கிற மேட்டுப்பாளையம்னு ஒரு சிறுகிராமம். சின்ன வயசிலேயே ஓவியத்துல ஆர்வம். காஞ்சிபுரத்துல இருந்த ஓவியர் ஜனார்த்தனன் மாஸ்டர்கிட்ட வரைய கற்றேன். அவர்தான் சென்னையில் ஓவியத்திற்கென கல்லூரி இருப்பதைச் சொன்னார். பள்ளிப்படிப்பு முடிச்சதும் முயற்சி செய்தேன். முதல்தடவை கிடைக்கல. பிறகு காத்திருந்து அடுத்தாண்டு கல்லூரியில் சேர்ந்தேன். அப்ப எனக்கு விளம்பரத்துறையில் இடம் கிடைச்சது. 1988ம் ஆண்டு படிப்பை முடிச்சேன்.

பிறகு, ‘Aside’ பத்திரிகையில் லேஅவுட் ஆர்ட்டிஸ்ட்டா கொஞ்சநாட்கள் இருந்தேன். தூர்தர்ஷன், விளம்பர நிறுவனம், டெக்ஸ்டைல் டிசைன்னு பல இடங்கள்ல பணி செய்தேன். 1991ல் இருந்து இந்திய அரசின் இந்த ஆய்வகத்துல வேலை செய்றேன். இப்ப கடந்த நான்காண்டுகளாக அழியும் தருவாயில் உள்ள அரிய வகை உயிரினங்களை ஓவியமாக ஆவணப்படுத்திட்டு இருக்கேன்...’’ என ஒரு எளிய அறிமுகம் தந்தவர், இடைவெளிவிட்டுத் தொடர்ந்தார்.

‘‘இந்த ஆய்வகத்துல என் பணி, தாவரங்களை ஓவியமாக வரையிறது. அதாவது, இந்த ஆய்வகத்துல தாவரவியல் சயின்டிஸ்ட்கள் நிறைய இருக்காங்க. அவங்க தாவரங்களைப் பத்தி ஆராய்ச்சி செய்வாங்க. பிறகு, அதை பப்ளிஷ் பண்ணுவாங்க. அதுக்காக அந்தத் தாவரங்களை வரைவேன். இதை நம்ம விருப்பப்படி வரைய முடியாது. சயின்டிஸ்ட்கள் கேட்குறதை வரையணும். அதேமாதிரி நார்மல் டிராயிங்குக்கும், சயின்டிஃபிக் டிராயிங்குக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.

சயின்டிஃபிக் டிராயிங்ல உச்சந்தலையில் இருந்து கால் வரை சரியாக குறிப்பிட்டு வரையணும். அதன் அளவுகள் எல்லாம் சயின்டிஃபிக் விவரம்தான். அதனை கூட்டவோ, குறைக்கவோ முடியாது. பொதுவா, ஒரு ஆர்ட்டிஸ்ட் அவர் விருப்பப்படி வரையலாம். அவருக்கு சுதந்திரம் உண்டு. அவரைப் பொறுத்தவரை அந்த பறவை பார்க்க அழகாக இருக்கணும். அவ்வளவுதான்.
ஆனா, இங்க அப்படியில்ல. இயற்கைக்கு மாறான கலர்கூட அடிக்கக்கூடாது. பேக்கிரவுண்ட் எதுவும் வரையக்கூடாது.

அதுல எப்படி இருக்குதோ அதை அப்படியே கொண்டு வரணும். முதல்ல நாங்க பென்சில்ல வரைஞ்சு அதை சம்பந்தப்பட்ட சயின்டிஸ்ட்கிட்ட காட்டி அப்ரூவல் வாங்கணும். அவங்க ஓகே சொன்னபிறகே வரையமுடியும். எல்லாமே வாட்டர்கலர்ல பண்ணுவோம். கலர் கொஞ்சம் அதிகமானாலும் அந்த டிராயிங்கே வீணாகிடும். அவ்வளவு நுணுக்கமாக பண்ணணும்.

இதுக்கான புகைப்படங்களும் இருக்காது. சயின்டிஸ்டுகளுடன் சேர்ந்து போய் சேகரிக்கணும். நாங்க சீசனுக்குத் தகுந்தமாதிரி பயணிப்போம். அதாவது ஒவ்வொரு தாவரமும் ஒவ்வொரு சீசனில் பூக்கும். அது பூக்குற நேரம் தனி. காய் காய்க்கிற நேரம் தனி. வளர்ற நேரம் வேறாக இருக்கும். அந்த சீசனுக்கு தகுந்தாற்போல போய் சேகரிக்கணும். பிறகு வரையணும்.
இப்படியிருந்தப்ப எனக்கு 2017ல் திடீரென உடல்நிலை சரியில்லாமப் போச்சு. அந்நேரம், ஏன்னு தெரியல. சமூகத்துக்கு ஏதாவது செய்யணும்னு தோணுச்சு. என் வீடு கோவை வடவள்ளியில் இருக்கு. அதுக்குப் பக்கத்துலயேதான் மேற்குத் தொடர்ச்சி மலை. தினமும் காலையில் அந்த இயற்கையின் அழகில்தான் கண்விழிப்பேன்.

அப்பதான், அழிஞ்சிட்டு வர்ற உயிரினங்களை ஓவியமாக  ஆவணப்படுத்தலாமேனு ஓர் எண்ணம் உதயமாச்சு. என் அலுவலகத்துல தாவரங்கள் மட்டும் வரைஞ்சிட்டு இருப்பேன். ஆனா, இதுல பறவைகள், வனவிலங்குகளும் சேர்த்து பண்ணுவோம்னு முடிவெடுத்தேன். உடனே அழிந்து வரும் தாவரங்கள், பறவைகள், வனவிலங்குகளின் பட்டியலை எடுத்தேன்.

முதல்ல மேற்குத்தொடர்ச்சி மலையிலிருந்து தொடங்கினேன். இங்க பூக்கும் தாவரங்கள் மொத்தம் 7 ஆயிரத்து 402 இருக்குது. 139 வனவிலங்குகளும், 508 பறவைகளும் உள்ளன. மீன்கள் 290ம், இருவாழ்விகள் 176ம், பூச்சிகள் 6 ஆயிரம் வரையும் இருக்கின்றன. இது பரந்துவிரிந்த பகுதி. சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் சதுரகிமீ கொண்டது.

இந்த 508 பறவைகள்ல 30 பறவைகளும், 139 வனவிலங்குகள்ல 18 வனவிலங்குகளும், பூக்கும் தாவரங்கள்ல 138 தாவரங்களும் அழிவின் விளம்பில் உள்ளவை. இந்தப் பட்டியலை எடுத்ததும் அதனை வன அறிவியலாளர்கள், வன அதிகாரிகள், ஆர்வலர்கள், போட்டோகிராபர்கள் உதவியுடன் ஓவியமாகத் தீட்டினேன். அவங்களும் ஒரு சமூக விழிப்புணர்வாக செய்றேன்னு சொன்னதும் எனக்கு ரொம்பவே உதவினாங்க. அவங்களுக்கு நன்றி சொல்லணும்.

இதனுடன் அதன் தமிழ்ப்பெயர், அறிவியல் பெயர், இப்போது எந்தப் பகுதியில் இருக்கு என்பன உள்ளிட்ட விவரங்களையும் குறிப்பிட்டேன். இதுல தாவரங்களுக்கு தமிழ்ப் பெயர் கிடைக்கல. சயின்டிஃபிக் நேம் மட்டும்தான் இருந்தது. அதனால, அழியும் நிலையில் உள்ளதற்கு நான் தமிழ்ப் பெயர் கண்டறிந்து கொடுத்திருக்கேன். இதை நான் தனியாகவே என் ஓய்வு நேரத்தில் செய்தேன். என் மனைவியும், மகளும், மகனும் நிறைய சப்போர்ட் செய்தாங்க...’’ என்கிறவர், மேற்குத்தொடர்ச்சிமலை முடிந்ததும் இந்தியாவில் அழிந்து வரும் உயிரினங்களை ஆவணப்படுத்தத் தொடங்கியிருக்கிறார்.

‘‘இது முடிஞ்ச நேரம் இந்தியா முழுவதும் அழியும் தருவாயில் உள்ளவற்றை ஏன் ஆவணப்படுத்தக்கூடாதுனு தோணுச்சு. அப்படியாக இந்தியாவில் மட்டும் 50 பறவைகள் இருந்துச்சு. அதேபோல வனவிலங்குகளும் 50 இருந்தன. இவற்றையும் வரைஞ்சிருக்கேன். அந்தமான்ல உள்ள எண்டமிக் தாவரங்களை மட்டும் தனியா வரைஞ்சேன்.

இது மட்டும் இன்னும் கொஞ்சம் வரைய வேண்டியிருக்கு. இப்ப மொத்தமாக பார்க்கிறப்ப 80 பறவைகளும், 68 வனவிலங்குகளும், 138 தாவரங்களும் வரைஞ்சு ஆவணப்படுத்தி வைச்சிருக்கேன். இந்தியாவில் நிறைய ஓவியர்கள் இருக்காங்க. அவங்க இந்தமாதிரி ஒரு சப்ஜெக்ட்டாக எடுத்து அதை சயின்டிஃபிக்காக செய்திருக்காங்களானு தெரியல. எனக்குத் தெரிஞ்சு இதுதான் முதல்முறை.  

என் ஓவியங்கள்ல, கொடைக்கானல் பகுதியில் மட்டுமே காணப்பட்ட அழிஞ்சுபோன கிளை ஆட்டையும் வரைஞ்சிருக்கேன். இந்த ஆட்டை 2008ல் பார்த்ததாக அறிவியலாளர்கள் சொல்றாங்க. அதன்பிறகு தென்படல. அதனால, அதை வரையணும்னு செய்தேன். ஏன்னா, இப்படிதான் உயிரினங்கள் அழிஞ்சிட்டு வருது. அதைச் சுட்டிக்காட்ட வேண்டி வரைஞ்சேன்...’’ என்கிறவர், ‘இதை எப்படி காட்சிப்படுத்தறதுனு தெரியல’ என்கிறார்.  

‘‘எனக்கு இதையெல்லாம் டிஸ்பிளே செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தணும்னு ஆசை. என் நோக்கமும் அதுதான். ஆனா, இப்ப அதுக்கு பொருளாதாரம் இடம் கொடுக்கல. ஏன்னா, இதையெல்லாம் என் கைகாசு போட்டுதான் செய்திருக்கேன். சுமார் 300 ஓவியங்கள் இருக்குது. எல்லாத்தையும் காட்சிக்கு வைக்க பெரிய இடம் தேவை.

அதுக்கு செலவு ரொம்பப் பிடிக்கும்.ஆனா, என் பணியைப் பார்த்திட்டு கடந்த ஆண்டு கோவை புத்தகக் காட்சியில் கடைசி ரெண்டு நாட்கள் ஓவியத்தைக் காட்சிக்கு வைக்க இடம் தந்தாங்க. அப்ப கொடிசியாவின் செயலாளராக இருந்த ரமேஷ் சார்தான் எனக்கு கட்டணம் இல்லாமல் இடம் வழங்கி ஆதரவு தந்தார். என் அளப்பரிய பணியை நிறைய கல்லூரி, பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் பார்த்து வியந்தாங்க. நல்ல ரீச் கிடைச்சது.

என்னைப் பொறுத்தவரை குறைஞ்சது ரெண்டு பேருக்காவது விழிப்புணர்வு வந்தாலே என்னளவில் வெற்றிதான். இருந்தும் இன்னும் நிறைய பேர்கிட்ட போய்ச் சேரணும்னு ஆசைப்படுறேன். இப்ப எனக்கு 58 வயசாகுது. விரைவில் பணியிலிருந்து ஓய்வு பெறப்போறேன். அதுக்குள்ள நான் ஆவணப்படுத்திய எல்லாவற்றையும் காட்சிப்படுத்தணும்னு நினைக்கிறேன். இதன்வழியா பறவைகள், விலங்குகள், தாவரங்கள் இந்தச் சமூகத்திற்கு எவ்வளவு முக்கியம் என்கிற விழிப்புணர்வு வரும்னு நம்புறேன்...’’ என நம்பிக்கையுடன் சொல்கிறார் ராகவன் சுரேஷ்.

பேராச்சி கண்ணன்